Skip to content

அழ்ழாஹ்வின் ஆலயத்திற்குள் அரங்கேறிய அரக்கர்களின் அராஜகம்

August 20, 2009

அல் அதர் மாத இதழ் >தஃவாகளம்

மௌலவி SLMநஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

‘குற்றவாளிகள் வெறுத்த போதும் அழ்ழாஹ் தனது கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவான்.’ (அல்குர்ஆன்-10:82)

மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் இடம்பெற்ற மனித வேட்டையானது, உண்மையில் ஒரு காத்தான்குடி மகன் என்ற ரீதியில் 20 வருடங்களுக்கு முன்னர் எமதூரில் இரு பள்ளிவாயல்களில் பெருக்கெடுத்த இரத்த ஆற்றையே எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.

பள்ளிவாயலின் முன் ‘ஸப்பு’கள் உட்பட பெரும்பாலான ஸப்புகள் இரத்தம் தோய்ந்து செந்நிறமாகக் காட்சியளித்த நிலையை,  மஹகொட மஸ்ஜித் நிகழ்வு எமக்கு மீண்டுமொரு முறை ஞாபகமூட்டியது. 20 வருடங்களுக்கு முன்னர் மாற்று மதத்தைச் சேர்ந்த கொடியவர்களால் (அம்மதங்கள் கூட இத்தகைய இரத்த அபிஷேகத்தை கண்டித்திருந்தும் கூட) அரங்கேற்றப்பட்ட இந்த இரத்தக் களரி இன்று இலங்கை முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்களால் அரங்கேற்றப் பட்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

தங்களை முஸ்லிம்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் இத்தனை நாளும் எந்த மதத்தில் இருந்தார்கள் என எண்ணத்தோன்றுகிறது. இவ் இரத்தக் களரியை உருவாக்க ஏவிய அப்பாதகரும்  அவரின் அடிவருடிகளும் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்திருந்தால் ஒரு போதும் இப்படிச் செய்திருக்கவே மாட்டார்கள்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இஸ்லாத்தை நோக்கி வைக்கப்படுகின்ற மிக மோசமான விமர்சனங்களைக் கூட சாதாரண அறிவு படைத்த எவரும் இம்மாதிரியான முறையில் கையாள முற்பட்டால் நாம் அதை எதிர்க்கின்றோம் அல்லவா? இந்த அராஜகர்கள் இத்தனை நாளும் (தாங்கள் வணங்குகின்ற அவ்லியாக்கள் உட்பட) நாங்கள் இறைவனை வணங்குகின்றோம்(?) என்றுதானே கூறிவந்தார்கள்.

வன்முறை என்பது முஸ்லிம்களின் தனியுடமை என ஓரிறைக் கொள்கை எதிர்ப்பாளர்கள் கூறிக் கொண்டிருக்கின்ற இக் காலகட்டத்தில் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்கின்ற பாரம்பரியம் முஸ்லிம்களுக்கு கிடையாது என அவர்கள் எண்ணமாட்டார்களா? தூய இஸ்லாத்தில் நாம் எடுத்து நடக்கின்ற சில பகுதிகளால் கவரப்பட்டு இஸ்லாத்தில் நுழைந்த, நுழைய விரும்புகின்ற மக்களின் மனங்களில் இந்த கொலைகாரக் கும்பல் எதனைப் பதிய வைத்திருக்கின்றது? இறைத்தூதருக்கு கூட தான் விரும்புகின்றவர்களையெல்லாம் சத்தியக் கொள்கை யாளர்களாக மாற்ற முடியாது என திருமறை கூறிக் காட்டுகின்றது.

‘(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அழ்ழாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன்28:56)

கஃபாவின் அருகில் தொழுது கொண்டிருந்த அருமைத் தூதரின் கழுத்தை நெரிக்க முனைந்த ‘உத்பத் பின் அபீமுஈத்’ என்பவனின் அதிபாதகச் செயலைக் கண்டு அபூபக்ர் (ரழி) அவர்கள், ‘எனதிரட்சகன் அழ்ழாஹ் ஒருவனே என்று கூறும் ஒருவரையா? கொல்லப்பார்க்கின்றீர்கள்’ என்று கூறியதை இச்சந்தர்ப்பத்தில் ஞாகமூட்டுவது மிகப்பொருத்தம் என நினைக்கின்றேன். இதனை திருமறை குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘என் இறைவன் அழ்ழாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார்.’ (அல்குர்ஆன் 40:28)

அழ்ழாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திப்போம், அவனையன்றி யாரையும், எந்தச் சூழ்நிலையிலும் அழைத்துப் பிரார்த்திக்கமாட்டோம். அவன் திருமறையிலும், தனது தூதர் மூலமும் எதைப் பின்பற்றச் சொன்னானோ அதையே எடுத்து நடப்போம். மகான்களுக்கும், மௌலானாக்களுக்களுக்கும் மண்டி யிடமாட்டோம், நாம் ஏற்றுக் கொண்ட சத்தியக் கொள் கையின் பால் மற்றவர்களையும் அழைப்போம் என்று கூறியதுதான் அந்த ஈமானிய உறவுகள் செய்த தவறா?

மாற்று மதத்தைச் சேர்ந்த சாதாரண மனிதாபிமானம் கொண்டவர்களிடம் கேட்டால் கூட என்னவென்று கூறுவார்கள் இவ் அணுகுமுறையை? முஸ்லிம்கள் இரத்த வேட்கை கொண்டவர்கள் என்று கூறிவந்த இந்திய இந்துத் தீவிரவாத அமைப்பின் கூற்றுக்கு முழுமையாக செயல்ரூபம் கொடுப்பது போன்று அமைந்திருக்கின்றது இச்செயற்பாடு.

நடுநிலையோடு சிந்திக்கும் முஸ்லிம்களே! இச்செயலுக்கு மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற வகையில் உங்கள் கண்டனம் என்ன? நீங்கள் கற்ற அறிவும், இறைவன் தந்திருக்கும் மனித இயல்பும் என்ன பதில் சொல்கின்றது. நமது நாட்டு முஸ்லிம்களின் எதிர்கால வரலாற்றில் இவ்வடு ஏற்படுத்தப் போகும் கருப்பு புள்ளி பற்றி சிந்திக்கமாட்டீர்களா?

அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும் இது பற்றி யதார்த்தமாகக் கருத்துக் கூறாமலிருப்பதன் மர்மம்தான் என்ன?

தவ்ஹீத்வாதிகளை காலத்திற்கு காலம் யூத, கிறிஸ்த்தவ ஏஜெண்டுகள் என்று கூறி குளவி போன்று குத்த நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அலைவரிசைகளில் அசத்திக் கொண்டிருக்கும் ஆலிம்களுக்கும்(?) சந்தோஷத்திற்கு மட்டில்லை.

தஃவாப் பணி செய்து கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் அமைப்புக்கள் ஆக்கபூர்வமான அறிக்கைகள் கூட வெளியிடவில்லை என்பதுதான் வேதனையான செய்தியாகும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே?

தவ்ஹீத்வாதிகளை இத்தோடு அழித்துவிடலாம் என்று நினைத்த சக்திகளுக்கு புரிந்திருக்கும் எமது உறவின் ஆழம். ஆயிரம்தான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்றதும் கட்டுப்படும் தனித்துவமான கூட்டம்.

புத்தளத்தில் உள்ள தவ்ஹீத்வாதி தாக்கப்பட்டால் பொத்துவில்லில் உள்ள தவ்ஹீத்வாதிக்கு வலிக்கும். அப்படித்தான் எமது தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். எமது பள்ளிவாயலை மாத்திரமல்ல, எம்மையே எரித்தலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத கூட்டம் நாம் என்பதை இக்கயவர்கள் புரிந்து கொள்ளட்டும். இதோ அருள்மறை பேசுகின்றது.

‘மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே, அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ‘எங்களுக்கு அழ்ழாஹ் போதுமானவன்;. அவன் சிறந்த பொறுப்பாளன்’ என்று அவர்கள் கூறினர்.’ (அல்குர்ஆன் 3:173)

அழ்ழாஹ்வின் ஆலயத்திற்கு வைத்த தீயால் எரிந்தது ஓரிறைக் கொள்கையல்ல. மாறாக, இப்பாதகர்களின் செயல் கண்டு கொள்கையில் வந்து இணைந்த உறவுகளே அதிகம். இவர்களின் சதியை விட அழ்ழாஹ்வின் ஆற்றல் என்ன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

துரத்தி துரத்தி அழ்ழாஹ்வின் ஆலயத்திற்குள் வைத்து வெட்டிய போது அவ் இரத்தத் துளிகள் இக்கொள்கைவாதிகளின் நன்மை வங்கியை நிரப்பியிருக்கும் என்பதை மறந்து விட்டார்கள் இம்மமதை பிடித்த மனிதர்கள். எனது வாப்பாவின் மேல் ஏன் மண் போடுகின்றீர்கள் என கதறியழுத அப்பிஞ்சுக் குழந்தையின் பிரார்த்தனைக்கும் அழ்ழாஹ்விற்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்பதை இக்கொடிய வர்கள் புரிந்து கொள்ளட்டும்.

அதே வேளை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று எமது சமூகத்திலிருந்து வந்த பல கருத்துக்கள் களநிலை அறியாததாக அமைந்திருந்தது.

ஏலவே, திட்டமிட்டு 24.07.2009 அன்று மாலையே கொலைகாரக் கும்பலால் ஒத்திகையும் பார்க்கப்பட்ட இத்தாக்குதலை ஊடகங்கள் இரு முஸ்லிம் மத குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் எனச் சித்தரிக்க, எமது முஸ்லிம்களில் பலர் கூட முஸ்லிம்கள் முஸ்லிம் களுக்கிடையே இரத்தக்களரி காண்கின்றனர் என பொறுப்பற்ற முறையில் பேசினார்கள்.

இரு மாடிகளைக் கொண்ட அந்த இறை இல்லமும் அதனோடு இணைந்திருந்த அல்குர்ஆன் மத்ரஸா, வாசிகசாலை மற்றும் வைத்திய உதவி நிலையம் உட்பட சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கயவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 13 சகோதரர்கள் மிகக் கோரமான முறையில் வாள்வெட்டுக்கும் உள்ளானார்கள் என்ற செய்தி இன்னும் சில முஸ்லிம் பிரதேசங்களில் புரியாத புதிராகவே உள்ளது.

முஸ்லிம் விவகாரங்களில் மிகவும் பொறுப்புடனும், கரிசனையுடனும் செயற்பட்டு வருவதாகக் கூறிக்கொள்ளும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உரிய வேளைக்கும் வாய்திறக்கவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் வரையும் ஆக்கபூர்வமான ஓர் அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<<Back to Al Athar August 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers