Skip to content

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்கள்?

August 20, 2009

அல் அதர் மாத இதழ் >ரமழான் சிறப்பிதழ்

மௌலவி MFM சிபான் (பலாஹி)
alhafilshifan@gmail.com

‘பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்!’  (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் நேரங்களில் மிக முக்கிய நேரம் நோன்பு திறக்கும் நேரமாகும் என நமது சமூகத்தில் பரவலான நம்பிக்கை இருந்து வருகின்றது.

இதற்கு நமது சமூகத்தில் உள்ள மார்க்க அறிஞர்களின் பிரசங்கங்களும் உரமூட்டுவதாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஹதீஸ்களைத்தான் அவர்கள் ஆதாரமாக முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இக்கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதனைத்தான் இக்கட்டுரையினூடாக நோக்கவிருக்கின்றோம். இவ் ஆய்வுக்கட்டுரையை இரண்டு பகுதிகளினூடாக அணுக முடியும்.

1.நோன்பு திறக்கும் நேரம் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் என வந்துள்ள நபிமொழி ஆதாரபூர்வமானதா? பலவீனமானதா?

2.நோன்பு திறக்கும் நேரங்களில் நமது சமூகத்தில் பரவலாக ஓதப்பட்டு வருகின்ற ‘அழ்ழாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து……’ ‘தஹபழ் ழமஉ வப்தல்லதில் உரூகு………’  ஆகிய இரண்டு துஆக்களும் ஆதாரபூர்வமான துஆக்களா?

இவ்விரண்டு பகுதிகளையும் ஒவ்வொன்றாக நோக்குவோம். நோன்பு திறக்கும் நேரம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் நேரம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

1

‘நிச்சயமாக நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கின்ற பிரார்த்தனை அழ்ழாஹ்விடத்தில் மறுக்கப்படமாட்டாது என அழ்ழாஹ்வின் தூதர் சொல்ல நான் செவிமடுத்துள்ளேன்.’ (அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஆஸ் (ரழி), நூற்கள்: இப்னுமாஜா-1753, ஹாகிம்-1535, அல் ஜாமிஉஸ் ஸஈர்-2385, ஷுஅபுல் ஈமான்-3904)

குறித்த இச்செய்தி பலவீனமானதாகும். ஏனெனில், இதன் அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் இடம்பெறும் ‘இஸ்ஹாக்’ என்ற அறிவிப்பாளர் பலவீனமானவராகும்.  ஆனாலும் கூட இஸ்ஹாக் என்ற பெயரில் மூவர் இருப்பதால் எந்த இஸ்ஹாகை வைத்துத் தீர்மானிப்பது என்பது இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். எனினும், எந்த இஸ்ஹாக் இடம்பெற்றாலும் பரவாயில்லை. காரணம் ஹதீதின் தொடரிலே சந்தேகிக்கப்படுகின்ற அனைத்து இஸ்ஹாக்குகளும் பலவீனமானவர்களாகவே இருக்கின்றனர். எனவே ஒவ்வொரு இஸ்ஹாகையும் பற்றிய விமர்சனங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

இஸ்ஹாக் பின் உபைதிழ்ழாஹ் அல் மதனி (அபூ முலைகாவின் மகன்): இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் குறித்த இஸ்ஹாக் என்பவர் மதீனாவைச் சேர்ந்த உபைதுழ்ழாஹ் என்பவரின் மகனே எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இவரைப்பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) ‘இனங்காணப்படாத ஒரு அறிவிப்பாளர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவரது தகவலை ஏற்க முடியாது என்பதுதான் ஹதீத் கலை அறிஞர்களின் முடிவாகும்.

இஸ்ஹாக் பின் உபைதிழ்ழாஹ் (அபுல் முஹாஜிர்):
இவரும் இனங்கானப்படாத அறிவிப்பாளர்.

இஸ்ஹாக் பின் அப்திழ்ழாஹ் (இப்னு அபீ பர்வா): இவரும் ஹதீத் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் (ஓரங்கட்டப்பட்டவர்). இதனை ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஹதீதில் இடம்பெறும் ‘இஸ்ஹாக்’ என்பவர் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட இஸ்ஹாக் என்பதே மிகச்சரியான கருத்தாகும். மேற்குறிப்பிடப்பட்ட இந்த நபிமொழிக்கு துணை சேர்க்கும் வகையில் ‘முஸ்னதுத் தயாலிஸி’என்ற நூலில் 2262ம் இலக்க செய்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பின்வரும் நபிமொழி தகுந்த சான்றாகும் என்று நோன்பு திறக்கும் நேரம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் நேரம் என்று கருதுவோர் வாதிடுகின்றனர். இதுதான் அந்த செய்தி:

2

‘நோன்பாளிக்கு அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை  நோன்பு திறக்கும் நேரத்தில் இருக்கின்றது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்தான் அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் நோன்பு திறக்கும் போது தனதுமனைவியரையும், பிள்ளைகளையும் அழைத்து துஆச் செய்பவராக இருந்தார்கள்.’ (நூல்: முஸ்னதுத் தயாலிஸி-2262)

இந்தத் துணைச் சான்றும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில், இச்செய்தியில் இடம்பெறும் ‘அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் பின் உபைதிழ்ழாஹ்’ என்பவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். இவரைப்பற்றி சில முக்கியமான ஹதீத் துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துக்களைக் கீழே தருகின்றேன்.

இமாம் நஸாஈ        : ஹதீதில் விடப்பட்டவர்.
இமாம் அஹ்மத்    : ஹதீதில் நிராகரிக்கப்பட்டவர்.
இமாம் பஸ்ஸார்    : ஹதீதில் பலவீனமானவர்.
இமாம் இப்னு ஹஜர்    : பலவீனமானவர்.
இமாம் தஹபி        : பலவீனமானவர்.

(நூல்: தஹ்தீபுல் கமால் பீ அஸ்மாஇர் ரிஜால் லில் ஹாபிழ் அல் மிஸ்ஸீ)

எனவே, பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்  நேரங்களில் மிக முக்கிய நேரம் நோன்பு திறக்கும் நேரம் என்று நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கை தவறானதாகும்.

அடுத்து நமது இரண்டாம் பகுதிக்குள் நுழைவோம்:

நோன்பு திறக்கும் நேரத்தில் பிரத்தியேகமாக பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை தவறானது என்று மேலே பார்த்தோம். அடுத்து, அந் நேரத்தில் பிரத்தியேகமாக இரு துஆக்கள் நமது சமுதாயத்தில் ஓதப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அதிலும் குறிப்பாக ‘அழ்ழாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஆலா ரிஸ்கிக அப்தர்து பதகப்பல் மின்னி’ என்ற துஆ ரமழான் காலங்களில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவும், தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து தொழுகை நடாத்தும் இமாம்களினால் மஃமூம்களுக்கு ஒவ்வொரு தினமும் சொல்லிக் கொடுப்படுவதனையும் நாம் அவதானித்து வருகின்றோம். அத்தோடு நோன்பு திறக்கும் அட்டவணை களிலும் இந்த துஆவை அச்சிட்டு விநியோகம் செய்து வருவதும் நோன்பின் கடமைகளில் ஒன்று போல் ஆகிவிட்டது.

இதனால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே அதிகம் இந்த துஆவின் தாக்கம் இருந்து வருவதனைப் பார்க்கின்றோம். எனினும், இந்த துஆவினை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகவே காணப்படு கின்றன. சுருக்கமாக அவற்றை இங்கு நோக்குவோம்.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி: இந்தக் கருத்துடைய ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரழி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்ரானியின் கபீர் உட்பட சில நூற்களில் இந்த அறிவிப்பு பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மாலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே, இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

முஆத் பின் ஸஹ்ரா அறிவிக்கும் ஹதீஸ்: ‘அழ்ழாஹும்ம லக சும்து’ என்று தொடங்கும் துஆவை நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதாக முஆத் பின் ஸஹ்ரா என்பவர் அறிவிக்கும் செய்தி அபூதாவூத், பைஹகி உள்ளிட்ட சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் முதல் அறிவிப்பாளராகிய முஆத் பின் ஸஹ்ரா என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்திக்காத ஒருவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாக அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இது தவிர இந்த அறிவிப்பில் அடுத்தடுத்த அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்களாக உள்ளனர்.

அனஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி: இதே கருத்து அனஸ் (ரழி) அவர்கள் வழியாக் தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் ஸகீர் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவுத் பின் ஸபர் கான் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ்களை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தவிர நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ‘தஹபழ் ழமஉ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அழ்ழாஹ்’ எனும் துஆவும் நமது சமூகத்தில் பரவலாக ஓதப்பட்டு வருவதனை தாராளமாகப் பார்க்க முடிகின்றது. இன்னும் சொல்லப்போனால் ‘அழ்ழாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஆலா ரிஸ்கிக அப்தர்து பதகப்பல் மின்னி’ என்ற துஆவிற்கு மாற்றீடாக சில தௌஹீத் மார்க்க அறிஞர்கள் இந்த துஆவை ஓதிவருமாறு கூறிவருகின்றார்கள். எனினும்  இச்செய்தியும் பலவீனமானது என்பதில் எள்முனையளவு கூட மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், சில தௌஹீத் மார்க்க அறிஞர்கள் இவ்வாறு கூறி வருவதற்கு காரணம், குறித்த ஹதீதின் நம்பகத் தன்மையில் உள்ள குளறுபடிகளை சரி வர ஆராயததினாலேயாகும். அந்த செய்தி பின்வருமாறு:

3

கருத்துச்சுருக்கம்: ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் நேரம் ‘தஹபழ்ழமஉ, வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அழ்ழாஹ்’ எனும் பிரார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள்.’ (நூற்கள்: அபூதாவூத்-2359,  தாரகுத்னி-25, சுனனுன் நஸாயி-3329, ஹாகிம்-1536) இந்த ஹதீத் பின்வரும் காரணத்தால் பலவீனமானதாகும்

இந்த ஹதீதில் இடம்பெறும் ‘மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ’ என்பவர்  இனங்காணப்படாத ஒரு அறிவிப்பாளராகும். இவரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைத் தவிர வேறு எந்த அறிஞரும் நம்பகமானவர் என்று குறிப்பிடப்படவில்லை.

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைப் பொறுத்தமட்டில் அறிவிப்பாளர்களை நம்பகப்படுத்தும் விடயத்தில் கவன யீனமானவர் என விமர்சிக்கப்பட்டவராகும். காரணம், அவர் இனங்காணப்படாத அறிவிப்பாளர்களைக் கூட நம்பகமானவர்கள் என சொல்லும் வழக்கமுடையவர். ஏனெனில், அவரிடத்தில் நம்பகமானவர் என்பதற்கு வரைவிலக்கணம் ‘எவரிலே விமர்சனம் கூறப்படவில்லையோ அவர் நம்பகமானவர்’ என்பதாகும்.

உதாரணத்திற்கு ரஹீம் என்ற மனிதர் ஒரு ஹதீதை அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி ஹதீத் துறை அறிஞர்கள் நல்லபிப்பிராயம் கொண்டுள்ளனரா? அல்லது கெட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனரா? என்று பார்ப்போம். நல்லபிப்பிரா யங்கள் கொண்டிருந்தால் நம்பகமானவர் என தீர்ப்புச் சொல்லப்படும்.

தீய அபிப்பிராயங்கள் கொண்டிருந்தால் பலவீனமானவர் என தீர்ப்புச்சொல்லப்படும். இரண்டுமே இல்லாவிட்டால் ரஹீம் என்பவரை ‘இனங்காணப்படாதவர்’ என அழைப்போம். இதுதான் இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர உள்ள அனைத்து அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களோ ‘யார் என்றே அறியப்படாத ரஹீமையும் நம்பகமானவர் என்றுதான் குறிப்பிடுவார். இதே நிலைதான் குறித்த செய்தியில் இடம்பெறும் ‘மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ’ என்பவரின் நிலையுமாகும். அவரை எவரும் புகழ்ந்து கூறியதும் இல்லை. இகழ்ந்து கூறியதும் இல்லை. எனவே, இப்படிப்பட்ட அறிவிப்பாளரைத்தான் ஹதீத் துறை சார் அறிஞர்கள் ‘இனங்காணப்படாத அறிவிப்பாளர்’ என்று அழைப்பர். எனினும், இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் மாத்திரம் இவரை நம்பகப்படுத்தியிருப்பதானது அவர்களது கவனயீனத்தை தெளிவாக எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

மேலே, நாம் குறிப்பிட்டவற்றிற்கப்பால்  குறித்த ‘மர்வான் இப்னு ஸாலிம்’ என்ற அறிவிப்பாளரை இனங்காணுவதில் ஹாகிம், தஹபி போன்ற அறிஞர்கள் தவறிழைத்துள்ளனர். (அழ்ழாஹ் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும், தேடலுக்கும் நற்கூலிகளை வழங்க வேண்டும்).

இதனால்தான் ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறுகின்ற நம்பகமான ‘மர்வான் அல் அஸ்பர்’ என்ற அறிவிப்பாளர்தான் என அவ்விருவரும் தவறுதலாக கருதிவிட்டனர். இவர்களின் இப்போக்கை மேலோட்டமாக ஆய்வுசெய்த சில மார்க்க அறிஞர்கள் தான் இந்த ஹதீத் நம்பகமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். மற்றும் சில தௌஹீத் மார்க்க அறிஞர்கள் தங்களது இத் தவறான போக்கை உணர்ந்து அந்த ஹதீத் பலவீனமானது என மக்கள் மத்தியில் விழிப்பூட்டி வருவதானது மிக மிக வரவேற்கத்தக்க அம்சமாகும்.

எமது இவ் ஆய்வின் முடிவாக நாம் குறிப்பிட வருவதானது.

1.நோன்பு துறக்கும் நேரத்தில் பிரத்தியேகமாக துஆ அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை  தவறானதாகும்.

2.அதே போன்று அந்த நேரத்தில் ஓதப்படுகின்ற ‘அழ்ழாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஆலா ரிஸ்கிக அப்தர்து பதகப்பல் மின்னி’  மற்றும்  ‘தஹபழ் ழமஉ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அழ்ழாஹ்’ ஆகிய இரு துஆக்களும் ஆதாரபூர்வமான துஆக்களல்ல.

3.ஒருவர் தான் விரும்பிய மொழியில், விரும்பிய நேரத்தில் இறைவனிடத்தில் பிரார்த்தித்துக்கொள்ள முடியும்.

<<Back to Al Athar August 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers