Skip to content

சோதனையில் சாதனை-2

April 26, 2009

அல் அதர் மாத இதழ் > தஃவா களம்

அல் அஹ்மத் அல் அதரி
abooahmed@gmail.com

கடந்த இதழில் தஃவாக் களத்தில் நபிமார்கள் சந்தித்த சோதனைகளிலும் அவர்கள் அடைந்த சாதனைகள் பற்றி நோக்கினோம். நாம் ஏலவே குறிப்பிட்டவாறு இவ்விதழில் நபிமார்களின் இவ்வழிமுறையில் தாருல் அதர் சந்தித்த சோதனைகளையும் அடைந்த சாதனைகளையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றோம்.

தாருல் அதரின் குறிக்கோள் சத்தியத்தை இலக்காக கொண்டு அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஸுன்னாவை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்யும் ஒரு உயரிய சமூகமாகவே இருந்தது. அந்த வகையில்தான் சகோதரர் பி.ஜே அவர்களது தஃவா எம்மை வந்தடைந்ததன் பின்னர் பிற்போக்குத்தனமான அகீதாவையும், மத்ஹபு அபத்தங்களையும் கொண்டிருந்த அறபு மொழி நூற்களை எல்லாம் அடையாளம் கண்டு எமது பிரதேசத்தில் தூய மார்க்கத்தை பிரச்சாரம் செய்ய ஒரு சமுதாயம் உருவானது.

தற்போது போன்று சத்தியத்தைக் கற்கவும், ஆய்வுகள் மேற்கொள்வதற்குமான வசதிகள் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எம்மிடம் காணப்படவில்லை. எனவே, இருப்பதற்குள் ஓரளவாவது சத்தியத்தை சொல்பவர்கள் என நாம் அடையாளம் கண்ட சிலருடன் இணைந்து இப்பிரச்சாரத்தை மேற்கொண்டோம். ஆனால், காலவோட்டத்தில் நாம் தவ்ஹீத்வாதி என்று நினைத்தவர்கள் எல்லாம் தப்லீக் கொள்கையையும், இஹ்வானிஸத்தையும் ஆதரிப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவதானித்தோம். அது மாத்திரமன்றி, சிலர் மொத்தமாக  தவ்ஹீத் பிரச்சாரத்தின் எதிரிகளாகவே காணப்பட்டனர்.

மற்றும் சிலர் களமும், வளமும் கிடைத்தவுடன் ஸலபுக் கொள்கை, சுமுகமான தஃவா, ஊர் ஒற்றுமை, மூத்த உலமாக்களுக்கான மரியாதை மற்றும் அரபுலக தஃவா முறை என்றெல்லாம் சத்தியப் பிரச்சாரத்திலிருந்து கரைந்து கொண்டே சென்றனர். மேலும், மூத்த தவ்ஹீத் அறிஞர்களான அல்பானி, ரபீஃ அல் மத்ஹலி, சகோதரர பி.ஜே போன்றோரை மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கவும் துணிந்தனர்.
ஸுன்னாக்களை சில்லறைகள் என்று கூறிக்கொண்டிருந்த இஹ்வானிஸத்தின் தாக்கத்தினால் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்ற ஒற்றுமைக் கோஷத்துடன் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, மத்ஹபுவாதிகள் என்ற பாகுபாடின்றி தவ்ஹீத் சாயம் பூசியவர்களும் இரண்டறக் கலந்தனர்.

ஸுன்னாவுக்காக தியாகம் செய்தவர்களை நோக்கி தொழுகையில் ஒரு ரக்அத்திலேயே ஆயிரக்கணக்கான கருத்து முரண்பாடுகள் உள்ளன என்று கூறி ஸுன்னா மீதான பற்றை மெல்ல மெல்ல குறைக்கச் செய்தனர். அடிக்கடி மிம்பர் மேடைகளில் ஸுன்னாக்களை சில்லறைகள் என்றும், கிளைப் பிரச்சினைகள் என்றும் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டேயிருந்தனர்.

இங்குதான் தாருல் அதர் ஒரு விடயத்தை அவதானித்தது. சீதனம் போன்ற சமூகக் கொடுமைகள், நவீனவாத வழிகேடுகள் அவ்வாறே காணப்பட தவ்ஹீத் சாயம் பூசி வேறொரு புதிய கொள்கை ஊடுருவுவதை அவதானித்தது. தமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தூதருடைய ஸுன்னாவை அறிந்து செயற்பட்டு வந்த சகோதரர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவேதான் இக்கொள்கைவாதிகள் தாருல் அதர் என்கின்ற நிர்வாகப் பெயரில் புதியதொரு அமைப்பினைத் தோற்றுவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

தோற்றத்தில் இருந்தே அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஸுன்னாவுக்கு நேர்முரணான மத்ஹபு நூற்களில் நிறைந்து காணப்படும் அசிங்கங்களையும், அபத்தங்களையும் வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறினோம். இதனால் மூத்த உலமாக்கள் என்போர் எம்மை மிகக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.
சமுதாயத்தில் மார்க்க ரீதியான எந்த முன்மாதிரியுமில்லாது வேரூன்றிப் போயிருந்த நூதன அனுஷ்டானங்களை தோலுரித்துக் காட்டினோம். குறிப்பாக பள்ளிவாயல்களில் அரங்கேற்றப்படும் பித்அத்களை எடுத்துக் கூறியதால் பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட ஒரு பெரும் சாராரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம். சில போது ஹதீஸ்கள் என நினைத்துக் கொண்டு தவ்ஹீத்வாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் செய்து வந்த அமல்களை விமர்சித்த போது அவர்களும் எம்மை எதிர்க்கவே செய்தனர்.

மார்க்கச் சட்டங்களைப் பொறுத்தவரைக்கும் எதனையும் அறிவு ரீதியாகவும், ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இவ்விடயத்தில் அழ்ழாஹ்வை மாத்திரம் அஞ்சி எத்தகைய அறிஞராக இருந்தாலும் அவர்களது கருத்துக்களை அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஸுன்னா என்ற இரு உரைகல்லிலும் உரைத்துப் பார்க்க நாம் தவறவில்லை. இவ் ஆய்வு விடயத்தில் நாம் முயற்சி செய்து அடைந்தவைகள் எமக்கு சத்தியமே. மற்றொரு சாரார் தாராளமான ஆய்வு மூலம் வேறொரு கருத்தை அடைந்திருந்தாலும் சரியே. இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.’ (அறிவிப்பவர்: அம்ர் பின் அல் ஆஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7352)

அந்த வகையில் சர்வதேசப் பிறை உட்பட பல்வேறு மார்க்க உலமாக்களால் ஜீரணிக்க முடியாத முடிவுகள் வந்த போது, இக்கட்டத்தில்தான் நாம் மிகக் கடுமையான சோதனைகளை எதிர்நோக்கினோம். இன்ஷா அழ்ழாஹ் அடுத்த இதழில் நாம் அடைந்த சோதனைகளை விபரமாக உங்களோடு பகிர்ந்து கொள்வோம்.

<< AL ATHAR APRIL 09

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers