Skip to content

சோதனையாகி விட்ட சோதனைச் சாவடிகள்

April 22, 2009

அல் அதர் மாத இதழ் > ஆசிரியர் பக்கம்

எமது நாட்டின் பாதுகாப்பு நலன்கருதி அமைக்கப்ட்ட அரண்களே பரவலாகக் காணப்படும் இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவடிகள். இந்நாட்டின் யுத்த வரலாற்றோடு ஆரம்பமான அம்சங்களில் இச்சோதனைச் சாடிகள் மிக முக்கியமானதாகும்.

நாட்டின் இயல்பு நிலையையும், பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கிய காலத்தில் ஆயுதங்களும், அழிவு தரும் சாதனங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்து விடக் கூடாது எனும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இச்சோதனைச் சாவடிகள் பொது மக்களுக்கு மிகவும் சோதனையாக மாறி வருவதுதான் மிக வேதனையான விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், உதாரணமாக, மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் செல்வதானால் சுமார் ஏழு சோதனைச் சாவடிகளில் பயணிகள் சோதிக்கப்படுகின்றனர். சில சோதனைச் சாவடிகளில் சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு மேலும் செல்கின்றது. அதே போன்று சாதாரணமாக மட்டக்களப்பில் இருந்து அம்பாறைக்குச் செல்வதென்றாலும் ஐந்து சோதனைச் சாவடிகளைக் கடந்தாக வேண்டியுள்ளது.

இங்கு சில இடங்களில் பயணிகள் உடல்கள் முழுவதுமாக தடவப்பட்டும் சோதிக்கப்படுகின்றனர். இதில், குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் என்னவெனில், கிழக்கு மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினர் முழுமையாக வெளியேற்றப்ட்ட பின்னர் மிகவும் உச்சகட்ட யுத்தகால சூழ்நிலைகளில் இல்லாத அளவிற்கு ஒரு சில இடங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுதான்.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகளைப் பொறுத்த வரைக்கும் காலை வேளைகளில் வெறும் 30 கி.மீ, 40 கி.மீ  பயணம் செய்து தமது அலுவலகங்களை ஒரு மணி நேரத்தில் சென்றடையக் கூடியவர்கள் மேலும், 30, 40 நிமிடங்கள் தாமதமாகித்தான் சென்றடைய வேண்டியுள்ளது. அரச ஊழியர்களுக்கென்று இங்கு விஷேட நடைமுறைகள் எதுவுமில்லை.

இதே போன்று ஏனைய தொழிலாளர்களும், நாளாந்த கூலி வேலை செய்பவர்களும் கூட அடையாள அட்டைகள் பதியப்படுவதன் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் என்ற பாகுபாடின்றி இறக்கியே விடப்படுகின்றனர். இவ்வாறு இறக்கி விடப்படுபவர்கள் சில மீட்டர்கள் வெயிலில் நடந்து சென்று தமது வாகனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

இச்சோதனைச் சாவடி வரலாற்றைப் பொறுத்த வரைக்கும் ஒரு சில சந்தரப்பங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், பாரிய அளவில் இங்கு சாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாதுகாப்புத் தரப்பினரே ‘நாளாந்தம் அதே வேளைக்கு அதே முகங்கள்’ என்று கூறிக் கொள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் வெறும் 5 மஅ  களுக்குள் அடுத்த சோதனைச் சாடிகள் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் சில குறித்த இடங்களில் பயணிகளை வெறுப்பூட்டும் விதமாக ஒரு சில பாதுகாப்புத் தரப்பினரும் நடந்து கொள்கின்றனர்.

ஆடைகளை கலைத்து வெளியில் போடுவது, ஆவணங்களை பிரித்து விட்டு அப்படியே தூக்கி ஒரு பக்கமாக வைத்து விடுவது, மன ஆறுதலுக்காகவேனும் சற்று பயணிகள் அவற்றை சரி செய்ய உதவுவதுமில்லை.

இவ்வாறாக, மிகக் கூடியளவு சிரமங்களை எதிர்நோக்குவது இ.போ.ச.பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் பயணிப்போரே. மாறாக, சொந்த வாகனங்களிலோ, மோட்டார் வாகனங்களிலோ பயணம் செய்வோர் பெரிதாக அலட்டிக் கொள்ளப்படுவதில்லை. சில நேரங்களில் படையினரே உயர் அதிகாரிகளுக்குச் சொல்லுமாறும் கூறுகின்றனர்.

கடந்த தேர்தல் காலங்களில் தமது விஞ்ஞாபனங்களையும், செயற்திட்டங்களையும் விளக்கும் போது தாம் அதிகாரத்திற்கு வந்தால் தேவையற்ற சோதனைச் சாவடிகளை அகற்றுவோம் எனக் கூறியோரும் இன்னும் அதிகாரத்தில் உள்ளனர். இவர்களால் உண்மையில் இவற்றைச் செய்ய முடியாதுள்ளதா? அல்லது தேர்தலோடு மறந்துவிட்டார்களோ? தெரியவில்லை.

வடக்கில் படையினர் பெற்று வரும் இராணுவ வெற்றிகளை நாம் உரிய இடத்தில் வைத்து மதிக்கின்ற அதே வேளை சில பாதுகாப்புத் தரப்பினர் மிகக் கேவலமாகவும் நடந்து கொள்கின்றனர். சோதனைச் சாவடிகளில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு சோதனைக்குட்படுத்தாது விடுவது, பத்திரகைகள் வாங்கி கேட்பது, இதனைவிட சில பார ஊர்திச் சொந்தக்காரர்களிடம் இலஞ்சமாகப் பணமும் வாங்குவதாகத் தெரிய வருகின்றது.

சோதனை நடவடிக்கைகளின் போது இரு பொருட்களில் ஒன்றை எடுக்கவா எனக் கேட்பது (குறிப்பாக பெண் பொலிஸார்) போன்ற அநாகரீகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
வெளிநாடுகளுக்குச் செல்லலோ, கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய தேவைகளுக்கோ பொலிஸ் நிலையங்களில் நற்சான்றிதழ் பெற வேண்டிய நடைமுறை உள்ளதால் அந்த நற்சான்றிதழைப் பெற பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வோர் மிகக் கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றார்கள்.

தனது பிரச்சினைகளைக் கூற வருபவர்களிடம் பணம் கேட்பது, பொலிஸ் ஊழியர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் அடித்துக் கேட்பதும், வெளியிடங்களில் புகைபிடிக்க கூடாதென அரசு தடை செய்திருந்தும்  சிகெரட் பக்கெற்றுக்கள் வாங்கி கேட்பது போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி தமது கண்ணியத்தையும், கௌரவத்தையும் காத்துக் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்ட்டவர்கள் இவ்விடயத்தில் மக்கள்நலனைக் கருத்திற் கொண்டு மேலதிக சோதனைச் சாவடிகளை அப்புறப்படுத்தி, மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையிலான நல்லுறவை வளர்க்க முன்வரவேண்டும்.

இந்த வேளையில் தாருல் அதர் அண்மையில் வன்னிக்கள முனையில் பாதிக்கப்பட்ட படையினருக்கும், மக்களுக்குமாக செய்திருந்த மனிதநேயமிக்க இரத்ததான நிகழ்வொன்றையும் நடாத்தியிருந்தது என்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமெனக் கருதுகின்றோம்.

<< AL ATHAR APRIL 09

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers