மனித நேயம் பேணுவோம்
அல் அதர் மாத இதழ் > ஆசிரியர் பக்கம்
‘கல்வி கைப்பற்றப்படாத வரை-நில நடுக்கங்கள் நிறைந்துவிடாத வரை-காலம் சுருங்கிவிடாத வரை- குழப்பங்கள் வெளிப்படாத வரை-கொலை மிகுதியாகாத வரை-உங்களிடையே செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஸஹீஹுல் புஹாரி: 1036)
சமகால உலக நிகழ்வுகளை அவதானிக்கும் போது இயற்கை அழிவுகளுக்கப்பால் மனிதக் கரங்களால் ஏற்படுகின்ற கொலைகள், அழிவுகள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் காஸா நிலைமைகளை அவதானிக்கும் போது குறிப்பாக முஸ்லிம் மக்களின் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் கண்கூடாகக் காணுகிறோம்.
ஊடகங்களை அவதானிக்கின்ற போது மனதை உருக்கக்கூடிய கொடூர அடாவடித்தனங்களால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் என்ற பாகுபாடின்றி மிருகங் களை விட மோசமாக மக்களைக் கொன்று குவித்தும், காயப்படுத்தியும் வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. கைகளையும், கால்களையும் இழந்து பரிதவிக்கும் சகோதரர்களையும், தொட்டிலுக்குள் இரத்த வெள்ளத்தில் துவண்டு கிடக்கும் பச்சிளம் குழந்தைகளையும் காணும் போது எமது நெஞ்சே வெடித்துவிடும்போலுள்ளது. எமது நாட்டினதும் தற்போதைய நிலைமையை அவதானிக்கும் போது அதிகளவில் உயிர்;ச்சேதங்களைக் காணுகின்ற ஒரு காலப்பகுதியாக இக்காலப் பகுதி அமைந்துள்ளது.
பல்லினத்தன்மை கொண்ட அழகிய இச்சிறு நாட்டிலே, பண்டைய காலம் தொட்டே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் சுமுகமாகவும், புரிந்துணர்வோடும் கௌரவமாக வாழ்ந்து வந்திருப்பதை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவருக்குப் புரிந்து விடும். மன்னர் ஆட்சிக் காலத்திலும் இந்நாட்டின் நிருவாகத்துறையில் முஸ்லிம்கள் பங்கெடுத்துள்ள அதேவேளை இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சிறுபான்மையினர்களான எமது பங்களிப்பு அளப்பெரியது. இருப்பினும் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு யுத்தமானது புதிய தலைமுறையினரின் நல்வாழ்வையும், புரிந்துணர்வையும் பெருமளவில் பாதித்துள்ளது. ஒரு சமூகம் மற்றுமொரு சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைமையையும் உருவாக்கியுள்ளது.
யுத்தத்தோடு நேரடியாக சம்பந்தப்படாத முஸ்லிம் சமூகம் கூட படுகொலைகள், பொருளாதாரச் சூறையாடல்கள், பலவந்தமான வெளியேற்றம் போன்றவற்றால் பறிகொடுத்த உயிர்களும், இழப்புக்களும் ஏனைய சமூகத்தவர்களின் இழப்புக்களுக்கு சற்றும் குறைந்தவையல்ல. எது எவ்வாறாயினும் இவற்றுக்கப்பால் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது ‘மனிதன் வாழும் காலமெல்லாம் மனிதாபிமானமும் உயிர் வாழும்’ என்ற வகையில் இந்நாட்டின் அனைத்து இனங்களும் ஒன்றாகச் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகளும் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.
யாழ், மூதூர் முஸ்லிம்கள் கண்ணீரோடும், கவலை யோடும் தமது தாயகத்தைத் துறந்து வெளியேற்றப்பட்டதன் பின் இவ் இனப்பிரச்சினையின் போக்கில் புதிய மாற்றம் தென்பட்டது. இந்நடவடிக்கை காரணமாக புலிகள் மீதான முஸ்லிம்களின் பார்வையானது அவர்கள் மீதான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோது முஸ்லிம்கள் அவர்களை உளமாற அரவணைத்தும், ஆறுதல்படுத்தியும் தமது நல்லுறவை வெளிப்படுத்தினர்.
ஆனால் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற யுத்த நடவடிக்கைகளால் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் காணக்கூடியதாக வுள்ளது. அரசாங்கம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றது என புலிகளும், புலிகளே மக்களைக் கேடயங் களாகப் பயன்படுத்தி அம்மக்களை அழிவுக்குட்படுத்தி வருகின்றார்கள் என அரசாங்கமும் கூறிவருகின்றனர். எவ்வாறாயினும் மக்களின் அவலங்களைத் தவிர்ப்பதற்கு இரு தரப்பாலும் அதிக பட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்களுக்கான சரியான சிகிச்சைகள் கிடைக்கப்பெறுவதை உரிய தரப்பினர்கள் உறுதி செய்யவேண்டும். அரசாங்;கம் அறிவித்திருக்கும் யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் மக்களின் பாதுகாப்பு இரு தரப்பினர்களாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
யுத்தம் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து வவுனியா மற்றுமுள்ள பிரதேசங்களுக்கு வந்திருக்கும் மக்களுக்கு இன, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் உதவி செய்து வருகின்றமை பாராட்டத்தக்கது. இவ்வேளையில் வன்னி மக்களுக்காக எமது காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் ஏனைய நிறுவனங்களும் மேற்கொண்ட நிதி சேகரிப்பு பாராட்டத்தக்கதும் முன்னுதாரணமுமாகும். இவ்வாறான பாராட்டத்தக்க செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் சமூகங்களுக்கிடையிலான இழந்துபோன ஒற்றுமையையும் மனித நேயத்தினையும் கட்டியெழுப்ப முடியுமென்பதில் ஐயமில்லை.
<< INDEX AL ATHAR MEGAZINE FEBRUARY 2009

Comments are closed.