Skip to content

கர்ப்பிணித் தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் விட்ட நோன்பை கழாச் செய்ய வேண்டுமா?

August 20, 2009

அல் அதர் மாத இதழ் >ரமழான் சிறப்பிதழ்

மௌலவி B.M அஸ்பர் (பலாஹி)
asfarbm@ymail.com


‘அழ்ழாஹ் பிரயாணிக்கு நோன்பையும் தொழுகையின் அரைவாசியையும் எடுத்துவிட்டான். மேலும் கர்ப்பிணிக்கும், பாலுட்டும் தாய்க்கும், நோன்பு வைப்பதை எடுத்துவிட்டான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’(நூல்: அஹ்மத்-20326)

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!

நாம் அருள்மிகு ரமழான் மாதத்தை அடைந்துள்ளோம். ரமழான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். எழில்மிகு இஸ்லாமிய அடித்தளத்திற்கு வலிமையூட்டுவதில் நோன்புக்கு பெரும் பங்குண்டு.

உள்ளத்தையும் உடலையும் ஒரு சேரத் தூய்மையாக்கும் பேராற்றல் இஸ்லாமியர் கடைபிடிக்கும் நோன்புக்கு மட்டுமே உள்ளது என்பதை அறிவியல் அறிஞர்களும், உளவியல் ஆய்வாளர்களும் மருத்துவ மேதைகளும் ஒருமித்துக்கூறுகின்றனர். அது மட்டுமல்ல, தம்மை உளத்தூய்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் ஒரு சிறந்த வழிமுறையாகவும் நோன்பு அமைந்திருக்கின்றது.

நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கடமையல்ல. இதற்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தாருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களும் தொன்று தொட்டு நோன்பிருந்து வந்ததை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (அல்குர்ஆன் 2:183)

மேற்கூறப்பட்ட இறை வசனத்தில் நோன்பின் ஆன்மீக பயனை இறைவன் எமக்குச் சொல்லும் போது இறை பக்தியாளர்களாக ஆக வேண்டுமென்பதற்காகவே நோன்பை கடமையாக்கியதாகக் குறிப்பிடுகின்றான். ரமழான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால், புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். இது குறித்து இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.’ (அல்குர்ஆன் 2:185)

ரமழான் மாதம் நோன்பு நோற்பது எம்மீது கடமையாக இருந்தாலும் நோன்பு நோற்பதற்கு சக்தியில்லாத முதியோர், நோயுற்றோர், பயணத்தில் இருப்போர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இந்த கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அழ்ழாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அழ்ழாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)’ (அல்குர்ஆன் 2:185)

இவ்வசனத்தில் இறைவன் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டக்கூடிய தாய்மார்கள் பற்றி குறிப்பிடாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
NONPU1
‘அழ்ழாஹ் பிரயாணிக்கு நோன்பையும் தொழுகையின் அரைவாசியையும் எடுத்துவிட்டான். மேலும் கர்ப்பிணிக்கும், பாலுட்டும் தாய்க்கும், நோன்பு வைப்பதை எடுத்துவிட்டான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஹதீஸ் சுருக்கம்); (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூல்: அஹ்மத்-20326)

மேற்கூறப்பட்ட செய்தியின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளுக்கு பால் ஊட்டக்கூடிய தாய்மார்களும் நோன்பு நோற்பது அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளும், பால் ஊட்டக்கூடிய தாய்மார்களும் நோன்பை விடும் விடயத்தில் சில அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.

மேற்கூறப்பட்ட இரு சாராரும் நோன்பு நோற்பதன் மூலம் தமக்கோ தமது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படும் எனப் பயந்தால் நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ள போதிலும் அவர்களால் நோன்பை பிடிப்பதற்கு முடியும் என்றால் நோற்கலாம். இந்த விளக்கம் ஹதீஸ்களில் எங்கேயும் கூறப்படவில்லை. மாறாக, இது சில அறிஞர்களின் சொந்தக் கருத்தேயாகும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்ட சாரார்களிள் மீண்டும் அதை நோற்று கழாச் செய்ய வேண்டும் என கூறப்படுவோர் நோயாளிகள், பிரயாணிகள் ஆகியோர்தான் என்பதை குர்ஆனும், நபிவழிகளும் எமக்குத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

ஆனால் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள் ஆகியோர் வேறு நாட்களில் நோன்பு நோற்பது பற்றி குர்ஆனிலும், நபிவழிகளிலும் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் முதியோர்கள் நோன்பை கழாச்செய்ய வேண்டியதில்லை.

கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்ய வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சில அறிஞர்கள் எவ்வாறு முதியோர்கள் நோன்பை கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லையோ அதேபோன்று கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்ய வேண்டியதில்லை எனக் குறிப்பிடுகின்றனர். முதியோர்கள் நோன்பை கழாச் செய்ய வேண்டியதில்லை (இந்த விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இல்லை) எனக் கூறுவோர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

‘இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 2:184 ஆவது வசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அல்ல. நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்களையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓரு ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று கூறினார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புகாரி-4505)

இந்த செய்தி நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் நபியவர்களோடு தொடர்புபட்டது என்ற செய்தியின் சட்டத்தையே வழங்க வேண்டும்.

1) குர்ஆன் வசனத்துக்குரிய தப்ஸீரை (விளக்கத்தை) அவர்கள்; குறிப்பிட்டிருப்பதால் ஹதீஸ் கலையில் இதற்கு மர்பூஃ (நபியவர்களோடு தொடர்புபட்டது) உடைய சட்டத்தையே வழங்கப்படும். ஏனெனில் இவ்வாறான விடயங்களை ஒருவர் தமது விருப்பத்தின் பேரில் கூறியிருக்க முடியாது. கூறவும் கூடாது.

அவ்வாறு செய்தால் அழ்ழாஹ்வின் வேதத்தில் தமது சொந்தக் கருத்தைக் கூறிய குற்றத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். இந்த விளக்கத்தை அப்துழ்ழாஹ் அஸ்ஸஃதி அவர்கள் தமது ஷரஹுல் மூகிழா என்ற நூலிலும் அம்ருப்னு ஸலாஹ் அவர்கள் தமது அந்நுகத் என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

2) ஸஹாபாக்கள் வாழ்ந்த காலகட்டத்தில்தான் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே, குறித்த காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்களே திருமறைக் குர்ஆனின் வசனங்களுக்குரிய தெளிவான விளக்கத்தை அறிந்திருக்க முடியும்.

3) குறித்த செய்தியோடு தொடர்புபடும் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைப் பொறுத்தமட்டில் திருமறைக் குர்ஆனை விரிவுரை செய்பவர்களில் தலையானவர் என அறிஞர்களால் கூறப்பட்டவரும், நபிகளாரின் சிறப்பான துஆவைப் பெற்றவருமாவார்கள். நபியவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு பின்வருமாறு பிராத்தித்துள்ளார்கள்.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையை எனது தோல் புயத்தில் வைத்து பின்வருமாறு பிராத்தித்தார்கள். இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை வழங்குவாயாக. மேலும் குர்ஆனின் விளக்கத்தை கற்றுக் கொடுப்பாயாக.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மத்-2397)

எனவே மேற்கூறப்பட்ட நபிமொழியின் பிரகாரம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விளக்கத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும்.

கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள் விட்ட நோன்பை நோற்க வேண்டுமா?

இவ்விடயத்தில் இரண்டு சாரார்கள் காணப்படுகின்றனர் என நாம் முன்பே குறிப்பிட்டுள் ளோம். இவ்விரு சாரார்களின் கூற்றில், விட்ட நோன்பை மீண்டும் நோற்கத் தேவையில்லை எனக்கூறுவோரின் கருத்தே சரியானது. இதை நாம் பின்வரும் காரணங்களை வைத்து சரிகாணலாம்.

1.இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முதியோர்கள் நோன்பை கழாச் செய்ய வேண்டியதில்லை என மேற்கூறப்பட்ட வசனத்தை வைத்து மார்க்கத்தீர்ப்பு சொன்னார்களோ அதே போன்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களே மேற்கூறப்பட்ட இரு சாரார்கள் சம்மந்தமாக மார்க்கத்தீர்ப்பு சொல்லும் போது, விட்ட நோன்பை மீண்டும் நோற்கத் தேவையில்லை என்றும்இ ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவு கொடுத்தால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் மூல வாக்கியம் பின்வருமாறு:

NONPU2
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தமக்குச் சொந்தமான பால் கொடுக்கக் கூடிய அடிமைப் பெண்ணுக்கு பின்வருமாறு ஏவினார்கள். ‘நீ நோன்பை விட்டு விட்டு (அதற்கு பகரமாய்) உணவு கொடுக்க வேண்டும். விட்ட நோன்பை மீண்டும் நோற்கத் தேவையில்லை.’ (நூல்: தாரகுத்னி பாகம்-2, பக்கம்-207)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேற்குறித்த வசனத்தை மையமாக வைத்துத்துத்தான் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். தமது சுயவிருப்பத்தின் பேரில் கூறவில்லை, கூறவும் கூடாது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கொடுத்த மார்க்கத்தீர்ப்பைப் போன்றே இப்னு உமர் (ரழி) அவர்களும் கூறியுள்ளார்கள். அதன் மூல வாக்கியம் பின்வருமாறு:

‘இப்னு உமர் (ரழி) அவர்களிடம் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி (நோன்பு சம்பந்தமாக) கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் நீ நோன்பை விட்டு விடு. (அதற்கு பகரமாய்) ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவு கொடு. விட்ட நோன்பை மீண்டும் நோற்காதே.’ (நூல்: தாரகுத்னி பாகம்-2,பக்கம்-205,207)

எனவே, கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் விட்ட நோன்பை நோற்க வேண்டியதில்லையென்றாலும், ஒரு நோன்பிற்கு பகரமாய் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.

2. நோன்பை விடுவதற்கு இறைவனால் சலுகை வழங்கப்பட்டவர்களில் அதை மீண்டும் நோற்று கழாச் செய்ய வேண்டும் என இறைவனால் கூறப்பட்டவர்கள் பிரயாணிகள், நோயாளிகள் மாத்திரம்தான். மாறாக கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்ய வேண்டும் என இறைவனாலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களாலும் எங்கேயும் கூறப்படவில்லை.

3. இறைவன் நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்று கூறாது விட்ட சாரார்களை கழாச் செய்யத்தான் வேண்டும் என்று கூறுவோர் அதற்கான ஆதாரங்களை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிவழிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.

4. அவசியம் தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருந்தும் இறைவனாலும் இறைத்தூதராலும் அதுபற்றி எதுவுமே கூறப்படாமல் விடப்பட்டிருந்தால் கூறப்பட்டதை மாத்திரம்தான் எடுக்க வேண்டும். கூறப்படாததை கூறப் பட்ட சட்டத்திற்குள் எடுக்கக்கூடாது.

அதே போன்று இறைவன் ஒன்றைக் கூறாது விட்டால் அதை மறந்து அவன் விடவில்லை. மாறாக அடியார்களின் நலனுக்காகவே விட்டுள்ளான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இறைவன் திருமறையில்:

‘(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை.’(அல்குர்ஆன் 19:64)

‘நம்பிக்கை கொண்டோரே! சில விடயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அழ்ழாஹ் மன்னித்தான். அழ்ழாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.’ (அல்குர்ஆன் 5:101)

5. நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்று கூறுவோரிடத்தில் எந்த ஆதாரமும் இல்லாத அதே வேளை மாதவிடாய் ஏற்படக் கூடிய பெண்களே நோன்பை கழாச் செய்ய வேண்டுமென மார்க்கத்தில் கூறப்பட்டிருக்க கருவுருதல், பிள்ளைக்கு பால் கொடுத்தல் என்பன இருந்தாற்போல் ஒருமுறை ஏற்படக்கூடியதே. எனவே, கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் நோயாளிகள் எவ்வாறு நோன்பை கழாச் செய்ய வேண்டுமோ அவ்வாறே இவர்களும் கழாச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். குறித்த சாராரோடு மற்றொரு சாராரை ஒப்புநோக்கி (கியாஸ்) எடுப்பது குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமானதாகும்.

6. ஒரு வாதத்திற்கு நோன்பு நோற்க வேண்டும் என வைத்துக் கொண்டாலும் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அது அசாத்தியமானதாகும். ஒரு பெண் சென்ற வருடம் கரப்பிணியாக இருந்து ஒரு மாதம் நோன்பு வைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவ்வருடம் அதே பெண் பால் கொடுக்கும் நிலையில் இருப்பாள். இவ்வருடமும் அப்பெண்ணால் நோன்பு வைக்க முடியாது அடுத்த வருடம் அதே பெண் கருவுற்றிருந்தால் சுமாராக 3,4 வருடங்களுக்குறிய நோன்பை அவள் கழாச் செய்ய வேண்டிய நிலையேற்படும்.

அதேபோல் ஒரு பெண்ணுக்கு அடுத்தெடுது 5குழந்தைகள் பிறக்கின்றது என்று வைத்துக் கொள்வோம் குழந்தைகள் பிறந்த வருடங்களையும் அப்பெண் அக்குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் வருடங்களையும் கணக்கிட்டால் சுமாராக 15 வருடங்களுக்குரிய நோன்புகளை கழாச் செய்ய வேண்டியேற்படும். இவ்வாறான சிரமத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்படுத்தாது.

எனவே, மேற்கூறிய காரணங்களின் பிரகாரம் கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் விட்ட நோன்பை நோற்று கழாச் செய்ய வேண்டியதில்லை. மாறாக, ஒரு நோன்புக்குப் பகரமாக ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு வழங்க வேண்டும். இதற்கு      (பித்யா) என்று சொல்லப்படும். இவ்வாறு நாம் நமது ஆய்வின் முடிவை சொல்லும் போது நீங்கள் புதிய கருத்துக்களைச் சொல்லி மக்களைக் குழப்புகிறீர்கள் என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

இதை நாம் புதிதாகச் சொல்லவில்லை மாறாக, எமக்கு முன்னர் பலர் இக்கருத்தை கூறியுள்ளனர். தகவலுக்காக அவர்கள் பெயர்களை இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு உமர் (ரழி), ஸயீத் பின் ஜுபைர் (ரழி), இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, முஹம்மத் இப்றாஹீம் ஷக்றா, முஹம்மத் இப்னு உமர் பாஸி மூல் போன்றோரைக் குறிப்பிடலாம்.

எனவே, எமது ஆய்வின் முடிவு கர்ப்பிணிகளும், பாலுட்டும் தாய்மார்களும் விட்ட நோன்பை நோற்று கழாச் செய்ய வேண்டியதில்லை மாறாக  (பித்யா) கொடுத்தால் போதும் என்பதாகும். அழ்ழாஹ் மிக அறிந்தவன்.

<<Back to Al Athar August 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers