ஹதீஸ் திறனாய்வுக்கலை
முன்னுரை
எல்லாப்புகழும் சர்வ உலக இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும் அல்ஹம்து லில்லாஹ். சாந்தியும் சமாதானமும் சத்தியத் திருத்தூதர் சன்மார்க்கப் போதகர் முஹம்மத் (ஸல்) அன்னவர்கள் மீதும் அன்னாரின் உயரிய வாழ்க்கை வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் அணுவணுவாக பின்பற்றி வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் உத்தமர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக என பிரார்த்தித்த பின்…
அறிவு என்பது விரல் விட்டு எண்க்கூடிய ஒரு சிலரோடு மாத்திரம் சுருங்கிவிடக்கூடாது, அது எல்லோருக்கும் பொதுவான ஜனரஞ்சகமானதாக இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானதாகும் என்ற அடிப்படையில்தான் எமது மத்ஹபுகள் சாராத அல் குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யாவின் இனையத்தளத்தில் ஹதீஸ் திறனாய்வுக்கலை என்ற பகுதியை அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பித்திருக்கின்றோம்.
தமிழ் பேசும் முஸ்லிம் அன்பர்கள் ஹதீஸ் கலையை முறையாகக் கற்றுக் கொள்ளக் கூடிய நூல்களோ இனையத்தளங்களோ இல்லை அல்லது குறைவு என்பதை கருத்திற் கொண்டு உலக வரலாற்றில் அறிவியல் ஆய்வின் ஊற்றுக்ண்ணாகிய ஹதீஸ் கலையை எளிய முறையில் இனிய தமிழில் இங்கு விளக்கவுள்ளோம்.
அத்துடன் இஸ்லாத்தின தூய அடிப்படையான வஹியுடன் ஏனைய பிழையான அடிப்டைகளையும் இணைத்து அவைகளை பின்பற்றி வரும் முஸ்லிம்கள் சில வேளைகளில் ஹதீஸ்களை முன்வைக்கும் போது குறித்த ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என நாம் கூறினால் எந்த ஒரு அடிப்படையும் இன்றி நாம் விரும்பியவாறு சில ஹதீஸ்களை ஏற்பதாகவும் விரும்பியவாறு ஹதீஸ்களை நிராகரிப்பதாகவும் இவர்கள் எம்மை தவறான கண் கொண்டு பார்க்கின்ற வழக்கும் இன்று நடைமுறையில் உள்ளது.
இத்தகையவர்களுக்கு எமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் ஆதாரபூர்வமாக வடிவமைக்கப்பட்ட, அறிவுபூர்வமாக ஒழுங்மைக்கப்பட்ட ஒரு கலையின் அடிப்படையிலேயே ஹதீஸ்களை அனுகுகின்றோம், அவைகளை தரம் பிரிக்ன்றோம் என்பதை தெளிவு படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் இப்பகுதி மூலம் நிறைவேற்றப்படும் என பெரிதும் எதிர்பார்க்கினறோம்.
மேலும் தூய்மையான உள்ளத்துடன் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவைப் பின்பற்றி வாழ வேண்டும் என விரும்பும் சகோதரர்கள் கூட குறித்த ஒரு ஹதீஸ் ஏற்றுக் கொள்ளத்தக்கதா அல்லது நிராகரிக்கப் பட வேண்டியதா என குர்ஆன் ஹதீஸை எடுத்துரைக்கும் உலமாக்கள் மத்தியிலேயே காணப்படும் கருத்து முரன்பாட்டுக்கு முன்னால் செய்வதறியாது திகைத்து நிற்பதையும் சமூகத்தில் எம்மால் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வேளையில் இந்த ஆலிம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான போக்கை விட்டுவிட்டு ஹதீஸ் கலையின் அடிப்படைகளை முடியுமான வரை முறையாகக் கற்று யார் கூறுகின்ற கருத்து உன்மையானது அல்லது உன்மைக்கு மிக நெருக்கமானது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னால் முடியுமான வரை அறிந்து தெளிந்து பின்பற்றுவதுதான் ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
