நபிவழியில் நம் தொழுகை தொடர்-1 (நிய்யத்தை வாயால் மொழியலாமா?)
அல் அதர் மாத இதழ் >நபிவழித் தொழுகை
இப்னு சமீமா abooaaysha@gmail.com
‘(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும்இ தீமையை விட்டும் தடுக்கும். அழ்ழாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அழ்ழாஹ் அறிவான்.’ (அல்குர்ஆன் 29:45)
இன்று வாழும் முஸ்லிம்களிடையே தொழுகை ஒரு சடங்கு சம்பிரதாய வணக்கமாக மாறி வருவதை அண்மைக் காலமாக காணக்கூடியதாக இருக்கின்றது. தொழுகையில் இருக்கக்கூடிய உள்ளச்சம் பயம் ஆகிய அனைத்தும் எடுபட்டு வெறுமனே அனைவரும் செய்வது போன்று நாமும் செய்து விடுவோம் என்ற எண்ணப் பாடே இந்த சமூகத்திடத்தில் காணப்படுவதுடன் நபியவர்கள் தொழுகையில் முக்கியத்துவப்படுத்திய ஏராளமான வழிமுறைகளுக்கும் மாற்றமான முறையில் அதிகமான முஸ்லிம்கள் தொழுவதைப் பார்க்கும் போது மிக வேதனையாக உள்ளது.
அத்தோடு ஆதார பூர்வமான ஹதீதுகளில் அழ்ழாஹ்வின் தூதரின் தொழுகை முறை மிக விபரமாகக் கூறப்பட்டிருந்தும் அவற்றை அறியாமல் ஷாபி மத்ஹபின் தொழுகை விளக்க நூற்களிலிருந்து தொழுகை முறையை எமது உலமாக்கள் பள்ளிகளில் மக்களுக்குப் போதிப்பதால் எமது சகோதர சகோதரிகள் நபிவழித் தொழுகையை அறியாமல் தொழுகைகளைப் பாழ்படுத்தி வரும் அவலத்தைக் கருத்தில் கொண்டே இவ்விதழில் நாம் நபிவழியில் நம் தொழுகை எனும் தொடரை ஆரம்பிக்கின்றோம்.
தொழுகையைப் பொறுத்தவரைக்கும் அதை நிறைவேற்றுகின்ற விதத்தில் முஸ்லிம்கள் மூன்று வகையாக உள்ளனர்.
1.நபியவர்கள் எவ்வாறு தொழுது காட்டினார்களோ அதே வழிமுறையைப் பின்பற்றித் தொழுவது.
2.நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக மத்ஹபுச் சட்டங்களின் அடிப்படையில் தொழுகையை கடைப்பிடிப்பது.
3.தொழுகையை வேண்டுமென்றோ அல்லது பொடுபோக்காகவோ விட்டு விடுவது.
இந்த மூன்று சாரார்களில் முதல் சாரார் மாத்திரமேவெற்றி பெறுவர் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஏனெனில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறு தொழுவதையே நபித் தோழர்களும் விரும்பி நபிவழியிலேயே தொழுதார்கள். அதனால் தான் ஈருலகிலும் அவர்களால் வெற்றிபெற முடிந்தது.
இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
‘எங்களது இந்த (பஸ்ரா) பள்ளிவாசலுக்கு மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி) அவர்கள் வந்து உங்களுக்கு நான் தொழுகை நடத்தப் போகிறேன். (கடமையான) தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன் என்று கூறி(விட்டு தொழு காட்டி)னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூகிலாபா அப்துழ்ழாஹ் பின் ஸைத் (ரஹ்) ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 677)
மேற்குறித்த செய்தியில் நபிவழியில் மாத்திரம் தொழ வேண்டுமென்பதில் சுவனவாதிகளான நபித்தோழர்கள் காட்டிய ஆர்வத்தை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் பிந்திய இரண்டு சாராருமே மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள். தொழாதவர்கள் எவ்வாறு நரகவாதிகளோ அதேபோன்று நபிவழியில் தொழாவிட்டாலும் தங்குமிடம் நரகமென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகையில் ‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.’ (அல்குர்ஆன் 107:45) என அழ்ழாஹ் எச்சரிக்கின்றான். ஒருவர் எவ்வளவு தொழுகின்றார் என்பதை விட எப்படித் தொழுகின்றார் என்பதையே அழ்ழாஹ் கவனிக்கின்றான்.
நபிவழிக்கு முரணான அடிப்படையில் தொழுகையைக் கடைப்பிடிக்கும் சகோதர சகோதரிகளை இந்த சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது சதவீதமாகக் காணமுடியும். இது இந்த சமூகத்தில் இனங்காணப்படாத பிரச்சனையாக உள்ளது. மார்க்க அறிஞர்களும் இது விடயத்தில் அலட்டிக் கொள்வதில்லை.
அதே போன்று இஸ்லாம் சமூகம் பாதுகாப்பு பற்றிப் பேசும் இயக்கங்களும் இது விடயத்தில் கரிசணை செலுத்துவதில்லை. அறியாமை காரணமாக இப்படியானவர்கள் தொழுகையில் விடுகின்ற தவறுகளை ஒவ்வொன்றாக அலசுவோம்.
தொழுகைக்காக ஸப்புகளில் வந்து நின்று கொண்டு ‘உஸல்லி பர்ழள் லுஹரி…’ என்று நிய்யத்தை வாயால் மொழியக் கூடியவர்களை பள்ளிகளில் காணுகின்றோம். அல்குர்ஆனிலும் நபிவழியிலும் எவ்வித ஆதாரமுமற்ற இச்செயலை இச்சகோதரர்கள் மிகச் சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். இது தடுக்கப்பட்ட செயல் நபிகளார் (ஸல்) அவர்கள் செய்யாதது என்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய உலமாக்களே அதைச் செய்யும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.
உண்மையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிய்யத்தினை வாயால் மொழிந்தார்கள் என்பதற்கு ஓரு ஸஹீஹான ஹதீத் கூட இல்லை. அழ்ழாஹுத்தஆலா தொழுகையைக் கடமையாக்கிய காலத்திலிருந்து மரணிக்கும் வரை தொழுத எத்தொழுகையிலும் ‘உஸல்லி பர்ழ…’என்ற அந்த வாசகத்தை அழ்ழாஹ்வின் தூதர் மொழிந்ததுமில்லை. மொழியுமாறு முஸ்லிம்களுக்குப் பணித்ததுமில்லை.
இஸ்லாத்தில் முக்கியமான அம்சமான இந்தத் தொழுகை நிய்யத்தை வாயால் மொழிவதிலிருந்தே கேலிக்கூத்தாக்கப்படுகின்றது. அறிவுரீதியாக நாம் நன்கு சிந்தித்தாலும் இந்த அம்சம் அறிவுக்கு ஒவ்வாததும் நகைப்பிற்குரியதும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இமாமிற்கு பின்னால் நின்று கொண்டு உஸல்லீ உஸல்லீ என்று இமாம் ருகூவிற்குச் செல்லும் வரை சிலர்கள் கூறிக்கொண்டே நிற்பார்கள். கஃபாவை முன்னோக்கி நின்று கொண்டும்இ நான்கு ரக்அத் தொழுவதாக கூறிக் கொண்டும் அத்தொழுகை கடமை என தெரிந்து கொண்டே அதனை வாயால் கடமை என பிரஸ்தாபித்துக் கொண்டும் நிற்பதானது வெளியூருக்கு செல்லவிருக்கும் ஒருவர் பேரூந்துத் தரிப்பிடத்தில் நின்று கொண்டு பேரூந்தில் ஏறுவதையும் தான் செல்லும் ஊரையும் அவ்விடத்தில் நின்று கொண்டு தனியே உளறுவதைப் போன்றல்லவா இருக்கின்றது?
ஆகவே நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இஸ்லாம் ஒன்றைக் காட்டித்தந்திருக்க அதற்கு மாற்றமாக நாம் ஒன்றை உருவாக்கினால் நிச்சயம் அது கேலிக்கூத்தாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. தொழுகைக்காக வுழு செய்து கொண்டு கிப்லாவை முன்னோக்கிக் கொண்டு அமைதியாக நின்றால் தொழுவதற்கான எண்ணம் உள்ளத்தில் இயல்பாகவே தோன்றி விடும் இதைத் தான் நிய்யத் என்று அரபு மொழியில் சொல்லப்படும். நிய்யத் என்றால் மொழிதல் என்பது அர்த்தமல்ல.
மாறாக நினைத்தல் என்பதுவே அர்த்தமாகும். அழ்ழாஹ்வின் தூதரால் மொழியப்படாத இந்த நிய்யத்தை நாம் மொழிந்தால் நரகிற்கே செல்ல வேண்டி வருமென்பதை நாம் அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697) எமது தொழுகைகளை எமது ஒரே வழிகாட்டி நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் வழியில் அமைத்துக் கொள்ள நாம் முயற்சிப்போமாக!

Comments are closed.