அடிக்கல் நட்டு விழாவும் அரங்கேறும் அனாச்சாரங்களும்
அல் அதர் மாத இதழ் >அகீதா
மௌலவி M.C.M.ஸஹ்றான் (மஸ்ஊதி)
குருடர்களுக்கு அவர்களின் வழிகேட்டிலிருந்து நல் வழி காட்டுபவராக (நபியே) நீர் இல்லை. நம் வசனங்களை நம்பி கட்டுப்பட்டு நடப்போரைத்தான் உம்மால் கேட்கச் செய்ய முடியும்.’ (அல்குர்ஆன் 30:53)
வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தெளிவான வழிகாட்டல்களையும், அறிவுபூர்வமான ஆலோசனைகளையும் அழகாகக் கூறியே அழ்ழாஹ் இம்மார்க்கத்தை அருளியிருக்கின்றான். (பார்க்க: அல்குர்ஆன் 5:3)
இந்த மார்க்கத்தின் தூய வடிவம் இன்று சில முஸ்லிம்களின் அறியாமை காரணமாக சிதைந்து வருகின்ற சூழலைக் காணக்கூடியதாக உள்ளது. அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் கூறப்படாத பல மௌட்டீகங்களை முஸ்லிம்கள் தினமும் அனுஷ்டிப்பதால் இஸ்லாமிய வளர்ச்சி குறுகிய வட்டத்தினுள் குன்றிப் போயிருக்கும் அபாயத்தை இன்று அனைவராலும் உணர முடிகின்றது.
அவ்வாறு அறியாமை காரணமாக அரங்கேறும் அநாச்சாரங்களில் ஒன்றுதான் ‘அடிக்கல் நட்டு விழா’ எனும் நூதன அனுஷ்டானமாகும். ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ் வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
ஒருவர் தனக்காக வீட்டையோ அல்லது கடையையோ கட்ட ஆரம்பிக்கும் போது அதற்காக ஒரு மௌலவி அழைக்கப்படுகின்றார். கட்டடத்தின் ஆரம்பக் கல்லை அவரே முதன் முதலாக அடித்தளமிடுவதற்காக ‘அல்பாத்திஹா’ கூறி எடுத்து வைக்கின்றார். இப்படி நடந்தால் மட்டுமே அக்கட்டடத்திற்குப் பாதுகாப்பும் அபிவிருத்தியும் கிடைக்குமென மார்க்க விவரமற்ற முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
மக்களின் மார்க்க அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சில ஆலிம்கள் இவ்வாறான ஏமாற்று மோசடிகளில் ஈடுபட்டு வருவதை இன்று காணமுடிகின்றது. நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்தில் அருமைத் தோழர்கள் தங்களுக்காக பல வீடுகளை அமைத்திருக்கின்றார்கள். ஆனால் அதன் ஆரம்ப நிகழ்வை ஒரு விழாவாக அவர்கள் கொண்டாடியதாக எந்த ஆதாரமும் இல்லை.
அது மாத்திரமில்லாமல் புதிய கட்டடங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சென்று ‘அல்பாத்திஹா’ ஓதி கற்களை எடுத்துக் கொடுத்ததாக ஒரு பலவீனமான செய்தி கூடக்கிடையாது. கட்டடம் கட்டும் நிகழ்வை பெரும் விழாவாக மாற்றும் சகோதரர்கள் இது பற்றி மார்க்கத்தின் நிலைப்பாட்டை சிந்திக்கத் தவறுகின்றார்கள்.
ஒருவர் வீடு கட்டுவதும் புதிய கடைகளை திறப்பதும் அன்றாட வாழ்வில் மிகச் சாதாரண விடயம். இதனை ஆரம்பிக்கும் ஒருவர் ‘பிஸ்மிழ்ழாஹ்’ என்ற நாமத்தைக் கூறி ஆரம்பிக்கலாம். அதை விடுத்து அஸ்திவாரத்தை கட்டும் போதே காசு, தங்கம், வெள்ளி, தானியப்பொதிகள், வெற்றிலை, இனிப்புப் பதார்த்தங்களை வெள்ளைத் துணியால் சுற்றி கல்லுக்கு அடியில் வைப்பது தெளிவான முட்டாள் தனமும், அழ்ழாஹ்வோ அவனது தூதரோ கூறாத பித்அத் எனும் வழிகேடுமாகும்.
புனித கஃபா புணர் நிர்மானம் செய்யப்பட்ட போதோ அல்லது மஸ்ஜிதுல் குபா, மஸ்ஜிதுந் நபவி ஆகியன ஸ்தாபிக்கப்பட்ட போதோ இந்த ஜாஹிலிய்யத் துக்களை இறைத்தூதர்கள் மேற்கொண்டதாக சிறு வரலாற்றுக் குறிப்புக் கூடக் கிடையாது. ஏழு வருடங்கள், எட்டு வருடங்கள் மத்ரஸாக்களில் மார்க்கத்தைக் கற்ற ஆலிம்களே இவ்வநாச்சாரங்களை மேற்கொள்வது எமது சமூகத்திற்கே ஆபத்தானதும் அசிங்கமானதுமாகும்.
மாற்றுமத மக்களின் செயற்பாடுகளை அச்சொட்டாகப் பிரதிபலிக்கும் செயற்பாடுகளாகவே இதனை நாம் நோக்குகின்றோம். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவுத்-4033)
அதேவேளை இஸ்லாம் வன்மையாகத் தடைசெய்த ஷிர்க் எனும் இணைகற்பிக்கும் செயலும் அடிக்கல் நட்டு நிகழ்வில் அரங்கேறி வருகின்றது. காணி ஒன்றில் வீடோ அல்லது கடையோ கட்டுவதற்கு முன் செப்புத்தகடுகளில் ஆணிகளால் ஏதோ சில அரபு வாசகங்களை எழுதி அவற்றை மந்திரித்து காணியின் நான்கு திக்குகளிலும் புதைக்கும் காட்சியையும் நாம் சாதாரணமாக விட்டு விட முடியாது.
ஜின்களை வைத்து ஒப்ரேஷன் செய்வதாகவும் பேய்களை வசப்படுத்தி யிருப்பதாகவும் பிதற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளின் பணம் கறக்கும் திட்டமே காணிகளில் போத்தல், தகடு புதைக்கும் கலாச்சாரம். அழ்ழாஹ்வுக்கோ அவனது தூதருக்கோ, தெரியாத இவைகள் எப்படி மார்க்கமாக முடியும்? அழ்ழாஹ் அனுமதிக்காத இச் செயற்பாடுகளை புரிந்தால் அழ்ழாஹ்விடம் மறுமையில் நாம் என்ன பதில்களை முன்வைக்க முடியும்? அழ்ழாஹ் தனது மார்க்கத்தை விளக்க ஒரு தூதரை எமக்கு அனுப்பி அவரை மாத்திரமே பின்பற்றுமாறு (அல்குர்ஆன் 7:3) எமக்குப் பணித்திருக்க நாமோ மூதாதையர்கள், மௌலவி மார்கள் என இஸ்லாத்தையும், சுய புத்தியையும் இலவசமாகவே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் நாம் மரணித்தால் எமக்கு எப்படி சுவனம் கிடைக்கும்? இது அழ்ழாஹ்வின் மார்க்கம். அதில் எமது மனோ இச்சைகளுக்கு துளியளவும் இடமில்லை. இறை செய்திகளை மாத்திரம் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்கள் இன்னும் அந்நிய மத வழிபாட்டு சிந்தனைகளிலிருந்து விடுபடாமல் இருப்பது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும் தோல்வியாகும். மார்க்கத்தைக் கற்ற உலமாக்கள் இவ்வாறான, சுய கௌரவங்களை இழக்கச் செய்யும் மௌட்டீகங்களுக்கு வழி சமைத்துக் கொடுக்காது தூய மார்க்கத்தை கூட்டல், குறைத்தல், மழுப்பல் இன்றி அப்படியே ஒப்புவிக்க முன்வர வேண்டும். அழ்ழாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக!

Comments are closed.