Skip to content

ஒபாமாவும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும்

March 25, 2009

அல் அதர் மாத இதழ் >சர்வதேசப் பார்வை

மௌலவி MIMநௌபர் (காஷிபி)
nowfer78@hotmail.com

ஒபாமாவின் வாழ்க்கைப் பிண்ணனி (குடும்பம்)-

ஹவாய் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் புலமைப்பரிசில் பெற்றிருந்த கென்யா நாட்டைச் சார்ந்த முஸ்லிம் தந்தைக்கும் ‘கான்ஸஸ்’ விடுதியைச் சேர்ந்த வெள்ளைக்கார தாய்க்கும் 1961 ம் ஆண்டு ஹவாய் நகரத்தில் ஒபாமா பிறந்தார்.

பிறந்து இரண்டு வருடங்களில் பெற்றோர்களுக்கிடையில் விவாகரத்து ஏற்பட்டதன் காரணமாக தாய்வழிப் பாட்டியிடத்தில் வளர்ந்த ஒபாமா அவர்களது பாரம்பரிய இனத்தைச் சார்ந்தவர் எனும் காரணத்தினால் கிடைத்த புலமைப் பரிசிலைக் கொண்டு வெள்ளைக்கார தனவந்தர்களின் பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் ”பூனாஹோ’ பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

கல்வி :-
பின்பு 1979ம் ஆண்டு ”நியூயோர்க்கின்’ கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைந்து பட்டம் பெற்ற இவர் ”சிகாகோ’ மாநிலத்திற்குச் சென்று அங்கிருந்த பிரபல கிருஸ்த்தவ மதகுருவான ”கிரீமாயா’ அவர்களுடன் இணைந்து பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டார்.
பின்பு ”ஹார்பார்ட்’  பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான பட்டப்படிப்பைத் தொடர்ந்த இவர் 1991ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல சட்ட சஞ்சிகையான ”ஹார்பார்ட்’ டின்  முதல் பிரதம ஆசிரியராக கடமையாற்றினார்.

இக்காலப் பகுதியிலேயே திருமணம் செய்து கொண்ட ஒபாமா அவர்கள் பின்பு மீண்டும் ”சிகாகோ’  திரும்பி மதகுருவோடு இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டதுடன் சிவில் வழக்கறிஞராகவும் சிகாகோ  பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளராகவும் தொழில் புரிந்தார்;.

அரசியல்:-

ஆரம்ப காலத்திலிருந்தே ”சிகாகோ’  மாநிலத்தில் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை மேற்கொண்ட ஒபாபமா அவர்கள் 1996ம் ஆண்டு ”யன்லோய்’ பிராந்திய செனட் சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் சிறுபான்மையினரின் உரிமைகள், சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு, தொடர்பான பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.கருக்கலைப்பு தொடர்பான நடுநிலைப்போக்கு பலராலும் இக்காலத்தில் விமர்சிக்கப்பட்டது.
பின்பு 2000 ம் ஆண்டில் ஜனநாயக கட்சியின் உதவியுடன் அமெரிக்க செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கான விஷேட குழுக்களில் அங்கம் வகித்து சிறப்பாக பணியாற்றினார்.

அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்குழு உறுப்பினர் என்ற வகையில் ரஸ்யா, ஈராக், குவைத், பாலஸ்தீனம், தென்ஆபிரிக்கா மற்றும் தனது தந்தையின் நாடான கென்யா ஆகியவற்றுக்கு விஜயம் செய்துள்ள இவர் வெளியுறவு தொடர்பாகவும் ஏனைய நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஒரு குறிப்பட்ட அளவிலான அறிவையும் அனுபவத்தையும் பெற்றிருந்தார் என்பதன் அடையாளமாக ஈராக் மீதான அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலை அவர் பயங்கரமாக எதிர்த்தார் என்பதையும் ஹமாஸ் வெற்றி பெற்றால் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்பதால் பலஸ்தீனத்தில் தேர்தல் நடாத்த வேண்டாம் என இவர் குரல் கொடுத்ததையும் குறிப்பிடலாம்.

அத்துடன் ஒபாமா அவர்கள் தனது அரசியல் வாழ்வில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். ‘தந்தையிடம் இருந்து சில கனவுகள்’ என்ற 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது புத்தகத்தில் தனது பிள்ளைப்பருவம் தொடர்பாகவும், சிறு வயதில் எவ்வாறு தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது தொடர்பாகவும் இதில் விரிவாக விளக்குகிறார். அடுத்து, ‘நோக்கத்தை அடைவதற்கான துணிச்சல்’ எனும் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது இரண்டாவது நூலில் அரசியல் மீது தனக்கு உள்ள அதீத ஆசையையும் அதில் தான் பெற்றிருக்கும் திறமையையும் அமெரிக்கர்கள் எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகளையும், சவால்கள் தொடர்பாகவும் அவைகளுக்கான தீர்வுகள் பற்றியும் விரிவாக அலசுகிறார். மேற்படி இப்புத்தகம் இன்று உலகளவில் அதிக விற்பனையில் உள்ள புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
இவ்வாறான ஒரு குடும்ப, கல்வி, அரசியல், பிண்ணனியைக் கொண்ட அமெரிக்காவின் புதிய அதிபர் முஸ்லிம் சமுகம் தொடர்பாக எவ்வாறான அரசியல் போக்கை கடைப்பிடிக்கப்போகிறார் என்பதையும் முஸ்லிம் சமுகம் புதிய அதிபரினூடாக எத்தகைய மாற்றங்களை எதிர்பாரக்கின்றது என்பதையும் இப்போது நோக்குவோம்.

முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்புகள்

ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற போது உலகம் முழுவதும் ஒரு வித மகிழ்ச்சிஅலை பரவியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அமெரிக்கா தற்போது தேசிய ரீதியாவும் சர்வதேச ரீதியாகவும் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு ஒபாமா முகங்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க மக்களும், ஐரோப்பிய நாடுகளுக்கு பல வகையிலும் தலையிடியை ஏற்படுத்திவந்த சர்வதிகாரி புஷ்ஷின் ஆட்சி ஒருவழியாக முடிந்து விட்டது என ஐரோப்பிய மக்களும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக வெள்ளை மாளிகையில் பிரவேசிக்கின்றார் என்ற வகையில் ஆபிரிக்க மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், எமது முஸ்லிம் உலகமோ முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஒருவர் அதிபராக பதவியேற்பதனால் முஸ்லிம் சமுகத்திற்கு விடிவுகாலம்!!  ஆரம்பித்துவிட்டது என்றும் பலஸ்தீன், மத்திய கிழக்கின் ஜனநாயகம், ஈரான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் போன்ற முஸ்லிம் உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் நியாயமான தீர்வுகள் கிட்டும் என்ற ரீதியில் மகிழ்ச்சி அடைந்து முஸ்லிம் உலகத்தின் அரசியல் அறிவும் உலக விபரங்கள் பற்றிய பார்வையும் எந்தளவிற்கு மட்டகரமாக உள்ளது சரியான சான்றாகும்.

அத்துடன் ஒபாமா அவர்கள் தனது பதவியேற்பு உரையில் அமெரிக்கா முஸ்லிம் சமுகத்தின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பிற்காக (வாயளவிலாது)  மன்னிப்புக் கோருவார் என்ற பாமரத்தனத்தனமான முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது அமெரிக்கா அதிபர் என்பவர் இரு பெரும் கட்சிகளான குடியரசுக்கடசியை சார்ந்தவராக இருந்தாலும் அல்லது ஜனனாநாயக கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அல்லது மிதமான ஜனநாயகப் போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும் அமெரிக்காவின் தேசிய , சர்வதேச நலன்களுக்குப் பாதகமான முறையில் ஒரு துரும்பையேனும் அசைக்க மாட்டார் என்ற யதார்த்தத்தை எமக்கு உணர்த்துகிறது.

தந்தை புஷ்ஷின் கொடுங்கோல் இராணுவ ஆட்சிக்குப்பின் ஜனநாயகம் நடுநிலமை என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த முன்னால் அதிபர் பில் கிளின்டனின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்; தனது பிரச்சனைகளுக்கு எந்த விதமான உருப்படியான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். 1968ம் ஆண்டு முன்னால் அதிபர் ரிஷாட் நிர்ஷன் அவர்களின் தேர்தல் பிரச்சார காலம் முதல் பல்வேறுவகையான மத, இன, மொழி, பொருளாதார வர்க்கங்களைக் கொண்ட அமெரிக்க மக்களை ஓரணியில் வைத்துக் கொள்ள அமெரிக்கா ஆட்சியாளர்களால் போலியாக உருவாக்கப்பட்ட ‘அமெரிக்கா மீதான வெளி அபாயம்’ எனும் தந்திரபோயம் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என உருவகப்படுத்தப்பட்டிருப்பதனால் ‘தீவிரவாதத்திற்கெதிரான போர்’ எனும் அமெரிக்காவின் துரும்புச்சீட்டை ஒபாமா அவ்வளவு சீக்கிரம் கீழே போட்டு விட மாட்டார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அத்தோடு பலஸ்தீனம் மீது அண்மையில் இஸ்ரேல் நடாத்திய இரத்த வெறிபிடித்த தாக்குதல் தொடர்பாக ஒபாமா கடைப்பிடித்த மௌனமும், எனது இரு மகள்மாரும் உறங்கும் வேளையில் எனது வீட்டின் மீது எறிகணைத்தாக்குதல் நடாத்தினால் நான் என்ன நடவடிக்கை எடுப்பேனோ அதைத்தான் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது எனக்கூறி இஸ்ரேலுக்கு அவர் ஏற்கனவே வழங்கிய அங்கீகாரமும் நாம் கூறும் கருத்தை மேலும் உறுதி செய்கிறது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவத்தைப் பாதுகாப்பதற்காக பாக்கிஸ்தானின் எல்லைப்பபுறங்களின் மீது தாக்குதல் நடாத்த தயங்க மாட்டோம் என ஒபாமா கூறியுள்ள கருத்தும் ‘அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பிற்காக வேண்டி இராணுவ பலத்தை பிரயோகிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றது’ என அதன் புதிய உப ஜனாதிபதி ‘போய்டன்’ சி.என்.என் க்கு வழங்கியுள்ள பேட்டியும் அவ்வளவு சீக்கிரம் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு காலம் வந்து விடாது என்பதை உறுதி செய்கின்றது.

எனவே, ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் இறைவழிகாட்டலான அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் ஒன்று பட்டு பொருளாதார, கல்வி, அரசியல், சமுக ரீதியாக தன்னை உயர்த்திக்கொண்டு உலகின் தீர்மானிக்கும் சக்தியாக தன்னை வளர்த்துக்கொண்டால்தான் இழந்து விடட் எமது உரிமைகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமே தவிர இன்னொருவர் வந்து எமது முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைப்பார் என்று கனவு கான்பதில் அர்த்தமில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து கொள்ளவேண்டும்.

<< Al Athar – March 09

EMAIL THIS ARTICLE>>>

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers