Skip to content

தேர்தல் காலத்திலும் வேண்டும் தௌஹீத்

January 24, 2010

அழ்ழாஹ்வின் பேரருளால் தம் வாழ்வின் அனைத்து துறைகளிலும்  அழ்ழாஹ்வினதும், அவனது தூதரினதும் வழிகாட்டுதல்களை  அறிந்து செயற்படுத்தும் ஒரு சமுதாயம் உருவாகி வருவது சத்தியப் பிரச்சாரத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். ஊர் வழக்காறுகள், தொன்மை மிகு விடயங்கள், பெரிய ஆலிம்களின் தீர்ப்புக்கள், மத்ஹபுகள், வரட்டு கௌரவங்கள் என்பன போன்ற பிழையான அளவுகோள்களையெல்லாம் அகற்றி அறிவுபூர்வமாக சிந்திக்கின்ற நிலை இன்று அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதனால்தான் அன்றாட வணக்க வழிபாடுகள், திருமண சட்டங்கள், அகீகா என பெரும்பாலான விடயங்களை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அறிந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஆயினும், இவ்வாறு அனைத்து துறைகளிலும் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் மாத்திரம் பின்பற்றி வாழவேண்டும் என நினைக்கின்ற பலர் அரசியல் நடவடிக்கைகளிலும், தேர்தல் காலங்களிலும் குர்ஆன், ஹதீஸை புறந்தள்ளியே செயற்படுகின்றனர். ஆழமான ஆய்வோ, அதிகளவிலான தேடலோ இன்றி சாதாரணமாக படித்தாலே பட்டென்று புரிந்து கொள்ளக் கூடிய திருமறை வசனங்கள், ஆதாரபூர்வமான நபிமொழிகளைக் கூட இவர்கள் கண்டு கொள்வதில்லை. தான் ஆதரிக்கும் அரசியல்வாதி அல்லது தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகின்ற தலைவர் செய்கின்ற எவ்வித அநியாயத்தையோ, அட்டூழியங்களையோ கண்டும் காணாதது போன்று  நடந்து கொள்கின்ற தௌஹீத்வாதி, பள்ளிவாயலில் மட்டும் தௌஹீத் பேசுவதில் என்ன நியாயம்? திருமறைக் குர்ஆனில் உள்ள ‘ஸூரத்துல் ஹுஜ்ராத்’ எனும் 49வது அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பை படிக்கின்ற எவரும் எளிதில் புரிந்து கொள்வர். சகோதர முஃமின்களோடு எவ்வாறு நடக்க வேண்டும்? எவ்வாறு நடக்க கூடாது? போன்ற விபரங்களை அவ் அத்தியாயம் அழகுற எடுத்தியம்புவதைக் காண்கின்றோம்.

வசைபாடுவதையும், அத்துமீறுவதையும் வீட்டிலோ, வீதியிலோ சகித்துக்கொள்ளாத தௌஹீத்வாதி தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை ஆகுமாக்கின்ற அதிகாரத்தை யாரிடமிருந்து பெறுகிறார்? தஃவாக்களம் என்று வருகின்ற போது பாவங்களை கண்டிக்க வேண்டிய தேவை அதிகளவில் தேர்தல் காலங்களில் உண்டு. சகலவிதமான பாவங்களும் அரங்கேறும் தளமாக தேர்தல் பிரச்சார மேடைகள் காணப்படுவதைக் காணலாம். கேள்விப்பட்டதை யெல்லாம் பேசுவது குறித்து நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகையில், ‘ஒருவன் தான் கேள்விப்பட்டதை யெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவன் பொய்யன் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-06)

சாதாரணமாக உறுதி செய்யப்படாத தகவல்களைப் பேசுபவனே பொய்யன் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறும்போது அப்பட்டமான பொய்கள் அவிழ்த்து விடப்படுகின்ற அசிங்கமான அரசியல் மேடைகளை என்னவென்று கூறுவது? அழ்ழாஹ்விடம் பொய்யனாகிவிட்டவனைப் பற்றி நபிகளார் இவ்வாறு கூறுகின்றார்கள். ‘உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய், தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5081)

சத்தியக் கொள்கை என்ற ஒரே காரணத்திற்காக பல குடும்ப உறவுகளைக் கூட இன்று நாம் பகைத்து நிற்கின்றோம். நாம் ஆதரிக்கும் அரசியல்வாதியோ, தேர்தல் காலங்களில் மார்க்கத்தை தூசாகக் கூட கணக்கில் எடுக்காதிருப்பதையும் நாம் சகித்துக் கொள்கின்றோம்?. விளையாட்டிற்கு கூட சகோதர முஸ்லிமுக்கு ஆயுதத்தால் அச்சமூட்டக் கூடாது என்கிறார்கள் அருமைத் தூதர் (ஸல்) அவர்கள். ‘அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள், ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால், அவர் அதைக் கைவிடும் வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன் பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5103)

ஆனால், கலிமாச் சொன்ன அரசியல்வாதியோ தனது பாதையில் கருத்தியல் போராட்டம் செய்பவனின் உறுப்புக்கள் இழக்கப்பட்டாலும், உயிரே பறிக்கப் பட்டாலும் தனது அரசியல் இருப்பையே இலக்காகக் கொள்கின்றான். நமது சமுதாயத்தில் கடந்த காலங்களில் இதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமின் பெறுமதி குறித்து இப்படிச் சொல்கின்றார்கள். ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறை நிராகரிப்பாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-48,6044)

தேர்தல் காலங்களில் இடம்பெறுகின்ற மற்றொரு பாவ காரியம்தான் வம்சத்தை வசை பாடுதல் ஆகும். நாகரிகமடைந்த சமூகத்திற்கு எள்முனையளவும் பொருத்தமில்லாத அசிங்கமான ஒரு காரியம்தான் இது, முகவரியில்லாத மொட்டைத் துண்டுப்பிரசுரங்கள் மூலம் தந்தை செய்த தொழில், தாய் நடந்த நடத்தை என மரணித்தவர்களைக் கூட சந்திக்கு இழுக்கின்ற கேவலமான கலாசாரம் ஆகும். இது குறித்து நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘மக்களிடம் உள்ள இரு குணங்கள் இறை மறுப்பாகும். 1.பரம்பரையைக் குறை கூறுவது. 2. இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-121)

கல்வியலாளர்கள் என அறியப்படுகின்ற சமூகமும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. எனவே, வாக்களிப்போர் கூட, ‘நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அழ்ழாஹ்வை அஞ்சுங்கள்! அழ்ழாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.’ (அல்குர்ஆன்-05:02) என்ற அருள்மறை வசனத்தின் அடிப்படையில் தனது வாக்கு மூலம் நான் உறுதுணையாக இருக்கப்போவது நீதிக்கா? அல்லது அநீதிக்கும், அடாவடித்தனத்திற்கும், அட்டூழியங்களுக்குமா? என்பன போன்ற விடயங்களைக் கவனத்திற் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கும் போது ஒரு தௌஹீத்வாதி என்றவகையில் குறைந்த பட்சம் பின்வரும் விடயங்களையாவது கவனத்திற் கொண்டு செயற்படுவோமாக!

1.(முஸ்லிமாக இருந்தால்) ஷிர்க்கிற்கு துணை போகாதவர்

2.(முஸ்லிமாக இருந்தால்) தொழுகையைப் பேணக்கூடியவர்

3.உண்மை பேசக் கூடியவர்

4.மதுபானம், போதைவஸ்த்துப் பாவனை அற்றவர்

5.சமூகத்திற்கு பொறுப்புச் சொல்லக்கூடியவர்

6.வெளிப்படைத் தன்மை உள்ளவர்

7.இன உறவுகளைப் பேணக்கூடியவர்

8.சுயநலமற்றவர்

சுருங்கக் கூறின் யார் மூலம் முஸ்லிம்களுக்கும், சத்தியக் கொள்கையான தௌஹீதுக்கும் நலன் அதிகமாக உள்ளதோ அவரை அடையாளம் காண முயற்சிக்க வேண்டுமே தவிர வெளிப்பகட்டுகளுக்கு ஒரு போதும் இலக்காகி விடக் கூடாது.

அபூ யூஸுப் அல் அதரி

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers