நாம் ‘புதிய கொள்கை’ சொல்பவர்களா?
அல் அதர் மாத இதழ் > விமர்சன விளக்கம்
விமர்சனம்:
நீங்கள் கூறக்கூடிய அதிகமான மார்க்கத் தீர்ப்புக்கள் நாம் கேள்விப்படாத புதியவைகளாகவே உள்ளன. எம்மில் சிலர் உங்களை ‘புதிய கொள்கை சொல்பவர்கள், ‘எழுபத்தி இரண்டு கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்கின்றார்களே? இதுபற்றி தெளிவான விளக்கம் தேவை.
விளக்கம்:
நாம் கூறக்கூடிய அதிகமான மார்க்கத் தீர்ப்புக்கள் மக்களுக்குப் புதியவை என்பது மறுப்பதற்கில்லை ஆனாலும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எதைச் சொன்னார்களோ அதை மாத்திரமே நாம் மக்களுக்கு மார்க்கமென்று விளக்கி வருகின்றோம்.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட பழைய மார்க்கக் கருத்துக்களைத்தான் நாம் இன்று கூறுகின்றோமேயன்றி புதிதாக எந்தக் கருத்துக்களையும் நாம் சொல்லவில்லை.
அதிகமான மார்க்க சட்டங்கள் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் அவற்றை நாம் வெளிக்கொணரும் போது ”புதிய கொள்கை சொல்பவர்கள்’ எனும் பெயரைப் பெறுகின்றோம். பல காலங்களாக மக்களுக்குத் தெரியாமல் மங்கி, மறைந்திருந்த ”கூட்டு ஸகாத்’ எனும் ஸுன்னாவை சில மார்க்க அறிஞர்கள் பிரச்சாரம் செய்த போது நமது சமூகம் அங்கீகரிக்கவில்லையா? ஏன் எமது சமூகம் அங்கீகரித்தது? தகுந்த ஆதாரங்களை முன்வைத்து ‘கூட்டு ஸகாத்தை’ உலமாக்கள் சொன்னபோது இச்சமூகம் ஏற்றுக் கொண்டது. அப்படித்தான் சமுதாயத்தில் எத்தனையோ நபிவழிகள் மறைக்கப்பட்டுள்ளன. சில மார்க்க அறிஞர்கள் தெரிந்து கொண்டே ஸுன்னாக்களை அலட்சியம் செய்யும் காட்சிகளை சமுதாயத்தில் நாம் காணுகின்றோம்.
துணிகரமாக யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வை மாத்திரம் முன்னிறுத்தி ஆதாரங்களை சமர்ப்பித்துப் பிரச்சாரம் செய்தால் எத்தனையோ மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர். அதை நாம் செய்கின்றோம். அவ்வாறு மக்கள் ஏற்றுக்கொள்வதை அனுபவ ரீதியாகக் காணுகின்றோம். எத்தகைய எதிர்ப்புக்கள், சோதனைகள் வந்தாலும் அவற்றை துச்சமென நினைத்து பகிரங்கமாக சத்தியத்தை நாம் சொல்லுகின்றோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கும், எம்மை இல்லாதொழிக்க ஆலோசனை செய்பவர்களுக்கும் ‘நாம் சத்தியத்தைச் சொல்பவர்கள் என்று நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்ப்போ அல்லது எம்மீது கொட்டிவிடப்படும் அபாண்டங்களோ எமது பிரச்சாரப் பயணத்தில் சிறிதும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
பொதுவாக ஒரு கருத்தை யார் முன்வைத்தாலும் அக்கருத்து அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படாத வகையில் உள்ளனவா? என பார்க்க வேண்டுமே தவிர இக்கருத்தினை நாம் இதுவரை கேள்விப்பட்ட தில்லையே! இது புதிய கருத்தே! எமது உலமாக்கள் இன்னும் இதைச் சொல்லவில்லையே! என்பது போன்ற வினாக்களை எழுப்பி உண்மையான, ஆதாரங்களோடு சொல்லப்பட்ட மார்க்கக் கருத்துக்களை நிராகரிக்க முடியாது.
சில காலங்களுக்கு முன்னால் நாம் விட்ட எத்தனையோ மார்க்க ரீதியான தவறுகளை இன்று உணரவில்லையா? ஒருகாலத்தில் திருமணத்தின் போது பெண்ணிடத்தில் வீடு வாங்குவது கண்டுகொள்ளப்படாமலும் சாதாரண விவகாரமாகவும் இருந்து வந்தது. மிகத் தெளிவான பிரச்சாரத்தாலும், அப்பிரச்சாரத்தை நடைமுறை வாழ்வில் அமுல்படுத்துவதாலும் இன்று’வரதட்சணைக் கொடுமையில் வீடும் அடங்கும் என்ற மனோநிலை எமது சகோதரர்களுக்கு ஏற்பட்டதே! இது எமது சமூகத்தின் புதிய மனமாற்றமும் சமூக எழுச்சியுமில்லையா? விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
நாம் ஒன்றும் புதிய கொள்கையைக் கூறவில்லை. அன்று அழ்ழாஹ்வுடைய தூதரிடம் எது மார்க்கமாக இருந்ததோ அதை மாத்திரம் பின்பற்றுங்கள்! ஆதாரமில்லாத எந்த மனிதனுடைய கருத்தையும் மார்க்க விவகாரத்தில் பின்பற்றி விடாதீர்கள்! என்றுதான் நாம் பிரச்சாரம் செய்கின்றோம். சிலருக்கு இப்பிரச்சாரம் சரியான தீர்ப்பைக் கொடுக்கின்றது. இப்பிரச்சாரம் பூகம்பமாக எழுந்துள்ள தனால் மக்கள் விழிப்புணர்வு பெற ஆரம்பித்துள்ளார்கள். மக்களின் இவ்விழிப்புணர்வைத் தடுக்க ஒரே வழி ‘இவர்கள் புதிய கொள்கை சொல்லும் கூட்டம் என்றும் இவர்கள் குழப்பவாதிகள் என்றும் எழுபத்தி இரண்டு கூட்டத்தில் ஒரு சாரார் என்றும் முத்திரை குத்தி மக்களை தூயஇஸ்லாமிய கொள்கையை நோக்கி நகராமல் தடுக்கும் புதிய யுக்தியாகக் கையாள்கின்றனர். இந்த யுக்தி சில அறியாத மக்களிடம் எடுபடலாம். படித்த, தூரநோக்குள்ள, ஆராயும் திறன் கொண்ட மக்களிடம் ஒருகாலமும் எடுபடாது என்பது வரலாற்று உண்மை.
அன்றைய அரபி சமுதாயத்தில் அழ்ழாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் சத்தியத்தைச் சொன்ன போது இறை நிராகரிப்பாளர்கள் நபிகளாருக்குச் சொன்ன பதிலை திருமறையில் அழ்ழாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். ‘அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். ‘இவர் பொய்யர், சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர். கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கிவிட்டாரா? இது வியப்பான செய்திதான் (இவரை விட்டும்)சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர் பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது என்று அவர்க ளில் பிரமுகர்கள் கூறினர். ‘இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை(இது புதியது)இது கட்டுக் கதை தவிர வேறில்லை’(அல்குர் ஆன் 38:4-7) என்றும் கூறினர்.
அழ்ழாஹ்வின் மார்க்கத்தை கலப்படமில்லாமல் முன்வைத்த அந்த மாமனிதருக்கே ‘புதிய கொள்கை சொல்பவர் என்று விமர்சனம் வந்ததென்றால் நாமெல்லாம் எங்கனம்? பொதுவாக சமூகமாற்றத்தை ஏற்படுத்த முன்வைக்கப்படும் நல்ல பல கருத்துக்களையும் இச்சமூகத்தில் சிலர் நிராகரிப்பார்கள். அதற்கு அறிவு ரீதியாக விளக்கம் தரமாட்டார்கள்.
மாறாக ‘இவைகள் அனைத்தும் புதிய செய்திகள் என்று காரணம் கூறி தரமான, அவசியமான, அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துக்களையும் தூக்கி வீசிவிடுவார்கள். இது அவர்களின் விளக்கக் குறைவினால் ஏற்பட்ட கோளாறுதானே தவிர முன்வைக்கப்படும் கருத்தில் ஏற்பட்ட கோளாறல்ல. ஆகவே நாம் முன்வைக்கும் கருத்துக்கள் எமது கண்டுபிடிப்பல்ல. உள்ளதை உள்ளபடி அப்படியே எடுத்துவைக்கின்றோம்.
இவ்வாறு நாம் செயற்படுவதால் யாராவது எம்மை ‘புதிய கொள்கை சொல்பவர்கள் என்று அழைத்தால் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றோம். அனைவரின் உள்ளங்களையும் உற்று நோக்கும் அந்த அல்லாஹ் யார் மார்க்கத்தை வியாபாரத்திற்காக மாற்றுகின்றார்கள்? யார் குழப்புகின்றார்கள்? யார் புதிது புதிதாக மார்க்கத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள்? என்பதை நன்கறிவான். அவன் நாடினால் மாத்திரமே நேர்வழியைக் கொடுக்க முடியும். எம்மைப் பார்த்து ‘புதிய கொள்கை சொல்பவர்கள் என விமர்சிக்கும் அந்த சகோதரர்கள் பின்வரும் ஹதீஸைப் படித்துப் பார்க்கட்டும்!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு நன்மாராயம் உண்டாகட்டும்!’ அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: ஸஹீஹு முஸ்லிம்- 232).

Comments are closed.