மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
அன்மைக் காலமாக பாலமுனைக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயின் காரனமாக இதுவரையில் மூன்று சகோதரர்கள் மரணமடைந்தும் 90க்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இந் நிலையை கட்டுப்படுத்தும் வகையில் காத்தான்குடி நகர முதல்வர் ULMN. முபீன் (BA) அவர்களின் தலைமையில் பாலமுனை மூன்று ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிருவாகங்களும் இணைந்து மேற்கொண்ட மாபெரும் சிரமதான நிகழ்வு 27.03.2009 அன்று வெள்ளிக் கிழமை காலை 7.00 மணியளவில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் தாருல் அதர் அத்தஅவிய்யாவின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களும், காத்தான்குடி நகரசபை உத்தியோகத்தர்களும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை அங்கத்தவர்களும், பாலமுனை தஃவா சென்டர் உறுப்பினர்களும், காத்தான்குடி மற்றும் பாலமுனையிலுள்ள பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள், ஏழு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயத்திலும் சுமார் 25க்கும் மேற்பட்டோர் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்வில் பிரதானமாக பாலமுனை கிராமத்தில் காணப்பட்ட நீரோடைகள் மற்றும் குளங்கள் தாருல் அதர் உறுப்பினர்களால் நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டதுடன் வெற்றுக் காணிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த பற்றைகள், புற்கள், குப்பைகள், நீர் தேங்கி நிற்கக் கூடிய கொள் கலன்கள், டயர்கள் ஆகியன அகற்றப்பட்டு அவை தீயிட்டுக் எரிக்கப்பட்டன. அத்துடன் பெண்களும் தங்களது வீடுகளை டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாத வண்ணம் துப்பரவு செய்தனர்.
மிகவும் உற்சாகத்துடனும் தூய நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட இச் சிரமதான நிகழ்வுகள் யாவும் காலை 10.30 மணியலவில் முடிவடைந்தது.
இச் சிரமதானத்தில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பாலமுனை மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் முன்றலில் நகர முதல்வரின் வேண்டுகோளின் பேரில் ஒன்று கூடினர். அங்கு அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டதுடன் நன்றி நவிலல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் காத்தான்குடி நகர முதல்வர், பாலமுனை மூன்று ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிருவாகிகள், ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர், பொது சுகாதார உத்தியோகத்தர் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இந் நிகழ்வின் ஆரம்பமாக தாருல் அதர் அத்தஅவிய்யாவின் பிரச்சாரகர்களுள் ஒருவரான மௌலவி BM. அஸ்பர் (பலாஹி) ‘சிரமதானத்தின் அவசியமும் பிரர் நலம் பேணலும்’ எனும் கருப் பொருளில் சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து காத்தான்குடி நகர முதல்வர், பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் குறிப்பாக பெரும் ஆளணியை இச் சிரமதானத்தில் ஈடுபடுத்திய தாருல் அதருக்கு விஷேடமாக நன்றியைத் தெரிவித்தார். பாலமுனை மூன்று ஜும்ஆ பள்ளிவாயல்களின் தலைவர் நன்றி தெரிவித்ததன் பின்னர் ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளரும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
காலை 11.00 மணிக்கு நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

























Comments are closed.