நாம் மீண்டும் ஏன் தாருல் அதரோடு இணைகின்றோம்?
அன்புள்ள எமது இணையதள வாசகர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கடந்த 06.11.2009 அன்று தாருல் அதருடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு உலமாக்களாலும் வெளியிடப்பட்ட துன்டுப்பிரசுரத்தின் எழுத்துவடிவை இங்கு தருகின்றோம்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நாம் மீண்டும் ஏன் தாருல் அதரோடு இணைகின்றோம்?
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 25.09.2009 அன்று தாருல் அதரிலிருந்து நாம் பிரிந்தது ஏன்? எனும் தலைப்பில் முன்னாள் தாருல் அதர் பிரச்சாரகர்களாகிய எம்மால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தாருல் அதரிற்குள் எமக்கு ஏற்பட்ட பிரச்சினை, ஸஹ்ரான் மௌலவி விவகாரத்தின் பாரதூரம், சூறாசபையின் செயற்பாடு, எமது இராஜினாமா எனப் பலவிடயங்களை விபரமாக எடுத்துக் கூறி அவ்வமைப்பிலிருந்து விலகி நின்றோம். இருப்பினும், நாம் வெளியேறிய பிற்பாடுமுதல் இன்றுவரை உண்மை நிலவரங்களையும், யதார்த்தங்களையும், நியாயங்களையும் விளக்கித் தந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
எமது பிரச்சினையை நாம் வெளியே வந்து கையாள வேண்டியளவு மிக மோசமான கருத்துப் பதிவுகளை ஸஹ்ரான் மௌலவி அவர்களே அமைப்பிற்குள் ஏற்படுத்தியிருந்தார் என்பதை கடந்த ஒரு மாதமாக எமக்குள் நடைபெற்ற சுமுகமான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் மூலமாக அறிந்து கொண்டோம். எமது 25.09.2009 அன்றைய துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டவாறு இரண்டாம் சந்திப்பில் பதில் என்ற பெயரில் ஸஹ்ரான் மௌலவி அவர்கள் கூறியவற்றிற்கான விரிவான விளக்கங்களை 7 cd களில் பேசியுள்ளோம். தேவைப்படுபவர்கள் எம்மிடம் பெற்று விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.குறித்த மார்க்க ரீதியான தவறுகளை சூறா முன்னிலையில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக அவரால் எம்மீது அக்காலகட்டத்திலிருந்தே சுமத்தப்பட்ட அபாண்டங்கள் அபத்தமானது என்பதை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் நிரூபித்து தந்த அழ்ழாஹ்வுக்கு மீண்டுமொரு முறை நன்றி கூறிக் கொள்கின்றோம்..
சூறாசபை நிர்வாகம் என்ற வகையில் அக்காலத்தில் எடுத்த நடவடிக்கைகள், எம்மால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் புரிந்துணர்வுடனும், விபரமாகவும் பேசித் தீர்த்துக் கொண்டோம். குறிப்பாக நோன்புப் பெருநாளை அடுத்து வந்த ஒரு சில நாட்களில் ஸஹ்ரான் மௌலவி தொடர்பான பல உண்மைகளை அழ்ழாஹ் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்தான். அடுத்து அவ்விவகாரத்தை சூறாசபை கையாண்ட விதம் நடுநிலையானதாக நமக்கு புலப்பட்டதாலும், எமது கொள்கைச் சகோதரர்கள் எம்மத்தியில் மேற்கொண்ட இணக்கப்பாட்டு முயற்சிகளின் பயனாலும் தொடர்ந்து தாருல் அதர் சூறாசபையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளாலும் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாலும் தாருல் அதருடன் உத்தியோகபூர்மாக இத்தாள் இணைந்து கொள்கின்றோம். எம்மீது சூறாசபை உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தப்பபிப்பிராயங்களை அவர்களும் புரிந்து, அவற்றை களைந்து கொண்டு தமது வருத்தத்தை தெரிவித்த அதேவேளை 25.09.2009 அன்றைய துண்டுப் பிரசுரத்தில் நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பில் அவர்களது உள்ளத்தை பாதித்த ‘அகீதாவில் அழ்ழாஹ் பற்றிய பூரன தெளிவில்லாத சாதாரனமாக புஹாரி தமிழ் மொழி பெயர்ப்புக்கு அடிக்குறிப்பின்றி விழங்க சிரமப்படும் நிர்வாக சகோதரர்கள்’ என்ற வாசகங்களுக்காக நாமும் எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் ஸஹ்ரான் மௌலவி அவர்கள் எம்மேல் சுமத்திய அபாண்டங்கள், அவதூறுகளைப் போன்று மார்க்க விவகாரங்களுக்கப்பால் தனிப்பட்ட நபர்கள், அமைப்புக்கள் மேல் கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் விடயத்திலும் சம்பந்தப்ட்ட அனைத்து தரப்பினரிடமும் எமது வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். சத்தியம் யாரால், எங்கு சொல்லபட்டாலும் அதற்கு ஆதரவு நல்கும் அதே வேளை இன்ஷா அழ்ழாஹ் மிக நாகரீகமாகவும், சுமுகமாகவும் எதிர்கால எமது தஃவா முன்னெடுப்புக்கள் அமையும் என்பதைக் கூறிக் கொள்வதுடன் எமது நாட்டிலும், சமூகத்திலும் காணப்படும் பல பாதகமான தீமைகளை நபிவழியில் எடுத்துக் கூறுவது உள்ளடங்கலாக இஸ்லாத்தின் அனைத்து துறைகளையும் தெளிவாக பிரச்சாரம் செய்வோம் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். கடந்த கால எமது பயான்களில் மார்க்க ரீதியான தவறுகள் என தாங்கள் காணும் அம்சங்களை தாராளமாக எமக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இறுதியாக, நாம் அனைவரும் தூய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் பிற சமூகங்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!
இவ்வண்ணம்
இஸ்லாமிய பிரச்சாரகர்கள்
மௌலவி MIM. நௌபர் (காஷிபி)
மௌலவி BM. அஸ்பர் (பலாஹி)
மௌலவி SLM. நஷ்மல் (பலாஹி)
மௌலவி MFM. சிபான் (பலாஹி)

Comments are closed.