Skip to content

நல்லடியார்களின் பொருட்டால் நாம் பிரார்த்திக்கலாமா?

May 13, 2009

அல் அதர் மாத இதழ் >அகீதா

மௌலவி M.C.M. ஸஹ்றான் (மஸ்ஊதி)
zahran8686@yahoo.com

‘பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்டபின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அழ்ழாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர் ஆன் 7:56)

இஸ்லாத்தில் பிரார்த்தனை புரிவது ஓர் வணக்கமாகும். இதனை அருள்மறையில்

‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கின்றேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.’(அல்குர்ஆன் 40:60) எனக் கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை புரிவதை வணக்கமாகக் கூறும் திருமறைக் குர்ஆன் அதனை அழ்ழாஹ்விடம் மாத்திரமே மேற்கொள்ளுமாறு எமக்கு அறிவுறுத்துகின்றது.

‘நான் எனது இறைவனையே பிரார்த்திக்கின்றேன். அவனுக்கு யாரையும் இணையாக்கமாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 72:20) என அழ்ழாஹ் கூறுகின்றான்.

எமது தேவைகளை அழ்ழாஹ்விடம் கேட்கும்பொழுது நாம் நேரடியாகவே கேட்க வேண்டும். இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொண்டு அழ்ழாஹ்விடம் பிரார்த்திப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

அழ்ழாஹ் அருள்மறையில்:

‘என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்!’ (அல்குர்ஆன் 2:186) எனக் கூறுகின்றான்.

இவ்வசனங்கள், எமது தேவைகளை அழ்ழாஹ்விடம் முன்வைப்பதற்கு யாரையும் (வஸீலா) பொருட்டாக நாம் ஆக்க வேண்டியதில்லை, மாறாக நேரடியாகவே அழ்ழாஹ்விடம் கேட்கலாம் என்பதை  தெளிவாக விளக்குகின்றன.

தூய இஸ்லாமிய அறிவின்மையால் இன்று எமது சமூகத்தில் எத்தனையோ சகோதர, சகோதரிகள் தமது பிரார்த்தனைகளில்

‘யாஅழ்ழாஹ்! முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியின் பொருட்டால் அல்லது இன்ன பெரியார்கள், நாதாக்கள், அவ்லியாக்களின் பொருட்டால் எனது தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக!’ எனப் பிரார்த்திப்பதைக் காணுகின்றோம்.இவ்வாறு பிரார்த்திப்பது அழ்ழாஹ்வின் வல்லமையில் குறை காண்பதும், இறைவன் கண்டிக்கும் ஷிர்க்கெனும் கொடிய, மன்னிப்பே இல்லாத குற்றமுமாகும்.

‘இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அழ்ழாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.’ (அல்குர்ஆன் 5:72) அழ்ழாஹ்வுக்கு  நேரடியாக பிரார்த்தனைகளை செவிமடுக்கும் ஆற்றல் இல்லை என்பதை இவ்வாறு பிரார்த்திப்பவர்கள் மறைமுகமாகச் சொல்லுகின்றார்கள்.

அழ்ழாஹ்வோ திருமறைக் குர்ஆனில் சுமார் நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் தான் ‘துல்லியமாக செவிமடுக்கும் ஆற்றலுள்ளவன்’ என தன்னைப் பற்றி அறிமுகம் செய்கின்றான்.

‘பகுத்தறிவு ரீதியாக சிந்தித்துப் பார்த்தாலும், நல்லடியார்களின் பொருட்டால் அழ்ழாஹ்விடம் பிரார்த்திப்பது முழுக்க முழுக்க அறியாமை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

‘அலீம்’ எனும் தொழிலாளி தனது முதலாளியிடம் சென்று, நற்பண்புகளுடன் வாழும் எனது சக தொழிலாளி ‘சலீம்’ பொருட்டால் எனது சம்பளத்தை கூட்டித்தாருங்கள்! எனக் கேட்டால் முதலாளி என்ன பதிலளிப்பார்? சலீம் நல்லவராக இருப்பதால் உனக்கு எப்படி சம்பளத்தைக் கூட்டித் தர முடியும்? என அவர் திருப்பிக் கேட்கமாட்டாரா?

இவ்வாறு தான் ‘நற்பண்புகளுடன் வாழ்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் பொருட்டால் என்னை ஏற்றுக் கொள்’ என நாம் அழ்ழாஹ்விடம் பிரார்த்திப்பதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த இப்றாஹீம் (அலை), ஈஸா (அலை) போன்ற நல்லடியார்களின் பொருட்டால் துஆச் செய்ததாகவோ, தமது தோழர்களை அவ்வாறு பிரார்த்திக்குமாறு பணித்ததாகவோ எவ்விதச் சான்றும் கிடையாது.

மரணித்துப் போன மகான்களை இடைத்தரகர்களாக ஆக்கி துஆச் செய்யும் பிழையான நடைமுறையை உருவாக்கியவர்களும், இன்று வரை அதை ஊக்குவிப்பவர்களும் உலமாக்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள்தான் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அழ்ழாஹ்வும் அவனது தூதரும் அனுமதிக்காத இப்புதிய நடைமுறையை யார் உருவாக்கினாலும் அது மார்க்கமாக அழ்ழாஹ்விடம் அங்கீகரிக்கப்படமாட்டாது.

அழ்ழாஹ் திருமறையில் ‘அழ்ழாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா?’ (அல்குர்ஆன் 42:21) எனக் கேட்கின்றான். அழ்ழாஹ் அல்குர்ஆனில் ‘அழ்ழாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!’ (அல்குர்ஆன் 7:180) எனக் கூறுகின்றான்.

மேற்குறித்த இறைவசனத்திலிருந்து அழ்ழாஹ்வின் பெயர்களின் பொருட்டால் நாம் பிரார்த்திக்க முடியும் எனும் சட்டத்தைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதே போன்று முற்காலத்தில் குகையில் சிக்குண்ட மூன்று மனிதர்கள் தமது நல்லமல்களின் பொருட்டால் பிரார்த்தித்து குகையிலிருந்து மீண்டனர் (பார்க்க: புஹாரி-5293) எனும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸும், நல்லமல்களின் பொருட்டால் நாம் பிரார்த்திக்க முடியும் என்பதை எமக்கு சொல்லித்தருகின்றது.

இதைத் தவிர ‘அவ்லியாக்களின் பொருட்டால் என்னை மன்னித்து விடு இறைவா!’ எனப் பிரார்த்தித்தால் எமது ஈமான் அற்றுப் போகும் அபாயம் அவ்வார்த்தையில் அடங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படையாகும்.

மாற்று மதங்களில் பெரிய கடவுளை அணுக, சிறிய கடவுள்களின் உதவி, ஒத்தாசைகளை வேண்டி காத்து நிற்பதைப் போன்று இன்றைய மார்க்க அறிவில்லாத முஸ்லிம்கள் சமாதிகளில் அடங்கப்பட்டிருக்கும் மனிதர்களிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அசிங்கத்தை காணமுடிகின்றது.

ஒரு ஈயைக் கூட படைக்க முடியாத எம்மைப் போன்ற பலவீனங்கள் நிறைந்த மனிதர்களை மகான்கள் என நாமே பெயர் சூட்டிக் கொண்டு பிரார்த்தனை எனும் வணக்கத்தை அவர்களுக்கு செலுத்துவது தெளிவான இறை நிராகரிப்பாகும். எமது தேவைகளை அறியும் அந்த வல்ல நாயனிடம் நேரடியாக முறைப்படாமல் பெரியார்களையும் அவ்லியாக்களையும் இடைத்தரகர்களாக நாம் ஏன் ஆக்கவேண்டும்?

காரிருளுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் பாறாங்கற்களுக்கு அடியில், ஊர்ந்து செல்லும் எறும்பைக் கூட அறியும் அந்த மகத்தான அதிபதி அழ்ழாஹ் எமது தேவைகளை மாத்திரம் நேரடியாக அறிந்து கொள்ள மாட்டானா?

இடைத்தரகர்கள் அன்றி எமது கோரிக்கை களை செவிமடுக்க அவன் சக்தியற்றவனா? அந்த ரப்புல் ஆலமீனைப் பற்றிய நம்பிக்கையும், அறிவும் சரிவரக் கிடைக்காத முஸ்லிம்களே நல்லடியார்கள் பொருட்டால் பிரார்த்தித்து ‘ஷிர்க்’ எனும் கொடிய குற்றத்தினை சுமந்து கொள்கின்றனர்.

அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் ஓரிறைக் கொள்கையிலேயே வாழ்ந்து ஷிர்க்கின் சாயல் கூட படாமல் மரணிக்கும் தௌஹீத்வாதிகளுக்கு மாத்திரமே சுவனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்திப்பது நன்மையான காரியமாக இருந்திருந்தால் முதலில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எமக்குச் சொல்லித் தந்திருப்பார்கள். அழ்ழாஹ்வின் தூதருக்கு அழ்ழாஹ்தான் இறை செய்திகளை அறிவித்துக் கொடுத்தான். அழ்ழாஹ் அறிவித்துக் கொடுக்காத எந்த ஒன்றையும் நபிகளார் (ஸல்) அவர்கள் எமக்கு மார்க்கமாகச் சொல்லமாட்டார்கள்.

‘(முஹம்மத்) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவது) அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன் 53:3,4).

அழ்ழாஹ்வும் அவனது தூதரும் நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை அனுமதிக்காத போது சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி இக்காரியத்தை நன்மை என உறுதிப்படுத்த முடியும்? ‘(நபியே!)உமது இறைவன் மறப்பவனாக இல்லை.’ (அல்குர்ஆன் 19:64).

இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அறியாததன் விளைவாகவே நல்லடியார்கள், அவ்லியாக்களின் பொருட்டால் கோரிக்கைகளை அழ்ழாஹ்விடம் முன்வைக்கும் வழிகேடு எமது சமூகத்தில் தோன்றியது என்பதே உண்மையாகும்.

‘அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அழ்ழாஹ். உண்மைக்குப் பின்னே வழிகேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?’ (அல்குர்ஆன் 10:32) அவனிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு எவரையும் இடைத்தரகர்களாக ஆக்கவேண்டிய தேவையில்லை. அவன் பிறர் மூலம் எமது தேவைகளை அறியும் அளவிற்கு பலவீனனும் அல்ல. நேரடியாகவே துஆச் செய்வோம். எந்நேரமும் எம்மீது அருளைச் செரியும் அந்த ரப்புல் ஆலமீன் எமது துஆக்களை நிச்சயம் அங்கீகரிப்பான் எனும் ஆழ்ந்த ஈமானிய உறுதியை எமது நெஞ்சங்களில் பதிப்போமாக!

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நமது தேவைகளை, கஷ்டங்களை, கோரிக்கைகளை செவியேற்பதற்கும் அவற்றை நீக்குவதற்கும் தகுதியானவன் மிகப்பெரும் கருணையாளனான அழ்ழாஹ் மாத்திரமே!

<< AL ATHAR MAY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers