Skip to content

பெண்கள் தங்க வளையல் நகைகளை அணியலாமா?

July 22, 2009

அல் அதர் மாத இதழ் >சட்டங்கள்

அல் ஹாபிழ் M.C.M. ஸைனி

‘இது அனுமதிக்கப்பட்டது இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அழ்ழாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அழ்ழாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 16:116)

அழ்ழாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் நம்பிய முஸ்லிம் பெண்கள் தங்கத்தினாலான வளைந்த ஆபரணங்களை அணிவது தொடர்பில் நபிகளாரின் பல  எச்சரிக்கைகளை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் காணமுடிகின்றது. அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பிரச்சாரம் செய்யும் எமது அமைப்பு ‘பெண்கள் தங்க வளையல் நகைகள் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது’ எனும் பத்வாவை வெளியிட்ட போது சில மார்க்க அறிஞர்களும் இஸ்லாமிய அமைப்புக்களும் இதனை விமர்சித்திருந்தனர்.

ஒரு  ஆய்வு  முன்வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்து கொள்வதும்,  சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.  இது பற்றி திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகையில், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால்

‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன் 02:170)

மேலும், ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து ‘எங்களது முன்னோர்கள் செய்யவில்லை’ என்கின்ற போலி வாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து, குறித்த விடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற உரைகல்லில் உரசிப் பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன் 4:59)

எம்மைப் பொறுத்தமட்டில் எந்தவொரு மார்க்கத் தீர்ப்பையும் ஆய்வில்லாமல், மனம் போன போக்கில் வெளியிடுபவர்களல்லர். அழ்ழாஹ்வோ அவனது தூதரோ ஒன்றைக் கூறியிருந்தால் அவற்றை மக்களுக்கு எடுத்து வைப்பதிலும் தயங்குபவர்களல்லர். யார் எதைச் சொன்னாலும் ஆதாரங்களோடு ஒரு விடயம் உறுதியாகும் பட்சத்தில் அவற்றை அப்படியே ஒப்புவிக்க வேண்டுமென்ற கொள்கையை அடிப்படையாக வைத்தே பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

இதனடிப்படையில் தான் பெண்கள் தங்க வளையல் நகைகளை அணியலாமா? என நாம் ஆய்வு செய்த போது பின்வரும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் ‘பெண்கள் தங்க வளையல் நகைகள் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது’ எனும் முடிவுக்கு வந்தோம்.

‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண் ஆகியோருக்கு) நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்ற வளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும்  சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளனுப்பினார்கள்.

மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘தங்கத்தினாலான ஒரு கழுத்தணியை நான் எனது கழுத்தில் அணிந்திருந்தேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (என்னைக் கண்டதும்) புறக்கணிக்கலானார்கள். உடனே நான் ‘எனது (இந்த) அலங்காரத்தை நீங்கள் பார்க்கக்கூடாதா? எனக் கேட்டேன்.’ அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(உம்மு ஸலமாவே!) வேண்டுமென்றே உனது இந்த அலங்காரத்தை நான் புறக்கணிக்கின்றேன்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரழி), ஆதாரம்: முஸ்னது அஹ்மத்-25460)

மேற்குறித்த ஹதீஸ்களைப் பொருத்தமட்டில் அவைகள் அனைத்தும் ஆதாரபூர்வமானவைகள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ‘தங்க வளையல் நகைகளை அணிவது பெண்களுக்கு ஹராம் எனும் தீர்ப்பை நாம் கூறும் போது பல் வேறு விமர்சனங்களையும் வினாக்களையும் மார்க்க அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

இன்ஷாஅழ்ழாஹ் அடுத்த இதழில் இது தொடர்பில் எழுப்பப்படும் வாதங்களுக்கான பதில்களை விபரமாக நோக்குவோம்.

இன்ஷா அழ்ழாஹ் வளரும்…


<< BACK TO AL ATHAR JULY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers