கலிமாவுக்கு வழங்கப்படும் இரு தவறான அர்த்தங்கள்.
அல் அதர் மாத இதழ் > அகீதா
அழ்ழாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.(அல்குர்ஆன் 7:180)
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை மூல மந்திரம் ‘லாஇலாஹ இல்லழ்ழாஹ் முஹம்மதுர் ரஸுலுழ்ழாஹ்’ எனும் திருக்கலிமாவாகும். இவ்வார்த்தையை அதன் சரியான கருத்தை தெரிந்து உளப்பூர்வமாக நம்பி, வாயால் மொழிகின்ற போதுதான் அவர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டவராகக் கருதப்படுவார். இஸ்லாத்தில் ஒருவரை இணைப்பதற்கு அவசியமான பிணைப்பாக இக்கலிமா திகழ்கின்றது. இக்கலிமாவின் சிறப்புகள் பற்றி ஏராளமாக அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் எமக்கு எடுத்து ரைக்கப்பட்டுள்ளன.
‘லாஇலாஹ இல்லழ்ழாஹ்’ எனும் இஸ்லாமிய அடிப்படை வாசகத்தை மிகச் சரியாக மொழி பெயர்ப்பதில் அதிகமானோர் தவறிப்போயிருப்பதைக் காணமுடிகின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தை தஃவா செய்வதாகக் கூறும் சிலர்; கலிமாவுக்கு தவறான அர்த்தம் கற்பிப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்;. கலிமாவின் சரியான அர்த்தத்தை நோக்குகின்ற போது ‘லா’ எனும் அட்சரத்திற்கு அரபு மொழியில் ‘இல்லை’ என்பது பொருளாகும். ‘இலாஹ்’ என்ற வார்த்தைக்கு ‘வணங்கப் படுபவன்’ என்பது பொருளாகும்.
‘இல்லழ்ழாஹ்’ என்றால் ‘அழ்ழாஹ்வைத் தவிர’ என்பது பொருளாகும். ஆக மொத்தத்தில் ‘லாஇலாஹ இல்லழ்ழாஹ்’ என்றால் ‘வணக்கத்துக்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர யாருமில்லை’ என்பது அதன் சரியான அர்த்தமாகும். அரபு மொழியை அறிந்த அனைவரும் சாதாரணமாக இதனைப் புரிந்து கொள்ள முடியும். கலிமாவுக்கான அர்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளாமல் எமது சமூகத்தில் இரண்டு சாரார் மிகத் தவறாக கலிமாவுக்கு பொருள் செய்து வருகின்றனர்.
முதலாவது சாரார்: ‘சட்டமியற்றும் அதிகாரம் அழ்ழாஹ்வுக்கு மாத்திரமே உண்டு’ என கலிமாவுக்கு அர்த்தப்படுத்தி வருகின்றனர். மேற்படி இவர்களின் இம்மொழிபெயர்ப்பானது அல்குர்ஆனின் பார்வையில் மிக மிகத் தவறானதாகும். ‘லாஇலாஹ இல்லழ்ழாஹ்’ என்ற கலிமாவில் வரும் ‘இலாஹ்’ என்ற சொல்லுக்கு ‘வணங்கப்படுபவன்’ என்ற அர்த்தம் மாத்திரமே அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ‘இலாஹ்’ என்றால் ‘சட்டமியற்றுபவன்’ என்ற அர்த்தம் எங்குமே கூறப்பட வில்லை.
அதே நேரம் அழ்ழாஹ்தான் சட்டமியற்றுபவன் என்பதை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் கலிமாவுக்கான பொருளாக இதனைக் கூறமுடியாது என்றே நாம் சொல்கின்றோம். இதனை நாமாக கற்பனை செய்து கூறவில்லை. திருமறைக் குர்ஆனில் அழ்ழாஹ் ‘இலாஹ்’ என்ற வார்த்தையை ‘வணங்கப்படுபவன்’ என்ற அர்த்தத்தில் மாத்திரமே பயன்படுத்தியுள்ளான்.
அவற்றுக்கான ஆதாரம் பின்வருமாறு:
‘ஒரே கடவுளை வணங்குமாறு தான் (கிறிஸ் தவர்கள்) கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் தூயவன்.’ (அல்குர்ஆன் 9:31)
‘அழ்ழாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா? என்று(எச்சரிக்கை) அவர்களிலிருந்தே அவர்களுக்கு தூதரை அனுப்பினோம்.’ (அல்குர் ஆன்:23:32)
‘அழ்ழாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமை அடிப்போராக அவர்கள் இருந்தனர். பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா? என்று கேட்கின்றனர்.’ (அல்குர்ஆன் 37: 35,36)
மேற்குறித்த அனைத்து வசனங்களிலும் இடம் பெறும் ‘இலாஹ்’ எனும் வார்த்தைக்கு ‘வணங்கப்படுபவன்’ என்ற அர்த்தம் மாத்திரமே அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெறாத புதிய விளக்கத்தை கலிமாவுக்கு இவர்கள் கூறி தஃவா செய்வதானது மிகவும் பாரதூரமான விடயமாகும். இஸ்லாமிய ஆட்சி, ஒற்றுமை மற்றும் இஸ்லாமியப் பொருளாதாரம் போன்றவைகள் பேசுவதற்கு முன்னால் தாங்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்தத்தை ஒருமுறை பரிசீலித்தால் மிக நன்றாக இருக்கும். ஏனெனில் கலிமா என்பது நாம் முன்பு கூறியது போல் இஸ்லாத்தின் அடிப்படை மூல மந்திரம். இவ்வார்த்தையின் சரியான அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் தஃவா செய்வதானது அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்புவது போன்றதே!
இரண்டாவது சாரார்: ‘வஸ்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை, எல்லாம் அழ்ழாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன’ என கலிமாவுக்கு அர்த்தம் கொள்கின்றனர். இவ்வார்த்தை இஸ்லாமிய வார்த்தைதான். அதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் கலிமாவுக்கான அர்த்தமாகவோ, விளக்கமாகவோ இதனைக் கூற முடியாது. அழ்ழாஹ் மகத்தானவன், சக்தி வாய்ந்தவன் என்பதெல்லாம் மிக உறுதியான அல்குர்ஆனின் கூற்றாகும்.
அதேநேரம் கலிமாவுக்கு ‘வஸ்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை’ என அர்த்தம் கொள்வது எவ்வித ஆதாரமுமில்லாத கூற்றாகும்.
இன்று பள்ளிவாயல்களில் ‘தீன்’ பணி செய்வதாகக் கூறிக் கொள்ளும் எமது சகோதரர்கள் பயான்களிலும் அவர்களின் விளக்க வகுப்புக்களிலும் பரவலாக இவ்வாறு கூறிவருவதை நாம் காணுகின்றோம். இந்நிலை மாற்றப்படல் வேண்டும். முஸ்லிம்களின் அடிப்படையை தவறாக மொழிபெயர்க்கும் இந்த இரு சாரார்களும் தாங்கள் மேற்கொள்ளும் இப்பிழையான நடவடிக்கையை முற்றாகக் கைவிட வேண்டும்.
அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வுடைய தூதரும் கலிமாவுக்கு எந்த விளக்கத்தை எமக்கு எடுத்துரைத்தார்களோ அவ்விளக்கத்தையே நாம் பின்பற்றவும் வேண்டும், பிரச்சாரம் செய்யவும் வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வழிகேடர்களான ஸூபிகளால் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தங்கங்களின் தாக்கத்திற்கு உள்ளானவர்களே கலிமாவுக்கு முதன் முதலில் தவறாக அர்த்தம் கற்பித்தவர்கள்.
இஸ்லாமிய அகீதாவில் இவ்வாறான தவறுகள் நிகழுகின்ற போது அவற்றை எவ்வகையிலும் நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் கலிமாவுக்கு சரியான அர்த்தத்தை எம் சமூகத்திலுள்ளவர்களில் சிலர் பிழையாகப் புரிந்து கொண்டமையே அத்வைதம், தொழுகை நிராகரிப்பு போன்ற அனாச்சாரங்கள் தோன்றி வேரூண்ற காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எல்லாம் வல்ல அழ்ழாஹ் அவனது வார்த்தைகளை அதன் உரிய முறையில் அர்த்தப்படுத்தி அவன் விரும்பும் வழியில் எம்மனைவரையும் செலுத்துவானாக!

Comments are closed.