Skip to content

இஜ்மா, கியாஸை நாம் அங்கீகரித்துள்ளோமா?

March 25, 2009

அல் அதர் மாத இதழ் >விமர்சன விளக்கம்
விமர்சனம்: உங்களது அமைப்பு இஜ்மா, கியாஸை ஏற்றுக்கொள்வதில்லை என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் மிக அண்மைக்காலமாக உங்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சில உலமாக்கள் கூறுகின்றனர். விபரமாக சொல்வதென்றால் முன்னர் நீங்கள் மறுத்த இஜ்மா, கியாஸை இப்போது மூலாதாரங்களாக அங்கீகரித்துள்ளீர்கள் என அவர்கள் பரவலாக பேசுகின்றனர். அவ்வாறு நீங்கள் அங்கீகரித்துள்ளீர்களா? இது தொடர்பாக உண்மை நிலவரம் என்ன?

விளக்கம்: இஸ்லாத்தின் மூலாதாரங்கள் இரண்டு மாத்திரமே அவை திருமறைக் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் எனும் நிலைப்பாட்டில் தான் இன்று வரை நாம் இருந்து வருகின்றோம். என்றும் அந்நிலைப்பாட்டில் தான் இன்ஷாஅழ்ழாஹ் இருப்போம். இதில் எள்முனையளவும் எம்மிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எமது அமைப்பு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இஸ்லாத்தின் மூலாதாரங்கள் இரண்டே இரண்டுதான் இஜ்மாவோ, கியாஸோ, உலமாக்களின் சொந்தக் கருத்துக்களோ மார்க்கத்தின் மூலாதாரங்கள் அல்ல என்பதை தௌளத் தெளிவாக பிரச்சாரம் செய்தே வருகின்றது.

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் பிரச்சாரம் செய்வதற்கு தயங்கும் ஒரு கூட்டம் இவ்வாறான அவதூறை எம்மீது கட்டவிழ்த்து விட்டு இன்பம் காண முயலுகின்றனர். இவ்வாறு வதந்தியைப் பரப்பித் திரியும் அவர்களுக்கு தஃவா வேலைகள் இல்லையென்பதால் இவ்வீணான வேலையை மேற்கொண்டு பொன்னான அவர்களது நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

எமது அமைப்பைப் பொறுத்தமட்டில் மனிதர்களின் விருப்பு வெறுப்புக் கேற்ப இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் அமைப்பல்ல என்பது அனைவரும் அறிந்த விடயம். எத்தகைய சோதனைகள் மலையாகக் குவிந்தாலும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து எம்மை எதிர்த்தாலும் அழ்ழாஹ்வால் சொல்லப்பட்ட சத்தியமான கருத்துக்களை நெஞ்சுறுதியோடு பிரச்சாரம் செய்யும் தெளிவான அமைப்மே இதுவாகும்.

இவ்வமைப்பின் வளர்ச்சியும், அது மேற்கொள்ளும் சமூக சேவைகளும் சிலருக்கு சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பதே இவ்வாறான வதந்தியை எம்மீது கட்டி விடுவதற்கு காரணமாகும். இவர்களின் இவ்வதந்தியை நாம் ‘புதிய அவதூறு’ என்றே கருதுகின்றோம்.

இஜ்மா, கியாஸ் இஸ்லாத்தின் துணை மூலாதாரங்கள் என வாதிடும் உலமாக்கள் ஏன் இன்றுவரை எந்தவொரு ஆதாரத்தையும் அதற்கு முன்வைக்கவில்லை? என்பதுதான் பெரும் வியப்புக்குரிய வினாவாகும். அவ் உலமாக்களிடம் சென்று அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாமிய மூலாதாரங்கள் என்பதற்கு ஆதாரங்களைக் கூற முடியுமா? எனக் கேட்டால் அடுக்கடுக்கான ஆதாரங்களை அவர்கள் முன்வைப்பார்கள்.

குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஆதாரம் வழங்க முடிந்த அவர்களுக்கு இஜ்மா, கியாஸுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட ஏன் முன்வைக்க முடியவில்லை? இங்குதான், ஆதாரங்கள் அடிப்படையில் வணக்கங்களைத் தீர்மானிப்பவர்கள் யார்? உண்மை தெரிந்தும் ஊருக்குப் பயந்து கொள்கையில் விட்டுக் கொடுப்பவர்கள் யார்? என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ‘வானத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட செய்திகள் மாத்திரமே இஸ்லாம்’ என்ற கொள்கையை மக்களிடம் புரிய வைத்து, மக்களாக ஏற்படுத்திக் கொண்ட ‘புதிய வணக்கங்களை’(பித்அத்துக்களை) இல்லாதொழிப்பதற்கே நாம் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றோம்.

