ரமழானை வரவேற்போம்.
அல் அதர் மாத இதழ் > ஆசிரியர் பக்கம்
‘(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்;களும் ஆகிவிடாதீர்கள்;. அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு.’ (அல்குர்ஆன் 3:105)
அருள்மறைக் குர்ஆன் அருளப்பெற்ற புனித மாதமாகிய ரமழானை இன்னும் சில தினங்களில் நாம் சந்திக்கவுள்ளோம். இம்மாதத்தின் ஏராளமான சிறப்புக்களை நாம் ஏலவே அறிந்திருக்கின்றோம். பாவக் கறைகளை விட்டும் மனிதர்களை பக்குவப்படுத்தும் இப்புனித மாதத்தை நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்கங்கள் ஊடாக உயிர்ப்பிப்பதே ஒரு இறை விசுவாசியின் இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வெரு வருடமும் ரமழான் வந்து விட்டால் சில மார்க்க ரீதியான பிரச்சினைகளும் கூடவே வந்து விடுகின்றன.
கருத்து முரண்பாடுகள் அறவே வரக்கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவதும், அதிகாரங்களால் அவற்றை அடக்க முற்படுவதுமே இங்கு அலசப்பட வேண்டியவை யாகும். கருத்து முரண்பாடுகள் தோன்றினால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென பின்வரும் இரு அல்குர்ஆனிய வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன் 4:59),
‘(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 4:65)
மேற்குறித்த இரு வசனங்களிலிருந்தும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டால் அவற்றுக்கு நிச்சயமாக தீர்வுகள் இருக்கும். தீர்வுகள் இஸ்லாத்தின் இரண்டு சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆனிலும் ஆதார பூர்வமான ஹதீஸ்களில் மாத்திரமே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நோன்புக்கு நிய்யத்து சொல்வதிலிருந்து பெருநாள் தொழுகையை எங்கு? எப்போது? தொழுவது என்பதுவரை மார்க்கப் பிரச்சினைகள் தோன்றினால் அவற்றுக்கு நாம் வஹியிலிருந்து தீர்வுகளைத் தேட வேண்டும். சத்தியத்தைத் தேடுபவருக்கே அழ்ழாஹ்வும் அருள் செய்கின்றான்.
ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் அக்கருத்தை முறையாகத் தெரிந்து கொள்வதும் அக்கருத்தைக் கூறுபவர்கள் ஆதாரங்களைக் கூறினால் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுமே ஒரு பகுத்தறிவாளனின் செயற்பாடாக அமையும். இத்தோரணையில் நோக்கும் போது எம்மில் அதிகமான சகோதரர்கள் இவ்வடிப்படையை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றார்கள். இதனைப் புறக்கணிப்பதால் எத்தனையோ நபிவழிகளை அவர்கள் குழிதோண்டிப் புதைத்து விட்டு பிற்பட்ட காலங்களில் தோற்றுவிக்கப் பட்ட பித் அத்துக்களை அறியாமல் உயிர்ப்பித்து வருகின்றனர்.
அன்பின் சகோதர, சகோதரிகளே! ரமழானை வரவேற்பதில் ஆர்வம் காட்டுவது எவ்வகையிலும் தவறில்லை. அதனை அல்குர்ஆன் ஊக்குவிக்கின்றது. ரமழானை வரவேற்பதில் இருக்கும் கரிசனை இருதிவரை இருக்க வேண்டும். ஆதாரமற்ற ஸலவாத்துக்களைப் பாடி, 23 ரக் அத்துக்களைத் தொழுது முடிப்பதால் எவ்விதப் பிரயோஜனமும் இல்லை.
‘ரமளான் வரவேற்பு’ எனும் பெயரில் பள்ளிகளில் நடைபெறும் கூத்துக்கள் அவசியம் நிறுத்தப்படல் வேண்டும். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ரமழான் எவ்வாறு உயிர்ப்பிக்கப்பட்டதோ அவ்வாறு உயிர்ப்பித்தால் மாத்திரமே நாம் அழ்ழாஹ்விடம் வெற்றி பெறுவோம்.
இல்லாவிட்டால் மார்க்கத்தை செல்லாக் காசாக்கிய பாவத்திற்கு அழ்ழாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டி வரும். பொறுமையும், சகிப்புத்தண்மையும் கொள்ள வேண்டிய முஸ்லிம்கள் மார்க்க விவகாரங்களில் பொறுப் பற்ற விதங்களில் நடந்து கொள்ளக் கூடாது. கருத்து முரண்பாடுகளை காடைத்தனமாகவோ, கண்மூடித் தனமாகவோ கையாண்டால் மொத்த இழப்புக்களையும் சந்திப்பது ஒட்டு மொத்த முஸ்லிம்கள் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மிக அண்மையில் பேருவலை மஹகொடையில் நடைபெற்ற மிலேச்சத்தனமான அடாவடித்தனம் இந்நாட்டு முஸ்லிம்களை தலைகுனிய வைத்தமையை யாவரும் நன்கறிவர். மார்க்க விவகாரங்களை அறிவு ரீதியாக எதிர் கொள்ள சக்தியற்றவர்களே முட்டாள் தனமாக உணர்ச்சிகளால் எதிர் கொண்டு இஸ்லாத்தை அந்நிய மக்களிடம் கேவலப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு கொஞ்சம் கூட மார்க்க அறிவற்ற சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் உந்து சக்தியாக செயற்பட்டு வருவது மிக மன வேதனையான அம்சமாகும். ஆக, எம்மை எதிர்நோக்கும் ரமழானை அல்குர்ஆனைக் கொண்டும் ஆதாரபூர்வமான ஸுன்னாவைக் கொண்டும் உயிர்ப்பிப் போமாக!
ரமழான் எம்மிடம் எதை எதிர்பார்க் கின்றதோ அவற்றை முழுமையாக செய்து ஈருலகிலும் வெற்றி பெற அழ்ழாஹ் நல்லருள் பாலிப்பானாக!
<<Back to Al Athar August 2009

Comments are closed.