ஹதீஸ்களை அடையாளம் காண்போம்.
ஆதாரபூர்வமான ஹதீஸ்
அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.
தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-615)
ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்
‘(இளைஞர்களே!) திருமணம் முடியுங்கள்! தலாக் சொல்லி விடாதீர்கள். (நீங்கள் தலாக் சொன்னால்) அழ்ழாஹ்வின் அர்ஷ் எனும் சிம்மாசனம் நடுங்குகின்றது. அழ்ழாஹ் ஹலாலாக்கியதில் அழ்ழாஹ்வுக்கு மிக மிக வெறுப்பானது தலாக் சொல்வது தான்.’
மேற்குறித்த செய்தி நபிகளார் கூறிய செய்தியல்ல. ஏனெனில் அம்ர் பின் ஜமீஃ எனும் பொய்யனால் இட்டுக்கட்டப்பட்டு முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்பட்ட செய்தியே இதுவாகும். அழ்ழாஹ் ஒன்றை வெறுத்தால் அதை ஹலாலாக்க மாட்டான். அழ்ழாஹ் ஹலாலாக்கினால் அதில் அவனுக்கு வெறுப்புக்குரியது என்று ஏதுமிருக்காது. இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது எனும் தகவலை மேலதிகமாக அறிய பின்வரும் நூற்களை வாசிக்கவும். ‘தாரீஹ் அல்-பக்தாத்’(12/191), ‘அல் மஃலூஆத் லிப்னுல் ஜவ்ஸி’ (2/277)

Comments are closed.