மார்க்கத்தைத் தீர்மானிக்கும் உரிமை மனிதராக வாழ்ந்த அழ்ழாஹ்வின் தூதருக்குக் கூட கிடையாது என அல்குர்ஆன்(66:1) வசனம் குறிப்பிடுகின்ற போது பெயர் முகவரி இல்லாத யாரோ கண்டுபிடித்த இஜ்மாவையும் கியாஸையும் வஹியை மாத்திரம் பின்பற்றும் நாம் எப்படிப் பின்பற்ற முடியும்? இஜ்மா, கியாஸை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என அவர்கள் கூறினால் எங்கு? எப்போது? யாரால்? ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை அவர்களால் தெளிவுபடுத்த முடியுமா? இம்மார்க்க அறிஞர்கள் ஏன் இப்படி அவதூறை எம்மீது அள்ளி இறைத்து புனிதமான மிம்பர் மேடைகளைப் பாழ்படுத்துகின்றார்கள்?

இதற்குள் ‘நாங்களும் குர்ஆன் ஹதீஸ்படி வாழ்பவர்கள் தான்’ என்று வேறு கூறிக்கொள்கின்றார்கள்.


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

எமது உலமாக்கள் அங்கீகரித்துள்ள இஜ்மா, கியாஸை நாம் மார்க்க அடிப்படையில் முற்றாக நிராகரிக்கின்றோம். உலமாக்களின் மூலாதாரத்தை கண்மூடித்தனமாக நாம் பிழை காணவில்லை. அவர்கள் கூறும் இஜ்மாவோ கியாஸோ அழ்ழாஹ்வின் தூதரால் அறிமுகப்படுத்தப்படாத பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வழிமுறை.

சட்டங்களை அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எதிலிருந்து பெற்றார்களோ அதுதான் அகில உலக முஸ்லிம்களுக்கு மார்க்க மூலாதாரமே தவிர எம்மைப் போன்ற குறைபாடுள்ள மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இஜ்மா, கியாஸ் அல்ல.

இஸ்லாமிய வரலாற்றில் இஜ்மா, கியாஸைப் போன்று பல மூலாதாரங்களை அறியாமை காரணமாக மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக இஜ்மா, கியாஸ், உறபு என அழைக்கப்படும் ஊர் வழமை, அமலு அஹ்லில் மதீனா என அழைக்கப்படும் மதீனாவாசிகளின் தனித்த செயற்பாடு போன்றவற்றை குறிப்பிடலாம். அப்படியானால் இங்கு ஒரு வினா எழலாம். அதாவது அழ்ழாஹ்வின் மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களோடு எமது உலமாக்கள் மனிதர்கள் கண்டு பிடித்த இஜ்மாவையும் கியாஸையும் சேர்த்தார்கள். அவ்வாறு சேர்த்தவர்கள் ஏன் நான்கோடு நிறுத்திக் கொண்டார்கள்?

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இன்னும் பல மூலாதாரங்கள் இருக்கின்ற போது இவர்கள் நான்கோடு சுருங்கிக் கொண்டது ஏன்? என்பதேயாகும். எனவே வழிகேட்டிலும் கூட இவர்களிடம் நேராக வழிமுறை இல்லை என்பது தான் தெளிவான விஷயம்.

வீணான அபாண்டங்களைப் பரப்பும் மார்க்க அறிஞர்களே!

இஜ்மாவை தாருல் அதர் ஏற்றுக் கொண்டதாக நீங்கள் கூற விரும்பினால் முதலில் தாருல் அதர் அவ்வாறு எங்கு ஏற்றுக் கொண்டது என்பதற்கான ஆதாரத்தையும் சேர்த்துச் சொல்லுங்கள். இஜ்மா, கியாஸ் தொடர்பாக நாம் யாருடனும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

இது தொடர்பாக வீணான பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதை விட்டு விட்டு இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ன? என்பதை ஒரு முறை ஆழ்ந்து மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் இச்சமூகத்திற்கும் உங்களுக்கும் பெரும் பயனாக அமையும் என எதிர்பார்க்கின்றோம். எல்லாம் வல்ல அழ்ழாஹ் எமது சமூகத்தின் மிம்பர் மேடைகளை மிகச் சரியான வழியில் பயன்படுத்த எமது உலமாக்களுக்கு வழிகாட்டுவானாக.

<< Al Athar – March 09

EMAIL THIS ARTICLE>>>

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers