நாம் யாரை விமர்சிக்கின்றோம்?
விமர்சனம்:
நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் உலமாக்களை விமர்சனம் செய்கின்றீர்கள். அவர்களை விமர்சிக்காமல் பிரச்சாரம் செய்தால் மிக நன்றாக இருக்குமே. மனிதன் என்ற அடிப்படையில் அவர்கள் விடும் தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால் என்ன? உலமாக்களை விமர்சிப்பதால் மீண்டும் மீண்டும் பகைமைதான் தோன்றும். அவர்களை விமர்சிப்பதால் உங்களுக்கு என்ன இலாபம்?
விளக்கம்:
நாம் யாரையும் கண்மூடித்தனமாக விமர்சிக்கவில்லை. அவ்வாறு விமர்சிக்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. ‘உலமாக்கள் கண்ணியமானவர்கள்’ என்பதை நாம் நிராகரிக்கவில்லை. மனிதன் என்ற அடிப்படையில் உலமாக்களின் சொந்த வாழ்வில் ஏற்படும் குறைகளை நாம் விமர்சிப்பதுமில்லை. அவ்வாறு விமர்சிப்பது அநாகரீகமானது என்றும் கூறுகின்றோம்.
அதேவேளை உலமாக்களின் கடமைகளில் ஏற்படும் சீர்கேடுகளை பகிரங்கமாக விமர்சிக்கின்றோம். ஏனெனில், அவர்கள் மார்க்க அறிவை மத்ரஸாக்களில் கற்றது மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கே. கற்ற கல்வியை உரிய நேரத்தில் மக்களுக்கு எடுத்துரைக்காமல் மறைப்பதை நாம் விமர்சிக்கின்றோம்.
இவ்வாறு மக்களுக்கு அஞ்சி சத்தியத்தை மறைப்பதை அழ்ழாஹ்வும் அருள்மறையில் விமர்சிக்கின்றான்.
‘மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அழ்ழாஹ்வும் சபிக்கின்றான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்’ (2:159)
அழ்ழாஹ்வின் மார்க்கத்தை மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் துணிகரமாக எடுத்துரைக்கும் உலமாக்களும் எம் சமூகத்தில் இல்லாமலில்லை. அவர்களை நாம் மெச்சுகின்றோம். அவர்களுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். அவர்கள் தன்னலம் பாராது தெளிவான அடிப்படைகளை மக்களுக்கு எடுத்தியம்புகின்றார்கள். அதற்கான கூலியை உயர்வான அழ்ழாஹ்விடம் நிச்சயம் மறுமையில் பெறுவார்கள்.
இதற்கு மாற்றமாக மக்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை அறிந்தும் அறியாதவர்களைப் போல் பாவனை செய்யும் உலமாக்களும் இஸ்லாத்திற்கு எதிரான அநாச்சாரங்களை முன்னின்று நடாத்தி வைக்கும் பெருந்தகைகளும் எமது சமூகத்தில் நிறைந்திருக்கின்றார்கள் என்பதுவே இன்றுள்ள உண்மையாகும்.
அழ்ழாஹ் ஹராமாக்கிய சமூகக் கொடுமையான வரதட்சனையை இன்று ஊக்குவிப்பவர்கள் யார்? அனைத்து மதத்தவராலும் எதிர்க்கப்படும் சீதனக் கொடுமைக்கு ‘அல்பாத்திஹா’ சொல்லி உரமிடுபவர்கள் யார்? எமது சமூகத்திலுள்ள உலமாக்களே. இதனை மறுக்க முடியுமா? இன்று பள்ளிவாயல்களில் தொழுகைக்காக வரும் மக்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
ஒவ்வெருவரும் அவரவர் விரும்பிய முறையில் தொழும் காட்சியைக் காணமுடிகின்றது. அன்றாட வணக்கமான தொழுகையைக் கூட சரிவர மக்களால் நிறைவேற்ற முடியவில்லை. அழ்ழாஹ்வின் தூதர் தொழுத தொழுகை முறை தெட்டத் தெளிவாக ஹதீஸ் கிரந்தங்களில் கூறப்பட்டிருந்தும் மத்ஹபு அடிப்படையில் அதிகமானோர் தொழுகின்ற காட்சியை காணும் போது மன வேதனை அடைகின்றோம்.
பள்ளிக்கு வரும் மக்களுக்கு ‘நபிவழித் தொழுகையை’ எந்த மௌலவி சொல்லிக் கொடுக்கின்றார்? ஆகக் குறைந்தது ‘ஸப்பு’களில் எப்படி நிற்க வேண்டும்? என்ற ஆரம்ப அடிப்படையாவது சொல்லிக் கொடுக்கின்றார்களா? இன்று எத்தனையோ மக்கள் தாயத்து அணிவதிலும், ஜின் வைத்தியத்திலும், குறி, சாஸ்திரம் பார்ப்பதிலும் ஈமானை இழந்து வருகின்ற போது இம்மார்க்க அறிஞர்கள் தொடர்ச்சியான உறக்கத்தில் இருப்பது பெரும் வியப்புக்குரிய செய்தியல்லவா?
யாராவது ஒருவர் இவர்களிடம் ஒரு ஸுன்னாவை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி அவற்றை பகிரங்கமாக அமுல்படுத்துங்கள் எனப் பணித்தால் ஓடி ஒளிவது ஏன்? சத்தியத்தை எடுத்துரைப்பதில் அழ்ழாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாமல் பாடுபடும் மக்களை எதிர்ப்பதற்கு முன்வரும் இவ்வுலமாக்கள் பித்அத்துக்களை எதிர்ப்பதில் மாத்திரம் ஏன் தயங்குகிறார்கள்?
‘ஊர் ஒற்றுமை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும், இப்போது இதுவெல்லாம் வேண்டாம்’ என நொண்டிச் சாட்டுக்களைக் கூறி எத்தனை நாளைக்கு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் போகின்றார்கள்? மார்க்கத்தில் உள்ளதை அப்படியே சொல்வதற்கு இம்மார்க்க அறிஞர்கள் தயங்குகின்ற போதுதான் நாம் விமர்சிக்கின்றோம்.
பள்ளிவாயல்களில் பெருநாள் தொழுகையை தொழவைப்பது நபிகளாரின் கலாசாரமல்ல என்பதைத் தெரிந்து கொண்டே பள்ளிகளில் தொழவைப்பது தெளிவான வழிகேடில்லையா? கத்தம், பாத்திஹா, மௌலூது, மீலாது, கொடியேற்றம், கந்தூரி என அப்பாவி மக்களை அதாள பாதாளத்தில் தள்ளுகின்ற காரியத்தை மேற்கொள்ளும் உலமாக்களை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்?
உலமாக்கள் முஸ்லிம் சமூதாயத்தை இன்று சரியாக வழிநடாத்தவில்லை என்பதை அதிகமானோர் ஏற்றுக் கொண்டாலும் வெளியே அக்கருத்தை சொல்வதற்குத் தயங்குகின்றார்கள். எம்மைப் பொறுத்த வரை இஸ்லாம் அழ்ழாஹ்வின் சொத்து. (பார்க்க: அல்குர்ஆன் 39:3) அது அனைத்து மக்களுக்கும் அதன் தூய்மையான வடிவில் எடுத்துரைக்கப்படல் வேண்டும்.
அதில் யாராவது கூட்டல் குறைத்தல், மழுப்பல் வேலைகளைச் செய்தால் நாம் விமர்சிக்கத் தயங்க மாட்டோம். அவ்வாறு நாம் விமர்சிப்பதால் என்ன லாபம்? என்று கேட்டால் எமக்கு எந்த இலாபமும் கிடையாது. இஸ்லாத்திற்கே இலாபம் கிடைக்கின்றது.
‘ஏழு வருடம், எட்டு வருடம் மத்ரஸாக்களில் கற்றதால் சரியான பத்வாவைத்தான் உலமாக்கள் சொல்வார்கள் அவற்றுக்கு ஆதாரமெல்லாம் நாம் தேடவேண்டியதில்லை’ என்று அசமந்தப் போக்கிலும் ஆழ்ந்த உறக்கத்திலும் இருக்கும் பொதுமக்கள் நிச்சயம் சிந்திப்பார்கள்.
மார்க்கத்தை சுயமாகப் படிக்க முன்வருவார்கள். எப்போது பொதுமக்கள் மார்க்க அறிஞர்களிடம் சென்று கேள்வி கேட்டு ஆதாரத்தை அறியும் நடைமுறை தோன்றுகின்றதோ அப்போதுதான் இச்சமூகத்திற்கு விடுதலை கிடைக்கும். ஏமாறுபவர்கள் இருக்கும் காலமெல்லாம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
எம்மோடு உலமாக்கள் கோபித்துக் கொண்டாலும் அவர்களோடு எமக்கிருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டாலும் அநியாயங்களுக்கு நாம் துணைபோகக்கூடாது எனும் அடிப்படையை ஒரு கொள்கையாகவே நாம் வைத்திருக்கின்றோம்.
அழ்ழாஹ் அநியாயத்தை எதிர்ப்பதை எவ்வாறு ஏவுகின்றான் என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அழ்ழாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள.; (4:135,5:8)
ஆகவே, உலமாக்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்களின் சொந்த வாழ்வை குறைகூறுவது போன்றவைகள் எவ்வாறு தவறானதோ அதே போன்று அழ்ழாஹ்வின் மார்க்கத்தை அநாச்சார மார்க்கமாக அவர்கள் சித்தரிக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பதும் தவறானதுதான் என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments are closed.