Skip to content

தங்க வளையல் தொடர்பான தமிழ்நாட்டுத் தடுமாற்றம். தொடர் :01

November 22, 2009

பிஜே அவர்களதுஆய்வுக்கான‌ பதில்  தொடர் :01

அன்புச் சகோதரர் பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? என்ற தலைப்பில் தாங்களது பிரேத்தியேக‌ இணைய தளத்தில் வெளியான இரு தொடர்களையும் கண்டோம்.அது தொடர்பான எமது மாற்றுக் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் ஏன் சில  ஆலோசனைகளையுங் கூட இந்த பதிலினூடாக உங்கள் முன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.

முதலில் “இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்_ பீ ஜைனுல் ஆபிதீன்” என உங்கள் மறுப்பை தொடக்கியுள்ளீர்கள்.

உங்களது பிரேத்தியேக‌ இணைய தளத்தில் குறித்த பிரச்சனை தொடர்பாக உங்களது ஆய்வை (நீங்கள் இது குறித்து ஆய்வு செய்திருந்தால்) வெளியிடாமல் அப்பாஸ் அலி அவர்களது ஆய்வை வெளியிட்டிருக்கிறீர்கள். விவாதங்கள்,நிகழ்வுடன் சம்ப்ந்தப்பட்டவர்களது நேரடித் தகவல்கள் (உதாரனம் தமுமுக விவகாரம்) போண்றவை அல்லாமல் உங்களோடு மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு நீங்களே பதில் எழுதும் உங்கள் வழமைக்கு மாற்றமாக அதுவும் உங்கள் தனிப்பட்ட இணைய தளத்தில் முதன் முறையாக எமக்கு பதில் எழுதும் போது மாத்திரம் அப்பாஸ் அலி என்பவரது ஆய்வை தேவையான மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.அவர் குறித்த விடயத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.நாம் இது தொடர்பான எமது வாதங்களை முன்வைத்தபின் அவரது ஆய்வில் செய்யப்பட்ட “தேவையான மாற்றம்” என்ன என்பது ஒரு புறமிருக்க, அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும் நபர்களை எதிர் கொள்வது முக்கியமில்லை கருத்தை எதிர்கொள்வதே முக்கியம் என்ற எமது நடைமுறைக்கேற்பவும் இப்பதிலை உங்கள் முன்னிலையில் பதிவு செய்கிறோம்.

அப்பாஸ் என்றதும் தான் இந்த இடத்தில் எமக்கு இன்னுமொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஏற்கனெவே உங்கள் அமைப்பின் இணையத்தள நிர்வாகி எஸ் எம் அப்பாஸ் என்பவர் இரண்டாம் ஜமாஅத் தொடர்பாக சகோதரர் அலி ********* என்பவருக்கு வழங்கிய தவறான பத்வாவும் அது தொடர்பாக அவர் எம்மிடம் விள‌க்கம் கேட்ட போது  நாம் எழுதிய மறுப்புக்கு இன்று வரை அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது உரிய பதிலோ எழுதாமல் மௌனம் சாதிக்கும் தாங்கள் (பார்க்க : ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா? )

குறித்த தங்க நகை விடயத்தில் இன்னுமொரு அப்பாஸை களமிறக்கியிருப்பத்பதற்கும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்போம் எனக் கூறும் உங்கள் நிலைப்பாட்டுக்கும் தெளிவான முரண்பாடாகத் தென்படவில்லையா ? அல்லது எதற்கு உங்களிடம் பதில் இல்லையோ அதை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதற்கு பதில் சொல்லமுடியுமோ அல்லது பதில் என்று  எதையாவது சொல்ல முடியுமோ அதற்கு மாத்திரம் பதில் அளிப்பதுதான் உங்களது நிலைப்பாடா என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.அடுத்து “பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இண்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன.” என்று 02/11/2009 அன்று தாங்கள் வெளியிட்ட முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதோ இக்கட்டுரை வெளியிடப்படும் காலப் பகுதியில்தான் நாம் இக்கருத்தை முன்வைத்தது போலும் அது குறித்த வாதப் பிரதி வாதங்கள் இலங்கயில் பரவலாக நடந்து வருகிறது போலும் அது பற்றிய தெளிவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்ற காரனத்தால் சுடச் சுட தாங்கள் பதிலளிப்பது போண்ற ஒரு பிரம்மையை தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் குறிப்பாக அல் குர் ஆனும் ஆதார பூர்வமான நபி மொழியும் மாத்திரம்தான் இஸ்ஸாலாத்தின் மூலாதாரங்கள் என்ற உறுதியன நம்பிக்கையுடன் வாழும் கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.

ஆனால் உன்மை நீங்கள் குறிப்பிட்டதற்கு மாற்றமாக அல்லவா அமைந்துள்ளது.!! நாம் குறித்த தங்க வளையல் நகை தொடர்பான கருத்தை முன்வைத்தது 27/05/2009 அன்றாகும்.

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? Posted on மே 27, 2009 by darulathar    (பார்க்க எமது இணையதளம்) என்ற கட்டுரை மூலமாக ஐந்தாம் மாத இறுதியில்  எமது கருத்தை வெளியிடுகிறோம். வழமையாக நாம் அல் குர் ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் ஒரு கருத்தை வெளியிடும் போது ஏற்படுவது போண்ற சிறு சலசலப்பு ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் இஸ்மாயில் மதனி என்ற சகோதரர் ஒரு மஸ்அலா இஜ்திஹாத் என்ற வகையில் பதில் பேச அதற்கான எமது தரப்பு பதில்களும் அளிக்கப்பட்டதே அன்றி  நீங்கள் “அது குறித்த வாதங்கள் நடந்துவருகின்றன” என்று எழுதியுள்ளது போல் எந்த வாதங்களும் நடக்க வில்லை

மே மாதத்தின் இறுதி நான்கு நாட்களையும் கழித்து விட்டுப் பார்த்தால் கூட ஜூன், ஜூலை, ஓகெஸ்ட்,  செப்டம்பர், ஒக்டோபர் என முழுமையாக ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் நீங்களோ அல்லது உங்களுக்கென்று இலங்கையில் இருக்கும் அமைப்போ அல்லது அதன் பிரச்சாரகர்களோ வாய் திறக்கவுமில்லை,கருத்து வெளியிடவுமில்லை. ஒரு வேளை இவ்வாறான ஆய்வியல் விடயங்களில் அபிப்பிராயம் வெளியிடும் தகுதியோ திறனோ வாய்ந்த உலமாக்கள் இலங்கையில் உங்கள் அமைப்பில் இல்லை என்ற ஒரு நியாயமான காரனம் இருந்தாலும் குறைந்த பட்சம் நீங்களாவது இந்த நீன்ட காலப் பகுதியில் உங்கள் கருத்தை வெளியிட்டு இருக்கலாம் அல்லவா?

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு, முஜீபு,அப்துர் ரஹ்மான்களுக்கு மறுப்பு என நீங்கள் வேலைப் பழுக்களுடன் இருந்தாலும் ஏற்கனவே செய்யப்பட்ட அப்பாஸ் அவர்களது ஆய்வை வெளியிடவா உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டது என்ற ஒரு நியாயமான கேள்விக்கு நீங்கள் பதில் கூறக் கடமைப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?மேலும், வழமையாக ஆளை, அவர் சார்ந்திருக்கும் அமைப்பை அடையாளப் படுத்தி எழுதும் நீங்கள் “பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு………….. என்றும் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா?………..” என்றும் செயெற்பாட்டு விணையிலும் யாரோ முகவரியும் அடையாளமும் இல்லாத சிலர் மேற்படி கருத்தை முன்வைப்பது போலவும்  எழுதியுள்ளதற்கான காரணம் என்ன?! நாம் யார் , எமது அமைப்பு என்ன, எமது அழைப்பு என்ன என்பதை அடையாளப் படுத்தினால் அல்குஆன் அஸ்ஸுன்னாவை யார் சொன்னாலும் அதைப் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழும் ச‌கோதரர்கள் குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை ச‌கோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து  எமது மக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.

இந்த இடத்தில் நீங்கள் எம்மை அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்தாலும் நாம் எம்மை சுருக்கமாக அடையாளப் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.கடந்த சில வருடங்களாக தாருல் அதர் அத்த விய்யா எனும் அமைப்பு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பாக இலங்கை தஃவாக் களத்தில் இஸ்லாத்தை அதன் தூய மூலாதாரங்களான அல்குர் ஆன் அஸ்ஸுன்னா ஆகிய இரு மூலாதாரங்களில் இருந்து மாத்திரம் பிரச்சாரம் செய்து வரும் ஒரு அமைப்பாகும்.

தௌஹீதை போதிக்க கிளம்பிய பல‌அமைப்புகள் மத்ஹபுகளுக்கு நிகரான ஸலபிஸம் என்றும் சமூக சேவைக்கு முன்னுரிமை ,சஊதி பொருளாதார உதவிகளுக்கு ஏற்றவாரான மன்ஹஜ் என்றும் அர்த்தமற்ற இஜ்மா,கியாஸ் என்றும் இஹ்வானிஸம், மௌதூதிஸம் போண்ற வழிகேடுகளுக்கு வக்காலத்து வாங்கும் அமைப்புகளாகவும் தடம் புரண்டுவிட்ட வேளையில் கொண்ட கொள்கையில் உறுதியோடும் சத்தியத்தை சமூகத்திற்கு அஞ்சாமல் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடனும் செயற்படும் ஒரு அமைப்பாகும். மேலதிக விபரங்களுக்கு எமது இணைய தளத்தைப் பார்க்கவும். (www.dharulathar.com)

அத்துடன் தஃவா களத்தில் எமது பெயர்தான் மேலோங்கவேண்டும் ஏனைய அமைப்புகள் அவை எமது கொள்கை கோட்பாடுகளுடன் உடன்பட்டவைகளாக இருந்தாலுங் கூட அவைகளை ஓரங் கட்ட வேண்டும்,  மட்டந்தட்ட வேண்டும், அவர்கள் பிரபல்யம் ஆகுவதையோ அல்லது அவர்களது கருத்துகள் மக்களை சென்றடைவதையோ தடுக்க வேண்டும், அவர்கள் ஹதீஸில் கைவரிசை காட்டுபவர்கள் தங்களது வாதங்களுக்கு ஏற்ப ஹதீஸ்களை வளைப்பவர்கள் என்றெல்லாம்  மாயையை ஏற்படுத்தி மக்கள் அவர்களை நெருங்காமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல்தான்  அப்போது உங்களின் உத்தியோக பூர்வ பிரச்சார அமைப்பாக இருந்த எஸ் எல் டீ ஜே (சிறீ லங்கா தௌஹீத் ஜமாஅத் ) என்ற அமைப்பினது பிரச்சாரப் பணிகளுக்காக அப்போது எமது அமைப்பின் பிரச்சாரகராக இருந்த ஸஹ்றான் மௌலவி என்பவர் சென்று வர எமது நிர்வாகம் அனுமதி வழங்கியது.இந்த இடத்தில் இரு விடயங்களை பதிவு செய்து கொள்ள விரும்பிகிறோம்

முதலாவது,

தூய அல்குர் ஆனிலிருந்து ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்தும் நாம் (எமது அமைப்பும் உங்கள் அமைப்பும்) எடுத்துவைக்கும் ஆதாரங்களும் அவை தொடர்பாக நாம் முன் வைக்கும் அறிவு பூர்வமான விளக்கங்களும் தான் ஏனைய கொள்கைகளில் இருந்து மக்கள் தௌஹீதை நோக்கி அணிதிரண்டு வருவதற்கு காரனங்களாக அமைந்தன.

இப்போது தௌஹீதுக்கு எதிராக சகல அமைப்புகளும் ஒண்று திரண்டு பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருக்கும் வேளையில் தமிழகத்திலிருந்து நீங்கள் ஆடிக்கொருதடவை ஆவணிக்கொரு தடவை அனுப்பிவைக்கும் பிரச்சாரகர்களால் புதிய தௌஹீத் வாதிகளை உருவாக்குவது ஒருபுறமிருக்க ஏற்கனவே கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களை தக்க வைத்துக் கொள்ளவே முடியாது என்பதுதான் வெளிப்படையான உன்மையாகும்.

எனவே இன்றைக்கு உங்களுக்கும் சரி எங்களுக்கும் சரி இலங்கையில் தௌஹீது பிரச்சாரத்திற்கெனெ ஒரு களம் இருக்கிறது என்றால் அதற்கான காரனம் நீங்களோ அல்லது நீங்கள் அனுப்பிவைக்கும் பிரச்சாரகர்களோ மாத்திரம் அல்ல. மாறாக கொள்கைக் கெதிரானவர்களது சவால்களுக்கு அன்றாடம் முகங்கொடுப்பது, விவாதப் பூச்சாண்டி காட்டுபவர்களின் சவால்களை ஏற்றுக் கொண்டு அவர்களை சமூகத்திற்கு அடையாளங்காட்டுவது, கொள்கைச் சகோதரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகள் ,அடக்கு முறைகளுக்கெதிராக குரல் கொடுப்பது, உரிய நடவடிக்கைகள் எடுப்பது என சகல விடயங்களையும் மேற்கொள்வது எம்மைப் போண்ற அமைப்புகள்தான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரனத்திற்காக ஒரு விடயத்தை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறோம்.எஸ் எல் டீ ஜே எனும் அமைப்பு உங்களது கிளையாக இயங்கிய கால கட்டத்தில் குருநாகலை எனும் மாவட்டத்தில் மெடிகெலகெதர எனும் ஊரில் எஸ் எல் டீ ஜே யின் உள்ளூர்க் கிளை ஒன்று திறக்கப்பட்டது. புதிய கிளை அங்குரார்ப்பனம் என்றும் பத்திரிகையில் பெரிதாக அறிவிப்பும் வெளி வந்தது.பின்பு என்ன நடந்த்தது?! கிளை ஆரம்பிக்கப் பட்டது ஆரம்பிக்கப் பட்டது தான் ஒரே ஒரு தடவையைத்தவிர உங்கள் இலங்கைத் தலமையகத்திலிருந்தோ அல்லது தமிழக தலமையகத்திலிருந்தோ பிரச்சாரத்திற்காக யாரும் வரவில்லை. பிரச்சாரமும் நடக்கவில்லை.

அனைத்து அமைப்புகளும் தங்கலது பிரச்சாரங்களை முடுக்கிவிடும் ரமளான் காலப் பகுதியிலும் பிரச்சாரகர் இன்றி அங்கிருந்த பத்துப் பேரும் வெவ்வேறு கொள்கைக்கு முரனான அமைப்புகளில் சேர்ந்து தங்களது பிரச்சாரத்தை முன்னெடுக்கும் துர்பாக்கிய நிலை  எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு போது நாம் உங்கள் அமைப்பு எமது அமைப்பு என்ற என்ற பாகுபாடோ அல்லது நீங்கள் குறிப்பிட்டதைப் போண்று “சிலர்” சிரமப்படுகிறார்கள் என்ற ரீதியிலோ இல்லாமல் நாம் முன்வந்து அப்பகுதியில் பிரச்சார வேலைகள், கேள்வி பதில்கள், நளீமிகளுடனான கலந்துரையாடல் என்பது தொடக்கம் அவ்வூர் ஜமாஅத்தார்களால் அச்சகோதரர்களின் மத உரிமை பறிக்கப்பட்ட போது போலீஸ் நிலையம் வரை சென்று அவர்களுக்காக குரல் கொடுத்தோம். இதை உங்களாலோ அல்லது இலங்கையில் இருந்து கொண்டு உங்களுக்கு உண்மைக்கு புரம்பான‌ தகவல் தருபவர்களாலோ (உளவுப் படை என நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்) மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியுமா?!

இரண்டாவது,

நாம் ஒரு அமைப்பாக செயல் பட ஆரம்பித்த காலம் முதல் எமது கொள்கையில் உடன்பட்டவர்களுடனாக  இருந்தாலும் சரி கொள்கையில் முரண்பட்டவர்களாக இருந்தாலும் சரி கருத்து முரண்பாடான விட‌யங்களில் ஒரு சுமுகமான கலந்துரையாடல் மூலமாகவோ தேவையேற்படின் பகிரங்கமான விவதங்களின் மூலமாகவும் தீர்வு காண வேண்டும் என்பதை ஒரு அடிப்படை நடைமுறையாக வைத்திருக்கிறோம். இந்த அடிப்படையிலேயே இரு தரப்பாருடனும் விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவைகளை நடாத்தியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் அல்கு ஆன் அஸ்ஸுன்னாவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது என ஏனையவர்களை அழைக்கும் கொள்கையில் உடன்பட்டவர்கள் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதை விட குர் ஆன் ஹதீஸ் அடிப்படையிலான கருத்தாடல் மூலமாகவோ அல்லது பகிரங்க விவாதத்தின் மூலமாகவோ தீர்த்துக் கொள்வதற்கு மிக அருகதையானவர்கள் என்று கருதுகிறோம்.

இதே அடிப்படையில்தான் சில தனி நபர்கள் மூலமாக ஆரம்பத்திலிருந்தே உங்களுடனோ அல்லது உங்கள் அமைப்புடனோ தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலம் எமக்கு மத்தியில் இருக்கும் கருத்து முரண்பாடுகளைக் கழைந்து ஒரு ஆரோக்கியமான களத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அவைகள் பயனளிக்க வில்லை.இவ்வேளையில்தான் இறுதியாக கடந்த மோ மாதமளவில்  உங்கள் அமைப்பிலிருந்து சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் சகோதரர் அப்பாஸ் அலி அவர்களும்  இலங்கை வந்திருந்த போது அவர்களது நிகழ்சி நிரல்களை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் அல்தாஃப் என்பவருடன் தொடர்பு கொண்டு எமது அமைப்பில் நிகழ்சி நடாத்த அழைப்பு விடுத்தோம். ஆனால் துரதிஷ்ட வசமாக சில தௌஹீத் அமைப்புகளை தொடர்பு கொண்டு நிகழ்சிகளுக்கு இடமளிக்க கோரிக்கை வைத்த போது அவர்கள் மறுத்து விட்டதால் வேறு சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு இடத்திற்கு நாம் வருகை தந்தால் தமிழக பிரச்சாரகர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்.இங்கு நாம் ஏற்கனவே இலங்கையில் இருந்து உண்மைக்கு புரம்பாக உங்களுக்கு தகவல்களை வழங்குபவர்கள் என நாம் குறிப்பிட்டதை சற்று விளக்குவது பொருத்தம் என நினைக்கிறோம்.

இலங்கையில் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யும் போது யார் கொள்கையளவிலாவது எம்முடன் நெருக்கமாக நின்று களப்பணி ஆற்றுகிறார்கள் என்ற களநிலவரம் கூட தெரியாமல் நிகழ்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் இலங்கையில் எங்கு முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்களோ எங்கு கொள்கையை விளக்கினால் அதிக விளைவி ஏற்படும் என நாம் கருதுகிறோமோ  அங்கு எமது கருத்தை சொல்வதற்கான வாய்ப்புகளை முதலில் முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கள சாணக்கியம் கூட குறித்த நிகழ்சிகளில் கடைப்பிடிக்கப் படவில்லை என்பதற்கு ஒரு நல்ல உதாரனம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பல நிகழ்சிகளில் ஒன்று கூட இலங்கையில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற வில்லை என்பதாகும். மேலும் குருநாகலை மாவட்டத்தில் எலபடகம எனும் ஊரில் ஜமாஅதுல் உலமா கட்டுப்பாட்டில் இருக்கும் கப்ரை தனது வளாகத்தில் உள்வாங்கியிருக்கும் பெரிய பள்ளியில் அஸர் தொழுகை முதல் இஷா தொழுகைக்குப் பின்பு வரை நிகழ்சிகள் நடந்ததும் வழமையாக நாம் குறித்த அந்த ஊருக்கு பிரச்சாரத்திற்காக சென்றால் பிரச்சாரத்தை குறித்த பள்ளியில் செய்தாலும் தொழுகைகளை அங்கு மேற்கொள்ளாது தௌஹீது சகோதர்ர்களின் பள்ளிக்கு திரும்பும்  எம்மை அவ்வூர் தௌஹீத் நிர்வாகி “இந்தியாவில் இருந்து வந்தவர்கள் கப்ர் பள்ளியில் தொழும்போது நீங்கள் மாத்திரம் ஏன் தொழுவதில்லை என்று கேள்வி கேட்டதும் இதில் மிக விசனத்திற்குரிய விடயமாகும்.

இப்போது விடயத்திற்கு வருவோம், மேற்கண்டவாறு சகோதரர் அல்தாஃப் அவர்களது ஆலோசனைக்கு ஏற்ப அக்குறன எனும் ஊரில் தமிழக உலமாக்கள் இருவரது நிகழ்சிக்குப் பின்பு ஒரு இருபது நிமிடம் அவர்கள் வருகை தந்திருந்த வேனுக்குள் வைத்தே எமக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பில் நாம் யார் எமது அமைப்பு என்ன எமது கொள்கை, பிரச்சார வழிமுறை என்ன என்பது பற்றிய சிறு விளக்கமும் எமது இரு அமைப்புகளும் கொள்கையளவில் பெரும்பாலும் ஒத்திருப்பதால் எமக்கிடையிலான அனைத்து கருத்து முரண்பாடுகளையும் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா ஒளியில் சுமுகமன முறையிலோ அல்லது மக்கள் மன்றத்திலோ பேசித்தீர்த்துக் கொள்வோம் என்ற அழைபையும் வேண்டு கோளையும் விடுத்தோம். அத்துடன் எமது வெளியீடுகள், பிரசுரங்கள் ,விவாதாங்கள் மற்றும் இணையம் தொடர்பான தகவல்களை போண்றவைகளின் பிரதிகளையும் அவர்களிடம் கையளித்தோம்.

அவர்களும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட உங்கள் உள்நாட்டுப் பிரதிநிதிகளும் தாங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கான விஸா தற்போது கிடைத்துள்ளதாகவும் முஜீபுர் ரஹ்மான் உமரிஉடனான விவாதத்தின் காரனமாக உங்கள‌து இலங்கை விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் விவாதத்தின் பின் வெகு விரைவில் நீங்கள் இலங்கைக்கு வரும் போது இரு அமைப்புகளுக்குமிடையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கருத்து முரண்பாடுகள் தொடர்பில் மேற்கொண்டு எவ்வாறு ஆதரங்கள் அடிப்படையில் தீர்வுகாண்பது என்பதை பேசிக் கொள்ளலாம் என எமக்கு கூறப்பட்டது. அதன் பின்பும் சகோதரர் அல்தாஃப் அவர்களை இவ்விடயமாக  தொடர்பு கொண்டபோது முஜீப் அவர்களுடனான விவாதத்தின் பின்பே இது தொடர்பான உறுதியான க்ருத்தை கூற முடியும் எனக் கூறினார். சகோதரர் ரஸ்மி என்பவருடனும் இது தொடர்பாக சில சந்தர்பங்களில் நாம் ஞாபகமூட்டினோம்.

பின்பும் இது தொடர்பாக உங்களுக்கு Mon 3/30/09  அன்று:

”  TNTJ இன் கொள்கை குர் ஆன் ஹதீஸ் மாத்திரம்தான் என்பதால் இம் மன்ஹஜில் உறுதியான தாயிகளை கொண்டு மாத்திரம்தான் அது த்ஃவா செய்யும் என்றும் நீங்கள் பல சந்தர்ப்பங்களில் (உதாரணம்: முஜாஹித் மௌலவி தொடர்பில் நீங்கள் சகோ.வஸ்னியிடம் கொடுத்த விளக்கம்) நீங்கள் கூறிவருவதை குறிப்பிட்டு உங்களது இந்நிலைப்பாட்டுக்கு மாற்றமாக அன்மையில் இலங்கைக்கு வந்திருந்த உலமாக்களான ஸைபுல்லா ஹாஜா மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர் எலபட கம எனும் ஊரில் உரையாற்றிய போது அதே கூட்டத்தில் இஜ்மா கியாளை சரிகானும் ஒரு மௌலவியும் உரையாற்றினாரே அதன் உண்மை நிலை என்ன என்று கேட்டும் ஏலவே அக்குரணை எனும் ஊரில் எமது தாருல் அதர் சார்பாக இரு உலமாக்கள் உங்கள் அமைப்பை சார்ந்த மேற்படி இரு உலமாக்களுடனும் சந்திது பேசிக்கொண்ட விடயங்கள் தொடர்பாகவும் ஞாபகமூட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.

இதற்கு உங்கள் தரப்பிலிருந்து மாதங்கள் பல கடந்தும் ஆக்க பூர்வமான பதில் கிடைக்கவில்லை. இதனிடையே உங்கள் இணயதள வாசகர் கருத்தில் இலங்கையில் கருத்து முரண்பாடுகளை பேச யாருக்காவது நேரம் கொடுத்தீர்களா என கேள்வி கேட்ட ஒருவருக்கு அவ்வாறு பேச நேரம் கொடுக்கவில்லை ,அவ்வாறு கேட்டால் கொடுக்காமல் விடவும் மாட்டோம் !!? என்ற கருத்துப் பட  பதிலளித்துமிருக்கிறீர்கள். அத்துடன் உங்கள் அமைப்பிலிருந்து எமது நிலைப்பாட்டுக்கு மாற்றமான பத்வாக்கள் வெளியான போதெல்லாம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னாவைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே காரனத்திற்காக அப்பத்வாக்களின் தவறுகளை உரிய முறையில் விள‌க்குவதுடன் உங்களையோ அல்லது உங்கள் அமைப்பையோ அதன் பிரச்சாரகர்களையோ எமது வார்த்தைகளால் களங்கப் படுத்திவிடாமல் கவனமாகவே விமர்சித்து வந்துள்ளோம்.

உதாரனமாக நாம் முன்னர் குறிப்பிட்ட இரண்டாம் ஜமாஅத் தொடர்பான எமது பதிலையே எடுத்துக் கொள்ளலாம்.

“”இனி ச‌கோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களுக்கு!! வருவோம். சகோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் தனது “இரண்டாம் ஜமாஅத் கூடும்” என்ற கருத்துக்கு ஆதாரங்களாக “ஆதாரம்:1, ஆதாரம்:2, ஆதாரம்:3 என மூண்று!!  ஹதீஸ்களைக் குறிப்பிட்டபின் “மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு…….” என்று பண்மையிலும் குறிப்பிடுகிறார்.!!! ஆனால் உன்மையில் அவர் இங்கே குறிப்பிட்டிருப்பதோ ஸுலைமான் என்பவர் ஊடாக அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் வாயிலாக மேற்படி அவர் சுட்டிக்காட்டிய கிரந்தங்களில் அறிவிக்கப்படும் ஒரே ஒர் ஹதீஸைத்தான். எனவே ஒர் ஹதீஸ் எவ்வாறு சில அல்லது பல வழிகளில் அறிவிக்கப்படுகிறது என்ற ஹதீஸ் (அறிவிப்பாளர்)கலையின் அடிப்படைகூடத் தெரியாமல் சகோதரர் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளாரா அல்லது தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டி எண்ணிக்கையைக் கூட்ட வேண்டி 1,2,3 என அடுக்கிக் கொண்டு சென்றாரா என்பது புரியவில்லை.

எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்றிருந்தால் குறித்த ஹதீஸ் இடம்பெற்றிருக்கும் கிரந்தங்களான தாரமி ஆதாரம் 4, இப்னு அபீ ஷைபா ஆதாரம் 5, இப்னுல் ஜாரூத் ஆதாரம் 6, ஹாகிம் ஆதாரம் 7,முஸ்னத் அபீ யஹ்லா ஆதாரம் 8,தபரானி ஸகீர் ஆதாரம் 9, பைஹகீ ஆதாரம் 10 (ஆக மொத்தமாக “இரண்டாம் ஜமாஅத் கூடும் என்பதற்கு பத்து ஆதாரங்கள்) என அடுக்கிக் கொண்டே சென்றிருக்கலாம் அல்லவா?!! எவ்வாறாயினும் ஒரே ஹதீஸை இப்படி மூண்று ஆதாரங்களாக குறிப்பாக கேள்வி கேட்கும் உலமாக்கள் அல்லாத ச‌கோதரரிடம் சித்தரிக்க முயன்றது ஒரு தவறுதான் என்பதில் ஐயமில்லை. எனினும் அறிவியல் ஆய்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகரிடம் இது எப்படி ஏற்பட்டது என்பதுதான் ஆச்சரியமாகும். தவறுகளுக்கு அப்பாற்பட்ட அந்த தூய அல்லாஹ் எம் அனைவரது தவருகளையும் மண்ணித்து அருள் புரிவானாக!!!””

எனவே நாம் உங்கள் கருத்துகளை விமர்சிக்கும் போது கடைபிடித்த முறைக்கு மாற்றமாக நீங்களோ உங்கள் விமர்சனத்தில் அறியாமையின் உச்சகட்டம், பொறுப்புணர்வு அற்றவர்கள்,தமிழாக்கத்தில் கைவரிசை, கண்களுக்குத் தெரியவில்லை, கைச் சரக்கை சேர்ப்பவர்கள், ஹதீஸை வளைப்பவர்கள், அறபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியவர்கள், தத்துவம் கூறுபவர்கள், அறிவற்ற வாதத்தை வைப்பவர்கள் என்று தாறுமாறாக நீங்கள் விமர்சனம் செய்திருப்பது  அதுவும் நாம் ஏற்கன‌வே உங்களை கருத்து முரண்பாடான விடயங்களை வாருங்கள் பேசுவோம் என அழைப்பு விடுத்தும் அதற்கு உரிய பதில் தராமல்  இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்தி எம்மை விமர்சித்திருப்பதற்கான காரனம் ஏனைய அனைத்து பிரச்சார அமைப்புகளைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு வகையான தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதும் அதனூடாக தாங்கள் மாத்திரம் தான் உன்மையான ஒரே பிரச்சார அமைப்பு என்றும் தாங்கள் மாத்திரம்தான் உன்மையான பிரச்சாரகர்கள் என்றும் தனியுடமை கொண்டாடுவதைத் தவிர‌ வேறு நியாயம்தான் என்ன என்னபதை நீங்கள் விளக்க வேண்டும் .

எனவே இவ்வாறான ஒரு பின்னணியில்தான் உங்களது விமர்சனம் இடம்பெற்றுள்ளது என்பதை சகலரும் குறிப்பாக தமிழக கொள்கைச் சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்த முதல் தொடரை வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த தொடர்களில் எமது நிலைப்பாடு தொடர்பாக நீங்கள் பிரசுரித்திருக்கும் ஆய்வை ஒவ்வொன்றாக‌ ஆழமாக‌ அலசுவோம்.

இப்படிக்கு,

மௌலவி எம் ஐ எம் நௌபர் (காஷிபி),

பிரச்சாரகர்,தாருல் அதர் அத்த அவிய்யா,

காத்தான் குடி, இலங்கை.

தொடர்-2 >>

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers