தங்க வளையல் தொடர்பான தமிழ்நாட்டுத் தடுமாற்றம். தொடர் :02
பிஜே அவர்களது ஆய்வுக்கான பதில் தொடர் :02
அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குறிப்பு: இம் மறுப்பு சகோ.பி ஜே அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் “தங்க நகை நௌபருக்கு மறுப்பு” தங்க நகை ஸஹ்ரானுக்கு மறுப்பு” போன்ற ஆக்கங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டதாகும். இதன் அடுத்த தொடர் இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாளைக்கு அடுத்துவரும் தினங்களில் வெளியிடப்படும்
சென்ற தொடரில் தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்துக்கும் எமக்கும் இடையில் இருந்த தொடர்புகள் பற்றி விளக்கியிருந்தோம்.
அதன் காரனமாகவே சகோதரர் பிஜே அவர்களை விளித்து எமது பதிலை எழுதிருந்தோம்.
இத்தொடரில் பிஜே அவர்களது மறுப்பில் உள்ள தவறுகளை, தடுமாற்றங்களை கொள்கை சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் குறிப்பாக இலங்கை தஃவாக் களம் தொடர்பாக அதிகம் அறியாத தென்னிந்திய கொள்கைச் சகோதரர்கள் மற்றும் மத்திய கிழக்கு சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுவதால் சாதாரணமாகவே எழுதுகிறோம்.
ஏற்கனவே நாம் எழுதிய முதல் தொடரில் சகோதரர் அப்பாஸ் அலி அவர்களால் எழுதப்பட்டு பிஜே அவர்களால் சரிகாணப்பட்ட “இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்_ பீ ஜைனுல் ஆபிதீன்” என்ற முன்குறிப்புக்கும் “பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன.” என்ற வசனத்திற்கும் பதில் சொல்லியிருந்தோம்.
அடுத்து அவர் தனது பதிலில் “இந்தக் கருத்து அவ்வப்போது வரலாற்றில் எடுத்து வைக்கப்படுவதும், இது அபத்தமான வாதம் என நிரூபிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் மேற்படி வார்த்தையை ஒன்றில் அவர் வரலாறு தெரியாமல் அல்லது வரலாற்றை திரிபு படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே எழுதியுள்ளார். காரணம் வரலாற்றில் மேற்படி தங்க வளையல் பெண்களுக்கு ஹறாம் என்ற அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான கருத்து முன்வைக்கப்படுவதும் அதற்கு பதில் கூறுகிறோம் என முயற்சி செய்த சிலர் அபத்தமான வாதங்களை முன்வைத்து தடுமாறுவதும்தான் வரலாற்றில் நடந்து வந்திருக்கின்றன. (இப்போதும் கூட அப்படித்தான்)
உதாரணத்திற்காக மேற்படி பிழையான வரலாற்றுத் தகவலை முன் வைத்த சகோதரர் அப்பாஸ் அவர்களாகட்டும் அல்லது அதை சரிகண்டு தனது இணைய தளத்தில் வெளியிட்ட சகோதரர் பிஜே அவர்களாகட்டும் தங்க வளையல் கூடாது எனக் கூறிய அறிஞர் ஒருவரது வாதங்களையும் அதற்கு பதில் சொல்ல முற்பட்டவர்களுடைய வாதங்களையும் முழுமையாக வெளியிடட்டும். யார் நபிமொழி ஒளியில் கருத்துகளை முன்வைத்தார், யார் அதைமறுக்க அபத்தமான வாதங்களை, வாதங்கள் என்று சொல்லவே அருகதை அற்ற கருத்துகளை முன்வைத்தார் என்பது அப்போது விளங்கும்.!!
எனவே “இது அறிஞர்களுக்கிடையிலான வாதப் பிரதிவாதங்கள் இதில் நாம் நுழையத் தேவையில்லை” எனக் கூறி இதிலிருந்து நழுவிவிடாமல் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தாங்களது கூற்றை நிரூபிக்க முன்வர வேண்டும்.
அடுத்து நவீன தொழில் நுட்பம் பற்றி எழுதிய அவர் “இது போல் இலங்கைக் குழப்பங்கள் ஒவ்வொண்றாகத் தெளிவுபடுத்தப்படும்” என எழுதி முதல் பந்தியை முடிக்கிறார்.
நல்லது, நீங்கள் இலங்கைக் குழப்பங்களை ஒவ்வொன்றாகத் தெளிவு படுத்துங்கள். நீங்கள் உங்கள் நிலைப்பாடுகளை நம்பகமான, தெளிவான ஆதாரங்கள் அடிப்படையிலும் அறிவு பூர்வமான வாதங்கள் அடிப்படையிலும் தெளிவு படுத்தினால் அடுத்த நிமிடமே…. மன்னிக்கவும் அதே நிமிடமே எமது தவறுகளை திருத்திக் கொள்வோம். காரணம் மக்கள் திருப்தியைக் கருத்திற் கொள்ளாமல் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே கவனத்திற் கொண்டு நாம் பிரச்சாரப் பணியில் ஈடுபடுகிறோம்.
மேலும் மக்கள் திருப்தியைக் கவனத்திற் கொண்ட அமைப்புகள் அல்லாஹ்வின் திருப்தியையும் இழந்து இறுதியில் மக்கள் ஆதரவையும் இழந்து முகவரியற்றவைகளாக தேய்ந்து போன நிகழ்வுகளையும் கண்கூடகக் கண்டிருக்கிறோம். எனவே எமது நிலைப்பாடுகளை ஆதாரங்களின் அடிப்படையில் மாற்றிக் கொள்வதற்கு நாம் என்றும் பின் நிற்கப் போவதில்லை.
மாறாக, குழப்பங்களை தெளிவுபடுத்துகிறோம் என்ற பேரில் தெளிவாகக் குழப்புவர்களுக்கு தக்க பதில் அளிக்கவும், அவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டவும் ஒரு போதும் தயங்கமாட்டோம் என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம்.
அடுத்து, “தங்க நகை அணியக்கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப் படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப் பட்டவைதான். அதைத்தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்” என தொடர்ந்து எழுதுகிறார்.
ஏதோ நாம்தான் இக்கருத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு முதன் முதலில் முன்வைத்தோம் என நாம் கூறுவது போலும் அதை இவர்கள் மறுப்பது போன்ற தோரணையிலும் இவர்கள் எழுதியிருப்பது வேடிக்கையானது!!.
இது இவர்களது ‘புதிய கண்டுபிடிப்பு’ என சிலர் தவறான தகவல்களைப் பரப்பிய போதும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முதுகெலும்பு இல்லாமல் கொச்சையாக விமர்சித்த போதும் வரலாற்றில் அறிஞர்கள் என அறியப்பட்டவர்களில் யார் யார் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்கள் என்ற விடயத்தை நாமே எமது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் போது இவர்கள் இவ்வாறு எழுதுவதன் நோக்கம் தான் என்ன?!!
ஏன் இவர்கள் தங்களது நிலைப்பாடுகளில், கருத்துகளில், விவாதங்கள் மற்றும் ஆய்வுகளில் எடுத்து வைக்கும் வாதங்கள் மாத்திரம் என்ன இவர்களது சொந்தக் கண்டுபிப்புகள் அல்லது இவர்களாகவே சிரமப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட முடிவுகள் என மேற்படி வரிகள் மூலம் சமூகத்திற்கு மறை முகமாக சொல்லவருகிறார்களா?!
அப்படிப்பார்த்தால் ஏற்கனவே சொல்லப் பட்ட கருத்துகளை, செய்யப் பட்ட ஆய்வுகளை வரிக்கு வரி வார்த்தக்கு வார்த்தை என்பது மாத்திரமின்றி எழுத்துக்கு எழுத்து, புள்ளிக்கு புள்ளி அட்சரம் பிசகாமல் அப்படியே எடுத்து வைப்பவர்கள் யார் என்பதையும் சமூகத்திற்கு தேவை ஏற்பட்டால் நாம் விளக்க வேண்டி ஏற்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
இந்த இடத்தில் நாம் சற்று அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். வாதங்களையும், கருத்துகளையும் நாம் பிரிக்கும் போது இது ஆதாரமுள்ள கருத்து, இது ஆதாரமற்ற வாதம் என்றுதான் நாம் பிரித்தறிய வேண்டுமே அல்லாமல், இது ஏற்கனவே சொல்லப் பட்ட கருத்து, இது புதிதாகச் சொல்லப்படும் வாதம் எனப் பிரிப்பது சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு தடையாக அமைந்துவிடும் என்ற எளிய ஆய்வியல் அடிப்படை கூடத் தெரியாமல் ஒருவர் எழுதுவதும் அடுத்தவர் அதற்கு “ஆய்வு செய்திருந்தார்” என கருத்துத் தெரிவிப்பதும் அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதல்ல.
தொடர்ந்து ” ஆனால் அவர்கள் இதை நிரூபிக்க எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதே உண்மையாகும். மேலும் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது வளையாத தங்க நகை அணியலாம் என வாதிடுவதும் அறியாமையின் உச்சகட்டமாகும்” என எழுதுகிறார்.
நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கும், காட்டிய ஆதாரங்களுக்கும் எந்தவகையில் சம்மந்தம் உள்ளது என்பது இந்த பதில் தொடர்களினூடாக நிரூபிக்கப்படும். மாத்திரமின்றி, இவர்களது ஆய்வில்!! இவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கும் காட்டிய ஆதாரங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு புறமிருக்க இவர்கள் காட்டிய ஆதாரங்களே இவர்களது வாதங்க்களுக்கு எதிரானவை என்பதும் மேலதிகமாக நிரூபிக்கப் படும்.
அடுத்து பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப் பட்டது என ஒரு ஹதீஸில் கூறிய நபி (ஸல்) அவர்கள் இன்னுமொரு ஹதீஸில் நரக நொருப்பினால் ஆன வளையம்….. தங்கத்தினால் ஆன வளையம் எனக் கூறியதன் அடிப்படையில் தங்க வளையல் என நாம் ஹதீஸின் கருத்தை கூற (அது ஆணுக்கா பெண்ணுக்கா என்பது பின்னர் விளக்கப்படும்) அதை வளையல், வளையல் அல்லாத என்று வித்தியாசப் படுத்துவதை “அறியாமையின் உச்சகட்டம்” என கருத்துத் தெரிவிப்பதுதான் உண்மையில் அறியாமையின் உச்சகட்டமாகும்.
அத்துடன், ஒரு புறத்தே இவர்கள் அபூ அப்துல்லாஹ்வுக்கு பதில் அளிக்கக் கூடாதா என்ற வாசகரின் கேள்விக்கு அறிவுபூர்வமான வாதங்களுக்குத்தான் பதிலளிப்போம் எனக் கூறிக்கொண்டே (பார்க்க 30/ 10 / 2009 23:19 வாசகர் கருத்து) மறு புறத்தில் இவர்கள் பதிலளிக்கும் வாதங்களை “அறியாமையின் உச்சகட்டம்” என விமர்சிப்பது இவர்களுக்கே “முரண்பாடுகளின் உச்சகட்டமாக” த் தெரியவில்லையா??!.
எனவே, இனிமேல் இவர்கள் தெளிவாகக் குழப்……. மன்னிக்கவும் குழப்பங்களை தெளிவுபடுத்தும் போதாவது வாதங்களை மாத்திரம் முன்வைக்கட்டும் நாமும் அவை தவறாக இருக்கும் பட்சத்தில் பதில்களை மாத்திரம் முன்வைப்போம். யாருடைய வாதத்தில் அறிவு உள்ளது யாருடையை வாதத்தில் அறியாமை இருக்கிறது என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதுதான் ஆரோக்கியமான ஒரு எழுத்தாடலுக்கு அழகானது. அல்லது இவர்களும் கொச்சையாக எழுதட்டும் நாமும் அதே பாணியில் கொச்சையாகவே பதில் சொல்கிறோம். இடையில் இருந்து கொண்டு இரு சாராரையும் வஹாபிகள் என விமர்சிக்கும் குறாபிகளும் கவாரிஜ்கள் என விமர்சிக்கும் ஸலபிகளில் சிலரும் கைகொட்டிச் சிரிக்கட்டும்.!!
அடுத்ததாக, ஆய்வாளர்!! “இக்கருத்தை உடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயியிலும் இடம் பெற்ற கீழ் காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலைநாட்டுகிறார்கள்.” எனக் குறிப்பிடுகிறார்.
பின்பு அஹ்மத், நஸாஈ ஆகிய இரு வேறு கிரந்தங்களில் இடம் பெற்ற ஒரே ஒரு ஹதீஸை எடுத்தெழுதிகிறார்.
பின்பு அடுத்தவரியில் மேற்கண்ட ஹதீஸ்களுக்கு……… என பன்மையிலும் குறிப்பிடுகிறார்.
பின்பு முதல் தொடரின் இறுதி பந்தியில் “இலங்கை அறிஞர்கள் இரண்டு ஹதீஸ்களைத்தான் ஆதாரங் காட்டுகிறார்கள். அதில் ஒரு ஹதீஸ் பற்றிய நிலை இதுதான் அடுத்த ஹதீஸ் பற்றி அடுத்த வியாழன் பார்க்கலாம். இது மக்கள் மத்தியில் விவாதிக்கப் பட வேண்டும் என்பதற்காக இரண்டு தொடராக வெளியிடப்படுகிறது” என முடிக்கிறார்.
முதலில் நாம் ஆதாரங்களாக வைத்தது இரண்டு ஹதீஸ்களைத்தான் என்றார், அதையே மேற்படி ஹதீஸ்களுக்கு… என பன்மையிலும் குறிப்பிட்டார். பின்பு இறுதியாக ஒரு ஹதீஸுக்கு பதில் சொல்லிவிட்டோம் அடுத்த ஹதீஸுக்கு பதில் சொல்வோம் என்கிறார். எனவே இவரது வார்த்தைகளின் படி நாம் எத்தனை ஹதீஸ்களை முன்வைத்தோம்? இரண்டா? மூன்றா??, இவர் முதல் தொடரில் பதில் சொன்ன ஹதீஸ்களின் எண்ணிக்கை எத்தனை? ஒன்றா ? இரண்டா??!
இது என்ன புதுக் குழப்பம் என வாசகர்களே யோசிக்காதீர்கள்! இதுதான் இவர்கள் குழப்பங்களைத் தெளிவு படுத்தும் இலட்சணம்.
இந்த இடத்தில் சில விடயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
- மேற்படி இந்த ஆய்வில்! நாம் இது தொடர்பாக எமது பிரசுரங்களில், வெளியீடுகளில், தவறான வாதங்களுக்கான மறுப்புகளில் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக மொத்தமாக எத்தனை ஹதீஸ்களை ஆதாரங்களாக முன்வைத்தோம் என்பதை இவர்கள் எமது வெளியீடுகள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் எமது ஆதாரங்களை சேகரித்து அவை அனைத்திற்கும் பதில் சொல்லவில்லை. மாறாக எமது அமைப்பின் முன்னாள் பிரச்சாரகர் ஸஹ்றான் (மஸ்ஊதி) என்பவரால் தயார் செய்யப்பட்டு சகோதரர் அர்ஷாத் என்பவரால் பிஜே என்பவருக்கு தனிப்பட்ட ரீதியாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கும், அதே முறையில் வெளியிடப்பட்ட “தங்க நகை அணியும் நங்கையரே! நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற கட்டுரையிலும் இடம் பெற்ற ஆதாரங்களுக்குமே பதில் சொல்லியிருக்கிறார்கள்.
- இது போன்ற சற்று ஆழமான சட்டப் பிரச்சனைகளில் ஆய்வு செய்பவர் ஒன்று, இரண்டு என்ற அடிப்படை இலக்கம் கூடத் தெரியாமலா எழுதுவார்? என்ற சந்தேகம் எழுவது நியாயம். இந்தத் தமிழ்நாட்டுத் தடுமாற்றத்துக்கு என்ன காரணம்?!
பொதுவாக ஒரு ஹதீஸ் என்பது அறிவிப்பாளர் வரிசை மற்றும் மூல வாக்கியம் என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். அத்துடன் ஒரு குறித்த அறிவிப்பாளர் வரிசையையும் மூல வாக்கியத்தையும் கொண்ட ஒரு ஹதீஸ் அது எத்தனை கிரந்தங்களில் இடம் பெற்றாலும் அது ஒரு ஹதீஸாகவே கொள்ளப்படுமே அன்றி, இரு கிரந்தங்களில் இடம் பெறுவதால் இரு ஹதீஸாகவோ அல்லது இருபது கிரந்தங்களில் வருவதால் இருபது ஹதீஸாகவோ ஒரு போதும் கருதப் பட மாட்டாது. மாத்திரமின்றி மூல வாக்கியத்தில் சில வார்த்தைகள் கிரந்தங்களுக்கிடையில் வித்தியாசப்படும் போதும் கூட இன்ன கிரந்தத்தில் இடம் பெறும் அறிவிப்பில் என்றுதான் குறிப்பிட வேண்டுமே அல்லாமல் அதை வேறொரு ஹதீஸாக ஒரு போதும் கருதக் கூடாது.
இந்த எளிய ஹதீஸ் கலை அடிப்படை கூடத்தெரியாமல் இவர் ஆய்வு செய்ய இறங்கியதால்தான் மேற்படி யஹ்யா பின் அபீ கதீர் என்பவர் வாயிலாக இடம் பெறும் ஒரே ஹதீஸை இரு கிரந்தங்களில் இடம் பெறுவதால் இரண்டு ஹதீஸ்கள் எனத் தவறாக இவர் விளங்கியதுதான் எண்ணிக்கைக் குழப்பத்திற்குக் காரணமாகும்.
மேற்படி இதே தவறை நாம் எமது முதல் தொடரில் சுட்டிக் காட்டிய எஸ் எம் அப்பாஸ் என்பவர் செய்த போது அவர் அறபுக் கல்லூரியில் முறையாகக் கற்ற ஒருவராக இருக்க மாட்டார் என்ற ஒரு ஏற்றுக் கொள்ளத் தக்க காரணமும் எம்மிடம் இருந்தது. ஆனால் இந்த இடத்தில் இதை எழுதியவர், அதை சரி கண்டு தனது இணையதளத்தில் வெளியிட்டவர் ஆகிய இருவரும் உலமாக்களாக இருந்த போதிலும் இவர்களது ஹதீஸ் கலை திறன் பற்றி நாம் மேலதிகமாக எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இதே தவறை நாம் செய்திருந்தால்………..
3. மேற்படி ஆய்வு எமது முன்னாள் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) என்பவரால் தயார் செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் ஒரு கட்டுரை என்பவைகளை அடிப்படையாகக் கொண்டே அதில் காணப்பட்ட இரு ஹதீஸ்களை மாத்திரம் மையமாகக் கொண்டே எழுதப்பட்டது என்பதை சற்று முன்னால் குறிப்பிட்டோம்.
அது தொடர்பாக இப்போது சற்று விரிவாக விளக்க விரும்புகிறோம்.
பொதுவாக எமது அமைப்பான தாருல் அதரைப் பொறுத்தவரை இவர்களைப் போன்று இருபத்தைந்து வருடகால, முப்பது வருடகால தஃவா கள அனுபவம் கொண்ட ஒரு அமைப்பல்ல. கிட்டிய வெகு சில வருடங்களாகவே அமைப்பு ரீதியான பிரச்சாரப் பணியினை மேற்கொள்கிறோம்.
அத்துடன் எமது அமைப்பில் இவர்களைப் போல் ஏராளமான பிரச்சாரகர்களோ, தாராளமான ஆய்வாளர்களோ கிடையாது. இப்போது எமது அமைப்பில் நான்கு உலமாக்கள் மாத்திரம்தான் காணப்படுகிறோம். முன்னாள் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களையும், அவரது தம்பியையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் கூட ஆறு உலமாக்கள் தான் இருந்தோம்.
அத்துடன் எமது பிரச்சாரகர்கள் வெளிநாட்டுப் பல்கழைக் கழகங்களில் மார்க்கக் கல்வி கற்றவர்களோ அல்லது குறைந்த பட்சம் உள்நாட்டில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் நடாத்தப்படும் மத்ரஸாக்களிலோ ஏன் ஸலபுக் கொள்கையை ஒரு மத்ஹபாக போதிக்கும் அறபுக் கல்லூரிகளிலோ மார்க்கக் கல்வி கற்றவர்கள் அல்லர்.
மாறாக, மத்ஹபு சித்தாந்தத்தை மார்க்கமாக போதிக்கும் குறாபி மத்ரஸாக்களில் அல்லது மத்ஹபு சித்தாந்தம் இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம் எனப் போதிக்கும் மௌதூதிஸ மத்ரஸாக்களில் கற்றவர்களே!
இவ்வாறு பல பின்னனிகளைக் கொண்டவர்கள் அல்குஆன் அல் ஹதீஸின் பால் ஈர்க்கப்படுவதற்கு சகோதரர் பிஜே அவர்களது பிரச்சாரமும் கடந்த காலங்களில் நாம் யாரை விமர்சித்து வந்தோமோ அவர்களால் நடாத்தப் படும் இஸ்லாமிய அறபு நூலகமும் இரு காரணங்களாகும்.
ஆனால், எமது பிரச்சாரம் தொடங்கிய காலம் முதல் நாம் அவர்களுடன் மாற்றுக் கருத்து கொண்டவர்களாக இருந்தும் அவர்களது நூலகத்தைப் பயன்படுத்த தடை விதிக்காதது அவர்களிடம் காணப்படும் பாராட்டத்தக்க பண்பாகும்.
இவ்வாறான ஒரு பிண்ணனியில் அமைப்பு ரீதியாக பிரச்சாரம் செய்ய நாம் முனைந்த காலப் பகுதியில் எமது மார்க்கம் தொடர்பான கருத்துகளை அவரவரது தனிப்பட்ட வாசிப்பு, ஆய்வு, தேடல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டோம். பின்பு நாம் நான்கு பேராக இருந்தாலும் எமது நிலைப் பாடுகளை ஒரு கூட்டாய்வு மூலம் ஏன் வெளியிடக் கூடாது என்ற அடிப்படையில் ஆறு பேர் கொண்ட ஆய்வுக் குழு நிறுவப்பட்டு மாதமொரு முறை கூடுவதெனெ முடிவு செய்யப்பட்டு அதை சில காலம் நடை முறைபடுத்த முடியாமல் போனது.
அதற்கான காரனங்களாக இப்போதுள்ள நவீன கணிணி வசதிகள், அதிவேக இனைய வசதி , இன்றுள்ள இஸ்லாமிய மென்பொருள் வசதிகள் என்பன எமதூரில் இருந்தும் எமக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வது, தௌஹீதுக்கு வேட்டு வைக்கும் வாதங்களுக்கு முகங்கொடுப்பது, எமது (வயதில்) மூத்த உலமாக்களுக்குக் கிடைக்காத கல்வி ரீதியான வசதிகளும் வாய்ப்புகளும் கிடக்கப் பெற்ற இளம் உலமாக்கள் அப்போது மத்ரஸாக்களிலே ஓதிக்கொண்டிருந்தது என பலதையும் குறிப்பிடலாம்.
பின்பு இவ்விடயத்தில் சற்று கூடுதல் கவனம் எடுத்து கூட்டாய்வு எனும் நடைமுறையை அமுல் படுத்த ஆரம்பித்தோம். சில
நியாயமான, ஆதாரங்கள் அடிப்படையிலான கருத்து முரண்பாடான விடயங்களில் எமது சக்திக்கு உட்பட்ட வகையில் அல்லாஹ்வுக்குப் பயந்து எமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் முன்வைத்தோம். மாற்றுக் கருத்துடையவர்களை ஒரு சுமுகமான கலந்துரையாடலுக்கோ ஏன் தேவை ஏற்படின் பகிரங்கமான விவதத்திற்கோ அழைத்தோம், அழைத்தும் வருகிறோம்.
இவ்வாறான ஒரு கால கட்டத்தில் தான் குறித்த தங்க வளையல் விடயத்தையும் கையாள வேண்டி உலமாக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக இது குறித்த ஆதாரங்களைத் தேடி ஆய்வுகளைத் தயார் செய்த போது தங்க வளையல் பெண்களுக்கு தடை செய்யப் பட்டுள்ளது என்ற நிலைப்பாடே எம் ஒவ்வருவருக்கும் தனித்தனியாக இருந்தது.
எனினும் இதை ஒரு கூட்டாய்வுக்கு உட்படுத்தி இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவெடுப்பது மாத்திரமே எஞ்சியிருந்தது.
இவ்வேளையில்தான் எமது முன்னாள் பிரச்சாரகரான மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களால் எமது உலாமாக்களில் ஒருவர் வெளிநாட்டிலும் மற்றொருவர் வெளியூரிலும் இருந்த போது மேற்படி பத்வா பொறுப்புணர்வின்றி, கூட்டாய்வுக்கு உட்படுத்தாமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது.
இவ்வேளையில் உலமாக்கள் அனைவரும் அதே நிலைப்பாட்டில் இருந்ததால் அது அமைப்பின் நிலைப்பாடாகவே பிரச்சாரம் செய்யப்பட்டது.
எனினும் இவ்வாறு பொறுப்பற்று தன்னிச்சையாக பத்வாக்கள் வெளியிடும் நிலை, நிர்வாக ஒழுங்குகளுக்கு கட்டுப் படாத தன்மை , நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது போல் ஹதீஸ்களில் கைச்சரக்கைச் சேர்த்தல், ஏன் இல்லாத ஹதீஸ்களையே ஒட்டுமொத்தமாக உருவாக்கி நபி (ஸல்) அவர்களது பேரில் கட்டவிழ்த்து விடுதல் போன்ற இன்னோரன்ன குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடன் நாம் அவர் மீது சுமத்தி அது உரிய முறையில் கையாளப் படாததால் அமைப்பிலிருந்து ராஜினாமா செய்திருந்தோம்.
பின்பு நிர்வாகம் அதற்கு தீர்வு காண முன் வந்த வேளையில் குறித்த மௌலவி அவர்கள் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள முன்வராத போது நிர்வாகம் அவரை ஒரேயடியாக அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு எம்மை இணைத்துக் கொள்ள முன்வந்தது. மீண்டும் அமைப்பில் இனைந்து கொண்ட நாம் மேற்படி நபரால் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் பேரில் வெளியிடப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு, அவைகளைத் திருத்தி, எவ்வாறு மக்கள் மத்தியில் முன்வைப்பது என தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்த வேளையில் தான் இவர்களது மறுப்பு வெளிவந்திருக்கிறது.
இது தொடர்பாக மேலதிக விபரங்களைஅறிந்து கொள்ள பார்க்க( http://kattankudi.wordpress.com/category/athar-clash/).
எனவே மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) என்பவரால் வெளியிடப் பட்ட கருத்துக்களுக்கான மறுப்புக்களுக்கு அவர் உண்மையில் தஃவாக் களத்தில் உறுதியான பிரச்சாரகராக இருந்தால் அவர்தான் பதில் எழுத வேண்டும் என்றிருந்தாலும் தங்க வளையல் தொடர்பான ஆய்வில் அதே நிலைப்பாடே எமது நிலைப்பாடாக இருப்பதனாலும் இது தொடர்பான பிழையான வாதங்களுக்கு தக்க பதிலளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மீதும் உள்ளது என்ற காரணத்தாலும் நாம் உட்கார்ந்து பதிலெழுதிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஒரு சிறு தன்னிலை விளக்கத்துடன் எமது பதிலுக்கு மீண்டும் வருவோம்.
தொடர்ந்து இவர்கள் அறபு மொழியில் தவ்பான் (ரழி) அவர்களது ஒரே ஹதீஸை இரு ஹதீஸ்களாக எழுதிவிட்டு “மேற்கண்ட ஹதீஸ்களுக்கு !! இவர்கள் செய்த தமிழாக்கம் இதுதான் “ என மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) என்பவரால் செய்யப் பட்ட தமிழாக்கத்தை எழுதியுள்ளனர்.
பின்பு, “ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர் தான் கூறுகின்ற கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று வாதிடும் இலங்கை அறிஞர்களிடம் இந்தப் பொறுப்புணர்வை நாம் காண முடியவில்லை. மேலும் தங்களின் கருத்தை நிலை நாட்டுவதற்கு ஏற்ற வகையில் தமிழாக்கத்திலும் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.” என எழுதியுள்ளார்.
இதில் “ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர் தான் கூறுகின்ற கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்பது உண்மைதான். ஆனால் இந்த அறிவுரையை இவர்களே கடைப் பிடித்தார்களா என்பதை இத்தொடரினூடாக வாசகர்கள் பார்க்கத்தானே போகிறார்கள்.
ஆனால் தொடர்ந்து இவர்கள் எழுதியுள்ள ” குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை” என்ற கூற்றில் நாம் முழுதாக உடன்பட முடியாது.
எம்மைப் பொறுத்தவரை “உறுதியாகவும் தெளிவாகவும் (قطعي الثبوت \ قطعي الدلالة) இடம் பெறும் ஒரு ஆதாரத்திற்கு அல்லது ஆதாரங்களுக்கு மாற்றமாக ஏனைய உறுதியிலும் தெளிவிலும் சற்றுக் குறைந்த (ظني الثبوت \ ظني الدلالة) ஆதாரத்தின் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் ஏனைய துணைக் காரணிகளை, சந்தர்ப்ப சூழ்நிலைகளை (القرائن والملابسات) க் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுக்கும் போதுதான் சற்று கூடுதல் கவனம் செலுத்துவோமே அல்லாமல் “நடைமுறையில் உள்ளது” “நடைமுறையில் இல்லாதது” என்பதில் ஒரு போதும் கூடுதல் கவனம் செலுத்தமாட்டோம்.
அத்துடன் ஜும்மாவிற்கு முன் சுன்னத் இருக்கும் நடைமுறைக்கு மாற்றமாக சுன்னத் இல்லை என்ற இவர்களின் முந்தைய நிலைப்பாட்டை இவர்கள் எடுத்த போது இவர்களிடம் இல்லாத கூடுதல் கவனத்தை எம்மிடம் எதிர்பார்ப்பதில் எந்தளவு நியாயம் இருக்கிறது என்பதையும் வாசகர்கள் யோசிக்க வேண்டும்.
அடுத்து தமிழாக்கத்தில் கைவரிசை என்ற விடயத்திற்கு வருவோம்
ஸஹ்றான் மௌலவி அவர்கள் செய்திருந்த தமிழாக்கத்தில் கீழ்வரும் தவறுகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
1.ஹுபைறா என்பவரின் மகள் மோதிரம் அணிந்தவர்களாக வந்தார்கள் என்ற மொழி பெயர்ப்பு தவறு, கனமான மோதிரங்கள் அப்பெண்ணின் கையில் இருந்தன என்பதுதான் சரி.
2.பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்றுவர ஆளனுப்பினார்கள் என்ற மொழி பெயர்ப்பு தவறு, கழட்டி கையில் வைத்திருந்த மாலையை விற்றுவர ஆளனுப்பினார்கள் என்பதுதான் சரி.
இதைச் சுட்டிக் காட்டிய ஆய்வாசிரியர் தொடர்ந்து பின்வருமாறு விளக்கமளிக்கிறார்.
“இந்த ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபராவின் மகளுடைய கையில் (இருந்த) மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்றுதான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டுவித அர்த்தம் செய்ய இடமிருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தட்டிவிட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால்தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டிவிடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதை சந்தேகமற உறுதிப்படுத்தும்.”
முதலில் கையில் வைத்திருந்தார்களா அல்லது கையில் அணிந்திருதார்களா என்ற விடயத்திற்கு வருவோம்.
“ஹுபைறாவின் மகளுடைய கையில் கனமான மோதிரங்கள் இருந்தன” என்ற அறபு வாக்கியத்திற்கு ‘கையில் வைத்திருந்தார்கள்’ அல்லது ‘கையில் அணிந்திருந்தார்கள்’ என்ற இரு அர்த்தங்களும் இருப்பதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார். எனினும் மோதிரங்கள் என்றும் கையில் என்றும் வாக்கியம் அமைந்திருப்பதால் கையில் அணிந்திருந்தார்கள் என்ற அர்த்தமே மேலோங்கியுள்ளது.
இந்த உன்மையை ஆய்வாளர் அவர்களே தன்னையும் அறியாமல்!! தனது இரண்டாவது தொடரில்
“யமன் நாட்டைச் சேர்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வளைந்த
வடிவமானவை. வளைந்த வடிவத்தில் தங்கம் அணிவது கூடாது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வளையமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை” என எழுதி மூலத்தில் ” وفي يد إبنتها مسكتان غليظتان من ذهب“ “கையில் இருந்தன” என்பதை அணிந்திருந்தாள் என மொழிபெயர்த்துள்ளார்.
பொய் சொல்பவருக்கு மாத்திரம் அல்ல, தவறான விளக்கம் கொடுப்பவருக்கும் ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் தான் முதல் தொடரில் எவ்வாறு பிழையான விளக்கம் கொடுத்தோம் என்பதற்கு ஏற்ப இரண்டாவது தொடரிலும் அதே விளக்கம் கொடுக்க முடியும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.
இந்த ஹதீஸுக்கு என்ன விளக்கம் என்பது எமது அடுத்த தொடரில் விளக்குவோம்.
இதன் காரனமாகவே “நபியவர்கள் கையைத் தட்டிவிட்டார்கள்” என்ற வார்த்தையை வைத்து கையில் அணிந்திருக்கவில்லை கையில் வைத்திருந்தார்கள் என ஆய்வாளர்! நிறுவ முற்படுகிறார்.
இந்த இடத்தில் ஆய்வாளர் சுட்டிக் காட்டாத ஒரு தவறும் எமது மொழி பெயர்ப்பில் உள்ளதை நாம் வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
அது, கையைத் தட்டிவிட்டார்கள் என்ற வார்த்தையே ஹதீஸில் கிடையாது என்பதுதான். மாறாக நஸாஇயில் இடம் பெறும் அறிவிப்பில் “فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدها“ “நபியவர்கள் அப்பெண்மணியின் கரத்தில் அடிக்கலானார்கள்” என்றும் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பில்
“فجعل رسول الله صلى الله عليه وسلم يقرع يدها بعصية معه“ நபியவர்கள் தன்னிடமிருந்த ஒரு குச்சியினால் அப்பெண்ணின் கையில் அடித்தார்கள் என்று சற்று மேலதிக விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
எனவே ஹதீஸில் கையைத் தட்டிவிட்டார்கள் என்ற கருத்து கிடையவே கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குவதுடன் இத்தவறான கருத்தின் அடிப்படையில் கையில் வைத்திருந்தார்கள் என்ற கருத்தை நிறுவ முற்பட்ட ஆய்வாளரின் விளக்கமும் தவறு என்பது நிரூபனமாகிறது.
அத்துடன் ஸஹ்றான் மௌலவி அவர்கள் மேற்படி மொழிபெயர்ப்பில் தவறு விட்டிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் (அவர் ஹதீஸ்களில் சேர்த்திருக்கும் ஏராளமான கைச் சரக்குகளுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை!!!?)
ஆனால் மேற்படி மொழி பெயர்ப்பில் தவறு காண விளைந்த ஆய்வாளர்களது கண்களுக்கு இத்தவறு தென்படவில்லையா அல்லது தென்பட்டும் தங்களது தவறான வாதத்திற்கு இந்த தவறான பொழிபெயர்ப்பு உதவும் என்பதால் கண்டு கொள்ளவில்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
இந்த இரண்டில் எந்தக் காரனமாக இருந்தாலும் கூடுதல் கவனம் தேவை, பொறுப்புணர்வைக் காணவில்லை என்று எந்த ஆய்வில்! இவர் கூறுகிறாரோ அதே ஆய்வில் அவரே இந்த அறிவுரைகளைக் கடைப் பிடிக்கவில்லை என்பது மட்டும் உன்மை.!!
இரண்டாவதாக “பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி விற்றுவர ஆளனுப்பினார்கள் ” என்ற மொழிபெயர்ப்பு தவறுதான் “கழட்டி வைத்திருந்த அம்மாலையை விற்றுவர ஆளனுப்பினார்கள்” என்பதுதான் சரி அதை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி இது போல் ஸஹ்றான் மௌலவி என்பவர் விட்ட தாராளமான தவறுகளையும் ஏராளமான பிழைகளையும் மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருவதால் இதையும் கண்டிப்பாக தெளிவு படுத்துவோம் என இவ்விடத்தில் உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
எனவே ஹதீஸில் தட்டிவிட்டார்கள் என்ற வார்த்தையே இல்லாத போது ஆய்வாளரின் “இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தட்டிவிட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால்தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டிவிடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதை சந்தேகமற உறுதிப்படுத்தும்.” என்ற விளக்கமே அர்த்தமற்றதாகப் போய்விடுகிறது.
அடுத்து அவர் பின்னால் அளித்த உறுதியான விளக்கம்தான் (தத்துவம் அல்ல!!!) என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
“அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா(றழி) அவர்களிடம் ஹுபைறாவின் மகள் சொல்கிறார்.இதைக் கேட்ட ஃபாத்திமா (ரழி) அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழற்றி விடுகிறார்கள்.அப்போதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை.அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது என்ன?
பாத்திமாவே முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நொருப்பினால் ஆன மாலை இருக்கிறது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
என்று தான் கூறினார்கள். ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத்தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்றுதான் வாதிட முடியும். அதற்குத்தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. “என விளக்கம் கூற முற்படுகிறார்.
இவர் இந்த ஹதீஸ் தொடர்பாக கூறாமல் விட்ட விளக்கத்தையும் சேர்த்தே நாம் கூறுகிறோம்.
1. ஹுபைறாவின் மகள் கையில் கனமான மோதிரங்கள் அணிந்திருந்தனால் அவர் கையில் தன்னிடமிருந்த குச்சியினால் அடித்த நபி(ஸல் ) அவர்கள் “அல்லாஹ் உனது கரத்தில் நரக நொருப்பிலால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது உனக்கு மகிழ்சியளிக்குமா?” என மோதிரங்கள் அணிவதை எச்சரிக்கை செய்கிறார்களே தவிர தங்கமே வைத்திருக்கக் கூடாது எனக் கூறி அவைகளை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி கூறவில்லை.
2.ஹுபைறாவின் மகள் நபியவர்களது மேற்படி செயலை பாத்திமா (ரழி) அவர்களிடம் கூறிய போது உடனே பாதிமா (ரழி) அவர்கள் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிவிடுகிறார்களே தவிர விற்பதற்கு ஆளனுப்பவில்லை.
எனவே தங்கம் அணிவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள் என்பதும் இதை ஹுபைறாவின் மகள் பாத்திமா (ரழி) அவர்களிடம் சொன்னபோது அதானால் தான் பாத்திமா (ரழி) அவர்கள் மாலையைக் கழற்றி விட்டார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.
3.நபியவர்கள் வந்து பாத்திமா (றழி) அவர்களது கையிலிருந்த மாலையைக் கண்டிக்கிறார்களே தவிர அதை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி அறிவுறுத்தவில்லை.பாத்த்திமா (றழி) அவர்களாகவே அதை விற்று ஒரு அடிமையை வாங்கி உரிமை விடுகிறார்கள்.
“அடுத்து பாத்திமா ரலி அம்மாலையைக் கழட்டி விற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச் சரக்காகும்.” என எழுதியுள்ளார்.
இதற்கான பதிலும் எமது கைச் சரக்கு இவர்களது தவறான வாதத்திற்கு சாதகமாக அமைந்த போது அதை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதும் முன்பே விளக்கப் பட்டுவிட்டது.
“ஏற்கனவே அவர்கள் கழட்டிவிட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழட்ட வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படி கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.ஆனாலும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவதுதான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர். இந்த இடத்தில் வாசகர்கள் சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.”
நபிகளார் பாத்திமா (ரழி) அவர்களது கரத்தில் இருந்த தங்கமாலையை கண்டித்தது நாம் முன்னர் விளக்கியவாறு தங்க மாலையின் பயன் பாடான “அணிதல்” என்பதைக் கருத்திற் கொண்டா அல்லது இவர்கள் கூறுவது போல் “தங்கத்தை வைத்திருக்கவே கூடாது” என்பதாலா என்று ஒரு கேள்வி எழுகிறது.
எனவே “தங்கத்தை வைத்திருக்கவே கூடாது” என்ற இவர்களது வாதம் தவறு என்று நாம் நிரூபிக்கும் போது “அணிதல் “ என்ற பயன் பாட்டைக் கருத்திற் கொண்டுதான் நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவே நிரூபணமாகிவிடும் அல்லவா?.
அதையும் நாம் சற்றுப் பின்னால் “மாற்றப் பட்ட சட்டமா (ஹதீஸ்களுக்கு) மாறுபட்ட சட்டமா” என்ற தலைப்பில் நிரூபிக்க உள்ளோம்.
“தங்க நகை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா ரலி அதை விற்கத் தேவையில்லை.அணியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.” என ஒரு அழகான விளக்கத்தைக் (தத்துவத்தை அல்ல!! அதாவது இவர்கள் சொன்னால் அது ஏகத்துவ (ஏக+தத்துவ) விளக்கம், நாம் சொன்னால்தான் அது (வெறும்) தத்துவம்) கொடுக்க முயற்சிக்கிறார்.
ஏன் தங்க மாலையை அணிவது கூடாது என்றால் அதை அணியமல் ஒரு சொத்தாக வைத்திருந்திருக்கலாமே என்ற வாதத்தை முன்வைத்தவர்களுக்கு தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்றால் அதை வேறு ஒரு (தள பாடமாக வீட்டுப் பாவனைப் பொருட்களாக) சொத்தாக மாற்றி வைத்திருக்கலாமே என்ற வாதம் எழுமே என்ற சிந்தனையும் இல்லை.
“இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.
எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்த செய்தி அழுத்தமாகக் கூறிக் கொன்டிருக்கிறது.
தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா இந்த ஹதீஸின் கருத்து இதுதான் ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாற்றப் பட்டுவிட்டது.” என தொடர்ந்தும் பிழையான விளக்கத்தையே அளிக்கிறார்.
உன்மையில் இந்த ஹதீஸ் தங்கத்தின் நகை வடிவைப் பற்றியதே அல்லாமல் தங்கதின் பன வடிவைப் பற்றியது அல்ல என குறிப்பாக இருக்கும் போது தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது எனக் கூறி பொதுவானதாக ஆக்குகிறோமே என்ற கவனமும் இல்லை. இந்தத் தவறான வாதத்தினால் அன்றிருந்த நாணய வடிவான தீனாரின் ஒன்றைக் கூட வைத்திருக்கக் கூடாது என இஸ்லாம் சட்டமியற்றியதாக ஒரு அறிவு பூர்வமற்ற கருத்தைக் கூற வேண்டி வருமே என்ற சிந்தனையும் இவர்களிடம் இல்லை.
இது என்ன புது குழப்பம் என யோசிக்காமல் பொறுமையாக அடுத்த தலைப்புக்கு வாருங்கள்.
மாற்றப் பட்ட சட்டமா? (ஹதீஸ்களுக்கு) மாறுபட்ட சட்டமா?
மேற்படி ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றியது என்பதை நாம் முன்னர் தெளிவாக விளக்கினோம் அத்துடன் அந்த ஹதீஸ் தங்கத்தை வைத்திருக்கவே கூடாது என்பதையே குறிக்கிறது என்ற இவர்களது வாதம் எந்த வகையில் தவறானது என்பதை இப்போது நோக்குவோம்.
தங்கம், மாலை, மோதிரம், என்ற ஹதீஸின் பதங்களையும் எமது இரண்டாவது ஹதீஸில் இடம் பெறும் அணிவித்தல் என்ற பதத்தையும் கவனத்திற் கொள்ளாமல் முதலில் தங்கத்தை வைத்திருக்கவே கூடாது என்ற தடை இருந்த்தது பின்பு அது மாற்றப் பட்டு விட்டது எனவே அந்த ஹதீஸ் தடை செய்யப் பட்ட காலத்திற்குரியது என்பதுதான் இவர்களது மொத்த வாதத்தின் சுருக்கமாகும்.
இவர்களது மேற்படி வாதமே தவறு என்றாகிவிடும் போது மொத்த ஆய்வுமே தவறென்றாகிவிடும்.
இந்த வகையில் நோக்கும் போது இவர்கள் தங்களது தவறான வாதத்தை பினவருமாறு நிறுவ படாத பாடு படுகிறார்கள்.
மாற்றப்பட்ட சட்டம்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காச்சப்பட்டு ,அதனால் அவர்கள் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்ததை அணுபவியுங்கள்” (என்று கூறப்படும்) அல்குஆன் (9:34)
இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகிறது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாராத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது. “ என எழுதியுள்ளார்.
மேற்படி வனனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள அறபி வார்த்தையான “يكنزون” என்பதற்கு ஒரே அர்த்தத்தைத் தரக் கூடிய “சேர்த்து வைத்தல்”, “சேகரித்து வைத்தல்”, “சேமித்து வைத்தல்” பொருள் செய்துள்ளனர்.இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது .ஆனால் பந்தியின் இறுதியில் “மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது.” என்பதில் தான் இவர்களது பிழையான விளக்கம் ஒழிந்துள்ளது.
சேமித்து வைத்தல் என்பதற்கும் பாவித்தல் என்பதற்குமிடையில் உள்ள சாதாரன பொருளியல் பிரயோகங்களை இவர்கள் சரியாக விளங்கவில்லை.
உதாரனமாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.அதை அப்படியே செலவளிக்கிறார். இதைப் பனப் பாவனை என்போம்.இன்னுமொருவர் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதில் நூறு ரூபாயை சேர்த்து வைக்கிறார். இதை சேமிப்பு என்போம்.
எனவே மேற்படி வசனம் தங்கம் வெள்ளியை (வெள்ளியை என்ற எமது வார்த்தையை வாசகர்கள் நன்கு ஞாபகம் வைத்திருங்கள் எமது அடுத்த தொடரில் அடுத்த ஹதீஸ் பற்றி விளக்கும் போது இது உதவியாக இருக்கும்) சேமிப்பது கூடாது என்பதையே விளக்குகிறது.
ஆனால் ஹதிஸோ பெண்களின் அண்றாட பாவனைப் பொருளான மாலை, மோதிரங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
எனவே மேற்படி சேமித்து வைத்தல் என்பதைக் குறிக்கு ம்வசனத்திற்கும் தங்க நகைகளின் பாவனையைக் குறிக்கும் மேற்படி ஹதீஸுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகுவதுடன் யார் தங்களது வாதத்திற்கு சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் என்பதும் இங்கு நிரூபணமாகிறது.
மேலும் அறவே வைத்திருப்பது கூடாது என இவர்கள் எடுத்துவைத்த தவறான வாதத்திற்கும் மேற்படி வசனத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள சேர்த்து வைத்தல் என்ற பதத்திற்குமிடையிலான வித்தியாசத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இவர்கள் தங்கம் வெள்ளியை வைத்திருப்பது ஆரம்பத்தில் தடை செய்யப் பட்டிருந்தது பின்பு ஸகாத் கடமையான பின் அனுமதியளிக்கப் பட்டது என்ற ஆதாரங்களுக்கு முரனான கருத்து இவர்களைத் தடுத்துவிட்டது.
அது எவ்வாறு என்பதை இப்போது நோக்குவோம்
ஆய்வாளர் தொடர்ந்து பின்வருமாறு எழுதுகிறார்.
“ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன்னால் இருந்தது.ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதை பின்வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றது.” எனக் கூறிய அவர் இப்னு உமர் (ரழி) அவர்களது “இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன்னுள்ளதாகும்” என்று இடம் பெறும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.
ஆனால் ஒரு நிலைப்பாடை விமர்சிக்கும் ஆய்வில் وقال أحمد بن شبيب என அறிவிப்பாளர் தொடர் தொடர்பற்றதாக ஆரம்பிக்கும் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறோமே , இது பற்றி கேள்விகள் எழுவதைத் தவிர்ப்பதற்காக அதன் அறிவிப்பாளர் தொடர் பூரனமாக விடம் பெறும் அறிவிப்பை தேடியெடுத்து மேற்கோள் காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் இவர்களிடம் காணவில்லை.!!
பின்பு, “ நபித்தோழர்களின் கருத்து மார்க்க ஆதாரமாகது என்பதற்கு இது முரனானது என்று நினைக்கக் கூடாது. ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள்தான் கூற முடியும்.(இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.” என்று முதல் ஆதாரத்தைக் குறிப்பிடுகிறார்.
அடுத்து, அபூதாவுதில் இடம் பெறும் பின்வரும் செய்தியை இரண்டாவது ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்.
“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!(9:34) இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.உங்கள் பிரச்சினையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இறைத் தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை………………………….என்ற ஹதீஸையும்
குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது தவறை (அறியாமையை அல்ல) விளக்குவதற்காக வேண்டி முதலில் இவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.
மேற்படி தங்கம் வெள்ளியை சேமித்து வைத்தல் என்ற வசனம் இறக்கப் பட்ட தன் பின்புதான் ஸகாத் கடமையாக்கப் பட்டது என்ற வாதத்திற்கான ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது. மாறாக நபியவர்களின் “உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை” என்ற தெளிவான வாக்குமூலம் ஏற்கனவே ஸகாத் கடமையாகி இருந்தது என்பதையல்லவா உணர்த்துகிறது.
அதாவது மேற்படி இறைவசனம் இறங்கிய உடன் முஸ்லிம்களுக்கு பிரச்சனையாகி விட்டது. இந்த இடத்தில் இவர்கள் தமிழாக்கம் செய்யாமல் விட்டு விட்ட فقال عمر என்ற வசனத்தின் ف யும் சேர்த்தால் உடனே உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்போது நபியவர்களுக்கு ஸகாத் வசனம் இறங்கியது என்றிருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஹதீஸில் இருப்பதோ “உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை” என்ற ஸகாத் என்பது ஏற்கனவே கடமையாக்கப் பட்டிருந்தது என்ற கருத்தை உறுதி செய்யும் நபி (ஸல்) அவர்களது கூற்றுதானே இருக்கிறது.
இப்போது தங்களது வாதத்திற்கு சிறிது சம்பந்தமில்லாத ஆதாரத்தை எடுத்துவைப்பது மட்டுமின்றி தங்களது வாதத்திற்கு எதிரான ஆதாரத்தையே யார் எடுத்து வைக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா?!
இந்த அடிப்படையில் இவர்கள் முதலில் காட்டிய இப்னு உமர் (ரலி) யின் “இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன்னுள்ளதாகும்” என்ற கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையே இல்லாமல் போய்விடுகிறது. காரனம் நபியவர்களின் நேரடி வாக்கு மூலம் ஸகாத் என்பது இவ்வசனத்திற்கு முன் கடமையாக்கப் பட்டிருந்தது என்றிருக்க அதற்கு மாற்றமான
” மேற்படி இறை வசனம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன் இறங்கியது” என்ற நபித்தோழரின் கூற்றுக்கு என்ன பெறுமானம் என்பதை இவர்கள் விளக்க வேண்டும். எனவே நீங்கள் விரிவாக விளக்க வேண்டியது ‘ ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள்தான் கூற முடியும். (இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.” என்பதையல்ல.
மாறாக அல்குர் ஆன் யாருக்கு இறங்கியதோ அந்த நபி (ஸல்) அவர்களது நேரடி கூற்றுக்கு மாற்றமான நபித்தோழர்களின் அபிப்பிராயங்களை எடுக்க முடியுமா என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த இவர்களது அடிப்படை வாதாமான தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்திருப்பது (இதற்குத்தான் ஆதாரம் உள்ளது ஆனால் இவர்களோ தங்களது வாதத்தை நிறுவ வேண்டும் என்பதற்காக பாவனை செய்வதையும் சேர்த்துக் கொண்டார்கள்) ஆரம்பகாலத்தில் தடுக்கப் பட்டிருந்தது. ப்ன்பு ஸகாத் கடமையாக்கப்பட்டதும் சேமித்து வைக்க அனுமதியளிக்கப் பட்டது என்ற வாதத்தின் அபத்தத்தை இன்னுமொரு வகையிலும் எம்மால் விளக்க முடியும்.
பொதுவாக இவர்கள் கூறுவது போல் அல்குர்ஆன் அத்தியாயங்களை இது மக்காவில் இறங்கியது இது மதீனாவில் இறங்கியது என ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதற்கு ஆதாரம் இல்லை என்பது உன்மைதான்.
ஆனால் சில அல்குர் ஆன் வசனங்களை அந்த வசனத்தில் காணப்படும் மொழி நடை, அந்த வசனம் யாரை அல்லது எந்த சமூகத்தைப் பற்றி ,விளித்துப் பேசுகிறது அல்லது அந்த வசனத்தில் கூறப்படும் இடம் மற்றும் காலம் எனபதை வைத்து ஆரம்பகாலத்து மக்கா வசனமா அல்லது பிந்தைய மதீனா வசனமா என்பதைப் புரிந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஒரு அடிப்படையில் இவர்கள் எடுத்துக் காட்டிய “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்ற வசனத்தை எடுத்து இதில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்ட “و” மேலும் என்ற சொல்லைச் சேர்த்துப் பார்த்தால் இந்த இன்னுமொரு வசனத்தின் தொடர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அது என்ன வசனம் என்பதற்கு நாம் பெரிதாக அலையத் தேவையில்லை. சகோதரர் பிஜே அவர்களது (கருத்தைக் கவனத்திற் கொண்டு நிரந்தர இலக்கங்கள் உடைய வசனங்களை சேர்த்தும் பிரித்தும் செய்யப்பட்ட)அல்குர் ஆன் மொழியாக்கத்தையே எடுத்துக் கொள்வோம்.
அதில் மேற்படி வசனத்திற்கு முந்தைய வசனத்துடன் “விசுவாசிகளே யூத கிருஸ்தவ மதகுருமார்களில் அதிகமானவர்கள்………….” என்ற வசனத்துடன் இணைத்தே பொருள் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.
எனவே மேற்படி தங்கம் வெள்ளி பற்றிக் குறிப்பிடும் வசனம் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் எதிர் நோக்கிய ,இஸ்லாத்திற்கு தடையாக இருந்த யூத ,கிருஸ்தவ மதகுருமார்களைப் பற்றியது என்பது தெளிவாகிறது.
மேற்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களையும் இந்த வசனம் குறிக்கிறது என்பதை பின்வரும் நபித்தோழர்களுக்கிடையில் நடை பெற்ற புஹாரியில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உறுதி செய்கிறது.
صحيح البخاري جزء 2 - صفحة 509
حدثنا علي سمع هشيما أخبرنا حصين عن زيد بن وهب قال
: مررت بالربذة فإذا أنا بأبي ذر رضي الله عنه فقلت له ما أنزلك منزلك هذا ؟ قال كنت بالشأم فاختلفت أنا ومعاوية في { الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله } . قال معاوية نزلت في أهل الكتاب فقلت نزلت فينا وفيهم
ஸைத் பின் வஹப் கூறுகிறார்:
நான் றபதா பகுதியைக் கடந்து சென்ற போது அங்கே அபூ தர் (ரலி) அவர்களை சந்தித்தேன். அவரிடம் “என்ன இங்கிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கவர்” நான் ஷாமில் இருந்தேன் நானும் முஆவியா (ரலி) அவர்களும் “தங்கம் வெள்ளியை சேமித்து வைப்போருக்கு…” எனும் வசனம் தொடர்பாக கருத்து முரண்டாடு கொண்டோம் அவர்“அது வேதங் கொடுக்கப் பட்டவர்கள் சம்மந்தமாக இறங்கியது” என்றார் நான்” “இல்லை அது அவர்கள் சம்பந்தமாகவும் முஸ்லிம்கள் சம்பந்தமாகவுமே இறங்கியது” என்று கூறினேன்…………. .
மேற்படி சம்பவத்தினால் நாம் சொல்லவருவது குறித்த (9:34) வசனம் யூத நஸாறாக்கள் பற்றியது முஸ்லிம்கள் பற்றியதல்ல என்பது எமது வாதமல்ல. மாறாக நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எதிர் கொண்ட யூத கிருஸ்தவர்களைப் பற்றியும் இவ்வசனம் குறிப்பதால் இந்த வசனம் மதீனாவில் இறங்கியது என்பதையே தெளிவு படுத்த விரும்புகிறோம். ஏனினில் குறித்த சம்பவத்தில் வேதங்கொடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் இவ்வசனம் இறங்கியது என்பதில் இரு நபித்தோழர்களும் உடன்படுகிறார்கள். முஸ்லிம்கலையும் குறிக்கின்றதா இல்லையா என்பதில் தான் கருத்து முரண்பாடு கொள்கிறார்கள்.
அத்துடன் “ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள்தான் கூற முடியும்.” என கொட்டை எழுத்தில் எழுதியுள்ள இவர்கள் ஒரு வசனம் யார் குறித்து இறங்கியது என்பதில் ஒண்றுக்கு இரண்டு நபித்தோழர்களின் கருத்தை கன்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். கொள்ள வேண்டும்.
ஆனால் ஸகாத் எப்போது கடமையாக்கப் பட்டது என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக மக்கா வாழ்க்கையில் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் சிலரை அபூ ஸீனியாவுக்கு ஹிஜ்றத் அனுப்பிய போது அங்கு ஜஃபர் பின் அபூதாலிப் அவர்களை நஜ்ஜாஷி மன்னர் விசாரனைக்கு உட்படுத்திய போது “நபியவர்கள் எதை உங்களுக்கு ஏவுகிறார்”? என வினவிய போது ஜஃபர் (ரழி) அவர்கள் அளித்த அவர் “தொழுகையையும் ஸகாத்தையும் நோன்பையும் எங்களுக்கு ஏவுகிறார்” என்ற பதிலில் நிச்சயம் குறித்த இறை வசனத்தின் முன்புதான் ஸகாத் கடமையாக்கப் பட்டிருந்தது என்பது சந்தேகமற உறுதியாகிறது.
பார்க்க:
مسند أحمد بن حنبل جزء 5 - صفحة 290
22551 – حدثنا عبد الله حدثني أبي ثنا يعقوب ثنا أبي عن محمد بن إسحاق حدثني محمد بن مسلم بن عبيد الله بن شهاب عن أبي بكر بن عبد الرحمن بن الحرث بن هشام المخزومي عن أم سلمة ابنة أبي أمية بن المغيرة زوج النبي صلى الله عليه وسلم قالت : لما نزلنا أرض الحبشة ………. وأمرنا أن نعبد الله وحده لا نشرك به شيئا وأمرنا بالصلاة والزكاة والصيام …..
ஆக, இவர்கள் சுற்றிச் சுற்று சொல்ல வந்த தங்கம் வெள்ளியை வைத்திருப்பது ஆரம்பத்தில் தடை செய்யப் பட்டிருந்தது ஸகாத் கடமையாக்கப் பட்டதன் பின் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்ற எடுகோலே பிழை என்றாகிவிட்ட பின் அதன் அடிப்படையில் இவர்கள் எழுத்திய வாதங்கள், சொன்ன விளக்கங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்றாகி விட்டது.
அத்துடன் நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களது கரத்தில் இருந்த தங்க மாலையைக் கண்டித்தது தங்க மாலையின் பாவனையான “அணிதல் “ என்பதைக் கருத்திற் கொண்டே தவிர இவர்கள் தவறாக (சேமித்து வைத்தல் என்பதற்கும் பாவனை செய்தல் என்பதற்குமிடையில் உள்ள எளிய வித்தியாசம் கூடத்தெரியாமல் ) விளக்கியது போல் “தங்கத்தை வைத்திருப்பதே கூடாது” என்பதற்காக அல்ல.
ஒரு வாதத்திற்காக இவர்களது தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்ற கருத்தை மேற்படி வசனமும் ஹதீஸும் வலியுறுத்துகிறது என்றே வைத்துக் கொண்டாலும் ஸகாத் என்பது குறித்த வசனத்திற்கு முன்பே கடமையாக்கப் பட்டுவிட்டது என்ற நாம் நிரூபித்த அடிப்படையில் இன்று வரை தங்கம் வெள்ளியை வைத்திருக்கவே கூடாது (இவர்களாக இணைத்துக் கொண்டதன் பிரகாரம்) பாவிக்கவும் கூடாது என்ற அபத்தமான நிலைப்பாட்டுக்கே இது இட்டுச் செல்லும் . அபத்தத்திற்கு இட்டுச் செல்லும் வாதங்கள் அபத்தமானவை என்பதை நாம் செல்லித்தான் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு மேலதிகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேற்படி (9:34) இறை வசனத்தில் தங்கம் வெள்ளியை சேமித்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதவர்களுக்கான தண்டனை “அவை அந்நாளில் நரக நொருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்” என்பதாகும்.
ஆனால் குறித்த தௌபான் (ரலி) அவர்களது ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஹுபைறாவின் மகள் மற்றும் பாத்திமா(ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கும் எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனையோ அதே வடிவிலான நரக நொருப்பு அணிவிக்கப் படும் என்பதாகும். .
எனவே இவ்வாறு வித்தியாசமான முறையில் சொல்லப் பட்டிருக்கும் தண்டனைகளைக் கவனித்திருந்தாலே மேற்படி இறை வசனத்திற்கும் ஹதீஸுக்குமிடையில் முடிச்சுப் போட்டிருக்கமாட்டார்கள் என்பதையும் இங்கு இறுதியாக ஞாபகமூட்டிக் கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் எமது அடுத்த ஹதீஸ் பற்றிய தவறான கருத்துளுக்கு பதில் சொல்வோம் எனக் கூறி முடித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மௌலவி எம் ஐ எம் நௌபர் (காஷிபி),
பிரச்சாரகர்,
தாருல் அதர் அத்த அவிய்யா,
காத்தான் குடி,
இலங்கை.
மொபைல்:00974 3283253
மின்னஞ்ஞல்: nowfer78@hotmail.com.
skype ID nowfer78
(எஸ் எம் எஸ் மூலம் நேரத்தை உறுதி செய்தபின் உரையாடலுக்கு வரலாம்)

Comments are closed.