‘சுத்ரா’என்றால் என்ன? (நபிவழியில் நம் தொழுகை தொடர்-2)
அல் அதர் மாத இதழ் >நபி வழித்தொழுகை
இப்னு சமீமா
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
சென்ற இதழின் தொடர்ச்சி…
நாம் சென்ற இதழில் நிய்யத்தை வாயால் மொழிவதின் விபரீதத்தையும், மௌட்டீகத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அதனை துடைத்தெறிய இச்சமூகத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். இவ்விதழில் சுத்ராவின் அவசியத்தையும் இச்சமூகத்தின் உணரா நிலையையும் அன்பர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.
இன்று எத்தனையோ பள்ளிவாயல்களில் இந்த கடமையான நபிவழி அலட்சியம் செய்யப்படும் நிலையைப் பார்க்கின்றோம். இவ்வாறான நபிமொழிகள் வேண்டுமென்றோ அல்லது அறியாமையினாலோ புறக்கணிக்கப்படுவதால் இறைவனோடு தொடர்புபடுகின்ற இத்தொழுகையை இறைவன் அங்கீகரிப்பானா? என எண்ணத் தோன்றுகின்றது.
உண்மையில் இச்சமூகத்தில் தொழுகை விடயத்தில் கவனிப்பாரற்று விடப்படும் நபி வழிகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். சுப்;ராவைப் பற்றிப் புரிந்திருக்கும் இச்சமூகம் சுத்ராவைப் பற்றி அறியாமல் போனதுதான் நகைப்பிற்குரியதாகும். சுத்ரா என்பது தொழும்போது ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கு முன்னால் ஒரு தடுப்பை வைத்துக் கொள்வதே ஆகும். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வலியுருத்தியுள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத அனைத்து தொழுகைகளிலும் சுத்ரா எனும் தடுப்பை வைக்காமல் அவர்கள் தொழுததேயில்லை என்பதையும் ஹதீஸ் கிரந்தங்களில் ஆதாரபூர்வமாகக் காணுகின்றோம். இனி சுத்ரா ஏன் அவசியம்? என்பதற்கான ஹதீத்கள் பற்றிப் பார்ப்போம்.

1. உங்களில் ஒருவர் தொழுதால் சுத்ராவை நோக்கித் தொழட்டும். மேலும் அதனை நெருங்கி நிற்கட்டும். மேலும் அதற்கும் தனக்குமிடையே எவராவது நடக்க முற்பட்டால் அவருடன் யுத்தம் புரியட்டும். ஏனெனில் நிச்சயமாக அவர் ஷைத்தானாகும். என நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஸயீத் அல் குத்ரி, நூல்: அபுதாவுத்-24532, இப்னு மாஜா-24317, இப்னு அபீ ஸைபா)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு (சுத்ரா) வைத்துக் கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன(ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்ற ஒன்றை (சுத்ராவாக) வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-860)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப் புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாக பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-862)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைத்தடியை நட்டு வைத்து அதை நோக்கித் தொழுவார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-863)
இந்த ஒரு ஹதீதிலிருந்து பல பாடங்களை நாம் பெறலாம்.
1.சுத்ரா என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட்ட ஒன்று.
2.இடையில் எவராவது நடக்க முற்பட்டால் அவரைத் தடுக்கலாம். அதனால் தொழுகை முறிந்து விடாது.
3.கெட்ட செயலை ஒருவர் செய்யும் போது அவரை ஷைத்தான் என்று கூறுகின்ற வழக்கம் ஹதீத்களில் உண்டு. இது போன்ற பல பாடங்களை இந்த ஹதீதிலிருந்து நாம் பெறலாம். நாம் முதலில் குறிப்பிட்ட அம்சத்தை சில மார்க்க அறிஞர்கள் மறுத்துரைக் கின்றனர். சுத்ரா என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட்ட ஒரு நபி வழி கிடையாது அது சம்பந்தமாக இடம் பெறும் அறிவிப்பு ‘ஷாத்’ என்ற பலவீனம் என்ற வகையைச் சார்ந்தது என்று கூறியோ அல்லது நபியவர்கள் சுவர் இல்லாமல் தொழுதார்கள் என்ற பலவீனமான செய்தியைக் கூறியோ அல்லது தொழுகையின் ருகூனில் வாஜிப் என்பதற்கான ஆதாரம் கிடையாது என்று கூறியோ எமது கருத்தை மறுத்துரைக்கின்றனர். இவர்களது வாதத்திற்கான மறுப்பினை எழுத விரிவை அஞ்சியதால் அதனை இங்கு தவிர்க்கிறோம். தேவைப்பட்டால் அடுத்த இதழில் அதனை நாம் தெளிவுபடுத்துவோம்.

2.சுத்ரா இன்றித் தொழாதே! உமக்கு முன்னால் எவரையும் நடக்க விட்டு விடாதே! எவராவது (அவ்வாறு நடக்க) முற்பட்டால் அவருடன் யுத்தம் செய்! ஏனெனில் அவருடன் தோழனான (ஸைத்தான்) இருக்கின்றான். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: இப்னு ஹுஸைமா: (9ம் பாகம் 2ம் ஹதீஸ்), இப்னு ஹிப்பான்: 4ம் பாகம் 45ம் பக்கம்)

1. உங்களில் ஒருவர் தொழுதால் தடுப்பினை வைத்துக் கொள்ளட்டும். மேலும் அத்தடுப்பினை நெருங்கிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரழி), நூல்: (முஸ்னதுத்தயாலிஸி-379)
இந்த செய்திகளெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று சுத்ரா மிக மிக அவசியம் என்பதை தெளிவு படுத்துகின்றது என்பதை வாசகர்கள்; புரிந்து கொள்ள வேண்டும்.
இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

Comments are closed.