நபி(ஸல்) அவர்கள் மனிதர்களது கனவில் தோன்றுவார்களா?
அல் அதர் மாத இதழ் >சந்தேகங்களும் தெளிவுகளும்
சந்தேகம் : நபி(ஸல்) அவர்கள் மனிதர்களது கனவில் தோன்றுவார்களா? இது வரை அவ்வாறு தோன்றியுள்ளார்கள் எனக் கூறுவது உண்மையா? அல்லது கற்பனையா? என்பதை தெளிவுபடுத்தவும்.
ச.நௌபியா, அல் அர்ஷத் வீதி, சம்மாந்துறை.
தெளிவு: ‘ஒரு மனிதர் இறை நேசராவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும்’ என்று முஸ்லிம்களில் பலர் நினைத்துக் கொண்டிக்கின்றார்கள். சில புத்தகங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கனவில் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபிகளாரை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.
ஒரு மனிதர் ‘நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்’ என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட ஏற்படுகின்றது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.
சிலர் நபியை கனவில் கண்டேனென்று சொல்பவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டு நாம் இவ்வளவு காலம் நபியின் மீது ஸலவாத் சொல்லியும், மேலும் அவர்களை அளவு கடந்து நேசித்தும் எமது கனவில் அவர்கள் இன்னும் வரவில்லயேயென்று கவலைப்படுகின்றனர். இவையெல்லாவற்றிக்கும் மார்க்கத் தெளிவின்மையே காரணமாகும்.
நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்தனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிபூர்வமான மனநிலை நீடிப்பதற்கு காரணம் பின்வரும் ஹதீஸ்களேயாகும். ‘(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபுஸயீத் அல்குத்ரி (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6997,)
‘யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார்; என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபூகதாதா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6996)
இந்த ஹதீஸ்களில் என்னைக் கனவில் கண்டவர் என்னையே கண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால்இ ஒருவர் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர் என்றும் கூறுகிறார்.
சில கட்டளைகளை இடுகிறார் கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவு காண்பவர் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரமேற்கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியராகவும் கருதத் துவங்கிவிடுகிறார்.
தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.
மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காணமுடியும் என்று தோன்றுவது போன்று இருந்தாலும் உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். ‘இந்த முடிவுதான் எடுக்க வேண்டும்’ என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6993)
மேற்குறிப்பிட்ட ஹதீஸில் ‘என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ‘என் வடிவில்’ என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷைத்தான் வர முடியாது என்பதுதான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை.
தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம்தானே தவிர அவர்களின் பெயரல்ல. கனவில் வரக் கூடிய ஷைத்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து ‘நான் தான் முஹம்மத்’ என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு.
முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் ‘அவர்கள் எப்படி இருந்தார்கள்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்பு பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.
‘அவர் விழிப்பிலும்(நேரிலும்) என்னைக் காண்பார்’ என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.
இதிலிருந்து, இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷைத்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.
எனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பது தெளிவாகிறது.

Comments are closed.