ரமழானும் ஆதாரபூர்வமற்ற செய்திகளும்
அல் அதர் மாத இதழ் >ரமழான் சிறப்பிதழ்
மௌலவி M.F தௌபீக் (பலாஹி)
thoufeekathary@yahoo.com
‘யார் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1291)
இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனைத் திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன் 07:03)
ஆதாரபூர்வமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தி களை வைத்து சட்டங்கள் எடுக்கவோ, சிறப்புக்களை கூறவோ இஸ்லாத்தில் இடமில்லை. என்றாலும், சிலர் பலவீனமான செய்திகளை வைத்து சட்டங்கள் எடுக்கவும் சிறப்புக்களைக் கூறவும் முடியும் என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். (இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக விபரிக்கப்படும்) இதனாலேயே ரமழான் தொடர்பாக வரக்கூடிய, எமது நாட்டின் பல இடங்களிலும் பேசப்பட்டு வரும் சில பிரபல்யமிக்க பலவீனமான செய்திகளை இங்கு நோக்குவோம்.
‘நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்துவிட்டால், ‘இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக! மேலும், ரமழானை எங்களை அடையச் செய்வாயாக!’ எனப் பிராத்திப் பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூற்கள்;: அஹ்மத்-2346, முஃஜமுல் அவ்சத்-3939)
இது பலவீனமான செய்தியாகும். இச்செய்தியில் இடம்பெறும் ‘ஸயீத் இப்னு அபிர்ருகாத்‘ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் பின்வருமாறு விமர்சிக்கப்படுகிறார்.
இமாம் புஹாரி : இவர் ஹதீத் கலையில் வெறுக்கப்பட்டவர் எனக்குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் நஸாஈ : இவர் ஹதீத் கலையில் வெறுக்கப்பட்டவர் எனக்குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் இப்னு ஹிப்பான்: இவர் பிரபல்யமானவர் களிடமிருந்து வெறுக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவரென்றும், இவரது செய்தியை ஆதாரத்திற்கு எடுக்கமுடியாது என்றும் குறிப்பிடுகின்றார்கள். எனவே, மேற்குறித்த செய்தி பலவீனமானதாகும்.
‘அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் கூற தான் செவியேற்றதாகக் கூறுகின்றார்கள்.
அடியார்கள் ரமழான் மாதத்திலுள்ள சிறப்பை அறிவார்களாயின் வருடம் முழுவதும் ரமழானாக இருக்க வேண்டுமே என்று மேலெண்ணம் கொள்வார்கள்.’ (நூற்கள்: ஸஹீஹ் இப்னு குஸைமா-1886, அல்முஃஜமுல் கபீர்-967, ஸுஅபுல் ஈமான்-3634)
இதுவும் பலவீனமான செய்தியாகும். இச் செய்தியில் இடம்பெறும் ‘ஜரீர் பின் அய்யூப் அல்பஜ்லி’ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் பின்வருமாறு விமர்சிக்கப்படுகிறார்.
இமாம் புஹாரி : தமது தாரீஹுல் கபீர் என்ற நூலில்; இவர் ஹதீஸ் கலையில் வெறுக்கப்பட்டவர் என்று கூறுகின்றார்கள்.
இமாம் யஹ்யா பின் மயீன்: இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் எனக்குறிப்பிடுகின்றார்கள். எனவே, இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர் இடம் பெறுவதால் இந்த செய்தியும்; பலவீனமானதாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரொருவர் ரமழான் மாதத்தில் தக்க காரணமின்றி ஒரு நோன்பை விடுகின்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அவர் (விட்ட) அந்த நோன்புக்கு (சிறப்புக்கு) அது ஈடாகமாட்டாது.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூற்கள்: அபூதாவுத்-2396, இப்னு மாஜா1672)
இதுவும் ஓர் பலவீனமான செய்தியாகும். ஏனெனில், அபுல் முதவ்விஸ் (முதவ்விஸின் தந்தை) என்பவர் இச்செய்தியில் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் பின்வருமாறு விமர்சிக்கப் படுகின்றார்.
இமாம் புஹாரி : இவரது தந்தை அபூஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து கேட்டாரா இல்லையா என்று அறிய முடியவில்லை.
இமாம் இப்னு ஹஜர்: இவர் அபூஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து கேட்டாரா இல்லையா என்று அறிய முடியவில்லை. அதே போன்று இவர் யாரென்றே அறியப்படாதவராகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் திர்மிதி: இவர் வேறு வழியாக எந்த ஹதீதையும் பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் தஹபி: இவர் நம்பகத்தன்மை அற்றவர் என குறிப்பிடுகின்றார்கள்.
‘நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் இறுதித் தினத்தன்று எங்களுக்கு பிரசங்கம் செய்யும் போது கூறினார்கள். ‘மனிதர்களே! பரகத் செய்யப்பட்ட சங்கை மிகு மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு இரவு இருக்கின்றது. அதில் அழ்ழாஹ் நோன்பு நோற்பதை கடமையாகவும் இரவில் நின்று வணங்குவதை உபரியான(சுன்னத்) தாகவும் ஆக்கியுள்ளான். யார் அம்மாதத்தில் ஏதோ ஒரு நற்கருமத்தைப் புரிகின்றாரோ அவர் ரமழான் அல்லாத மாதத்தில் கடமையான(வணக்கத்)தை நிறைவேற்றியவரைப் போன்றாவார்.
மேலும், யார் அம்மாதத்தில் கடமையான (வணக்கத்);தை நிறைவேற்றுகின்றாரோ, அவர் ரமழான் அல்லாத மாதத்தில் எழுபது கடமை(வணக்கங்) களைப் புரிந்தவரைப் போன்றாவார். இம்மாதம் பொறுமை செய்யும் மாதமாகும். பொறுமைக்குக் கூலி சுவர்க்கமாகும். மேலும், இம்மாதத்தில் ஒரு விசுவாசியின் வாழ்வாதாரம் அதிகரிக்கும்;. யார் இதில் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாறோ, அது அவரது பாவங்களுக்கு மன்னிப்பாகவும் அவரை நரக நெருப்பிலிருந்து விடுவிக்கக் கூடியதாகவும் மாறிவிடுகின்றது. மேலும், (நோன்பு திறந்தவருடைய) கூலியிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல் அவருக்கு கிடைப்பது போன்ற கூலி இவருக்கும் கிடைக்கும். அப்போது ஸஹாபாக்கள், நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதற்குரிய வசதி எங்களிடம் இல்லையே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழம் அல்லது ஒரு மிடரு நீர் அல்லது ஒரு மிடரு பாலைக் கொடுத்து நோன்பு திறக்கச் செய்பவருக்கும் இக்கூலியை அழ்ழாஹ் வழங்குவான் என்று கூறினார்கள். இம்மாதத்தின் ஆரம்பப் பகுதி (ரஹ்மத்) அருளுக்குரிய தாகும். நடுப்பகுதி (மஃபிரத்) பாவமன்னிப்பிற்குரிய தாகும். இறுதிப்பகுதி (இத்கும்மினன் நார்) (நரக) நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதற்குரியதாகும். யார் தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்களை (வேலைகளை) இலகு படுத்துகின்றாரோ அவரை அழ்ழாஹ் மன்னித்து (நரக) நெருப்பிலிருந்து விடுவிக்கின்றான்.
இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு உங்களுடைய இறைவனை திருப்திப்படுத்தக்கூடிய விடயமாகும். மற்றைய இரண்டும் அவற்றை விட்டு விலகி அலட்சியமாக இருக்க முடியாதவையாகும். (இறைவனை திருப்திப்படுத்தக் கூடிய) இரண்டு விடயங்களில் ஒன்று வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அழ்ழாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. என்று சான்று பகர்வதாகும். (இரண்டாவது) பிழை பொறுக்கத் தேடுவதாகும். அலட்சியமாக இருக்க முடியாத இருவிடயங்களில் ஒன்று அழ்ழாஹ்விடத்தில் நீங்கள் சுவனத்தைக் கேட்பதாகும். (இரண்டாவது) நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும். எவரொருவர் இம்மாதத்தில் ஒரு நோன்பாளியை வயிறு நிரம்பச் செய்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் சுவனம் நுழையும் வரை தாகமே ஏற்படாத அளவிற்கு தன்னுடைய நீர்த்தடாகத்திலிருந்து ஒரு மிடரு நீரை குடிக்கக் கொடுக்கின்றான்.’ (அறிவிப்பவர்: சல்மான் (ரழி), நூற்கள்: ஸஹீஹ் இப்னு குஸைமா-1887, சுஅபுல் ஈமான்-3608)
இச்செய்தி ஆதாரபூர்வமற்ற பலவீனமான செய்தியாகும். இச்செய்தியில் ‘அலி இப்னு ஷைத் இப்னு ஜத்ஆன்’ என்பவர் இடம் பெறுகின்றார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பின்வருமாறு விமர்சிக்கின்றார்கள்.
இமாம் இப்னு ஹஜர்: இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர்.
இமாம் இப்னு ஹிப்பான்: இவர் அதிகம் தவறு செய்பவர் என்பதனால் இவர் வழியாக வரும் ஹதீஸை விட்டுவிடுவதே சிறந்தது.
இமாம் நஸாஈ: இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர்.
இமாம் அபூபக்ர் இப்னு குஸைமா: இவர் ஞாபகக் குறைவானவராக இருப்பதால் இவரை ஆதாரத்திற்கு எடுக்க முடியாது.
இமாம் அபூஹாதம்: இவர் பலமற்றவர். இவர் வழியாக வரும் செய்தியை எழுதமுடியும். ஆனால், ஆதாரத்திற்கு எடுக்க முடியாது.
இமாம் அலி இப்னு ஷைத்: இவர் ஹதீஸ்களை மாற்றி அறிவிக்கக் கூடியவர்.
இமாம் யஹ்யா பின் மயீன்: இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் எனக்குறிப்பிடுகின்றார்கள்.
எனவே, இவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் மேற்கூறப்பட்டவாறு விமர்சிக்கப்பட்டுள்ளதால் இவர் வழியாக வரும் ஹதீஸ்களை ஏற்கமுடியாது. இது போன்ற றமழான் தொடர்பான பல பலவீனமான செய்திகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் இவ்விடத்தில் கூறுவது சிரமமாகும். இவ்வாறான பலவீனமான செய்திகள் பயான்களில் பேசப்பட்டு வருவதைக் காண்கின்றோம்.
‘யார் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1291)
எனவே, இவ்வாறான ஆதாரபூர்வமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை விடுத்து, ஆதாரபூர்வமான நபிமொழிகளின் பால் சமூகத்தை வழிநடாத்துவோம்.
<<Back to Al Athar August 2009

Comments are closed.