Skip to content

கப்ரை வழிபடுவோர் சாபத்திற்குரியோரா?

June 17, 2009

அல் அதர் மாத இதழ் >>அகீதா

மௌலவி MCM ஸஹ்றான் (மஸ்ஊதி) zahran8686@yahoo.com

‘கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அழ்ழாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அழ்ழாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அழ்ழாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அழ்ழாஹ் நேர்வழி காட்டமாட்டான்.’ (அல்குர்ஆன் 39:03)

திருமறை குர்ஆனில் அழ்ழாஹுத்தஆலா ‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.’ (அல்குர்ஆன் 51:56) எனக் கூறுகின்றான். மனிதர்களை சிருஷ்டித்ததன் நோக்கத்தை இவ்வசனத்தில் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றான். அழ்ழாஹ்வை மாத்திரம் வணங்குவதற்காகப் படைக்கப்பட்ட மனிதர்கள் விக்கிரகங்களையும் சமாதிகளையும் மதப் பெரியார்களையும் வணங்கி வழிபட்ட போதுதான் அழ்ழாஹ் இறைத் தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான்.’என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை.

எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.’ (அல்குர்ஆன் 21:25) அவ்வரிசையில் இறுதியாக வந்த இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதி வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். மரணித்த மகான்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கும் செயற்பாட்டை அந்நிய மதக் கலாசாரமென பிரகடனப் படுத்தினார்கள்.

‘அழ்ழாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-437)

‘நபி (ஸல்) அவர்கள் (தமது அந்திமக்காலத்தில்) நோயுற்றிருந்தபோது யூதர்களையும் கிறிஸ்த்த வர்களையும் அழ்ழாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கஸ்தலங்களை வணக்கஸ் தலங்களாக ஆக்கிவிட்டார்கள் எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-1390)

மேற்குறித்த  பொன்மொழிகளிலிருந்து நபிமார்களின் கப்ராயினும் அதில் வணக்கங்களைச் செய்ய அழ்ழாஹ்வின் தூதர் அனுமதிக்கவில்லை. அத்தோடு யூதர்களும் கிறிஸ்தவர்களும் அழ்ழாஹ்வின் சாபத்தை பெற்றதற்கு மூல காரணம் இறைத் தூதர்களின் அடக்கஸ்தலங்களில் வணக்கங்களை அவர்கள் நிறை வேற்றியதுதான் என்பதை சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்.

இன்று முஸ்லிம்களில் எத்தனையோ சகோதர சகோதரிகள் கப்ருகளுக்குச் சென்று குத்து விளக்கேற்றி எண்ணையை நெற்றியில் தடவி தங்களது சிரசுகளை மண்ணறையில் வைத்து ஸஜ்தாச் செய்யும் காட்சிகளைக் காணமுடிகின்றது. எமது நாட்டில் குப்ரை (இறை நிராகரிப்பை) ஊட்டும் பிரதான நிலையங்களான ஜெய்லானி தெவட்டகஹ போன்ற இடங்களில் இந்த அநாச்சாரங்களைக் காண முடியும். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மரணிக்கும் இறுதி சந்தர்ப்பத்தில் மிகக் கடுமையாக எச்சரித்த ஒரே பாவம் இந்த கப்ரு வழிபாடுதான். இதனை பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கின்றது.

‘உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கஸ்த்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தாம் மறுமைநாளில் அழ்ழாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-427)

இன்று முஸ்லிம்களில் பலர் மார்க்கத்தில் விளக்கமின்மை காரணமாக நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடாத்தி வருகின்றனர். எச்செயலை அழ்ழாஹ்வும் அழ்ழாஹ்வுடைய தூதரும் யூதக் கிறிஸ்தவக் கலாசாரமென வர்ணித்தார்களோ அது இஸ்லாத்தின் பெயராலேயே இச்சமூகத்தில் அரங்கேற்றப்படுவதுதான் அதிர்ச்சியான தகவலாகும்.கப்றை வழிபடும் இவர்களுக்கும் சிலையை வழிபடும் இந்துக்களுக்கும் இடையே  கப்ரு சிலை என்று சொற்களில்தான் வேறுபாட்டைக் காணமுடிகின்றதே யன்றி செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.

மாற்று மதத்தவர்களிடம் கோயில்கள். இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள். இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பைகள் ஹஸ்ரத்மார்கள் ஆலிம்கள். அங்கே தேர். இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள். இவர்களிடம் கந்தூரிகள். அங்கே உண்டியல்கள்; இங்கேயும் உண்டியல்கள். ஆக மொத்தத்தில் இந்து முஸ்லிம் எனும் பெயர்களில்தான் வித்தியாசமே தவிர கொள்கைகளில் அல்ல என்பதை இந்நடைமுறைகள் நிரூபிக்கின்றன.

கப்ருகளை அலங்கரித்து அங்கேயே கந்தூரி கத்தம் எனும் பெயர்களில் சுத்தமான யூதச் செயற்பாடுகள் இச்சமூகத்தில் புரோகித ஆலிம்களால் அரங்கேற்றப்படுவதைக் காணமுடிகின்றது. திருமறை குர்ஆனில் அழ்ழாஹ் மண்ணறைகளில் அடங்கப்பட்ட வர்களிடம் உதவி தேடுவதைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அழ்ழாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப் படுவார்கள்.’ (அல்குர்ஆன் 6:36)

‘அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 16:21) ‘நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.’( அல்குர்ஆன் 27:80) எனக் கண்டிக்கின்றான்.

மார்க்கத்தின் பேரில் வயிறு வளர்க்கும் ஒரு கூட்டம் ஷாதுலிய்யா காதிரிய்யா நக்ஷபந்திய்யா எனும் பெயர்களில் தர்ஹா வழிபாட்டை முஸ்லிம்களினுள் புகுத்தி வருகின்றனர். அழ்ழாஹ்வை மாத்திரம் அழைத்துப் பிரார்த்திக்க வேண்டிய மக்கள் அப்பாவித்தனமாக ஹாஜா நாயகத்தையும் பீர் முஹம்மது வலியுழ்ழாஹ்வையும் அழைத்து நரகவாதிகளாகும் கொடுமையை ஏன் உலமாக்கள் பகிரங்கமாக மிம்பர்களில் கண்டிக்க மறுக்கின்றார்கள்?

எத்தனையோ அம்சங்களுக்கு அறிக்கைகள் விடும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெவட்டகஹ ஜெய்லானி போன்ற ஷிர்க்கின் கோட்டைகளை விளக்கி இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அறிக்கைகள் விடாதது ஏன்? என்னதான் இஸ்லாமிய வங்கி குடும்ப அமைப்பு சீரான அரசியல் என்று எத்தனை மாநாடுகள் போட்டாலும் அழ்ழாஹ்வுக்கு இழைக்கப்படும் மகத்தான அநீதியான இந்த தர்ஹா வழிபாட்டை ஒழிக்காமல் விசுவாசமுள்ள ஒரு சமூகத்தை இந்நாட்டில் கட்டியெழுப்ப முடியாது என்பதை முப்திகள் அல்லாமாக்கள் அமீர்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆக மொத்தத்தில் கப்றுகளுக்குச் சென்று அருள் தேடுவோர் எண்ணையைத் தடவிக் கொள்வோர் ஸஜ்தாச் செய்வோர் இன்ன பிற ஷிர்க்கான காரியங்களை அங்கு மேற்கொள்வோர் அழ்ழாஹ்வின் நிரந்தர சாபத்திற்குரியோர் என்பதே இறைத் தூதர் (ஸல்) அவர்களின் இறுதித்தீர்ப்பாகும். எல்லாம் வல்ல அழ்ழாஹ் நம்மனைவர்களையும் நிரந்தர நரகிற்கு இட்டுச் செல்லும் பகிரங்க அநீதியான கப்ரு வழிபாட்டை விட்டும் காத்தருள்வானாக!

<< AL ATHAR JUN 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers