Skip to content

தீர்க்கமான சட்டங்களும் திரிவுபடுத்தும் மார்க்க அறிஞர்களும்

June 17, 2009

அல் அதர் மாத இதழ் > விமர்சன விளக்கம்

விமர்சனம்:

உங்களது கடந்த ஆறாவது இதழில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்கக் கூடாது என எழுதியிருந்தீர்கள். ஆனால் காத்தான்குடியில் தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு வெளிநாட்டில் படித்து வந்த ஒரு மௌலவி தொழுகை நடாத்தினார். அத்தோடு இன்னுமொரு வெளிநாட்டுப் பட்டதாரி மௌலவி ‘நபிகளாரின் காலத்தில் ஸஹாபாக்கள் தொழுதிருக் கின்றார்கள்’ எனக் கூறி தற்கொலையாளிக்கு தொழவைக்க முடியுமென காத்தான்குடியிலுள்ள வானொலி ஒன்றில் பத்வாச் சொல்கின்றார். இதில் எது சரி? இதனால் என்னைப் போன்ற சாதாரண பாமர மக்கள் குழம்பிப் போகின்றார்கள். இதனை தெளிவு படுத்த முடியுமா?

விளக்கம்:

தற்கொலையாளிக்கு ஜனாஸாத் தொழுகை தொழ வைக்க முடியாது என்று நாம் கூறியது எமது சொந்தக் கற்பனையில் அல்ல. இதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

‘ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அவர் இறந்து விட்டார்’ என்று சொன்னார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ‘அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?’  என்று கேட்டார்கள். ‘நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்’ என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் இறக்கவில்லை’ என்று சொன்னார்கள்.

பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அவர் இறந்து விட்டார்’ என்று தெரிவித்தார். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ‘அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள  ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்.’  என்றார். ‘நீ  பார்த்தாயா?’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க அவர் ஆம் என்றார். ‘அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்’ என்று சொன்னார்கள்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரழி)  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1779 அபூதாவூத் 3185)

மேற்குறித்த ஹதீதிலிருந்து தற்கொலை செய்தவருக்கு அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடாத்தவில்லைஎன்பது தெளிவாகின்றது. அத்தோடு ‘நான் தொழ வைக்கவும் மாட்டேன்’ என்று வேறு கூறுகின்றார்கள். இவற்றையெல்லாம் மையமாக வைத்தே தற்கொலை செய்து கொள்பவருக்கு ஜனாஸாத் தொழுகை தொழவைக்கக் கூடாது என கடந்த இதழில் நாம் கூறியிருந்தோம்.

அது நமது சொந்தக் கருத்தல்ல. ஆனால் மார்க்கத்தை மக்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வளைக்கும் சில உலமாக்கள் தெளிவான இந்த சட்டத்திற்கு மாற்றமாக நடந்து கொள்கின்றார்கள். ‘மார்க்க சட்டங்களை விளக்குகின்றோம்’ எனும் பெயரில் நபிகளார் மீதும் அவர்களது கண்னியமான தோழர்கள் மீதும் வீண் அபாண்டங்களை கூறுகின்றார்கள். ‘நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு ஸஹாபாக்கள் தொழுகை நடாத்தியதாகவோ அல்லது நபிகளார்தான் தொழுகை நடத்தாமல் மற்றவர்களை தொழுமாறு பணித்ததாகவோ ஹதீத் கிரந்தங்களில் எவ்வித ஆதாரங்களையும் எம்மால் காண முடியவில்லை.

ஒரு மார்க்க அறிஞர் அவர் வெளிநாட்டில் படித்து முடித்தவர் என்பதால் அவர் சொல்லும் பத்வாக்கள் அனைத்தும் சரி என்று ஆகிவிடாது. மாறாக அவர் எங்கு படித்திருந்தாலும் பரவாயில்லை சொல்லும் சட்டம் அல்குர்ஆனிலிருந்தும் ஆதார பூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் மாத்திரம் முன்வைக்கப் பட்டாலே அதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும்.

ஒருவரின் பட்டம் பதவிகள் சத்தியத்தை தீர்மானிப்பவையல்ல. வெளிநாடுகளில் படித்து முடித்த எத்தனையோ மார்க்க அறிஞர்கள் ‘தெள்ளத் தெளிவாக ஹராமாக்கப்பட்ட வரதட்சனையை வாங்க வில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளார் காலத்தில் தற்கொலையாளிக்கு நபித்தோழர்கள் தொழுகை நடாத்தினார்கள் என்பது அப்பட்டமான பொய்யாகும். கொஞ்சம் கூட அழ்ழாஹ்வின் மீது அச்சமில்லாமல் தான் அந்த மௌலவி இப்படியொரு பொய்யை கூறியிருக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் வானொலிக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில் பயான் எனும் பெயரில் யார் எதைச் சொன்னாலும் அவற்றை பரிசீலிக்காமல் ஒலிபரப்புவதும் ஸஹீஹான ஹதீத்களுக்கு முரணான  பத்வாக்களை வெளியிடுவதும் இவ்வானொலிக்கு கைவந்த கலையாகும்.

‘தஃவா செய்கின்றோம்’ எனும் பெயரில் மக்களிடம் தவறான கருத்துக்களை ஒலிபரப்பி வரும் இவ்வானொலி தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். (தேவை ஏற்பட்டால் அவற்றை விபரமாக இன்ஷா அழ்ழாஹ் தரமுடியும்) இவ்வாறான தவறான பத்வாக்களைச் சொல்லும் ஆலிம்கள் இது தொடர்பில் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ்களை ஒரு முறை பரிசீலித்து விட்டு தீர்ப்புக்களைச் சொன்னால் முஸ்லிம் சமூகத்திற்கு அது ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே விமர்சனத்தை முன்வைத்த அந்த சகோதரர்களுக்கு நாம் கூறும் ஆலோசனை யாதெனில் எம்மிடம் நீங்கள் கேள்வி கேட்பது போல் அந்த அறிஞர்களிடமும் தாராளமாக கேள்வி கேளுங்கள்!

சட்டங்களை அவர்கள் வெளியிடும் போது ஆதாரங்களை அவற்றுக்கு சமர்ப்பிக்கின்றார்களா? என கூர்ந்து கவனியுங்கள். அவ்வாறு கவனித்து நீங்கள் மார்க்கத்தை கற்க ஆரம்பித்தால் பொய்யர்களின் முகங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடும். யார் மக்களை தவறாக வழிநடாத்துகின்றார்கள் என்பதும் உங்களுக்கு புலனாகிவிடும்.

தற்கொலையாளிக்கு பெரிதுபடுத்தாமல் ஜனாஸாத் தொழுகை நடாத்த முடியும் என பகிரங்கமாக பத்வா வெளியிட்ட அந்த மொளலவி முடிந்தால் இது தொடர்பில் அவரின் ஆதாரங்களை ஹதீஸ் இலக்கங்களுடன் வெளியிடட்டும். குறிப்பாக நபித்தோழர்கள் தற்கொலையாளிக்கு தொழுகை நடாத்திய போது நபிகளார் அதைக் கண்டிக்கவில்லை எனறும் ஹதீஸை பகிரங்கமாக கூறட்டும்.

<< AL ATHAR JUN 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers