Skip to content

சோதனையில் சாதனை-4

June 17, 2009

அல் அதர் மாத இதழ் > தஃவாகளம்

அபூ அஹ்மத் அல் அதரி

‘காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும்இ உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.’ (அல்குர்ஆன் 103:1-3)

சென்ற இதழின் தொடர்ச்சி…

கடந்த இதழில் எமது தௌஹீத் சகோதரர்கள்(?) எமக்கெதிராக தொடர்ந்து வைத்து வந்த விமர்சனங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்த்தோம். அதன் தொடரில் இவ்விதழில் சர்வதேசப் பிறை விவகாரத்தில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து சற்று விரிவாக நோக்குவோம்.

எமது சகோதரர்கள் ஒவ்வொரு ரமழானின் இறுதிப்பத்தையும்  எமக்கெதிராகத்தான் பிரகடனம் செய்வார்கள். உள்ளூர் ஊடகமொன்று அன்று தொட்டு இன்று வரை எமக்கெதிராக பிரச்சாரம் செய்வதில் பிரதான பங்காற்றி வருகின்றது. தங்களின் மனோ இச்சைகளுக்கேற்றவாறு ஹதீஸ்களை பலவீனப் படுத்துவது இச்சகோதரர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.

தாருல் அதரிற்கெதிராக இச்சகோதரர்கள் மேற்கொண்ட மிகப்பெரும் அநியாயமும் அக்கிரமமும்தான் சர்வதேசப்பிறை விவகாரத்தை அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஸுன்னாவிற்கெதிராக கையாண்டதாகும்.

ஏதோ உள்நாட்டுப் பிறையை சரி கண்டவர்களை நாம் காபிர்கள் என்றோ முர்தத்துக்கள் என்றோ கூறியது போன்று சித்தரித்தனர். தௌஹீதை அதன் தூய்மையான வடிவில் பிரச்சாரம் செய்ய முடியாதவர்களுக்கு முன்னால் நாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சத்தியப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதை சகிக்க முடியாமல் நாங்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகள். இவ் அரைகுறைகள் வந்து மார்க்கம் சொல்வது நமக்கு இழுக்கானது என்று இச்சகோதரர்கள் எண்ணி வந்தார்கள் போலும்.

காத்தான்குடியில் புரையோடிப்போயிருந்த அத்வைத சிந்தனையை உரிய வடிவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை கலாநிதி UL அஹ்மத் அஷ்ரப் அவர்களைச் சாரும். ஆனால் மூலை முடுக்கெல்லாம் இக்கொள்கையின் பாரதூரம் பற்றிய பிரச்சாரத்தை நாம் மேற்கொண்டிருந்தோம் என்பதை இச்சகோதரர்கள் மறந்து விடமாட்டார்கள்.

இங்கு ஏற்பட்ட அத்வைதக் கொள்கை தொழுகை நிராகரிப்புக் கொள்கை போன்றவற்றிற்கெதிரான தீவிரப்பிரச்சாரங்களில்  பெரும்பங்காற்றிய எம்மை வன்முறையாளர்கள் என்று விமர்சித்தார்கள். இதன்  ஒரு கட்டமாகத்தான் எமது பிரச்சாரகர்களில் ஒருவரான எமது சகோதரர் மௌலவி நஷ்மல் (பலாஹி) அவர்கள் ஜம்இய்யத்துல் உலமா சார்பாக உபசெயலாளர் என்ற வகையில் பல்வேறு வழக்குகளுக்கும் விசாரணைகளுக்கும் முகங் கொடுத்தார்.

இவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே தாருல் அதரின் முழுநேர பிரச்சாரகராக அவர் இணைந்து கொண்டார்.

காத்தான்குடியில் நடைபெற்ற கருத்தியல் ரீதியான போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டவர்கள் நாம் என்ற வகையில் அதன் உண்மையான களநிலவரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தோம். இத்தெளிவு இல்லாததன் காரணமாகத்தான் இத்தௌஹீத்வாதிகள்(?) எமக் கெதிராகவும் இப்படியொரு மக்கள் போராட்டத்தை உண்டாக்கலாமென தப்புக் கணக்குப் போட்டார்கள்.

வழமை போன்று தாருல் அதர் சர்வதேசப் பிறையை சரிகண்டு நடைமுறைப்படுத்துவதென்பதை விட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விமர்சனத்திற்கு தாம் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவும் தாருல் அதரை வீழ்த்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் எண்ணி செயற்பட்டார்கள்.

ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பையும் முன்னால் செயலாளர் ஒருவரின் கையொப்பத்தையும் பயன்படுத்தி ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. தாருல் அதர் சரிகாணும் ‘சர்வதேசப்பிறையை ஜம்இய்யத்துல் உலமா அங்கீ கரித்துவிட்டது. எனவே மக்களும் அதே தினத்தில்பெருநாள் கொண்டாடுமாறு’ அதில் கோரப்பட்டிருந்தது. நாம் எந்தவொரு துண்டுப் பிரசுரம் வெளியிடுவதானாலும் எமது உத்தியோக பூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தித்தான் வெளியிடுவோம்  என்பதை எம்முடன் மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் நன்கறிவார்கள்.

மேலும் மொட்டைத் துண்டுப் பிரசுரம் வெளியிடுகின்ற அநாகரிகமான கலாசாரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே சுமார் 27 நாட்களாக தமது ஊடகத்தில் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வந்த எமக்கெதிரான பிரச்சாரங்களுக்கு வலு சேர்ப்பதாகவே இது அமைந்திருந்தது.

உடனடியாக இத்துண்டுப் பிரசுரத்தோடு ஜம்இய்யத்துல் உலமா சபை கூடியது. எமக்கெதிரான மாற்றுக் கருத்திலுள்ள எமது தௌஹீத் சகோதரர்களும் அங்கீகரிக்காத கொள்கைவாதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டனர். (இதில் வேடிக்கை என்னவென்றால் தமது கருத்தை முன்வைக்க ஜம்இய்யத்துல் உலமாவில் போதிய சுதந்திரம் கிடையாது என்று கூறி ஜம்இய்யத்துல் உலமாவை விட்டுச் சென்ற மூத்த உலமாக்களும் தப்லீக் ஜமாஅத்தினரும் மற்றும் தாருல் அதரோடு எமது முரண்பாடுகளை விட உடன்பாடுகள் மிக அதிகளவில் இருக்கின்றது என்று கூறி  ஜம்இய்யத்துல் உலமாவை விட்டுச் சென்றவர்களும் தான் முன்னிலையில் செயற்பட்டார்கள்.)

ஜமாஅத்தே இஸ்லாமி (அமைப்பாக சொல்லிக் கொள்ள காத்தான்குடியில் மூன்று நபர்கள் கூட கிடையாது) தப்லீக் ஜமாஅத் மத்ஹப்வாதிகள் இஹ்வானிகள் என எல்லோரும் இரவோடு இரவாக கைகோர்த்தனர்.
அன்று இரவு 9.00 மணியளவில் எல்லோரும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டோம். ஏற்கனவே அத்வைதப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அனுபவம் பொலிஸாரை மிகக் கடுமையாகப் பாதித்திருந்தது. மாற்றுக் கருத்திலுள்ள எமது சகோதரர்கள் எம்மையும் தொழுகை நிராகரிப்புக் கொள்கையாளர்களுக்கு ஒப்பாகவே சித்தரித்தனர்.

இது இவ்வாறிருக்க வெளியில் அத்தனை பள்ளிவாயல் ஒலிபெருகிகளிலும் ‘சிறு குழுக்களைப் பின்பற்றாதீர்கள்!! ஜம்இய்யத்துல் உலமாவின் முடிவையே ஊர் மக்கள் அனைவரும் அமுல்படுத்துங்கள்!!’; என்ற அறிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன. நாம் தயவு தாட்சண்யமின்றி சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் எடுத்துச் சொல்வதால் எப்பகுதி யாரைப் பாதித்ததோ அவர்களும் திருப்தியுடன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்கள்.

ரித்தத் கொள்கையுடவர்களுக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஏனெனில் அத்வைதம் மற்றும் தொழுகை நிராகரிப்புக் கொள்கைக்கெதிரான தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்வது தாருல் அதர் அத்தஅவிய்யாவே ஆகும். தௌஹீத் சாயம் பூசியவர்கள் உள்ளடங்கலாக அசத்தியவாதிகள் அன்றிரவு ‘இன்றோடு இவர்களது கொட்டம் காலி. மறுநாள் ஸுப்ஹ் வேளையில் தாருல் அதர் தரைமட்ட மாக்கப்படும்’ என எதிர்பார்த்து மனப்பால் குடித்தனர்.

எம்பக்கம் சத்தியம் இருந்ததால் முழுமையாக வல்ல நாயன் அழ்ழாஹ்வையே சார்ந்திருந்தோம். இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

‘அழ்ழாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நம்பிக்கை கொண்டோர் அழ்ழாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.’   (அல்குர்ஆன் 64:13)

ஸுப்ஹ் வேளையிலும் அந்த ஒலி பெருக்கிகள் ஓய்வெடுக்கவில்லை. இச்சகோதரர்களின் அரவணைப்பில் சில போக்கிரிகளும் கூஜா தூக்கிகளும் வன்முறையை எதிர்பார்த்தனர். எம்மை அழ்ழாஹ் காப்பாற்றினான். சிறப்பாகவே பெருநாள் தொழுகை நிறைவேறியது. ஏனெனில் தஃவாக் களத்தில் எமது இலக்கு சர்வதேசப் பிறை மாத்திரமல்ல. மாறாக நாம் எடுத்துச் சொல்வது ஒட்டு மொத்த தௌஹீதையேயாகும்.

இதனால் எம்மிடம் ஓர் உறுதி வந்தது. எம்மில் முடிந்தவரை வஹியை அதன் தூய்மையான வடிவில் எடுத்துச் சொன்னால் அதனை கொண்டு சேர்ப்பது அந்த வல்ல அழ்ழாஹ்வே. மாற்றுக் கருத்திலுள்ள எமது சகோதரர்கள் எடுத்த முயற்சிகளை பேரருளாளன் அழ்ழாஹ் நேரெதிராக மாற்றியமைத் துள்ளான்.

அழ்ழாஹ்வின் பேருதவியால் சத்தியத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துரைக்கின்ற எமது இணைய தளத்தை ஒரு பல்லாயிரக்கணக்கான பார்வையிடுகின்றனர். தனிப்பட்ட முறையிலும் அமைப்பினூடகவும் தொடர்பு கொண்டு தினந்தோறும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். இதைவிடவும் உங்களது கரங்களில் தவழும் இவ் ‘அல்அதர்’ மாதஇதழ்  அழ்ழாஹ் எமக்கருளிய மிகப் பெரும் சாதனையாகும்.

மேலும் எமது பிரச்சாரகர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கடல் கடந்து தஃவாப் பணிக்குச் சென்று வந்துள்ளனர். இன்னும் பலர் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அழ்ழாஹ்வின் பேரருளால் நாம் செய்யும் ஏனைய      தஃவா பணிகள்:

1. வெளியூர் குத்பாக்கள் பொது பயான்கள்
2. நாளாந்தம் இருபாலாருக்குமான அல்குர்ஆன் வகுப்புக்கள்
3. நாளாந்தம் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 8:45 மணிக்கு வெவ்வேறு தலைப்புக்களில் விளக்க வகுப்புக்கள்
4. வாராந்தம் எமது பிரச்சாரகர்களினாலும் வெளியூர் பிரச்சாரகர்களினாலும் நடாத்தப்படும் ஆண்கள் பெண்களுக்கான தர்பியா
5. சிரமதானம், இரத்ததானம் போன்ற இன்னோரன்ன சமூகப் பணிகள்
6. திருமண நல்லிணக்க  குழு
7.திக்கற்றவர்களுக்கும் அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தமது குடும்ப உறவுகளின் நல்லடக்க நிகழ்வுகளை முன்னெடுக்க விரும்புபவர்களுக்கான ஜனாஸா நலன்புரி அமைப்பு.

அழ்ழாஹ்வின் பேருதவியால் இது போன்ற மார்க்க சமூக பணிகளை எமது தாருல் அதர் அத்தஅவிய்யா மேற்கொண்டு வருகின்றது.
இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

<< AL ATHAR JUN 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers