சோதனையில் சாதனை-3
அல் அதர் மாத இதழ் >தஃவாக் களம்
அபூ அஹ்மத் அல் அதரி
abooahamed@gmail.com
“அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு நன்மாராயம் உண்டாகட்டும்!” (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்- 232)
கடந்த இதழில் சத்தியப் பிரச்சாரப் பாதையில் தாருல் அதர் ஆரம்ப கால கட்டங்களில் என்னென்ன விடயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தது, அதனால் எத்தகைய சிரமங்களை எதிர்நோக்கியது போன்ற விடயங்களைப் பார்த்தோம்.
அதன் தொடரில்…
எங்கெல்லாம் தௌஹீதின் அஸ்த்திவாரம் பல எதிர்ப்புக்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் உறுதியாகவும், ஆழமாகவும் போடப்பட்டதோ அங்கு ஆரம்ப கால கட்டங்களில் கொள்கைவாதிகள் கடுமையான சங்கடங்களையும், துன்பங்களையும் எதிர் நோக்கினாலும் ஒரு சில வருடங்களிலேயே அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை நோக்கி மக்கள் விரைந்து வருவதைப் பார்த்திருக்கிறோம்.
அதனால் சில ஊர்களில் தௌஹீத்வாதிகள் இணைவைப்பாளர்களாலும், மத்ஹபுவாதிகளாலும், அதிகார வர்க்கத்தினரின் துணையுடன் கடுமையாகத் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
தற்போது போன்று ஸுன்னாவை ஆழமாக அறிந்து செயற்பட வசதியில்லாத காலகட்டங்களில் கப்று வணக்கம், மௌலூத், மூடநம்பிக்கைள், தகடு, தாயத்து, மத்ஹப்வாதம் போன்ற விடயங்கள் மட்டுமே பெரும்பாலும் தஃவாக்களத்தை நிரப்பியது. இத்தகைய விடயங்களில் இவ் ஆரம்ப கால கொள்கைவாதிகள் மிக உறுதியாகவே நின்றனர். அவர்கள் குராபிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் ஒரு போதும் தலை சாய்க்கவே இல்லை. தஃவாவை ஒளிவு மறைவின்றி, நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னார்கள்.
அந்த வகையில் ஆரம்ப காலங்களில் (நாமறிந்தவரை) அப்துல் ஹமீத் பக்ரி, சகோதரர் பி.ஜே, மீரான் மௌலவி, அதேவழியில் அப்துல் வதூத் (ஜிப்ரி), அன்சார் மௌலவி இன்னும் நாம் பெயர் குறிப்பிடாத பலரும் தௌஹீத் பிரச்சார வரலாற்றில் மறக்க முடியாதவர்கள்.
இவர்கள் இப்பிரச்சாரத்தில் ஊர்த் தலைமைகள், வழக்காறுகள், உலமா சபைகள் என்ற எந்த அம்சத்தையும் கவனத்திற் கொள்ளவே இல்லை. இதனால் அவர்கள் அப்போதிருந்த குராபிகளாலும், பித்அத்வாதிகளான மூத்த உலமாக்களாலும் ‘ஹவாரிஜ்கள்’ என அழைக்கப்பட்டனர். மேலும், இவர்களில் பலர் அடிகளுக்கும், தாக்குதல்களுக்கும், சமூகப்பகிஷ்காரங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இத்தகையவர்களில் பலர் அப்போது போட்ட அடித்தளங்கள்தான் இன்று அந்தந்த ஊர்களில் அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மாத்திரம் வாழ்க்கை நெறியாக ஏற்று பிழையான அகீதாக்கள், வட்டி, சீதனம், மடமைகள், மூடநம்பிக்கைகள், கந்தூரி, மௌலூத், பித்அத்கள் போன்றவற்றை விட்டொதுங்கிய ஒரு உயரிய சமுதாயம் உருவானதற்கு காரணமாகும்.
ஆனால், நமது பகுதிகளில் ஆரம்ப காலங்களில் தௌஹீத் சாயம் பூசியிருந்த எமது சகோதரர்கள் கேவலம் அப்பட்டமான ஷிர்க்குகளைக் கூட தெளிவாகப் போட்டு உடைக்கவில்லை. வெள்ளிமேடைகள் வேண்டுமென்பதற்காக கூட்டு துஆ ஓதி, பித்அத்கள் நிறைந்த குத்பாக்களில் பங்கெடுத்தார்கள். பயான் வேண்டுமென்பதற்காக மௌலூத் சபைகளுக்கே சமூகமளித்தார்கள். (தேவையேற்படின் இவற்றை பகிரங்கமாக நிரூபிப்போம்) நாம் மௌலூத் சபைகளுக்கு சென்றாலும் குர்ஆனைத்தான் ஓதினோம் என்று கூறிவந்தார்கள்.
தூய்மையான முறையில் அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மாத்திரம் பின்பற்றக் கூடிய தௌஹீத்வாதிகள் பயான்களுக்கு அழைத்தால் செல்லமாட்டார்கள். தலை நகரில் தப்லீக் ஆதிக்கப் பள்ளிவாயல்களில் அடக்கி வாசிப்பார்கள்.
களம் வேண்டுமென்பதற்காக மூன்று நாட்கள், சில்லாக்கள், ஜுமைராத் பயான்களுக்கும் செல்வார்கள். கேட்டால் அங்கும் தஃவாச் செய்ய முடியும் என்பார்கள். இங்கு சென்று குறைந்த பட்சம் தனிநபர் வழிபாட்டு வழிகேட்டையாவது கண்டித்தார்களா?
புஹாரி மஜ்லிஸ் பயான்கள் பறிபோய் விடுமென்பதற்காக பெரிய பள்ளிகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பள்ளிவாயல் நிர்வாகிகள் ஊர்த் தலைமைகளது கௌரவங்களை காப்பார்கள். தௌஹீதிற்காக தியாகம் செய்யத் துடிக்கும் நெஞ்சங்களைத் தூசிப்பார்கள். மிம்பர்களில் ஏறினால் அவர்களது பாடுதான். இவை எல்லாற்றிற்கும் மேலாக அவர்கள் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஸுன்னாவினை பிரச்சாரம் செய்வதற்காக அரபு நாடுகளிலிருந்து பணம் பெறும் ‘மப்ஊதுகள்’.
இந்நிலையில்தான் இவர் (இத்தௌஹீத்வாதி) களுக்கு முன்னால் சத்தியத்தை சரியான வடிவில் சொல்லப் புறப்பட்ட போது, பித்அத்வாதிகளது எதிர்ப்பை விட இவர்களது எதிர்ப்பே மிகப் பாரிய அளவில் காணப்பட்டது. அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஸுன்னா அடிப்படையில் தனியாக குத்பா ஆரம்பிக்க முயற்சிகள் எடுத்த போது அதைத் தடுத்து நிறுத்த இயன்றவரை முயற்சித்தார்கள். (ஆனால் அப்போது எம்மோடு அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஸுன்னா மாத்திரமே எமது இலக்கு என்று உறுதியாக இருந்த பலர் இன்று எல்லோருமாக இணைந்து கரைந்து விட்டார்கள்.)
நபிவழியில் இரவுத் தொழுகை 11 ரக்அத்துக்களை நடாத்தியதால் பிரச்சினை ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை செல்ல வேண்டி வந்த போது, இது அகீதா மட்டும் பேசும் காலமென்றார்கள். இப்போது நம்மை எதிர்க்க வேண்டுமென்பதற்காக மிக அரிதான ஹதீஸ் கலை விதிகளை பயன்படுத்தி பல ஹதீஸ்களை பலவீனமாக்கி வருகிறாரர்கள்.
இச்சகோதரர்கள் தாங்கியிருந்த மதனி, ரியாழி, கலைமானி, முதுமானி, மற்றும் கலாநிதி ஆகிய பெயர்ப்பலகைகளைக் கண்டு ஏமாந்து போன சகோதரர்களும் இவர்களோடு சேர்ந்து எமக்கெதிராக பல விமர்சனங்களை மேற்கொண்டனர். (தமது தவறுகளை உணர்ந்த நியாயமாக சிந்திக்கின்ற பல சகோதரர்கள் எமது தஃவாவின் தூய்மையை உணர்ந்து இன்று எமக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாவும் ஆதரவளித்து வருகின்றனர்)
எமது பிரதேசத்தில் வேரூன்றிக் காணப்பட்ட எல்லாம் அவனே என்கின்ற சித்தாந்தம், தொழுகை நிராகரிப்புக் கொள்கை போன்ற வழிகேடுகளை எதிர்த்து கணிசமான அளவு நாம் பிரச்சாரத்தையும் கொள்கை ரீதியான போராட்டத்தையும் மேற்கொண்டிருக்க, இறுதியில் இவ் அன்புச் சகோதரர்கள் எங்களையும், எங்கள் குடும்பங்களையும் முர்த்தத்களுக்கு நிகராகவே நோக்கினர்.
மேலும், தூய தௌஹீத் கொள்கையின் சரியான அடித்தளம் போடப்படாமையின் காரணமாக சமூகக் கொடுமையான சீதனம் பற்றிய தெளிவு இவர்களிடம் இல்லை. உரிமை மீறல், பிறரின் சொத்தை அபகரித்தல் இஸ்லாத்திற்கே உரிய சிறப்பம்சமான ‘மவாரிஸ்’ (சொத்துப்பங்கீடு) எனும் பகுதியின் முக்கியத்துவம் போன்ற விடயங்களை ஆழமாகப் புரிந்து கொள்ளாததன் காரணமாகத்தான் 95% இத்தௌஹீத்வாதிகள்(?) இன்னும் பல வருடங்களாக மனைவியின் வீட்டிலேயே குடியிருந்து வருகின்றார்கள்.
இவைகளுக்கு பிரதான காரணங்கள் உறுதியான தௌஹீத்வாதிகளினைப் போன்று மத்ஹப் சிந்தனைகளைக் கைவிட்டு, அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் பக்கம் முழுமையாக திரும்பி வராததும், மக்களை அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஸுன்னாக்களினை மாத்திரம் நோக்கி அழைக்காததுமேயாகும். அப்படித்தான் அல்குர்ஆன், ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் மொழிபெயர்ப்புக்களைப் படித்து விட்டு கேள்வி கேட்க கூடிய தௌஹீத் சகோதரர்களைப் பார்த்து ‘நுனிப்புல் மேய்பவர்கள்’ என்று விமர்சிப்பார்கள்.
தாங்களும் ஸுன்னாக்களினை புறக்கணிப்பதோடு மற்றவர்களினதும் ஸுன்னா மீதான பற்றை குறைப்பார்கள். இந்த வகையில் தப்லீக் கொள்கையின் அறியாமைகளையும், இஹ்வானிஸத்தின் அகீதா ரீதியான பிறழ்வுகளையும், ஜமாஅத்தே இஸ்லாமியின் தனிநபர் வழிபாட்டையும், மூத்த உலமாக்களின் மத்ஹப் மாயைகளையும் கண்டிக்காது அனைவரையும் அனுசரித்துக் கொண்டு உலமா சபைகளின் கதிரைகளை இ(த் தௌஹீத்வாதிகளான)வர்கள் அலங்கரித்தே வந்துள்ளனர்.
இந்த நோய்க்கு இலக்கான பழமையான மதனிகள் நாடு பூராகவும் நிறையவே உள்ளனர். மூத்தோர்களின் அதே பாதையில் இன்றும் அதிகளவிலான இளம்பட்டதாரிகள் காணப்படுகின்றனர். (ஒரு சிலர் விதிவிலக்காக சத்தியப் பிரச்சாரத்தை ஆங்காங்கே முன்னெடுக்கின்றனர்) அழ்ழாஹ் எல்லோருக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.
இந்த சகோதரர்களது பிரதான பிரச்சினை நாம் இளம்வயதிலேயே நாடு பூராகவும், சர்வதேச ரீதியிலும் தியாகத்துடனும், உறுதியுடனும் தஃவாவை முன்னெடுப்பதும், அழ்ழாஹ்வின் அச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை எடுத்து நடப்பதும், எடுத்துச் சொல்வதுமேயாகும்.
இதனால் இவ்வன்புச் சகோதரர்கள் தமக்கு கிடைத்த களங்களில் நம்மை நோக்கி செய்த விமர்சனங்கள்:
- முறையாகக் கல்வி கற்காதவர்கள்.
- அறபுநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்காதவர்கள்.
- கௌரவமான குடும்ப பிண்ணனி இல்லாதவர்கள்.
- வன்முறையாளர்கள்.
- புத்தகங்களின் ஓரங்களை வாசிப்பவர்கள்.
இன்னும் இது போன்ற, வாய்திறந்து சொல்ல முடியாத எண்ணற்ற விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விமர்சனங்கள் தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,
“(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.’ (அல்குர்ஆன் 36: 86) என்று குறிப்பிடுகின்றது.

Comments are closed.