Skip to content

நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

May 14, 2009

அல் அதர் மாத இதழ் >அஸ்ஸுன்னா

அபூ அஹ்மத் அல் அதரி
abooahamed@gmail.comசென்ற

இதழின் தொடர்ச்சி…

“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.” (அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-631)

கடந்த இதழ்களில் ஸுன்னாவின் பிரதானமான மூன்று வகைகளையும் நோக்கினோம். சொல் ரீதியான,  செயற்பாட்டு ரீதியான மற்றும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த அம்சங்களான நபிமொழிகள் ஆகியவற்றைப் பார்த்தோம்.

அந்த வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகளைப் புரிந்துகொள்வது தொடர்பில் சில அடிப்படை அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள், வணக்க வழிபாடுகள் பற்றிய சரியான தெளிவின்மையின் காரணமாகவே அதிகளவிலான வழிகெட்ட சிந்தனைகள் சமூகத்தில் தோற்றம் பெறுகின்றன. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்பு குகையில் தனித்திருந்தார்கள் என்று கூறித்தான் ஒரு சமூகம் ‘தொழுகை தேவையில்லை, திக்ரே போதும்’ என்று கூறி வருகின்றது.

மற்றும் சிலர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் சரியான விளக்கமின்மையின் காரணமாக கேள்விப்பட்டதையெல்லாம் ஸுன்னா என்றும், அவர்களது அறியாமையை ஏற்றுக் கொள்ளாத போது தௌஹீத்வாதிகளை நோக்கி யூத, நஸாராக்களின் கலாசாரங்களைப் பின்பற்றுவோர் எனவும் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுகின்ற சகோதரர்கள் தமது வணக்கவழிபாடுகளில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பல ஸுன்னாக்களை தமது இபாதத்துக்களில் கடைப்பிடிப்பதுடன் பல்வேறு பித்அத்களையும் செய்து வருகின்றனர். எனவே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகளில் எது மார்க்கம் என்ற வகையில் பின்பற்ற வேண்டியது, எது மனிதன் என்ற வகையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பதை இன்ஷா அழ்ழாஹ் தொடர்ந்து நோக்குவோம்.

அழ்ழாஹ் திருமறைக் குர்ஆனில், “நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது.” (அல்குர்ஆன் 18:110) என்று கூறுமாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

இங்கு அழ்ழாஹ் இரு விடயங்களை ஒன்று சேர்த்துக் கூறுகிறான்.

01. நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு தூதர் என்ற வகையில் மார்க்க விவகாரங்களில் அவர்கள் சமுதாயத்திற்கு தெளிவு படுத்தும் விடயங்களை ஏற்று நம்ப வேண்டும். இதனை பின்வரும் திருமறை வசனமும் உறுதி செய்கின்றது.

“மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.”(அல்குர்ஆன்  16:44)

02. நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர். ஒரு மனிதனுக்கு உலகளாவிய தேவைகள் பல உள்ளன. மனித செயற்பாடுகள் என்பது குடும்பம், மனைவி, தொழில், இல்லற வாழ்க்கை என நிறைந்து காணப்படுகின்றது.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புரோகிதத்தையோ, துறவறத்தையோ ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, குடும்ப விவகாரங்களை ஒதுக்கி விட்டு மேற்கொள்ளப்படும் வணக்க வழிபாடுகளை அவர்கள் கண்டித்தார்கள்.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு),  முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், ‘எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார்.

இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்’ என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்’ என்று கூறினார்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே!

அறிந்துகொள்ளுங்கள்- அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன்.

மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.” (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5063)

ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் (2714) அவர்களில் சிலர் புலால் உண்ணமாட்டேன், படுக்கை விரிப்பில் உறங்கமாட்டேன் என்றும் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

நபிமொழிகளை ஆய்வு செய்யும் போது ‘நான் ஒரு மனிதன்’ என்று துவங்கும் அதிகமான நபிமொழிகளை காணக் கிடைக்கின்றது.

(இன்ஷா அழ்ழாஹ் அவற்றை அடுத்த இதழில் நோக்குவோம்)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் அனைத்தையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஸுன்னாவாகக் கடைப்பிடிக்க கூடாதென்பதை மதீனத்து விவசாயத்துடன் தொடர்புடைய பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.

மக்கள் ‘(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்’ என்று கூறினர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்’ என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் ‘உதிர்ந்துவிட்டன’ அல்லது ‘குறைந்துவிட்டன’ அதைப் பற்றி மக்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள், ‘நான் ஒரு மனிதனே உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’ என்று சொன்னார்கள்.” (அறிவிப்பவர்: ராபிஃஉ பின் கதீஜ் (ரழி),  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4712)

மேற்படி நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறித்த விடயத்தில் என்னை விட நீங்களே அறிந்தவர்கள் என்று கூறியதோடு நானும் ஒரு மனிதர் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

தற்போது நம் மத்தியில் இதனையொத்த நிறைய விடயங்களை மக்கள் ஸுன்னா எனக் கருதி செய்து வருகின்றனர். அந்த வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உணவு உண்ணும் முறை மற்றும் இயற்கைச் செயற்பாடுகளான நிற்றல்,  உட்காருதல், பயணம், ஆடை அணிதல் போன்ற அம்சங்களை ஹதீஸ்களின் நிழலில் தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் ஜுப்பா, தொப்பி, தலைப்பாகை, சஹன் சாப்பாடு, தலைசீவும் முறை போன்ற பல்வேறுபட்ட விடயங்களில் எதை பின்பற்றினால் நன்மை தரும் என்பதை எதிர்வரும் இதழ்களில் நோக்குவோம்.

இன்ஷா அழ்ழாஹ் வளரும்…

<< AL ATHAR MAY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers