Skip to content

தாருல் அதர் அத்தஅவிய்யாவின் அண்மைக் கால நிலவரங்கள் தொடர்பாக…

November 10, 2009

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தாருல் அதர் அத்தஅவிய்யாவின் அண்மைக் கால நிலவரங்கள் தொடர்பாக…

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினுள் கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்றுவந்த பிரச்சனைகள், அவற்றுக்கு சூறாசபை மேற்கொண்ட முன்னெடுப்புகள், தீர்வுகள் தொடர்பாக வெளிப்படையாகவும், விபரமாகவும் இத்தாள் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

எமது தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பிரச்சாரகர்களான மௌலவி எஸ்.எல்.எம். நஷ்மல் (பலாஹி), மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி), மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காஷிபி), மௌலவி எம்.எப்.எம். சிபான் (பலாஹி)) ஆகியயோரால் சக பிரச்சாரகரான மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் மீது நபிமொழிகளுக்கு மாற்றமாக பல தவறுகள் உள்ளதாக சூறாசபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் அவற்றை குறித்த மௌலவியுடன் சூறாசபை முன்னிலையில் விளக்கம் கோர சந்தர்ப்பம் தருமாறு கோரப்பட்டது.

உலமாக்களால் அடையாளம் காணப்பட்ட விடயங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அவற்றை அமைப்பிலுள்ள ஏனைய உலமாக்களிடம் காண்பித்து தீர்வு காண்போம் எனவும் அப்போது நாம் கூறியிருந்தோம். எனினும், உலமாக்கள் அக்கோரிக்கையை ஏற்கவில்லை. உலமாக்களால் அடையாளம் காணப்பட்ட மார்க்கம் தொடர்பான குற்றச் சாட்டுகளுக்கு தீர்வு காணும் முகமாக ஓர் நடுநிலையான கண்காணிப்பாளர் குழு முன்னிலையில் ஸஹ்றான் மௌலவி மீதான மார்க்க ரீதியான தவறுகள் என ஏனைய உலமாக்களால் கூறப்பட்டவை ஒரு அமர்விலும் அவற்றுக்கான பதில் ஸஹ்றான் மௌலவியால் மற்றுமோர் அமர்விலும் இடம்பெற்றது. இரண்டாவது அமர்விலேயே ஸஹ்றான் மொலவியின் பதில்களில் காணப்படும் தவறுகளை விபரிக்க முடியுமென உலமாக்களால் கூறப்பட்டாலும் நேரமின்மை காரணமாக பிரிதொரு சந்தர்ப்பத்தில்தான் விளக்கவேண்டுமென அங்கு வலியுறுத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக மூன்றாவது சந்திப்பு இடம்பெறவில்லை. (இது தொடர்பான ஒளிப்பதிவு சீ.டி களை எமது காரியாலயத்தில் பெறலாம்)

தொடர்ந்து, மேற்படி விவகாரம் சுமுகமான ஒரு முடிவைத் தராததால் எமது அமைப்பினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த தஃவாவிற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாகவும் அமைப்பின் நலனையும் அதன் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்குடனும்; 08.09.2009ல் நடைபெற்ற சூறாசபைத் தீர்மானத்திற்கமைவாக குறித்த பிரச்சனையுடன் தொடர்புடைய உலமாக்கள் ஐவரையும் 09.09.2009 முதல் அமைப்பின் சூறாசபையின் ஆலோசனை சபையிலிருந்தும் மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளிலிருந்தும் இடைநிறுத்தியது. இதன் பின்னர் பிரச்சாரகர்களான மௌலவி எஸ்.எல்.எம். நஷ்மல் (பலாஹி), மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி), மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காஷிபி), மௌலவி எம்.எப்.எம். சிபான் (பலாஹி)) ஆகியயோர் தமது இராஜினாமாவை அறிவித்ததுடன் ‘நாம் ஏன் தாருல் அதரிலிருந்து வெளியேறினோம்’ எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதன் பின்னர் மௌலவி ஸஹ்றான் அவர்கள் தன்னை தஃவாவிலிருந்து இடை நிறுத்தியது அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமானதெனவும் அழ்ழாஹ்வின் சாபத்திற்குரியது என்றும் அச்சமூட்டினார். இந்நிலையில் நிர்;;;வாகமாகிய நாம்; அல்குர்ஆன், ஹதீத்களுக்கு இயலுமானவரை கட்டுப்படுகின்ற ஒரே காரணத்தால் மௌலவி ஸஹ்றான் அவர்களின் கோரிக்கையை ஏற்று தஃவாவிற்கு அவரை உள்வாங்கினோம்.

இதன் பின்னர் மௌலவி ஸஹ்றான் அவர்கள் மீதான மேலும் பல தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளிட்ட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் சூறாசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டு அவற்றிற்கு தெளிவானதும், ஆதாரபூர்வமான விளக்கங்களை அவரிடம் கோரிய போது அவையனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் உள்ளதென்றும், அவற்றை ஆவணமாகவும், ஒலி, ஒளி பதிவுகளாகவும் அடுத்துவரும் கூட்டத்தில் சமர்ப்பிப்பதென்றும் அதன் பின்னர் அமைப்பிலிருந்து அழ்ழாஹ் மீதாணையாக நீங்கிக் கொள்வேன் எனவும் கூறிச் சென்றார்.
குறித்த தினத்தில் சூறாசபை மீண்டும் கூடியபோது மௌலவி ஸஹ்றான் அவர்கள் அக் கூட்டத்திற்கு சமூகமளிக்காததுடன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை தர மறுத்ததுடன் தான் கூறிய கூற்றுக்களுள் பல உண்மைக்குப் புறம்பானவை என்பதையும் ஏற்றுக் கொண்டு கடிதம் மூலம் மன்னிப்பும் கோரியதுடன் தான் சுய விருப்பத்தின் பேரில் அமைப்பிலிருந்தும் நீங்கிக் கொள்வதெனவும் கூறியிருந்தார். மேற்படி மௌலவி ஸஹ்றான் அவர்களின் செயற்பாடுகளையும், கூற்றுக்களையும் கருத்திற் கொண்டு 10.10.2009 அன்று நடைபெற்ற சூறாசபையின் இறுதித் தீர்மானமாக அமைப்பின் சகல செயற்பாடுகளிலிருந்தும் மௌலவி ஸஹ்றான் அவர்களை இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னரான காலப்பகுதியில் தாருல் அதரின் தஃவா நலனைக் கருத்திற்கொண்டும் உலமாக்களால் சூறாசபைக்கு விடுக்கப்பட் வேண்டுகோள்களுக்கிணங்கவும் உலமாக்களால் நிருவாக ரீதியான தவறுகள் புரிந்துகொள்ளப்பட்ட அடிப்படையிலும் சூறாசபை உலமாக்கள்மீது கொண்டிருந்த தவறான எண்ணப்பதிவுகளை மாற்றிக்கொண்டதாலும் எமது கொள்கைச் சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் 18.10.2009 அன்று எமது அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட உலமாக்களை உள்வாங்குதல் எனும் தீர்மானத்திற்கமைவாக 19.10.2009 முதல் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கடந்தகால பிரச்சனைகள் அனைத்தையும் சூறா சபை முன்னிலையில் விபரமாகவும், தெளிவாகவும் பேசித் தீர்த்துக்கொள்வது எனும் நிபந்தனையுடன் குறித்த ஐந்து உலமாக்களையும் உள்வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் பொதுச்சபைக் கூட்டத் தீர்மானத்திற்கு முரணாக தொடர்ச்சியாக கூறிவருகின்ற அவதூறுகள், குற்றச்சாட்டுகள், சூறாசபையையும் அதன் உறுப்பினர்களையும் தரம்தாழ்த்தி விமர்சித்தல், சூறாசபைக்கு கட்டுப்படாது தன்னிச்சையாக நடத்தல், கூட்டங்களில் கலந்து கொள்ளாது ஏனைய உலமாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்லுதல்; ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு 25.10.2009ல் நடைபெற்ற சூறாசபைக் கூட்டத்தில் மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களை தாருல் அதர் அமைப்பின் சகல செயற்பாடுகளிலிருந்தும் முற்றாக நிறுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது என்பதையும் அறியத்தருகின்றோம்.

அன்புப் பொதுமக்களே:

நிருவாகமாகிய எம்மைப் பொறுத்தவரை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபி மொழி ஆகியவற்றுக்கு கட்டுப்படுகின்ற, இவ்விரண்டையும் பிரச்சாரம் செய்கின்ற செயற்பாடுகளுக்கு இயலுமான வரை உறுதுனையாக இருக்கின்ற மனோநிலையைத்தான் கொண்டிருக்கின்றோம். இன்ஷா அழ்ழாஹ் எமது தஃவா செயற்பாடுகளை சுமுகமானதும் நாகரீகமானதுமான அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே, எமது அமைப்பு பற்றிய தங்களிடமுள்ள தஃவா தொடர்பான ஆரோக்கியமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் மற்றும் ஆதரவுகளையும் வழங்கியுதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இப்படிக்கு.
தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
த.பெ. இல 19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்ததான்குடி 02.
06.11.2009
Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers