Skip to content

சோதனையில் சாதனை-1

March 25, 2009

அல் அதர் மாத இதழ் >தஃவா களம்

அபூ அஹ்மத் அல் அதரி
abooahamed@gmail.com

அழ்ழாஹ்வின் மார்க்கத்தை அறிவுப்பூர்வமாகவும், உறுதியுடனும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் பணியை வித்தியாசமான சந்தர்ப்பங்களில், வித்தியாசமான முறைகளில் நபிமார்கள் மேற்கொண்டு வந்ததை திருமறையில் அழ்ழாஹ் விபரமாகவே கூறுகின்றான்.

நபி நூஹ் (அலை)அவர்கள் முதல் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை தஃவாவை முன்வைத்த விதத்தையும், அந்த சந்தர்ப்பங்களில் அம்மக்களிடமிருந்து அத்தூதர்கள் அனுபவித்த சோதனைகளையும், நமக்குப் படிப்பினையாக அழ்ழாஹ் விபரிக்கின்றான்.நபிமார்கள் அனுபவித்த சோதனைகளை நாம் பட்டியலிட்டால் பின்வரும் வடிவங்களில் அது அமைந்திருப்பதைக் காணலாம்.

1.தீயிலிட்டுக் கொழுத்தப்படல்
2.மக்களால் துன்பமிழைக்கப்படல்
3.ஊரை விட்டு துரத்தியடிக்கப்படல்
4.மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்படல்
5.இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகளால் தூசிக்கப்படல்

மேற்கண்ட சோதனைகளின் வடிவங்களை நபிமார்கள் வாழ்வில் பொதுவாக நோக்கினாலும் இவையனைத்தையும் ஒரு சேர அனுபவித்த நபி எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

மக்களைப் பொறுத்தவரைக்கும் தங்களது முன்னோர்கள் கொண்டிருந்த ‘கொள்கைகளை’ விமர்சிக்கும் போதும், இதுதான் இறைவேதத்தின் தீர்ப்பு, தூதரின் முடிவு என்று சொல்லும் போதெல்லாம் தூதர்களையும் தாயிகளையும் மிக மோசமாகத் தாக்கிய வரலாற்றைத்தான் அல்குர்ஆனும் ஸுன்னாவும் நமக்கு கற்றுத்தருகின்றன.

ஆத் சமுதாயத்திற்கு  ஹுத் நபி சத்தியத்தைப் பிரச்சாரம் செய்த போது,

‘எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டுஇ அழ்ழாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும் என்று அவர்கள் கூறினர்’ (அல்குர்ஆன் 07:70)

சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஸாலிஹ் நபியை நோக்கி ‘ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்! எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கின்றீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்’ என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:62)

ஷுஐப் நபியை நோக்கி அவரது சமுதாய மக்கள் ‘ஷுஐபே! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும், எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டு விட உமது தொழுகை தான் உமக்குக் கட்டளையிடுகிறதா? நீர் சகிப்புத்தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர்! என்று (கேலியாக) கூறினர்.’ (அல்குர்ஆன் 11:87)

வித்தியாசமான மனோ பாவங்களையும், சூழ்நிலைகளையும் கொண்டிருந்த அம்மக்களின் பயங்கரமான அச்சுறுத்தும் வார்த்தைகளைக் கண்டு அத்தூதர்கள் பின்வாங்கவுமில்லை. விட்டுவிட்டு ஓடி விடவுமில்லை. இதோ தூதர்களை நோக்கி வந்த அம்புகளை அல்குர்ஆன் கூறுகின்றது.

ஹுத் நபியை நோக்கி அவரது சமுதாய மக்கள் ‘உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம் என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்’ (அல்குர்ஆன் 07:66)

ஷுஐப் நபியை நோக்கி அவரது சமுதாய மக்கள்இ ‘ ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும்   எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும் என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா? என்று கேட்டார்.’ (அல்குர்ஆன் 07:88)

இறைத் தூதர் இப்றாஹீம் அவர்களை நோக்கி  ‘இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்! என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அழ்ழாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 29:24)

மூஸா நபியை நோக்கி அவரது சமுதாய மக்கள் ‘மூஸாவை நமது சான்றுகளுடனும்இ தெளிவான ஆற்றலுடனும் பிர்அவ்ன் ஹாமான் காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர்.’ (அல்குர்ஆன் 40:24)

இவ்வளவெலலாம் துன்பங்களைத் தாங்கியும் அந்த இறைத்தூதர்களின் ஒரே குறிக்கோள் அம்மக்களை நேர்வழிப்படுத்துவதும், சுவனப்பாதையைக் காட்டுவதாகவுமே இருந்தது. இவ்வாறாக சொல்லொணா துன்பங்களை  அனுபவித்த தூதர்களை நோக்கி அழ்ழாஹ்வே ஆறுதல் சொல்கின்றான்.
‘இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.’ (அல்குர்ஆன் 18:06)

மேற்குறித்த வசனங்களில் உதாரணமாக எடுத்து நோக்கினால்   ஷுஐப் நபியை ஊர்விலக்கல் செய்வோம் என்று எச்சரிக்கை செய்வதற்கு அத்தூதர் முன்வைத்த செய்திகள் இவைதான் ‘என் சமுதாயமே! அழ்ழாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும் நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது என்று அவர் கூறினார்.’ (அல்குர்ஆன் 07:85)

எது எவ்வாறிருந்தும் சோதனையான காலகட்டங்களில் இத்தூதர்கள் காட்டிய பொறுமையும் கொள்கைப் பற்றும் இரவு பகலாக மேற்கொண்ட தொடர் பிரச்சாரத்தின் காரணமாகவும் இயற்கைக்கு மாறாக சாத்தியமற்ற அம்சங்களையெல்லாம் சாத்தியமாக்கி அத்தூதர்களின் உள்ளங்களை இறைவன் குளிரவைத்தான். அதற்கு நிறையவே உதாரணங்களை காணலாம்.நெருப்பு குளிர்ந்தமை கடல் பிளந்தமை மலையுயரத்திற்கு மேலாக கப்பல் சென்றமை என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

மற்றொரு கோணத்தில், தஃவாக் களத்தில் இத்தூதர்கள் சந்திக்கின்ற சோதனைகளுக்கு நிகராக சொந்த வாழ்க்கைகளிலும் பல்வேறு சோதனைகளை அனுபவிக்காமல் இல்லை. அந்த வகையில் இறைத்தூதர் இப்றாஹீம் அவர்களுக்கு தனது அருமை மகன் இஸ்மாயிலை அறுக்குமாறு இறைகட்டளை வந்தமையும் இறைத்தூதர்களான யஃகூபும் யூஸுபும் அனுபவித்த பிரிவுத்துயரும்இ அய்யூப் நபியின் நோய்த்துயரும் என இறைத்தூதர்கள் அனுபவித்த சோதனைகள் எண்ணற்றவை.

இது தவிர பல தூதர்கள் தஃவா களத்தில் கொன்று குவிக்கப்பட்ட வரலாற்றையும் அல்குர்ஆன் நமக்கு சொல்லித்தருகின்றது.
‘அழ்ழாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து, நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!’  (அல்குர்ஆன் 03:21)

இதற்கப்பால் சத்தியத்திற்காக உயிர்தியாகம் செய்த, போரடிய நபித்தோழர்களினதும்இ இமாம்களினதும் சோதனைகளும் சாதனைகளும் எண்ணிலடங்காதவை.

இப்பாதையில்தான் தாருல் அதரின் சோதனைகளும் சாதனைகளும் அமைந்திருக்கின்றது. தௌஹீத் பிரச்சாரப் பாதையில் பல அமைப்புக்கள்இ தனிநபர்களுடைய பாடங்களிலிருந்து படிப்பினை பெற்றதன் விளைவுதான் தாருல்அதரின தோற்றம்.

அல்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் உயிர்மூச்சாகக்கொண்டு அவ்விரு ஊற்றுக்களையும் பிரச்சாரம் செய்வதிலும் அவை கூறும் அம்சங்களை எடுத்து நடக்கின்ற விடயத்திலும் நாம் அடைந்த சோதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. சில நேரங்களில் இஜ்திஹாத் சார்நத அம்சங்களில் நாம் ஆய்வு அடிப்படையில் கொண்டிருக்கும் முடிவுகளை ஒலிபெருக்கிகளில் ஓங்கி ஒலிக்கச் செய்து உளவியல் ரீதியாக எமது சகோதரர்களை பாதிக்கச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளும் எமது சாதனைகளுக்கு முந்திய சோதனைகள்தான்.

இன்ஷா அழ்ழாஹ் அடுத்த இதழில்  தாருல் அதர் தனது தெஹீத் பிரச்சாரப் பயணத்தில் சந்தித்த சோதனைகளையும் சாதனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வோம்.

<< Al Athar – March 09

EMAIL THIS ARTICLE>>>

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers