Skip to content

இல்லற வாழ்வும் இன்னல்களும்…

June 17, 2009

அல் அதர் மாத இதழ் >பெண்கள் பகுதி

மௌலவி SLM நஷ்மல் (பலாஹி)

இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2915)

சென்ற இதழின் தொடர்ச்சி…

கடந்த இதழில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்விலேயே அன்னாரின் அருமை மனைவியர்களுடன் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களைப் பார்த்தோம். சமுதாயத்திற்கு அனைத்து துறைகளுக்குமே வழிகாட்ட வந்த தூதர் (ஸல்) அவர்களும் வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண்களோடு முன்மாதிரியாக வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள். வாழ்வின் அனைத்து விடயங்களிலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முன்மாதிரியை பின்பற்ற முயற்சிக்கின்ற நாம் இவ்விடயத்திலும் நபிகளார் எப்படி நடந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள மேலும் சில சம்பவங்களை நோக்குவோம்.

‘ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ஸபிய்யா பின்த் ஹுயய் (ரழி) அவர்களுடைய ஒட்டகம் நோய்வாய்ப்பட்டது. ஸைனப் (ரழி) அவர்களது ஒட்டகத்தின் மேற்பகுதியில் (பொருட்கள் ஏற்ற) மேலதிக இடம் இருந்தது. நபிகளார் (ஸல்) அவர்கள் ஸைனபை நோக்கி ஒட்டகத்தை அப்பெண் ணுக்கு கொடுங்கள் எனக் கூற ஸைனப் (ரழி) அவர்கள் இந்த யூதப் பெண்ணுக்கா? கொடுக்க என வினவினார்கள். அதனால் ஸைனபை வெறுத்த நபிகளார் துல்ஹஜ் முஹர்ரம் மற்றும் ஸபரின் சில காலங்களும் பேசாது இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: அபூதாவுத்-4604)

இதை விட மற்றொரு பிரபலமான சம்பவம்தான் ஆயிஷா(ரழி) அவர்களும்  ஹப்ஸா(ரழி) அவர்களும் தமது ரோஷ உணர்வின் காரணமாக தீட்டிய திட்டத்தினால் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ் ஹலாலாக்கியதையே தன் மீது ஹராமாக்கிக் கொள்ளுமளவுக்கு முடிவெடுத்ததைக் கண்டித்து இறைவசனம் அருளப்பட்டது. தூதர் (ஸல்) அவர்களின் இவ்விரு மனைவியரும் மற்றைய மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் மீது ஏற்பட்ட ரோஷ உணர் வினாலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். இதனைப் பின்வரும் நபிமொழி எடுத்தியம்புகின்றது.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்று விட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிட மிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! என்று கூறிவிட வேண்டும் என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்த போது முன்பு பேசி வைத்திருந்தபடி கூறினோம். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வள வுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஆகவே நபியே உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து அழ்ழாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள் என்று தொடங்கி நீங்கள் இருவரும் இதற்காக அழ்ழாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி னால் (அது உங்களுக்கே நன்று) என முடியும் (66:1-4) வசனங்களை அழ்ழாஹ் அருளினான்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி- 5267)

பிகளார் காலத்தில் ஏற்பட்ட ஏனைய இல்லற இன்னல்கள்

1. தனது மகள் பாத்திமாவுடன் முரண்பட்டுக் கொண்ட மருமகன் அலீ (ரழி) அவர்களுடன் நபிகளார் நடந்து கொண்ட விதம்:

‘மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரழி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம் நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால் அழ்ழாஹ் அபுத்துராபை சபிக்கட்டும் என்று கூறுவீராக! என்று  சொன்னார். அதற்கு நான் ‘(தம் பெயர்களில்) ‘அபுத் துராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரை விட வேறெந்தப் பெயரும் அலீ (ரழி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும் போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்’ என்று சொன்னேன்.  அதற்கு அந்த ஆளுநர்

‘அந்தக் கதையை எமக்குச் சொல்வீராக. ஏன் அபுத்துராப் என (அலீ) பெயர் சூட்டப் பெற்றார்?’ என்று என்னிடம் கேட்டார்.

நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) பாத்திமா (ரழி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ அவர்கள் வீட்டில் இல்லை. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?’ என்று கேட்டார்கள். அப்போது  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் ‘அவர் எங்கே என்று பார்’ என்;று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து அழ்ழாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்று சொன்னார்.

உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயிடம் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரழி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே ‘அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்’ என்று (இரண்டுமுறை) கூறினார்கள்.’ (அறிவிப்பவர்:  சஹ்ல் பின் சஅத் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4784)

2. நபித்தோழர் ஸப்வான் (ரழி) அவர்களது மனைவி நபிகளாரிடம் வந்து முன்வைத்த முறைப்பாடு:

‘ஸப்வான் பின் முஅத்தலின் மனைவி நபிகளாரிடம் வந்து தனது முறைப்பாட்டினை மூன்று அடிப் படைகளில் முன்வைத்தார்கள். அவை பின்வருமாறு:

‘அழ்ழாஹ்வின் தூதரே! எனது கணவர் நான் தொழுதால் அடிக்கின்றார். நோன்பு நோற்றால் திறக்கச் செய்கிறார். சூரியன் உதித்த பின்புதான் ஸுப்ஹுத் தொழுகின்றார்.’ ஸப்வான் (ரழி) அவர்கள் உள்ளடங்கலாக அங்கிருந்த நபித்தோழர்கள் மத்தியில் அப்பெண்மணி கூறியதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.ஸப்வான் (ரழி) அவர்கள் பதிலளிக்கும் போது அழ்ழாஹ்வின் தூதரே!

தொழுதால் அடிப்பதாகக் கூறுவதென்பது அவர் தொழுதால் இரு சூறாக்கள் ஓதுகிறார். நான் அவ்வாறு செய்ய வேண்டாமென தடுத்தேன் என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஒரே சூறாவாக இருந்தால் எல்லோருக்கும் போதுமெனக் கூறினார்கள்.

நோன்பு நோற்றால் தடுப்பதாகக் கூறியது அவர் (ஸுன்னத்தான) நோன்பு நோற்றுக் கொண்டே இருக்கிறார். நான் இளைஞராக உள்ளேன். என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதற்கு நபியவர்கள் ஒரு பெண் கணவனின் அனுமதியின்றி (ஸுன்னத்தான) நோன்பு நோற்க வேண்டாமெனக் கூறினார்கள்.

நான் நேரம் சென்றே ஸுப்ஹுத் தொழுவதாக எனது மனைவி கூறுவது தொடர்பில் நபிகளாரே எங்கள் விவகாரம் உங்களுக்கு தெரியுமே! சூரியன் உதிப்பதற்கு அண்மையில்தான் நாம் விழித்தெழுகிறோம். அப்போது நபியவர்கள் ஸப்வானே நீ விழித்தெழுந்ததும் தொழுதுகொள் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஸஃத் இப்னு மாலிக்இ நூற்கள்: இப்னு ஹிப்பான்-1504 அபூதாவுத்-2116)

மேலுள்ள நபிமொழியில் ‘விழித்தெழுந்ததும் தொழுது கொள்’ எனும் வாசகம் ஆழ்ந்த தூக்கத்திற்குப் பின்னர் வரும் விழிப்பையே குறிக்கின்றது. மாறாக ஒருவர் மிகத் தாமதமாக எழுந்து விரும்பிய நேரத்தில் தொழுது கொள்ளலாம் எனும் அடிப்படையில் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழுகை நேரம் பற்றி அழ்ழாஹ் அருள்மறையில் குறிப்பிடுகையில்  ‘நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.’(அல்குர்ஆன் 04:103) எனக் குறிப்பிடுகின்றான்.

இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

<< AL ATHAR JUN 2009

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers