Skip to content

மன அழுத்தமும் சீனி வியாதியும்

February 27, 2009
அல் அதர் மாத இதழ் > அறிவியல்
அஸ்லம் (ரஜரட்டை மருத்துவபீடம்)
‘மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.
1. ஆரோக்கியம்.
 2. ஓய்வு’. (ஸஹீஹுல் புஹாரி-6412)

  ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்பமும் துன்பமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால், எம்மில் பெரும்பாலானோர் வாழ்வின் இவ்யதார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் தமக்கு ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்களின் போது துவண்டு போய் நிம்மதியையும் இழந்து இறுதியில் உடலையும் வருத்திக் கொள்கின்றோம்.

‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அழ்ழாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அழ்ழாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.’ (அல்குர்ஆன் 13:28)

  வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்களின் போது ‘நாங்கள் அழ்ழாஹ்வுக்கே உரியவர்கள், நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்’ (அல்குர்ஆன் 02:156) போன்ற திருமறை வார்த்தைகளைக் கூறி அவனது உளச் சுமைகளை இறக்கி இறைவனிடம் ஒப்படைப்பதன் மூலம் உள அமைதியடையும் ஒரு முஃமினையும், இதைவிடுத்து யோகாசனம், வாழும் கலைப் பயிற்சி போன்ற வேறு வழிகளில் மன அமைதியை தேடியவர்கள் நிம்மதி கிடைக்காமல் உளருவதையும் மற்றும் மனநோயாளிகளாக மாறியிருப் பதையும் உற்று நோக்கும்போது மேலுள்ள திருமறை வசனம் உள்ளங்களைப் படைத்து அவற்றைப் புரட்டக் கூடிய இறைவனின் வார்த்தை என்பதையும், அவனே உள்ளங்களை அமைதியடையச் செய்பவன் என்பதையும் நிதர்சனமாக நிரூபிக்கின்றதல்லவா?

‘உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற் காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப்போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தினான்.’ (அல்குர்ஆன் 57:23)

  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒரு முஸ்லிமின் பிரார்த்தனை இவ்வுலகில் நிறைவேற்றிக் கொடுக்கப் படுகின்றது. இல்லையெனில் மறுமையில் அதற்காகக் கூலி கொடுக்கப்படுகின்றது. அதுவும் இல்லையெனில் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றான்.’
(அறிவிப்பாளர்: உபாதா பின் அஸ்ஸாமித்(ரழி), நூல்: திர்மிதி-3497)

 ஆயுளையும் மிஞ்சுகின்ற மனிதனின் ஆசைகளும், இலக்குகளும், இவைகளில் எல்லாவற்றையும் அடைய முடியாமல் போவதும் அவற்றை எண்ணி தன்னையே மாய்த்துக்கொள்ளத் துடிக்கும் இந்த மனிதனுக்கு தவறியவைகள் தவற வேண்டுமென இறைவன் ஏற்கனவே எழுதியதை இறைவன் விதிப்படியே எதுவும் நடக்கும் என்ற விதியின் மீதான ஆழமான நம்பிக்கையும் மேற்கூறிய ஹதீஸில் கூறியபடி பிரார்த்தனையின் யதார்த்தம் பற்றிய விளக்கமுமே அதுபற்றிய சிந்தனைகளில் இருந்து விடுவித்து மன நிம்மதியுடன் புதிய சாதனைகள் புரிவதற்கு வழிகாட்டுகின்றது.

‘ஒரு முஃமினுடைய நிலை என்ன ஆச்சரிய மானது! அவனுடைய எல்லா காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அதற்காக அவன் பொறுத்துக்கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மைதான். அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மைதான். இப்படி முஃமினை தவிர வேறு எவனுக்கும் கிடைக்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(அறிவிப்பாளர்: ஸுஹைப்(ரலி), நூல்: முஸ்லிம்-5726)

 இஸ்லாம் காட்டுகின்ற இந்த அழகிய வழிமுறைகளையும் பின்பற்றி, விதியின் மீது நம்பிக்கையும் கொண்டு, இறைவனின் வல்லமைகளையும் அறிந்த ஒரு முஸ்லிம் எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் மனம் தளராமல் எந்த சஞ்சலமும் இன்றி மன நிம்மதியுடன் வாழ்கின்றான் என்றால் அவனது வாழ்க்கை ஆச்சரியமானதுதான்.

  அந்நிய மதத்தவர்கள் தம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி மனோ இச்சைகளையும் மேற்கத்தேய அறிஞர்களின் உதவாத சிந்தனைகளையும் பின்பற்றுவதன் மூலம் ஏற்படும் மோசமான விளைவுகளினால்; மன விரக்தியடைந்து தவறிவிட்ட ஒன்றுக்காக ஏங்கித்தவிப்பதும், அதைப்பற்றியே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பதும் துன்பங்களின் போது ஏற்படும் மன சஞ்சலங்களை மறக்க முடியாமல் தவிப்பதும் மன அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றது.

  ஒரு சாதாரண சுகதேகியின் உடலில் 100 ml குருதியில் உள்ள குளுக்கோசின் (Glucose) அளவானது 80-140 mg என்ற வீச்சில் எல்லா சந்தர்ப்பங்களிலும் பேணப்படுகின்றது. ஆனால், மன அழுத்தங்களின் போது உடலை அதற்கேற்ப தயார்படுத்துவதற்காக அதிரினலின் (Adrenalin) கோட்டிஸோல்(Cortisol) போன்ற அழுத்த ஓமோன்கள்(Stress hormon)  உடலில் சுரக்கப்படுகிறது.

அதிரினலின் ஆனது கிளைக்கோஜன் (glycogan)ல் இருந்து குளுக்கோசு விடுவித்தலை தூண்டுவதன் மூலமும் கோட்டிசோல் ஆனது காபோவைதரேற்று (Carbohydrates) அல்லாத பதார்த்தங்களில் இருந்து குளுக்கோசினை புதிதாக உருவாக்குவதன் மூலமும் குருதிக் குளுக்கோசு மட்டத்தை உயர்வடையச் செய்கின்றது. குருதி குளுக்கோசு மட்டம் 180 mg/ 100 mg என்ற அளவை மிஞ்சும்போது மேலதிகமாக அதிகரித்த குளுக்கோசு சிறுநீரகத்தால் அகத்துறிஞ்சப் படாமல் சிறுநீருடன் வெளியேறுகின்றது.

இதற்கு சிறந்த ஒரு சான்றாக சில வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்ட கனிஷ்ட மாணவர்களின் சிறுநீரில் குளுக்கோசிற்கான பரிசோதனை பகிடிவதைக் காலத்திலும், பகிடிவதை முடிவடைந்த  பின்னரும் மேற்கொள்ளப்பட்டது. முடிவுகளை ஆராயும்போது பகிடிவதைக் காலத்தில் பெறப்பட்ட பெரும்பாலான மாணவர்களது சிறுநீரில் குளுக்கோசு பிரசன்னமாய் இருந்தமையும் பகிடிவதை முடிவடைந்த பின்னர் பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் குளுக்கோசு அற்றிருந்தமையும் அறியப்பட்டது.

ஏனெனில் பகிடிவதைக் காலத்தில் சிரேஷ்ட மாணவர்களின் தொல்லையால் கனிஷ்ட மாணவர்களின் மனங்களில் ஏற்படும் பயம், அழுத்தம் என்பன குருதிக் குளுக்கோசு மட்டத்தை அதிகரிக்கச் செய்ததால் சிறுநீரில் குளுக்கோசு பிரசன்னமாயிருந்தது. இவ்வாறான தொடர்ச் சியான மன அழுத்தங்கள் பிற்காலத்தில் சிறுநீரகத்தைக் கூட பழுதடையச் செய்கின்றது.

மனிதனின் அக, மற்றும் புற இயல்புகள் யாவும் 23 சோடி நிறமூர்த்தங்களில் உள்ள முப்பதாயிரத்திற்கும்(30000) மேற்பட்ட பரம்பரை அலகுகளால்(Genes) தீர்மானிக்கப் படுகிறது. இப்பரம்பரை அலகுகளில் சில கெட்ட இயல்புகள் வெளிப்படுத்துவதற்கு காரணமாக இருப்பதுடன் அவ்வாறானவை உறக்க நிலையிலும் காணப்படுகின்றது

இளவயதில் ஏற்படும் தொடர்ச்சியான மன அழுத்தங்கள் 40 வயதின் பின்னர் இவ்வகை பரம்பரை அலகுகளின் வெளிப் படுத்தலைத் தூண்டி சீனிவியாதி, உயர்குருதியமுக்கம் (hypertension) போன்ற மோசமான நோய்களைத் தோற்றுவிக்கின்றது.

சீனிவியாதியால் பீடிக்கப்பட்ட ஒருவரின் குருதியில் குளுக்கோசானது நீண்ட நாட்களுக்கு அளவுக்கு மீறி அதிகரித்துக் காணப்படுவதால் இவை உடலில் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்தி, மேலும் உடற் தொழிற்பாடுகளையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கின்றது. அவையாவன விழித்திரையில் ஏற்படும் குருதிப்பெருக்கு(Retinopathy) கட்காசம்(Cetoract) போன்றவற்றால் கண்பார்வை குறைவடைகிறது.

அதிகரித்த குருதிக்குளுக்கோசு சிறுநீரகத்தின் வடிகட்டும் தொழிலை பாதிப்படையச் செய்வதால்(Nephopathy) உடலில் இருந்து குருதிக்கலங்கள், குருதிப்புரதங்கள் என்பன சிறுநீருடன் வெளியேறுகின்றது. இதனால் உடல் வீக்கமடைந்து சோர்வடைவதுடன் குருதிப் புரதங்களால் ஆற்றப்படும் மற்றும் பல தொழில்களும் பாதிப்புக்குள்ளாகின்றது.

 தொடுகை, நோவு போன்ற உணர்வுகளை அறிந்து கொள்வதற்கு உதவுகின்ற சுற்றயல் நரம்புத் தொகுதியின் தொழிலை பாதிப்படையச் செய்வதால் காலில் கல், முள் தைக்கும்போது இயல்பாகவே அதிலிருந்து காலைத் தூக்கிக்கொள்கின்ற உணர்திறன் அற்றுப்போவதால் காலில் தொடர்ச்சியாக பல வகையான காயங்கள் தோன்றி கால் அழுகிப்போவதுடன்(Foot Ulcer) இறுதியாக காலைத் துண்டாட வேண்டிய (Amputation of foot) நிலைக்குக் கூட கொண்டுபோய்ச் சேர்க்கின்றது. மற்றும் குருதிக் குழாய்களில் கொழுப்பு(LDL) படிவதைத் தூண்டி குருதிக்குழாய்களின் விட்டத்தைக் குறைப்பதால் மூளை, இதயம் என்பவற்றுக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைந்து அடிப்பு(Sfrock) நெஞ்சு வலி(Angine) போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

கோடிக்கணக்கான பணமிருந்தும் சுகமான உறக்கமில்லாமலும், நிம்மதியில்லாமலும் அலைந்து திரிபவர்களுக்கு மத்தியில் எம்மை சுகமுடன் வாழச்செய்து மற்றும் எம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வகுத்துத் தந்து எமது உள்ளங்களையும் அமைதிப்படுத்துகின்ற இறைவனுக்கு நன்றி செலுத்துவதை விட்டுவிட்டு சில அற்ப உலக இலாபங்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் தன்னையே மாய்த்துக்கொண்டு கொடிய நோய்களையும் வரவழைத்துக் கொள்கின்றவர்களின் கூட்டத்திலிருந்து விடுபட்டு எல்லாம் வல்ல இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோராக நாம் அனைவரும் மாறுவோமாக.

<< INDEX AL ATHAR MEGAZINE FEBRUARY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers