சல்மான் ருஷ்தியின் சாத்தானிய வசனங்கள் தொடர்-02
அல் அதர் மாத இதழ் > அல்குர்ஆன்
மௌலவி M.F.M. சிபான் (பலாஹி)
‘நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.’ (அல்குர்ஆன் 49:06)
சென்ற இதழின் தொடர்ச்சி…
சென்ற இதழிலே குறிப்பிடப்பட்டவாறு இப்னு இஸ்ஹாகினூடாக வரலாற்று நூலிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற சம்பவமானது கற்பனைகளும் கட்டுக்கதைகளும் ஆகும். (இதனை பின்னர் மிக விரிவாக நோக்குவோம்.)
எனினும், இப்பொய்யான செய்தி மக்கமா நகரின் பல பகுதிகளையும் கடந்து அபிஸீனியா வரை சென்றது. அங்கு வசித்த முஸ்லிம்களும் இதனது உண்மை நிலை தெரியாது எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்கா திரும்பியதன் பிற்பாடுதான் இது தவறான செய்தி என்பதை புரிந்துகொண்டனர். இச்செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டாலும் வரலாற்று நூற்கள் இலகுவில் நிறுத்திக்கொள்வதாக தெரியவில்லை. எனினும், இவ்வதந்தி முஸ்லிம்களிடம் பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் கூட இஸ்லாமிய தூது (ரிஸாலத்) கடல் கடந்து மேற்கு சமூகத்தை அதிவேகமாக ஊடறுத்துச்சென்றது. இதனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் நேருக்கு நேர் விவாதிக்கத் தொடங்கின.
இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தை தகர்ப்பதற்காக கிறிஸ்தவர்கள் தீட்டிய சதிவலைகளில் மிகப்பெரிய சதிவலை கற்பனைக் கதைகளுக்கு உரமூட் டுவதும், அவற்றை அலங்கரித்துக் காட்டுவதுமாகும்.
மேற்குறித்த கட்டுக்கதைகளும் மேற்கு சமூகத்தின் பார்வையில் படுகிறது. உடனே உரிய தெளிவின்றி மொழி ரீதியான பாண்டித்தியமும் இல்லாமல் இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களை ஆய்வு செய்யத் துவங்குகின்றனர்.
அவர்களின் குறுகிய ஆய்வின் தேடலில் சில இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களும் அகப்பட்டன. அவை மேற்கத்தியர்களுக்கு உரமாக அமைந்தன. இவர்கள் தாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவற்றின் உண்மை பொய்களை ஆய்வுக்குட்படுத்தாமல் பதிவு செய்து வைத்தனர்.
இஸ்லாமிய வரலாற்று நூற்கள் அனைத்தும் திருமறைக் குர்ஆனைப் போன்று இரு அட்டை களுக்குள்ளாக பாதுகாக்கப்படவில்லை. ஏன் வஹியின் இரண்டாவது அங்கமான நபிகளாரின் பொன்மொழிகள் கூட புஹாரி, முஸ்லிம் போன்ற அமைப்பில் தொகுக்கப் படவில்லை. புஹாரியும் முஸ்லிமும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களைப் போன்றதல்ல. அதிலும் குறிப்பாக புஹாரி என்ற கிரந்தத்துக்கு வேறு எந்த ஹதீஸ் கிரந்தமும் நிகராகாது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனெனில், இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தனக்கு மேலுள்ள அறிவிப்பாளர் இவ்வாறான வரிசைகளோடு ஆறு இலட்சம் ஹதீஸ்களை மனனமிட்டு அவற்றைத் தொகுத்து வைத்திருந்தார்கள். எனினும் அன்னாரவர்கள் அத்தனை ஹதீஸ்களையும் சமூகத்திற்கு ஒப்படைக்கவில்லை.
மாறாக அவற்றில் போலியான ஹதீஸ்கள் எவை, அறிவிப்பாளர் வரிசைத் தொடர் அறவே இல்லாத ஹதீஸ்கள் எவை, பலவீனமான ஹதீஸ்கள் எவை, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எவை என்பதையெல்லாம் தரம் பிரித்து வடித்தெடுக்கின்ற போது மொத்தமாக நான்காயிரம் ஹதீஸ்கள்தான் எஞ்சுகின்றன. இமாம் புஹாரியின் இவ் அளப்பெரிய முயற்சிக்கு அழ்ழாஹ் அவர்களுக்கு மட்டில்லா மஃபிரத்துக்களைக் கொடுக்க வேண்டும்.
இதனால்தான் இன்றளவும் திருமறைக் குர்ஆனுக்கு அடுத்து புஹாரி என்ற ஹதீஸ் கிரந்தம் முஸ்லிம்களிடத்தில் மதிக்கப் படுகின்றது. எனினும், இமாம் புஹாரி, முஸ்லிமைப் போன்று அனைத்து ஹதீஸ்துறை அறிஞர்களும் சிந்தித்திருந்தால் இன்றைக்கு போலியான, பலவீனமான ஹதீஸ்கள் சமூகத்தில் ஊடுருவியிருக்காது. ஆனாலும் மற்றைய ஹதீஸ்துறை அறிஞர்களின் முயற்சிகளும் சிரமங்களும் சாதாரணமானவை அல்ல. தங்களது சக்திக்கு உட்பட்ட வகையில் அனைத்து வழிகளிலும் ஹதீஸ்களைத் திரட்டுவதற்கு முயற்சித்துள்ளார்கள்.
ஆனாலும் கூட இத்தகைய போக்கும் சகிப்புத்தன்மையும், பொறுமையும் வேறு சிலரிடத்தில் அறவே இருந்தது கிடையாது. இவர்கள் தங்களது அறிவாற்றலையும், ஞாபக ஆற்றலையும் பறைசாற்றிக் கொள்ள அல்லது வரலாற்றில் தாங்களும் இடம்பிடிக்க வேண்டும். (உள்ளங்களை அறிந்தவன் அழ்ழாஹ் மட்டுமே) என்ற நோக்கில் தங்களுக்கு எவ்வாறு இந்த செய்தி வந்தடைகின்றன? அறிவிப்பாளர் வரிசையில் உள்ள அனைவரும் நம்பத்தகுந்தவர்கள் என்று பறை சாட்டப்பெற்றவர்களா? அவர்கள் ஒரே காலப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனரா? என்பது போன்ற ஆதாரபூர்வமான செய்திகளைத் தரம்பிரிக்கின்ற விதிகளை கவனத்திற் கொள்ளாமல் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர்தான் இப்னு இஸ்ஹாக் என்பவர். (மேற்கூறப்பட்ட பொய்யான சம்பவம் இவரது கிரந்தத்தில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.) இவர் இஸ்லாத்திற்கு செய்த சேவை அளப்பெரியதும் போற்றப்படவேண்டியதுமாகும். இவர் ஹிஜ்ரி 650 காலப்பகுதியில் வாழ்ந்து மரணித்தவர். இவர்தான் இஸ்லாமிய வறலாற்றில் முதன்முதலாக நபிகளாரின் வாழ்கை வரலாற்றை தொகுத்துத் தந்தவர். நபிகளார் மரணித்து ஒரு நூற்றாண்டுக்கு பின்னர்தான் அண்ணலாரின் வாழ்க்கை வரலாறுகளும், நபிமொழிகளும் ஒரே கிரந்தத்திலே தொகுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஒரு நூற்றாண்டுக் குள்ளாக ஹவாரிஜ்கள், ஷீஆக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர்கள் தோற்றம் பெற்றதினால் பல தவறான செய்திகளும் கட்டுக்கதைகளும் ஊடுருவின. எனவே, இத்தகைய அபாயகரமான நிலையில் இருந்து விடுபடவேண்டுமெனில் முறையாகத் தொகுக்கப்பட்ட ஹதீஸ் கலை நூற்களும், வரலாற்றுக் குறிப்புகளும் அவசியமாகும்.
இவ்வாறு தொகுக்கப்பட்டவைகளில் ஹதீஸ் கலை நூற்கள், வரலாற்று நூற்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்த அடிப்படையில் நபிகளாரின் பொன்மொழிகளைத் தொகுத்தவர்களுக்கு (பெரும்பாலும்) அவற்றின் தாக்கம் இறுதிநாள் வரை நீடிக்கப்போகிறது என்ற தூர நோக்கு சிந்தனை இருந்ததால் மிகத் துள்ளியமாக ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்து பதிவு செய்து வைத்தனர்.
அதே நேரம் ‘ஸீராவை’ (வரலாறுகளை) தொகுக்க முனைந்தவர்களில் பலர் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை கொண்டிருக்கவில்லை. மாறாக முஹம்மது நபிகளாரை ஒரு மாமனிதராகவே பார்த்தனர். இவ்வாறு பார்த்தவர்களில் முன்னனியில் நின்றவர்தான் இப்னு இஸ்ஹாக் என்பவர். இவர் தனது பகுத்தறிவை வைத்து சிந்தனை செய்ததை விட தனது அன்பர் முகம்மது நபியில் உள்ள அபரிமிதமான பிரியத்தினால் தனது செவிப்புலன் கேட்டதையெல்லாம் பதிவு செய்யும் மனப்பாங்கே அன்னாரிடத்தில் மேலோங்கிக் காணப்பட்டது. இவரது விருப்பமும் அவாவும் மதிக்கப்படவேண்டியதுதான் ஆனாலும் அவற்றை எவ்வாறு அடைய முனைய வேண்டுமென்ற குர்ஆன், ஸுன்னாவின் விதிகளை விளங்கத் தவறிவிட்டார். அதனால்தான் இவரது இப்போக்கை அவரது சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களே விமர்சித்து இருக்கின்றனர். அவற்றை சுருக்கமாக கீழே தருகின்றேன்.
இமாம் மாலிக் (ரஹ்), ‘இப்னு இஸ்ஹாக் என்பவர் (பொய் சொல்லும் விடயத்தில்) தஜ்ஜால்களில் உள்ள ஒரு தஜ்ஜால் ஆவார்’ என்றும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் ‘ஒரு மனிதர் (இப்னு இஸ்ஹாக்) ஹதீதை அதிகம் விரும்புவார். எனவே, மனிதர்களின் கிதாபுகளை எடுத்து அவரது நூற்களில் (அதன் உண்மையறியாது) பதிவு செய்து விடுவார். (24:421)
இப்னு இஸ்ஹாக் பற்றிய இவ்விமர்சனத்தை நீட்டிக் கொள்ள விரும்பவில்லை. இப்னு இஸ்ஹாக்கிற்கு விமர்சனங்கள் இருக்கின்ற அதே நேரம் அவரைப் பற்றிய நல்லபிப்பிராயங்களும் இமாம்களுக்கு மத்தியில் நிலவுகின்றன. ஏன், இப்னு இஸ்ஹாக்கை மிகக் கடுமையாக விமர்சித்த மாலிக் இமாம் கூட அவரைப்பற்றி நல் அபிப்பராயம் கொண்டிருப்பதாக இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேபோன்று இமாம் அஹ்மதினது கருத்தை பகுப்பாய்வு செய்த ஹாபிழ் தஹபி (ரஹ்) அவர்கள் ‘அது ஆகுமான? செயலே எனக் குறிப்பிடுகின்றார்கள்.
இவற்றை மையப்படுத்திப் பார்க்கின்ற போது எமக்கு ஒரு விடயம் புலனாகிறது. இப்னு இஸ்ஹாக் என்பவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அதே நேரம் அவர் பல ஹதீஸ்களையும் அறிவிப்புச் செய்திருப்பவர். இவரைப்பற்றி உள்ள விமர்சனத்தை எடை போட்டுப் பார்க்கின்ற போது அது பெரும்பாலும் வரலாற்றோடு சம்மந்தப்பட்டதாகவே இருக்கின்றது. இதனை நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இமாம் இப்னு ஹிப்பான் அவர்களே தனது (7ஃ382) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். (விரிவை அஞ்சி மேலதிக விளக்கத்தை தவிர்க்கின்றோம்).
அதே நேரம் குறித்த அந்த சம்பவ வரலாறு நபிகளாரைத் தொட்டும் நேரடியாக வருகின்றது. எனினும், நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இப்னு இஸ்ஹாக்கை ஹதீஸ் துறையில் நடுநிலைப் போக்கை கையாளுகின்ற அறிஞர்களில் சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். மற்றும் சிலர் நல்லபிப்பிராயமும் கொள்கின்றனர். இவ்வனைத்தையும் கருத்திற்கொண்டு ஹதீஸ் துறையில் தனது ஆயுளையே அர்ப்பணித்த 20ம் நூற்றாண்டின் ஹதீஸ் கலை வல்லுனராகக் கருதப்படும் இமாம் அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் இப்னு இஸ்ஹாக்கிற்கு பின்வரும் முத்திரையை கொடுக்கின்றார்கள்………….. …………
முஹம்மது இப்னு இஸ்ஹாக் என்றழைக்கப்படுகின்ற வரலாற்றாசிரியர் அவருக்கு மேற்கூறப்பட்ட அறிவிப்பாளர்களிடமிருந்து …. (ஊடாக) போன்ற சந்தேகத்திற்கிடமான வாசகத்தைப் போட்டு அறிவிக்காமல் (எனக்கு செய்தி அறிவித்தார்) என்பது போன்ற சந்தேகத்திற்கு இடமில்லாத ஊர்ஜிதமான வார்த்தைகளைப் போட்டு அறிவிக்கின்ற போது அவர் சாதாரணமான ஊர்ஜிதமானவராக கருதப்படுவார். இதுதான் இப்னு இஸ்ஹாக்கின் நிலை பற்றிய இறுதி முடிவாகும்.
இவ்விதியை ஒப்பிட்டு மேற்குறித்த சம்பவத்தை ஆய்வுக்குபடுத்துகின்ற போது இப்னு இஸ்ஹாக் என்பவர் இச்செய்தியை ‘யஸீத் பின் ஸியாத் அல்மதனி’ என்பவர் வழியாக அறிவிக்கின்றார். அவர் நம்பகமானவர் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும், அவர் வழியாக அறிவிப்புச் செய்யும் இப்னு இஸ்ஹாக் என்பவர்) செய்தி அறிவித்தார்) போன்ற உறுதிப்பாடான வார்த்தைகளை பிரயோகிக்காமல் (ஊடாக) என்ற சந்தேகத்திற்கு இடமான வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.
எனவே, இதன் பிரகாரம் குறித்த சம்பவம் ஆதாரபூர்மான சம்பவம் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இதனால்தான் இப்னு இஸ்ஹாக் எழுதியதை முழுவதுமாக வாசித்த இப்னு ஹிஷாம் என்ற அறிஞர் அவற்றில் உள்ள பொய்யான தகவல்களை நீக்கி ஒரு ஸீரத்து நபியை எழுதினார்கள். ஆனாலும், இப்னு இஸ்ஹாக் எழுதிய இத்தகவலை அவரது காலத்தில் வாழ்ந்த வாஹிதி (757-822) என்பவர் தனது நூற்களில் பதிவு செய்தார்.
அதே போன்று இமாம் இப்னு ஜரீர் அத்தபரி (ரஹ்) அவர்களும் இச்சம்பவத்தை என்ற தனது பிரதானமான தப்ஸீர் நூலிலே எடுத்தெழுதியுள்ளார்கள்.
இவர்களை அப்படியே பிரதிபண்ணித்தான் மேற்கத்தேயர்கள் நபிகளாருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இச்சம்பவத்தை திட்டமிட்டு பரப்பிவிட்டனர். இச்சம்பவத்தினை திருத்தி எழுதிய இப்னு ஹிஷாமையோ ஏனைய பிற்பட்ட வரலாற் றாசிரியர்களையோ இவர்கள் கணக்கில் எடுக்கவே இல்லை.
எனவே, மேற்கத்தயர்கள் துப்பிவிட்ட எச்சிலை பூமியில் விழ விடாமல் அப்படியே உமிழ்ந்து கொண்ட சல்மான் ருஷ்திக்கு இது போன்ற சம்பவங்கள்தான் சமூகத்தில் பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. எனவே, மேற்கூறப்பட்ட கருத்துக்களி னூடாக படிப்பினை பெற்ற கூட்டமாக அழ்ழாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிய வேண்டும்.
இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

Comments are closed.