சதித்திட்டங்ளும், முறியடிக்கப்பட்ட வரலாறுகளும்
அல் அதர் மாத இதழ் > அல் குர்ஆன்
அழ்ழாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை)
மறுப்போர் வெறுத்தாலும் அழ்ழாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)
காலத்தால் அழியாத அற்புதம் வாய்ந்த இறை வேதத்தில் திரிபுகளை ஏற்படுத்துதல், முழுமையாக அதன் அசல் வடிவை இல்லாமல் செய்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு நபிகளார்(ஸல்) அவர்கள் காலந்தொட்டு இன்றைய 21ம் நூற்றாண்டு வரை பல சதிகாரர்கள் களத்தில் இறங்கி கடுமையான பிரயத்தனங் களை முன்னெடுத்தும் அது அவர்களால் இயலாமல் மூக்குடைந்து போனதை இஸ்லாமிய வரலாறு நிறையவே கண்டுள்ளது.இதற்கமைய அத்தகையோரின் சதி வலைகள், அவை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இக்கட்டுரை அலசவிருக்கின்றது.
அழ்ழாஹ்வின் வேதத்தில் அந்நிய சமூகங்களில் ஒரு சாரார் பிரம்மிப்படைந்து அவற்றை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி படிக்க வேண்டுமென கூப்பாடு போடுகின்ற அதே வேளை, மற்றுமோர் சாரார் அதன் அற்புதத்தை அணையச் செய்யவும் மகத்துவத்தை மழுங்கக்கச் செய்யவும் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் முன்னெடுத்து வருவதனையும் நாம் அறிந்திருக்கின்றோம். இத்தோரணை யில்தான் அன்றைய அரபுக்காபிர்கள் திருக்குர்ஆனின் வேத வாக்கியங்கள் இறங்கப்பெற்ற நேரத்தில் பலவிதமான அநாகரிகமான வார்த்தைகளால் அவற்றை வசைபாடியதை அல்குர்ஆனில் அவதானிக்க முடிகிறது.
இதனை (இக்குர்ஆனை) பொய்க்கனவுகள் என்றும், முஹம்மதினது சுயமான வார்த்தைகள் என்றும், இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என்றும், பைத்தியகாரனின் உளறல்கள் என்றும் தூற்றினர். எனினும் இவ்வாறான தூற்றல்கள் இம்மியளவு கூட அல்குர்ஆனில் எவ்வித பின்னடைவுகளையும் ஏற்படுத்தவில்லை. நாளடைவில் இந்த விமர்சனங்களின் வித்தீடுகளால் ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ‘வஹி மூலம் இறைச்செய்தி அறிவிக்கப்படுகின்றதென வாதிடத் தொடங்கினர். அவர்களில் பிரதானமானவர்களை மாத்திரம் இங்கு அடையாளப்படுத்துகின்றோம்.
முஸைலமதுல் கத்தாப்:
இவனது இயற்பெயர் முஸைலமா இப்னு ஹபீப் என்பதாகும். யமாமாவில் பிறந்த இவன் தான் நபி என்பதாகவும் தனக்கு இறைவனிடத்திலிருந்து அல்குர்ஆனைப்போன்று வஹி வருவதாகவும் வாதிட்டான். இவனது இந்த கோஷம் மக்கள் மன்றத்தில் இழிவையும், கேவலத்தையும்தான் இவனுக்கு உண்டாக்கியது. அதுமட்டுமல்லாது சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டான்.
வரலாற்றாசிரியர்கள் எள்ளி நகையாடும் வண்ணம் அமைந்த அவனது பித்தலாட்டங்களில் பின்வருபவைகளும் அடங்கும்.(யானை, யானை என்றால் என்ன? யானை என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? அது ஒரு வாலும் பூரண உடலமைப்பும் கொண்டது. மேலும் அதற்கு நீண்ட தும்பிக்கையும் உள்ளது.)
அல்குர்ஆனில் உள்ள ‘அல்காரிஅது மல்காரிஅஹ் வமா அத்ராக்க மல்காரிஅஹ்’ என்ற வசனத்தை அடிப்படையாக வைத்துத்துதான் மேற்கூறப்பட்ட போலி வசனங்களை முஸைலமா கண்டுபிடித்தான். மேலும், அஅஅஅஅஅஅ ‘கறுத்த ஓநாயின் மீது சத்தியமாக’ இவையும் குர்ஆனில் உள்ள ‘வல் பஜ்ரி வலயாலின் அஷ்ரின் வஷ்ஷப்இ வல்வத்ரி’ போன்றவற்றை பிரதிசெய்து புனையப்பட்டதாகும்.
ஸஜாஹ் அத்தமீமிய்யா(பெண்):
இப்பெண்மணி நபி(ஸல்) அவர்கள் மரணித்ததன் பின் பனூதமீம் கிளையாளர்களை அழைத்து தனக்கு நபித்துவம் வழங்கப்பட்டதாகவும் இறைச்செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் வாதிட்டாள். இப்பெண்ணால் (பொய்யாக) அறிவிக்கப்பட்ட வசனங்களில் சில:
‘பயபக்தியுள்ள இறைவிசுவாசிகளே நிலத்தில் அரைப்பகுதி எங்களுக்கும் மற்றயது குறைஷிகளுக்கும் சொந்தமாகும். ஆனால் குறைஷிகள் அழிச்சாட்டியம் செய்து விட்டனர்’ எனினும், இறுதியில் இந்தப் பெண்மனி(ஸஜ்ஜாஹ்) தனது கருத்தை பிழையென ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டாள்.
துலைஹா அல் அஸதீ:
இவரும் தனக்கு நபித்துவம் வழங்கப்பட்டிருப் பதாகவும், இறைச்செய்தி அருளப்படுவதாகவும் வாதிட்டார். எனினும் பிறகு இவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
ஷீஆக்கள்:
இஸ்லாமிய வரலாற்றில் அகீதா ரீதியாக நெறிபிறழ்ந்த இயக்கங்களில் ஹவாரிஜிகளுக்குப் பின் ‘அப்துல்லாஹ் இப்னு ஸபஃ’ என்பவனை தலைவனாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதே ‘ஷீஆ’ இயக்கமாகும். ‘ஷீஆ’ என்பதன் முழுவடிவம் ‘ஷீஅது அலி’ (அலி(ரழி) அவர்களுக்கு ஆதரவான குழு) என்பதாகும்.
அலி(ரழி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்களை ஹவாரிஜுகள் என அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மற்றொரு சாரார் அலியை மதிக்கிறோம் என்ற பெயரில் அவரை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தினர். இவர்களின் பிரதான கொள்கை அபூபக்கர் (ரழி), உமர்(ரழி), உத்மான்(ரழி) ஆகிய மூன்று கலீபாக்களும் கிலாபத்திற்கு தகுதியானவர்கள் கிடையாது. அலீ(ரழி) அவர்களுடைய கிலாபத்தை மூவரும் பறித்து எடுத்துக்கொண்டார்கள் என்பதாகும்.
இக்கோஷத்தை கருவூலமாகக் கொண்டுதான் அன்றிலிருந்து இன்றுவரை இயங்கி வருகின்றனர். இவர்களின் இக்கொள்கை இன்றளவும் ஈரான், லெபனான் போன்ற நாடுகளில் ஆட்சிபீடக் கொள்கையாக ஊடுருவியிருக்கின்றது.
இது தவிர உலகின் பல பாகங்களிலும் இவர்கள் ஊடுருவி கரையான்கள் அரித்துக் கொண்டிருப்பதைப் போன்று முஸ்லிம்களின் அகீதாவை சிதைத்துக் கொண்டிருக் கின்றனர். நமது இலங்கை நாட்டிலும் குறிப்பாக கல்குடா தொகுதியில் இந்த விஷமிகள் தங்களின் நச்சுக்கருத்தை ஒரு அரபு மதரசாவை நிர்மாணித்து அதனுடாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். (இவர்களின் ஊடுருவலுக்கு அடித்தள மிட்டவர்கள் நமது நாட்டில் தோன்றிய ஜமாஅதே இஸ்லாமி இயக்கம்தான் என்பதை சொல்வதற்கு கசப்பாக இருந்தாலும் வரலாற்று உண்மை என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்)
இத்தீய கொள்கையை இங்கு விதைப்பதற்காக இவர்களின் தலைமையகமான ஈரானிலுள்ள ‘கும்மி’ என்ற நகரத்திற்கு இங்கிருந்து அனுப்பி அவர்களினூடாக இக்கொள்கையை நமது நாட்டில் அசுர வேகத்தில் பரப்பி வருகின்றனர்.
எனவே இவர்களின் முகத்திரையை தோலுரித்துக்காட்டுவது தஃவா அமைப்புக் களினதும் பொறுப்பு வாய்ந்த உலமா சபைகளினதும் தலையாய கடமை என்பதை பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
முஸ்லிம்களாகிய நாம் பைபிளில் கையாடல்களும், திரிவுகளும் காணப்படுகிறது என எவ்வாறு நம்புகின்றோமோ, அதேபோன்று அல் குர்ஆனிலும் பல கையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்த ஷீஆக்கள் வாதிடுகின்றனர். இவர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘மீர்சா ஹுசையின்’ என்பவன் இதற்கென ‘குர்ஆன் திரிவுபடுத்தப்பட்டதை நிரூபித்தல்’ தனியான ஒரு நூலையே எழுதியுள்ளான். இந்நூலில் நூற்றுக்கணக்கான வசனங்களில் மனிதக் கையாடல்கள் (கூட்டல், குறைத்தல்) இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூல் ஈரானிலே அச்சிடப்பட்டு உலகின் நாலா பாகங்களிலும் வெளியிடப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு(ஷீஆக்களுக்கு) மத்தியிலேயே பாரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. காரணம் இந்நூல் அவர்களின் அடிப்படைக் கொள்;கைகளில் ஒன்றான ‘தகிய்யஃ’ என்ற கொள்கையை தகர்க்கும் வகையில் வெளியிடப்பட்டது.
எனினும், இவ் விமர்சனங்களை அவன் பொருட்படுத்தாமல் அந்நூலுக்கு எதிரான சில விமர்சனங் களுக்கு பதில் அளிக்குமுகமாக ‘ரத்து பஃலிஷ் ஷுபுஹாத்’ என்ற நூலை எழுதினான். மற்றும், இவர்களால் மதிக்கப்படும் மற்றுமொரு அறிஞர் ‘அபூ மன்சூர் அஹ்மத்’ என்பவர் தனது ‘அல் இஹ்திஜாஜு அலா அஹ்லில் லிஜாஜ்’ என்ற நூலில் ‘நபித்தோழர்கள் குர்ஆனில் மூன்றிலொரு பகுதியினை எடுத்துவிட்டனர்’ எனக்குறிப்பிடுகின்றார். அவற்றில் சிலவற்றை மாத்திரம் இங்கே தருகின்றோம்.
‘நபியே! அலியை உமது மருமகனாக ஆக்கியுள்ளோம்’ எனும் கூற்றானது ‘இன்ஷிராஹ்’ என்ற அத்தியாயத்தில் உள்ள ஏழு வசனங்களிலும் இடம்பெறவில்லை. ஏனெனில், ‘உத்மான் (ரழி) அவர்களை நபியுடைய மருமகன்’ எனக்குறிப்பிடாமல் அலி(ரழி) அவர்களை மாத்திரம் இங்கு குறிப்பிட்டுக் கூறப்படுவதால் நபித்தோழர்கள் திட்டமிட்டு இவ்வசனத்தை எடுத்து விட்டனர் என பொய்யாக இந்த ஷீஆக்கள் வாதிடுகின்றனர். மேலும் 12 இமாம்கள் ஆட்சியில்
‘எவர் அழ்ழாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றாரோ அவர் திட்டமாக வெற்றி பெற்றுவிட்டார்.’ இவ்வசனம் ‘அஹ்சாப்’ எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளதாக வாதிடுகின்றனர். எனினும், மேற்படி வசனத் தொடர் அவ்வத்தியாயத்தில் குறிப்பிடப்படவே இல்லை. இதனை அவர்களாகவே புனைந்துள்ளனர்.
இப்படியாக ஏராளமான வசனங்களில் தங்களது கையாடல்களை செய்துள்ளனர். இவ்வனைத்துக்கும் மக்காவிலுள்ள ‘உம்முல் குரா’ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமைபுரியும் ‘ரபீஃ அல்மத்ஹலி’ என்ற அறிஞர் ‘அல் இன்திஸார் லி கிதாபில் அஸீஸில் ஜப்பார் வலி அஸ்ஹாபி முஹம்மதினில் அஹ்யார் அலா அஃதாயிஹிமுல் அஷ்ரார்’ எனும் தனது நூலில் விரிவான பதில்களை அளித்துள்ளார்கள்.

Comments are closed.