மரணித்த ஓருவரை குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிறதே இதுபற்றி இஸ்லாத்தின் பார்வையில் என்ன?
அல் அதர் மாத இதழ் > சந்தேகங்களும் தெளிவுகளும்
சந்தேகம்: மரணித்த ஓருவரை குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிறதே இதுபற்றி இஸ்லாத்தின் பார்வையில் என்ன?
தெளிவு: ஒரு மனிதன் பிறந்து கட்டிளமைப் பருவத்தைத் தாண்டி பருவ வயதை எட்டியது முதல் இவ்வுலகை விட்டுப்பிரிகின்றவரை தான் செய்கின்ற செயற்பாடுகள் அனைத்திற்கும் அவனே பொறுப்பாளனாக இருக்கின்றான்.
அவன் அழ்ழாஹ்விற்கும் அவன் தூதரிற்கும் கீழ்படிந்து நற்காரியங்களை மேற்கொள்கின்ற போது அதற்குரிய அனுகூலங்கள் மறுமையில் நிச்சயம் கிடைக்கும். அதேவேளை இதற்கு மாற்றமாக தனது வாழ்க்கையை அமைத்துச் செயற்படுகின்ற போது அழ்ழாஹ் நாடினால் அதன் பிரதி கூலங்களை அடைந்து கொள்வான். எனினும் ஏவல், விலக்கல்களுக்கான இந்தக்காலக்கெடு ஒரு அடியானுக்கு தொண்டைக்குழியிலிருந்து உயிர் பிரியும் வரைதான் நீடிக்கிறது.
மண்ணறையில் அடக்கப்படும்வரை அவனுக்குச் செய்யப்படுகின்ற கிரியைகளுக்கும் அவனுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது. அதைச்செய்பவர்களே அவற்றிற்குறிய பொறுப்புக்களை சுமந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளும் தவறான வழிமுறைகளும் மரணத்தைத் தாண்டி மண்ணறைவரை நீடிப்பதைப் பார்த்து வருகின்றோம்.
அந்தவகையில் ஒருவர் மரணித்தவுடன் அவரை கபனிடுவதற்கு முன்னர் தக்பீர் கட்டிவைக்கின்ற நடைமுறை எமது சமூகத்தில் பரவலாக இருப்பதைப் பார்த்து வருகின்றோம். ஆனால் மையித்தை இப்படித்தான் வைக்க வேண்டுமென்று வரையறை செய்வதற்கு குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வித ஆதாரத்தையும் எம்மால் காண முடியவில்லை எனவே உலக வழக்கில் ஒரு மனிதன் மரணித்தால் அவனது இரு கைகளும் நீட்டியே வைக்கப்படும். எனவே அவ்வாறு செய்வதே உகந்தது.
தக்பீர் அமைப்பில் வைத்தாலும் குற்றமில்லை. ஆனால், சிலர் ஜனாஸாக்களுக்கு தக்பீர் கட்டித்தான் வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதுதான் நபி வழி என்றும் நம்புகின்றனர்.இவ்வாறான நம்பிக்கையின் அடிப்படையில் வைக்கப்பட்டால் அது மார்க்கத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத, காட்டித் தராத ஒன்றை மார்க்கமாக்கிய குற்றத்திற்கு உள்ளாக நேரிடும்.
ஜனாஸாக்களின் கைகளை தக்பீர் கட்டித்தான் வைக்க வேண்டும் அதுதான் நன்மையான காரியம் என்ற தவறான நம்பிக்கை எமது சமூகத்தில் நிலவுவதால் இவ்வாறு செய்வதை தவிர்ந்து கொள்வது நல்லது. அப்படியல்லாமல் ஜனாஸாக்களின் கைகளை தக்பீர் கட்டித்தான் வைக்க வேண்டும் அதுதான் நன்மையான காரியம் என நாம் கருதுவோமாயின் அழ்ழாஹ்வும், ரஸூலும் கற்றுத்தராத ஒரு அம்சத்தை நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதா என்பதை எமது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கிறது.
எனினும் சிலர் தக்பீர் முறையில் கட்டி வைப்பது நன்மையான காரியமே தவிர பாவமான காரியம் இல்லையே என வாதிடக்கூடும். அவ்வாறு சொல்பவர்களிடம் மையித்தை ருகூவிலோ, சுஜுதிலோ வைக்கலாமா என வினவினால் நகைச்சுவையாக சிரிப்பர். எனினும் தக்பீர் முறையில் வைப்பதை விட ருகூஃ, சுஜுது முறையில் வைப்பதானது அதைவிட நல்ல காரியமே. அது ஒன்றும் பாவமான காரியம் இல்லையே எனக்கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? இக்கேள்விக்கு என்ன பதிலோ அதுவே அக்கேள்விக்குறிய பதிலுமாகும்.
எனவே உள்ளதை உள்ளபடி செய்து ஜன்னாவை அடைவதோடு இல்லாத நூதனங்களை தவிர்ந்து நரகிலிலிருந்து பாதுகாப்புப் பெறுவோமாக. அழ்ழாஹ்வே மிக அறிந்தவன்.
சந்தேகம்: பெண் மையத்தை அடக்கம் செய்யும் போது கப்றுக்கு மேலாக மறைப்பை ஏற்படுத்திய (துணியை பந்தல் போன்ற அமைப்பில் பலபேர் பிடிக்க) பின்னர் அடக்கம் செய்கிறார்களே இதுபற்றி இஸ்லாத்தின் பார்வையில் என்ன?
தெளிவு: ஒரு பெண் மரணித்து விட்டால் மண்ணரையில் அடக்கம் செய்யப்படும்; வரை இஸ்லாம் சில விடயங்களை சொல்லித்தருகின்றது. அவற்றை சுருக்கமாக இங்கே தருகின்றோம்;.
1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும். பெண்களது ஜனாஸாவை ஆண்கள் குளிப்பாட்டுவது கூடாது. மரணித்த பெண்ணின் கணவன் மட்டும்தான் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். மரணித்த ஆணின் மனைவி மட்டும்தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.
2. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா (ரழி) அறிவிக்கும் போது ”அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம் போட்டோம்” என்று குறிப்பிடுகிறார். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரழி), நூல்:ஸஹீஹ்முஸ்லிம் 1712)
இவ்விரண்டும் பெண் ஜனாஸாவுக்கு செய்யப்பட வேண்டிய காரியங்களாகும். இது தவிர பெண் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லல், ஒப்பாரி வைத்து அழுதல் போன்ற ஹராமான அம்சங்கள் உயிரோடு உள்ளவர்களால் கடைப்பிடிக்கப் படுபவைகளாகும். இதற்கப்பால் பெண் ஜனாஸாவின் கப்றுக்கு மேலாக மறைப்பை ஏற்படுத்திய பின்னர் அடக்கம் செய்ய வேண்டுமென்பதற்கு எந்த ஆதாரத்தையும் எம்மால் காண முடியவில்லை. (அழ்ழாஹ்வே மிக அறிந்தவன்)

Comments are closed.