Skip to content

ஆயுதங்கள் களைவும் போதைப் பாவனை ஒழிப்பும் ஆரோக்கியமான தேசத்திற்கு அத்திவாரம்

July 22, 2009

அல் அதர் மாத இதழ் > ஆசிரியர் பக்கம்

‘கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்.’ (அல்குர்ஆன் 05:32)

பாசிசப் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கத்தினால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதையடுத்து எமது நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் பேசு பொருளாக மாறியுள்ளதை நாம் அனைவரும் நன்கறிவோம்.

நாட்டை குட்டிச்சுவராக்கும் செயற்பாடுகளான போதை வஸ்த்துப் பாவனை, ஆபாசம், இலஞ்சம், ஆயுதக் கலாசாரம் போன்றவற்றை அடியோடு ஒழிக்க இன்று அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

‘புதிய தேசத்தைக் கட்டியெழுப்பும்’ திட்டத்தில் நாட்டின் நாலா பாகங்களிலும் காணப்படும் ஆயுதக் குழுக்கள்  தங்களது சட்ட விரோத ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென மிக அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அறிவித்திருந்தார்.

அரசாங்க அனுமதியின்றி எமது நாட்டில் பல்வேறு சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தகவலின் படி, கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் சுமார் 26 பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த குழுக்கள் சட்டவிரோத ஆயுதங்களுடன் இயங்கி வருவதாகவும் இவர்களே கூலிக்கு ஆட்களை படுகொலை செய்தல், கப்பம் கோரல், கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்நாட்டை குட்டிச்சுவராக்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான வன்முறை மனோநிலை படைத்த இளைஞர்களை கணிசமாக பிரபல அரசியல்வாதிகளே கூலிக்கு வைத்திருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. எது எவ்வாறிருந்தாலும் ஆயுதங்களை அரச அனுமதியின்றி பதுக்கி வைத்திருப்பதும், அவற்றை மையப்படுத்தி குழுக்களாக இயங்குவதும் முழுக்க முழுக்க பயங்கரவாதச் செயலாகவே கருதப்பட வேண்டும்.

சட்டமும், ஒழுங்கும் தெரியாத மனிதர்களின் கரங்களில் ஆயுதங்கள் குவிந்தமையினாலேயே இத்தேசத்தின் பல் வேறு முன்னேற்றங்களை எமது மக்கள் இழந்தார்கள்.

ஒரு கருத்தை நிலைநாட்ட ஆயுதங்கள் தேவையில்லை, கருத்துப் பரிமாற்றமும் நியாய உணர்வும் இருந்தால் எக்கருத்தையும் இந்நாட்டில் நிலை நாட்ட முடியுமென்பதை எமக்கு ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.

மூவின மக்களையும் சீரழிக்கும் இன்னுமொரு பயங்கரவாதம் இந்நாட்டில் தோன்றாமலிருக்க ஒரே வழி சட்ட விரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புலிப் பயங்கரவாதத்தை நாட்டில் ஒழித்ததை போன்று மது ஒழிப்பு திட்டமும் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாராய விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தை தற்போது ஜனாதிபதி கைவிட்டுள்ளார் எனும் தகவல் உண்மையில் வரவேற்கத்தக்கது.

அழ்ழாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைக்கு உண்மையாக விசுவாசிக்கும் ஒரு இறைவிசுவாசிக்கு இந்நடைமுறை நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நின்றே இவற்றை நோக்க வேண்டியுள்ளது.

சிகரட், கஞ்சா, புகையிலை, ஹெரோயின், அபின், இலேகியம், தூள் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களும் அரச படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. மதுப் பாவனைக்கு கடுமையான வரியும் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நேர்த்தியான திட்டங்களால் எமது நாடுதான் முன்னேறப் போகின்றது.

ஒரு முஸ்லிமைப் பொறுத்த மட்டில் அவன் அநியாயங்களுக்கு ஒருக்காலும் துணை போகமாட்டான். மனித குல வரலாற்று நெடுகிலும் ‘முன்னேற்றத்தை’ அடியோடு தகர்த்து வந்த ஆயுதக் கலாசாரமும், போதைப் பாவனையும் இன்று மெல்ல மெல்ல எமது தேசத்தில் ஒழிக்கப்படுவது அழ்ழாஹ் எமக்கு செய்துள்ள மிகப் பெரும் அருளாகும்.

எல்லாம் வல்ல அழ்ழாஹ் நியாயங்களை யார் நிலைநிறுத்தினாலும் அவர்களை அங்கீகரித்து அநியாயங்களை யார் கட்டவிழ்த்து விட்டாலும் அவற்றை எதிர்த்து நிற்கும் திடமான மனோ தைரியத்தை இந்நாட்டு முஸ்லிம்களுக்கு வழங்குவானாக!


<< BACK TO AL ATHAR JULY 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers