Skip to content

மணவாழ்வில் மகிழ்வுற…

April 22, 2009

அல் அதர் மாத இதழ் > பெண்கள் பகுதி

S.L.M நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

கடந்த இதழில் கணவன்மார் சிலர் தமது மனைவிகள் தொடர்பாக எழுப்புகின்ற சில அங்கலாய்ப்புக்களைப் பார்த்ததோடு, திருமணத்திற்குப் பின்னர், தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் மனைவி அமைந்திருக்கவில்லை எனப் பொதுவாகக் கூறுகின்றனர்.

இத்தகைய எதிர்பார்ப்புக்களில் சில நியாயமானதாகவும், சில நியாயமற்றதாகவும் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய குறைபாடுகளை கூடியளவு தவிர்க்க திருமணத் தேர்வின் போதும், மணம் முடித்த பின்பும் மனைவியில் அமைந்திருக்க வேண்டிய பல அம்சங்களை மார்க்கம் சொல்லித் தருகின்றது.

அந்த வகையில் திருமணத் தேர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களில் இரண்டை கடந்த இதழில் நோக்கினோம். இவ்hறான பண்புகள் உள்ளவர்களைத் தேர்வு செய்வதனால் பல அனுகூலங்களைப் பெறமுடியும்.

எனவே, இவ்விதழில் மூன்றாவது பண்பிலிருந்து தொடர்வோம்.

03. பாசமும், நற்குணமும் நிறைந்ததவளும், பிள்ளைகளைப் பெற்றடுக்க கூடியவளும், (கணவனை வெறுத்தொதுங்காமல்) கணவனிடமே மீண்டு வரக்கூடிய பெண்

1.பாசம் நிறைந்தவள்:

இங்கு நபிகளார் குறிப்பிடும் பிரதான அம்சங்கள்; இல்லாத பெண்ணோடு வாழ்வதென்பது எல்லோருக்கும் பொருத்தமான ஒன்றல்ல. இவற்றில் ஒன்று இல்லாத போதும் அது பெரும்பாலும் தலாக்கை நோக்கியே இட்டுச் செல்லும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் மிக முக்கியமான பண்பே பாசாகும். மணவாழ்வை மகிழ்விக்கும் ஆணிவேரே அதுதான். குறிப்பாக இளம் தம்பதிகளை ஆட்கொள்ள வைத்திருப்பதில் பாசமே முன்னிலை வகிக்கின்றது.

பாசம் நிறைந்த நெஞ்சங்களில் ஏனைய பண்பாடுகளும் அமைந்திருக்கும். அழ்ழாஹ்வின் பாசம் என்பது அனைத்து அம்சங்களையும் ஆட்கொண்டதாகக் கூறும் இறைவன், ‘எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (அல்குர்ஆன் 07:156) எனக் கூறுகின்றான். மேலும், ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ நீங்கள் இரக்கம் காட்டுங்கள்.

இரக்கம் காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள். அழ்ழாஹ் உங்களை மன்னிப்பான்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரழி), நூல்: அஹ்மத் 6349)

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கணவன், மனைவியருக்கிடையே அழ்ழாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் பாசப்பிணைப்பானது  அழ்ழாஹ்வின் அத்தாட்சியிலுள்ளது என இறைவன் குறிப்பிடுவதானது இதன் மகத்துவத்தை உணர்த்துகின்றது.

‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாத இப்பாசத்தையுடைய மனைவி அமைவது பாக்கியமே. மாடாக உழைத்து, பகல்முழுவதும் வியர்வை சிந்தி சிரமப்பட்டு வரும் கணவனை அன்பாக அணுகும் பாசமிகு மனைவி பற்றி பெருமனார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

‘ பெண்களிடையே மிக உயர்ந்தவள் யார் எனக் கேட்கப்பட்டது. அவன் (கணவன்) அவளைப் பார்த்தாள் அவனை மகிழ்வுறச் செய்வாள். அவன் ஒன்றை ஏவினால் அவனுக்கு வழிப்படுவாள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: நஸயி 8686) பணமிருந்தும், பட்டமிருந்தும், பாசமில்லாத இடங்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும் கணவன்மார்களைக் கண்டாவது இளையவர்கள் நல்ல நிய்யத்துக்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பிள்ளைகளைப் பெற்றெடுக்க கூடியவள்:

பிள்ளைப் பாக்கியமென்பது இறைவன் தான் நாடியோருக்கு வழங்கும் விஷேட அன்பளிப்பாகும். இதனையே அழ்ழாஹ், ‘வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான்.

தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.(அல்குர்ஆன 42:49,50) என்று கூறுகின்றான்.

‘ஆசைக்கு ஒன்று இல்லையே’ என்று தவிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அதன் பெறுமதி. மேற்படி நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் தன்மை பற்றி நம்மில் பல இளைஞர்களுக்கு பொருட்டே கிடையாது.

சீரழிந்த, தரங்கெட்ட சினிமாத்தாக்கத்தால் பிள்ளை குட்டி பெற்றக் கொள்வதெல்லாம் இப்போது எதற்கு, என்னவளோடு இணைந்து இப்பூவுலகை ரசிக்க ஆயுள் போதாது…. இப்படியெல்லாம் சொல்பவர்கள்

‘நீங்கள் பாசம் நிறைந்தவளும் பிள்ளைகளைப் பெற்றெடுக்க கூடியவளுமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். நான் உங்கள் மூலம் சமுகங்களால் மிகைத்தவனாக இருப்பேன்;’ (அறிவிப்பவர்: மஃகல் பின் யசார், நூல்: அபூதாவூத் 1767) எனும் நபிகளரின் புகழாரத்தில் பங்கெடுக்க முன்வரக்கூடாதா?

பிள்ளைகள் இல்லையென்பதால் பிரிந்து சென்ற தம்பதிகளும் ஏராளம். காழி நீதிமன்றங்களை அணுகினால் புள்ளி விபரம் பெற முடியும். எனவே, ஒரு குடும்ப பிண்ணனியைப் பொறுத்து பிள்ளைப்பாக்கியம் பெறக்கூடியவளா? என்பதைத் தெரிந்து திருமணம் செய்வதன் மூலம் பின்னைய விபரீதங்களைத் தவிர்க்கலாம்.

3. (கணவனை வெறுத்தொதுங்காமல்) கணவனிடமே மீண்டு வரக்கூடியவள்:

இன்றைய சீதனக் கலாசாரத்தின் மிகப்பாரதூரமான அம்சங்களில் ஒன்றுதான் தம்பதிகளிடையே அவ்வப்போது விரிசல்கள் ஏற்படும் போது பிரிந்திருப்பது.அதிக ரோஷம், கோபதாபம், பழிபோடல் போன்ற பல காரணங்களால் கணவனே என்னிடம் இறங்கி வர வேண்டும் என எதிர்பார்த்து பல நாட்களை கழிக்கின்ற பெண்களும் எம்மில் உள்ளனர்.

தான் எதிர்பார்த்த அதேபொருள் என்ன பாடுபட்டேனும் அவர் வாங்கி வரவில்லை எனக் கூறி கணவரிடம் வழமை போல் மகிழ்வாக நடக்காமல் முகம் சுழிக்கின்றவர்கள் இக்காரணத்தால் கணவனது உடலியல் தேவைகளையும் நிறைவேற்றத் தவறுகின்றார்கள்.

இவ்வாறு நியாயமின்றி படுக்கயைறைக்குச் செல்ல மறுக்கும் பெண்கள் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில்,

‘ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வரமறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 5193)

04.மென்மையும், இனிமையும்

இன்று ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்கின்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லையென பல யுவதிகள் கூறினாலும் நடைமுறையில் இச்சித்தாந்தத்திற்குள் ஈர்க்கப்பட்டவர்களாகவே உள்ளனர். எங்களில் என்ன குறை? எனது தந்தை உங்களுக்கு என்ன குறைவைத்தார்? நானும் கைநிறைய மாதாமாதம் செலவு செய்கிறேன் என்று கூறி கணவன்மார்களை தூக்கி எறிந்து பேசும் மனைவிகளும் உள்ளனர்.

வருடமெல்லாம் நன்றாக நடந்த கணவன் தனது எதிர்பார்ப்பை உரியவேளைக்கு நிறைவேற்றவில்லை என்பதற்காக ஒரே நிமிடத்தில் நன்றி கெட்டத்தனமாகப் பேசியும் விடுகின்றனர்.

‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர், என்று கூறினார்கள். அப்போது, இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள், என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள்.

(அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்துகொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டுவிட்டாளானால், உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை, என்று பேசிவிடுவாள் என்றார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 29)

பெண்ணைப் பொறுத்தவரை வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு போன்ற ஒவ்வொன்றிலும் மென்மையும், பொறுமையும் பெண்ணுக்கு இன்றியமையாததே. எனவேதான், ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நாளை மறுமையில் நரகம் ஹராமாக்கப்படுவோரைப் பற்றிச் சொல்லவா?’ என்று கேட்டுவிட்டு இலகுதன்மையுள்ள, மென்மையுள்ள ஒவ்வொருவருக்கும் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: அஹ்மத் 3800)

05.வணக்கமும், பத்தினித்தன்மையும்

இன்றைய இளைஞர்கள் தனது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் போது கவனத்திற் கொள்ளத் தவறும் மிகப்பெரும் அம்சம் ஆன்மீகமாகும். பால் கவர்ச்சிக்கும், பௌதீகத்தாக்கத்திற்கும் உள்ளாகும் இக்கால இளைஞர்கள் பலர் தனக்கு அமையப் போகின்றவள் முதலில் அழ்ழாஹ்வை மட்டும் அழைப்பவளா? ஐவேளைத் தொழுகையை ஒழுங்காக நிறைவற்றி வருபவளா? போன்ற விடயங்களை கண்டு கொள்வதில்லை.

மேனி அழகும், கவர்ச்சியான பேச்சும் கண்களை மறைத்திருப்பததனால் வணக்கவாளியா? பத்தினியா? என்று எதனையும் இக்கணவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, ஒரு பெண் ஐவேளைத் தொழுது, உரிய மாதத்தில் நோன்பு நோற்று, கற்பைக் காத்து கணவனுக்கும் கட்டுப்பட்டால் சுவர்க்க வாயில்களில் நீ விரும்பியதால் நுழைந்து கொள் என்று அவளுக்குச் சொல்லப்படும்’ என்று கூறியுள்ளார்கள்.(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், நூல்: அஹ்மத் 1599)

காதலின் வேகமும், கவர்ச்சியின் தாகமும் தணிந்து யதாரத்தமான வாழ்வுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதுதான் நிறைந்திருந்தது என்ன? இப்போது நான் பார்ப்பது என்ன? எனக் கையை விரிக்கின்றனர்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறியபடி அழகும், செல்வமும், குடும்ப அந்தஸ்த்தும் மறையக்கூடியது. இறையச்சமே நிiயானது.
ஒரு வணக்கவாளி, கொள்கைவாதி, இந்த திருமணம் என்கின்ற உயரிய ஸுன்னாவின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வான்.

எனவே, சொற்ப கால இன்பத்தை விட உயரிய சொர்க்கம் செல்ல உதவும் பத்தினியைத் தெரிவு செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். இறைனுக்கு கட்டுப்பட்டுப் பழகிய பெண்தான் தனது கணவனின் கௌரவம் காப்பாள். அவனுக்கு கட்டுப்படுவாள்.

இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.  நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க நல்லொழுக்கத்திற்காக.

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!. (அறிவிப்பவர்:  அபூஹுரைரா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 5090)

06.பொறுப்புணர்ச்சியுள்ள பெண்

கல்வி கற்கும் காலங்களிலும், ஓய்வு நேரங்களிலும் சினிமாவும், சீரியலும் என்று காலங்கடத்திய யுவதிகளும், தாய், தந்தையர் அரவணைப்பின் போது சமையலறைப் பக்கமும் செல்லாமல், வீடு வாசல்களை கூட்டிப் பெருக்கப் பழகாமல் திருமணத்தின் பின் கணவன் வீட்டில் தனது பொறுப்புக்களை செவ்வனே செய்யாமல் திண்டாடும் பெண்கள் எதிர் நோக்கும் கஷ்டங்கள் ஏராளம்.

காலை வேளையில் காலடியே தேனீர் கொண்டு வந்து தர வேண்டும். எல்லா வசதி வாய்ப்புக்களும் தாராளமாக இருக்க வேண்டும். ஓய்வு நேரங்களில் நண்பிகளோடு தொலைபேசியினூடாக நேரங்கடத்த வேண்டும், கண்ணாடி முன் நின்று நாள் முழவதும் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக சில யுவதிகளும், மாணவிகளும் பொறுப்பற்ற வகையில் காலத்தைக் கடத்துகின்றனர்.

தனது வீட்டில் உள்ள அழுகின்ற பிள்ளைகளைக் கூட கைநீட்டி தூக்கி அரவணைக்கத் தெரியாது , வீட்டில் ஒரு கைத்தொழில் செய்வதென்றால் வெறுப்பு. இப்படியானவர்கள் எங்கே கணவனின் வீட்டு நிர்வாகத்தை சிறப்பாக செய்யப் போகிறார்கள்.தங்களது மனைவிமார்களின் வீட்டுப் பணிகளிலும் பங்கெடுத்து உதவிய பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். (அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 893)

<< AL ATHAR APRIL 09

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers