கவனிப்பாரற்று விடப்படும் கண்ணியவான்கள்…
அல் அதர் மாத இதழ் > ஆசிரியர் பக்கம்
‘அழ்ழாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து ‘நான் முஸ்லிம்’ என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?’ (அல்குர் ஆன் 41:33)
இஸ்லாத்தின் அடிப்படைக் கோஷங்களில் ஒன்றே அதான் எனும் அழைப்பு. இவ்வழைப்பு அழ்ழாஹு அக்பர் (அழ்ழாஹ் மிகப் பெரியவன்) எனும் நாமத்தோடு தொடங்கி ‘லாஇலாஹ இல்லழ்ழாஹு’ (வணக்கத்துக்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர யாருமில்லை) எனும் வாசகத்தோடு முடிவடைகின்றது.
தினமும் ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பாக இவ்வாசகங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். உயர்ந்தோனாகிய அழ்ழாஹ்வையும்இ மாமனிதர் நபிகளாரையும் நினைவு கூர்ந்து மக்களை நன்மையின் பால் விரைந்து வருமாறு கூறும் நல்ல பல அர்த்தங்களை உள்ளடக்கிய அதானுக்கும் அதை மொழியும் அழைப்பாளர் முஅத்தினுக்கும் அதிகமான சுபசோபன செய்திகளை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘நாளை மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் (முஅத்தின்கள்) காணப்படுவார்கள்.’ (அறிவிப்பவர்: ஈஸா பின் தல்ஹா பின் உபைதிழ்ழாஹ் (ரஹ்)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-631) என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி முஅத்தின்கள் அழ்ழாஹ்விடம் மிக கண்ணியமானவர்கள் என்பதை எமக்கு தெளிவாக்குகின்றது.
‘நீண்ட கழுத்துடையோர்’ எனும் வாசகம் அரபியர் களிடையே ‘கண்ணியமானவர்களுக்கு’ பயன்படுத்தப்படும் இலக்கிய வாசகமாகும். அழ்ழாஹ்வின் பார்வையில் கண்ணியமானவர்களாகத் திகழும் அழைப்பாளர்கள் (முஅத்தின்கள்) இன்று மனிதர்களின் பார்வையில் அற்பமானவர்களாகத் திகழுவதுதான் துயரிலும் பெரும் துயரான செய்தி. மிகக் குறைந்த ஊதியத்தில் மிக வறுமை நிலையிலுள்ளவர்கள் மாத்திரம் பொறுப்பேற்றுச் செய்யப்படும் கடமையாக அதான் சொல்லும் பணி இன்று மாறியிருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் முதலாவது பலவீனம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அதிகமான பள்ளிகளில் வயது முதிர்ந்தவர்களும் தொழில் செய்ய இயலாதவர்களுமே முஅத்தின்களாகக் கடமை புரிந்து வருகின்றனர். இளைஞர்களோஇ நல்ல செல்வாக்குள்ளவர்களோ இப்பணிக்கு வராமைக்குக் காரணம் முஅத்தின்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியமே!
பள்ளி நிருவாகிகளின் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குக் கூடப் போதுமாகாத சம்பளத்தைத்தான் கடமை புரியும் முஅத்தின்களுக்கு மாதச் சம்பளமாகக் கொடுக்கின்றனர். இதனால் மிகப் பயங்கர வறுமையில் முஅத்தின்களின் குடும்பங்கள் வாடும் அவலத்தை நிதர்சனமாகக் கண்டுவருகின்றோம். இந்நிலையை யாரிடம் அவர்கள் முறையிடுவது? எமது நாட்டில் ஒட்டு மொத்த பள்ளிகளின் நிலமையே இதுவாகத்தான் இருக்கின்றது. பிச்சையைப் போன்று வழங்கப்படும் அப்பணத்தால்தன்னிறைவு காணமுடியாத முஅத்தின்கள் கத்தம்இ பாத்திஹாஇ மௌலூது போன்ற மார்க்க அனுமதியற்ற வழிகேடுகளைச் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இவ்வாறான தவறுகளை முஅத்தின்கள் மேற்கொள்வதற்கு மூல காரணம் யார்? பாங்கு சொல்பவர் என்றாலும் எம்மைப் போன்ற தேவைகள் உள்ள மனிதன் தான்; அவருக்கும் மனைவிஇ மக்கள் உண்டு எனும் உணர்வு எமது பள்ளி நிருவாகிகளில் அதிகமானவர்களுக்கில்லை என்பதே உண்மையாகும். அழ்ழாஹ்வே கண்ணியப்படுத்தும் இம்மனிதர்களை நாம் ஏன் கௌரவிக்கக் கூடாது?
வருடத்திற்குப் பல முறை வர்ணங்களால் எத்தனையோ பள்ளிகள் வீண் விரயமாகவும் நிருவாகப் போட்டிக்காகவும் அலங்கரிக்கப்படுகின்ற அதே வேளை அப்பள்ளியில் பல வருடங்களாகப் பணிபுரியும் முஅத்தின் மாத்திரம் எவ்வித முன்னேற்றமுமின்றி வாழ்வில் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றார். அவரை அழைத்து அவரின் பிரச்சனைகளைக் கேட்டு அவற்றுக்கு எவ்விதத் தீர்வும் கொடுக்கப்படுவதில்லை. ‘இவ்வருடமாவது எனக்கு கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டுங்கள்’ என முஅத்தின் தன்னிலையை எடுத்துச் சொன்னால் அவரை நோக்கி ‘இஷ்டமென்றால் இருக்கலாம் இல்லாவிட்டால் வீட்டிற்குப் போகலாம்’ என நச்சரிக்கும் வாசகங்களை அள்ளி வீசும் பள்ளி நிருவாகங்களைத் தான் இன்று காணமுடிகின்றது.
எமது சமூகத்தில் புற்று நோயாக வேரூண்றியிருக்கும் சீதனக் கொடுமையால் பலர் பாதிக்கப்பட்டாலும் மிக அதிகமான பாதிப்புக்கு ஏழைகளான இம்முஅத்தின்களும் இலக்காகுகின்றனர். ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு முஅத்தினின் நிலையை சற்று சிந்தித்துப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். குறைவான சம்பளம்தான் கொடுக்கப்பட்டாலும் கண்ணிய மாகவாவது முஅத்தின்கள் இன்று நடாத்தப்படுகின் றார்களா? என நாம் நோக்கினால் அடிமைகளைப் போன்று நிருவாகிகளின் வீட்டு வேலைகள் கூடச் செய்யப் பணிக்கப்படுவதைக் காணுகின்றோம். இஸ்லாமிய மார்க்க அறிவில்லாத மனிதர்கள் பள்ளி நிருவாகங்களைப் பொறுப்பேற்று நிர்வகிக்கும் துரதிஷ்டத்தினாலேயே இச்சீர்கேடு எம் சமூகத்தில் நிலவுகின்றது. ‘தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்த்துக் கொள் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-59) முஸ்லிம்களின் அடிப்படைக் கடமையான தொழுகையின் அழைப்பை மேற்கொள்பவரை கௌரவிக்காவிட்டால் வேறு யாரை நாம் கௌரவிப்பது? நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த உம்மி மஃதூம்இ பிலால் (ரழி) போன்ற முஅத்தின்கள் எப்படி சீராகவும்இ சிறப்பாகவும் வாழ்ந்தார்கள் என்பதை வரலாற்றைப் படிக்கும் போதுபுரிந்து கொள்ளலாம். பள்ளியை நிர்வகிப்பவர்கள் கட்டளையிடும் தளபதிகளாகவும்இ கடமை புரியும் முஅத்தின்கள் செவியேற்கும் கொத்தடிமைகளாகவும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால் கருப்பின மனிதராகவும் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றவராகவும் திகழ்ந்த பிலாலைத்தான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகில உலகின் முதல் முஅத்தினாக நியமித்தார்கள். இன்று வரை பிலாலை அனைத்துலகமும் நினைவு கூறுமளவிற்கு தூதர் (ஸல்) மூலமாக அவரை அழ்ழாஹ் கண்ணியப் படுத்தினான்.
அன்பார்ந்த சகோதரர்களே! பள்ளி நிருவாகிகளே! சமூகப் பொறுப்புதாரிகளே!
அழ்ழாஹ்வின் பணியை மேற்கொள்ளும் இம்மனிதர்களை உதாசீனம் செய்யாமல் நல்ல அந்தஸ்துக்களை அவர்களுக்கு வழங்குவோம்! எம்மை மேம்படுத்த நாம் சிந்திப்பதைப் போன்று அழ்ழாஹ்வின் கடமையைச் செய்ய தன்னையே அர்ப்பணித்திருக்கும் இந்த ஏழைகளைப் பற்றியும் சிந்திப்போம்! வல்ல நாயன் மக்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்கும் அந்த மறுமை நாளில் எம்மை கண்ணியப்படுத்துவான் என்பதை நினைவில் நிறுத்துவோமாக!

Comments are closed.