Skip to content

சிலதை ஏற்று நிராகரிப்போர் யார்?

May 14, 2009

அல் அதர் மாத இதழ் >விமர்சன விளக்கம்

விமர்சனம்:

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஷிர்க், பித்அத், நபிவழி போன்ற சிலவற்றுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். இஸ்லாமிய ஆட்சி, ஜிஹாத், இஸ்லாமியப் பாரம்பரியம் போன்றவற்றிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? இஸ்லாம் என்பது சம்பூரண வாழ்க்கைத் திட்டமெனக் கூறும் நீங்களே இவ்வாறு சிலதை ஏற்று சிலதை மறுக்கலாமா?.

விளக்கம்:

‘நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி’ (அல்குர்ஆன் 02:208) என அழ்ழாஹ்வே அருள்மறையில் கட்டளையிட்ட பிறகு சிலதை மாத்திரம் ஏற்று சிலதைப் பின்பற்றினால் அதை விட வழிகேடு வேறு எதுவும் இருக்கமாட்டாது.

ஓரிறைக் கொள்கையை ஒளிவு மறைவின்றிப் பிரச்சாரம் செய்வதை ஒரே இலக்காகக் கொண்ட நாம் ஒரு மனிதன் எச்சில் துப்புவதிலிருந்து ஆட்சி பீடத்தில் அரசாளும் வரை அத்தனை காரியங்களும் ஆதார பூர்வமான நபிவழியிலேயே அமைய வேண்டுமென்பதே எமது பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

ஜிஹாத் எனும் அறப் போராட்டமாக இருந்தாலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறான ஒழுங்கை அதற்கு வகுத்தார்களோ, அப்படியே அவற்றைக் கடைப் பிடித்தால் மாத்திரமே அழ்ழாஹ்விடம் ஜிஹாத் எனும் வணக்கம் அங்கீகரிக்கப் படுமென நாம் கூறுகின்றோம்.

‘தடி எடுத்தவனெல்லாம் முஜாஹித்’ என இஸ்லாம் கூறவில்லை. மேற்படி விமர்சனத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இஸ்லாமிய ஆட்சியையோ, ஜிஹாதையோ நாம் நிராகரிக்கவில்லை. நிராகரித்தால் இறை நிராகரிப்பாளர்களாக மாறிவிடுவோம். (அழ்ழாஹ் அதை விட்டும் எம்மைக் காத்தருள்வானாக!) எம்மை நோக்கி வீசப்படும் குற்றச்சாட்டில் ஷிர்க்கையும் பித்அத் (நபிகளார் கற்றுத் தராத புதிய வணக்கத்)தையும் கண்டிப்பதில் அதீத கவனம் நாம் எடுப்பது முற்றிலும் உண்மையே!

ஏன் முதன்மையாக ஷிர்க் எனும் இணை கற்பித்தலை கண்டிக்கின்றோம் என்ற வினாவுக்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவாக பதிலளிக்கின்றது.

‘அழ்ழாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பி னோம். அழ்ழாஹ் யாருக்கு நேர் வழிகாட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர்.’ (அல்குர்ஆன்  16:36)

இறைத் தூதர்களின் முதன்மையான பணியே அழ்ழாஹ்வுக்குக் கற்பிக்கப்படும் இணையைக் கண்டிப்பதுதான்.  தாயத்து, ஜின் வைத்தியம், மந்திரித்தல், தர்ஹாக்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளல், சமாதிகளில் மண்டியிட்டு அவ்லியாக்களிடம் பிரார்த்தித்தல் போன்ற மாபாதகச் செயல்களை முதன்மையாகக் கண்டிக்காமல் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி குரல் கொடுக்க முடியும்?

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுமார் பதிமூன்று வருடங்கள் மக்கா நகரில் ஷிர்க்கை ஒழிக்கும் பிரச்சாரத்தில் மாத்திரமே தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள். கொடிய குற்றமான ஷிர்க்கை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யாமல் நபிகளார்  இஸ்லாமிய ஆட்சியை இப்பூமியில் உருவாக்கவில்லை. பகுத்தறிவு ரீதியாகவும் இது சாத்தியமில்லை.

ஷிர்கையும், பித்அத்தையும் அதி முக்கியத்துவப்படுத்தி அவற்றைக் கண்டிக்காமல் ஒரு இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கினால் அந்த ஆட்சி ஒருபோதும் உறுதியாக நிலைத்திருக்காது.

இன்று எமது சமூகத்தில் இஸ்லாமிய ஆட்சி பற்றி பல மணித்தியாலங்கள் பேசும் எத்தனையோ சகோதரர்களின் முகங்களில் தூதரின் ஸுன்னாவான தாடியைக் காணமுடியவில்லை. முகத்தில் இயற்கையாக வளரும் தாடியைக் கூட தக்க வைத்துக் கொள்ளாத இச்சகோதரர்கள் கிடைக்கும் ஆட்சியை எவ்வளவு தூரம் இஸ்லாமிய வரையறைக்குள் வைத்திருப்பார்கள் என்பது பெரும் சந்தேகமே!

ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கை, மற்றும் ஜாஹிலிய்யத்துக்கள் போன்ற கறைகள் அற்ற அசைக்க முடியாத கொள்கைவாதிகளால் மாத்திரமே இஸ்லாமிய சாம்ராஜியத்தை நிறுவ முடியும் என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

<< AL ATHAR MAY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers