தங்கவளையல் தொடர்பான பிஜே அவர்களது மறுப்புக்கு மறுப்பு தொடர் :01
தங்கவளையல் தொடர்பான பிஜே அவர்களது மறுப்புக்கு மறுப்பு தொடர் :01
அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும்!!
அஸ்ஸலாமு அலைகும்( வறஹ்).
தங்க வளையல் தொடர்பாக பிஜே அவர்கள் ஒரு ஆய்வை இரு தொடர்களாக வெளியிட்டிருந்தார்கள். அது பற்றிய எமது மறுப்பை எவ்வாறான பின்னணியில் பிஜே அவர்கள் குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளார்கள் என்பதை எமது மறுப்பின் முதல் தொடரிலும் அவரது இரு ஆய்வுத் தொடர்களுக்கும் அடுத்தடுத்து இரு மறுப்புகளும் வெளியிட்டிருந்தோம்.
அதில் எமது முதல் தொடருக்கு பிஜே அவர்கள் மீண்டும் பதிலளிக்க முனைந்துள்ளார்கள். எனவே அது பற்றிய எமது பதில்களை இங்கு மீண்டும் பதிவுசெய்து கொள்ள விரும்புகிறோம்.
முதலில், எதை மையமாக வைத்து எமது மறுப்பின் முதல் தொடரை நாம் எழுதினோமோ அதற்கு பிஜே அவர்கள் பதிலளிக்கவில்லை. எதற்கெல்லாம் பதில் சொல்வது மிகமிக அவசியமில்லையோ அவைகளுக்கு மாத்திரம் பதில் அளித்துள்ளார்கள்.
எனவே பிஜே அவர்கள் எவைகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதை முதலில் நோக்குவோம். அடுத்து குறைந்தது அவர் பதிலளித்துள்ள விடயங்களிலாவது அவரது பதில்கள் சரிதானா, ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் அமைந்துள்ளதா என்பதை அடுத்து நோக்குவோம்.
1.கடந்த காலங்களில் இலங்கையில் இவரது அமைப்பாக இருந்த “சிறீ லங்கா தௌஹீத் ஜமாஅத்” என்ற அமைப்புடன் ஒரு சுமுகமான உறைவைப் பேணியே இலங்கையில் களப் பணி ஆற்றியிருந்தோம். அதனடிப்படையில் தான் இவ்வருட ஆரம்பத்தில் இவரது பிரச்சாரகர்களான சகோதரர்கள் அப்பாஸ் அலி அவர்களும் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் இலங்கை வந்த போது அவர்களை நேரடியாக சந்தித்து கருத்து முரண்பாடுள்ள விடயங்களை உரிய முறையில் பேசித் தீர்த்து விட்டு இரு அமைப்பும் இணைந்து களப்பணியாற்றுவோம் என்ற அழைப்பை விடுத்திருந்தோம்.
அவர்களும் அதற்குரிய ஏற்பாடுகளுக்கு ஆவண செய்வதாக கூறிச் சென்றார்கள். மாதங்கள் சில கடந்தும் நீங்கள் எமது அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்று நாம் பிரதானமாக கேட்டிருந்தோம். இது தான் எமது முதல் தொடரின் முக்கிய அம்சமாகும். இதற்கு பிஜே அவர்கள் பதிலளிக்கவில்லை.
2.மேற்படி பிரச்சாரகர்கள் இலங்கை வந்த போது இஜ்மா, கியாஸையும் மார்க்கத்தின் மூலாதாரங்களாக கருதும் மௌலவி ஒருவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ததையும், கப்ரை தனது வளாகத்தில் கொண்ட பள்ளிவாசலில் தொழுததையும் இதனால் இவர்களுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்ட எமக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். அதற்கும் பிஜே அவர்கள் இது தவறுதான் என ஏற்றுக் கொள்ளவோ அல்லது “அல்குர்ஆன் அஸ்ஸுன்னா மாத்திரம்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ற நிலைப்பாட்டில் உள்ள உலமாக்களுடன் மாத்திரம் சேர்ந்துதான் பிரச்சாரம் செய்வோம்” என்ற தங்களது நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக் கொண்டு விட்டோம் என்ற ரீதியிலோ பதிலளிக்கவில்லை!. ஏன் கண்டு கொள்ளவும் கூட இல்லை!!.
பதிலளிக்கவில்லை என்றால் கூட சரி ஏதோ அவருக்கு எது முடியுமோ அதற்கு மாத்திரம் பதிலளிக்கிறார் என்று நாமும் விட்டுவிடலாம். ஆனால் இத்தகைய முக்கிய விடயங்களுக்கு “தங்களைப் பற்றி பெருமையடிக்கும் வகையில் விரிவாக எழுதியுள்ளனர் ” என்றும் “முழுக் கட்டுரையும் சுயதம்பட்டம்“ என்றும் விடயத்தை முடித்து கொண்டார் என்பது “இதுதான் இவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு பதிலளிக்கும் முறை” “தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்வோம்” அல்லது என்று இவர்கள் அடிக்கடி கூறும் வாசகத்தை அமுல்படுத்தும் இலட்சணம் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
3.இவர்களும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற இரு இஸ்லாத்தின் மூலாதாரங்கள் அடிப்படையில் மாத்திரம் பிரச்சாரம் செய்கிறார்கள். நாமும் அதே அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறோம். இவ்வேளையில் இரு சாராருக்குமிடையில் கருத்து முரண்பாடுள்ள விடயங்கள் குறித்து ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போதும், தவறுகளை சுட்டிக்காட்டும் போதும் உரிய முறையில், கவனமாக, நாகரிகமாக சுட்டிக் காட்டும் வழிமுறையை விடுத்து (அதாவது நாம் இவர்கள் தவறை சுட்டிக்காட்டும் போது கடைப்பிடித்த வழிமுறையை) “அறியாமையின் உச்சகட்டம், பொறுப்புணர்வு அற்றவர்கள், தமிழாக்கத்தில் கைவரிசை, கண்களுக்குத் தெரியவில்லை, கைச் சரக்கை சேர்ப்பவர்கள், ஹதீஸை வளைப்பவர்கள், அறபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியவர்கள், தத்துவம் கூறுபவர்கள், அறிவற்ற வாதத்தை வைப்பவர்கள்” என்று தாறுமாறாக விமர்சித்தற்கான நியாயம் என்ன என்றும் எமது முதல் தொடரில் கேட்டிருந்தோம். அதற்கும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சில வேளை இவர்களது தவறுகளை நாமோ அல்லது பிறரோ சுட்டிக் காட்டும் போது இவ்வாறான விமர்சனங்களை முன் வைக்கும் போது அதை மனங்குளிர ஏற்றுக் கொள்வார்களோ தெரியவில்லை.!!
அடுத்து இவர் பதிலளித்துள்ள விடயங்களுக்கு வருவோம்
1.இவரது பிரத்தியேக இணைய தளத்தில் அப்பாஸ் அலி என்பவரது ஆய்வை வெளியிட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு எழுதியிருந்தோம். அதற்கவர் “நாமே பதில் எழுதும் எந்த வழிமுறையையும் நாம் அறிவிக்கவில்லை” என்றும் உரியவர்களை முன்னிலைப்படுத்துவதுதான் இவரது வழிமுறை என்றும் இவரது இணையத்தில் வெளியிட்டதால் இவர்தான் அதற்குப் பொறுப்பு என்று நாம் கண்டுபிடித்துள்ளதாக!! கற்பனை செய்தும் பதிலளித்துள்ளார்.
இவர் குறித்த பதிலை எங்கிருந்து அளித்தாரோ அதே “ஆன்லைன் பிஜே பற்றி” என்ற பகுதியில்
“இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், ஆய்வுகள், கொள்கை அடிப்படையிலான விமர்சனங்கள், மின்னஞ்சல் மூலம் நீங்கள் கேட்கும் மார்க்க அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில்கள், நான் எழுதிய நூல்கள், எனது சொற்பொழிவுகள், விவாதங்கள், பேட்டிகள் போன்றவை மட்டுமே இதில் இடம்பெறும்.”
என்று இவரே அறிவித்த இவரது வழிமுறைக்கு மாற்றமாக இவரது மேற்படி கூற்று உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆக எமது கேள்வி இவர் கூறியுள்ளது போல் அபத்தம் அல்ல. இவர் தற்போது, அதாவது எமக்கு பதில் எழுத வேண்டி வந்தபோது தனது வழிமுறையை மாற்றிக் கொண்டார் என்பதுதான் உண்மையாகும்.
2.அடுத்து ஏற்கனவே எமக்கிடையில் உள்ள கருத்து முரண்பாடான விடயங்களில் இரண்டாம் ஜமாஅத் தொடர்பான வெப் மாஸ்டர் அவர்களால் வெளியிடப்பட்ட பத்வா தொடர்பாக நாம் விமர்சனம் செய்திருக்கும் போது அதற்கு பதிலளிக்காமல் இப்போது தங்க வளையல் தொடர்பாக புதிதாக ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளீர்களே எதற்கு பதில் உள்ளதோ அதற்கு மாத்திரம் தான் பதிலளிப்பீர்களா என்பதை தெளிவு படுத்துங்கள் என்ற எமது கோரிக்கைக்கு (கண்டனத்துக்கு அல்ல) அது வெப் மாஸ்டரால் அளிக்கப்பட்ட பத்வா என்றும் அதில் தவறுகள் காணப்பட்டதாக அங்கிருந்த உலமாக்களால் வெப் மாஸ்டருக்கு சுட்டிக் காட்டப்பட்டதாகவும் அது அவர் இணையத்தைப் பொறுப்பெடுப்பதற்கு முன்னால் நடைபெற்றது என்றும் அவர் பொறுப்பேற்ற பின்னால் இடம் பெறும் தவறுகளுக்குத்தான் பதிலளிப்பார் என்றும் எழுதி இதற்கும் தங்க வளையலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறார்.!!
என்ன சம்பந்தம் என்பதை இப்போது விளக்குகிறோம். உதாரணமாக நாம் தங்க வளையல் சம்பந்தமான எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறோம். அதற்கு மறுப்பாக இவர்கள் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளார்கள். இவ்வேளையில் நாம் தங்க வளையல் விடயத்திற்கு பதில் எழுதாமல் பிறை பற்றிய இவர்களது நிலைப்பாட்டை விமர்சித்து நாம் ஒரு ஆய்வை வெளியிடுகிறோம் என்றால் இவர்கள் என்ன கேட்பார்கள்?!! ஏன் தங்க வளையல் என்ற ஏற்கனவே தொடங்கப்பட்ட விடயத்துக்கு பதிலளிக்கவில்லை என்றுதான் கேட்பார்கள். அவ்வேளையில் தங்கவளையலுக்கும் பிறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தமான கேள்வியையே இவர் இங்கும் எழுப்பி இரண்டாம் ஜமாஅத்திற்கும் தங்கவளையலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறார்.
அடுத்து இவர் இப்போது கூறியுள்ள ஆகஸ்டுக்கு முன்பு, பின்பு என்ற விளக்கம், அங்குள்ள உலமாக்கள் வெப் மாஸ்டர் பத்வாவில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய விடயம் என்பதையெல்லாம் இப்போது நாம் குறித்த வெப் மாஸ்டர் பத்வாவில் கேள்வி எழுப்பும் வரை அறிவிக்கவில்லை என்பதையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளோம்.!!
மேலும் இதன் காரணமாகவே அவசர அவசரமாக இவர்கள் வெளியிட்டுள்ள இரண்டாம் ஜமாஅத் பற்றிய மறுப்புக்கும் அதில் உள்ள வரட்டுத் தத்துவங்களை தெளிவுபடுத்தி கூடிய விரைவில் தக்க பதிலளிப்போம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
3.அடுத்து “தங்க நகை அணியலாமா என்ற சர்ச்சை இண்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன“ என இவர்கள் எழுதிய வசனத்துக்கு “இல்லையே அது பற்றி நாங்களும் இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையிலும் குறிப்பாக இக்கருத்தை முன் வைத்தவர்கள் என்ற வகையிலும் இவர்கள் மிகைப்படுத்தி எழுதியது போல் எந்த வாதங்களும் நடைபெறவில்லையே” என நாம் மறுப்பெழுதியதற்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள்.
“இவர்களின் புரிந்து கொள்ளும் திறன் பற்றி நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுக்கு எதிர் கருத்து கொண்ட உலமாக்களூக்கும் மத்தியில் விவாதம் நட்ந்தது என்று நாம் குறிப்பட்டது போல் சித்தரித்து அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். நாம் எழுதிய வாசகம் என்ன? இது குறித்து இலங்கை முஸ்லிம்க்ள் மத்தியில் விவாதங்கள் நடக்கின்றன என்று தான் எழுதினோம். இலஙகை முஸ்லிம்கள் இது குறித்து தமக்கிடையே விவாதிக்கிறார்கள் என்று நாம் எழுதியதை இஸ்மாயில் ஸலஃபியைப் போல் புரிந்து கொண்டு எழுதியுள்ளனர்.”
இவர் அளித்துள்ள இந்த விரிவுரை!! தவறு என்பதை இவரே வெளியிட்டுள்ள ஆய்வின் முதல் தொடரின் இறுதி வரிகளான,
“இது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக இரண்டு தொடராக வெளியிடப்படுகிறது”
என்ற (விவாதங்கள் நடைபெறவில்லை இனிமேல்தான்) விவாதிக்கப் படவேண்டும் என்ற வசனம் நிரூபிக்கிறது. அத்துடன் அப்துல்லாஹ் ஜமாலி போல் முன்னுக்குப் பின் முரணாக எழுதும் இவர்களது (என்ன எழுதுகிறோம் என்று) விளங்கி எழுதும் திறன் மீது நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
அடுத்து இவர்கள் மறுப்பெழுதியதற்காக அல்லாமல் வழமையாக ஆளை, அவர் சார்ந்திருக்கும் அமைப்பை அடையாளப்படுத்தி எழுதும் இவரது நடைமுறைக்கு மாற்றமாக “வாதம் முன்வைக்கப்பட்டு” என்ற செயற்பாட்டு வினையிலும் “இலங்கையில் சிலர் கூறும் கருத்து” என்றும் இவர் எழுதியதன் நோக்கம் “இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும், உண்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது பக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.” என்ற எமது கேள்விக்கு
“என்று எழுதியது இவ்பர்களின் கோபத்துக்குரிய காரணம் என்ன என்பதை விளக்குகிறது. தங்க நகை ககட்டுரைக்கு நாம் எழுதிய மறுப்பு இவ்ர்களின் அறியாமையை மக்கள் புரிந்து கொள்ள காரணமாகியுள்ளது. ஆளாளுக்கு பதில் சொல்ல முடியாத கேள்விகளை இவர்களிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர். அதைத்தான் மேற்கண்ட வாசகம் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
சரியான கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்,. ஆட்கள் சேர்ப்பது நோக்கம் இல்லை. ஆட்கள் சேரப்பதை நோக்கமாகக் கொண்டு தவறான கருத்தைச் சொன்னவர்கள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
இஸ்மாயீல் ஸலபி வைத்த வாதம் போல் வாத்ததை வைக்காமல் பெண்கள் வளைந்த தஙக நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கும் வழியைப் பாருங்கள். நீங்கள் அர்த்தமற்ற கருத்தை மக்கள் மத்தியில் வைத்து பின்னர் அது தவறு என்பது நிரூபணமானால் மக்கள் உங்களை விட்டுப் போகத் தான் செய்வார்கள். எதிர்க் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள். மக்கள் நம்மை விட்டு போகிறார்களே என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் இல்லை. “
என அபத்தமாக பதிலளித்துள்ளார்கள்.
காரணம், யார் என்ன அமைப்பு என்று எழுதினால் அல்லவா இவர்கள் கற்பனை செய்தது போல் எமது அறியாமையை மக்கள் புரிந்து கொண்டு!! ஆளாளுக்கு கேள்வி கேட்டு!! எம்மைவிட்டுப் போவார்கள்!!! என்ற நடைமுறை உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
மேலும் ஆட்கள் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தான் நாம் தஃவா செய்கிறோம் என்பதும் இவரது மித மிஞ்சிய கற்பனையும் ஆதாரத்தின் சாயல் கூட இல்லாத அநியாயமான குற்றச் சாட்டுமாகும்.
அத்துடன் நாம் சொன்னால், கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை நாம் உருவாக்கவில்லை. மாறாக எமது நிலைப்பாடுகளுக்கு மாற்றமான கருத்துகளை யார் முன்வைத்தாலும் அவர்களது கருத்துகள், ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்ததா, அறிவுபூர்வமானதா என்பதை நாம் எப்படி பரிசீலிக்கிறோமோ அதே போல்தான் எமது கருத்துகளை சரி காணும் மக்களும் எம்மிடம் கேள்வி கோட்பார்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் மக்கள் கேள்விகளை சந்திக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய அமைப்புகளில் எமது அமைப்பும் ஒன்றாகும்.
அத்துடன் பெரிய ஆய்வாளர் படையுடன் எமது நிலைப்பாடுகளுக்கு மறுப்பளிக்கும் இவர்களுக்கே தக்க ஆதாரங்கள் அடிப்படையில் இவர்களைப் போல் நான்கை விட்டு இரண்டுக்கு பதில் என்றில்லாமல் வரிக்கு வரி பதிலளிக்கும் எமக்கு, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் பதிலளிப்பது அல்லாஹ்வின் உதவியால் மிகச் சாதாரணமாகும்.
அதனால் இவர் கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதியது போல் நாம் கோபப்படவுமில்லை, ஆத்திரப் படவுமில்லை. நிதானமாகவும், நியாயமாகவும்தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றோம்.
இறுதியாக, பிஜே அவர்கள்
“வாதம் செய்யும் போது முக்கிய தலைப்பு குறித்த விஷயங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற வேண்டும். மிகக் குறைந்த அளவில் இடையிடையே தலைப்புடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத விஷயங்களை குறிப்பிடுவது தவறல்ல. தலைப்புக்கே வராமல் முழுக்கட்டுரையையும் சுய தம்பட்டம் அடிக்க பயன்படுத்த வேண்டாம் ….”
என்று ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்கள். “ஜஸாஹுல்லாஹு கைரன்”. இவரது அறிவுரையை நாம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதில் “நாம் அடித்த சுய தம்பட்டம்” என்ன என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.
அதே போல் நாமும் இவரிடம் ஒரு சிறு கோரிக்கையை முன்வைக்கிறோம். எமது பதில்களுக்கு மறுப்பெழுதும் போது (இப்போது இவர் எழுதியுள்ளது போல் ஒன்றை விட்டு ஒன்றுக்கு பதில் எழுதாமல்) ஒன்றில் முடிந்தால் எமது பதில்களை அப்படியே இணையத்தில் பிரசுரித்துவிட்டு விரும்பிய விடயங்களுக்கு பதில் சொல்லட்டும். அல்லது நாம் இவர்களது ஆய்வின் ஒவ்வொரு பந்தியையும் கருத்தையும் எதுவும் விடுபடாமல் எடுத்தெழுதி பின்பு அதற்கு பதிலளித்தது போல் பதிலளிக்கட்டும் அப்போதுதான் வாசிப்பவர்களுக்கு உண்மை புரிவதற்கு ஏதுவாக அமையும் என்பது எமது வினயமான வேண்டுகோளாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!!
இப்படிக்கு,
மௌலவி எம். ஐ. எம். நௌபர் (காஷிபி),
பிரச்சாரகர்,
தாருல் அதர் அத்தஅவிய்யா,
காத்தான் குடி,
இலங்கை.
E-mail:- nowfer78@hotmail.com.
Mobile: 00974 3283253
Skype ID : nowfer78

Comments are closed.