சந்தேகங்களும் தெளிவுகளும்
சந்தேகம்:
இன்றைய நவீன யுகத்தில் இஸ்லாமிய இயக்கவாதிகள் என தங்களை அறிமுகம் செய்யும் சில இயக்க சகோதரர்கள் தாடி இக்காலத்துக்குப் பொருந்தாது எனவும் ஸ்டிக்கர் தாடியை ஒட்டியவர்கள் போன்றும் காட்சியளிக்கின்றனர். இவர்களை இஸ்லாமிய கொள்கைவாதிகள் என்பதா? அல்லது இஸ்லாமிய பெயர் தாங்கிய நடிகர்கள் என்பதா? தெளிவான விளக்கம் தருக?
தெளிவு:
அழ்ழாஹுத்தஆலா இப்பூவுலகில் மனித சமூகத்தைப் படைத்து அச்சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு சாரார்களை பிரதான அங்கமாக வகிக்கச் செய்துள்ளான். அதில் ஆடவர் சமூகத்திற்கு தாடியினை அலங்காரமாகவும், பெண்ணினத்திற்கு கூந்தலை அலங்காரமாகவும், ஆக்கிய இறைவன், அவ்வலங்காரத்தை (தாடியினை) எவ்வகையிலும் சிதைத்து விடக்கூடாது எனவும் இறைச்செய்தி மூலம் எச்சரித்துள்ளான். இந்த அடிப்படையில் தாடியை வளர்ப்பது என்பது நபிகளார் புதிதாக கொண்டு வந்த ஒரு வழிமுறையல்ல. மாறாக முன்னைய நபிமார்களும் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.
மூஸா(அலை) அவர்கள் தனது சகோதரர் ஹாறூன்(அலை) அவர்களை தனது சமூகத்திற்கு பிரதிநிதியாக ஆக்கிவிட்டு ‘தூர்சினாய்’ மலைக்கு சென்று வந்த சமயம் அச்சமூகத்தில் ‘சாமிரி’ என்பவன் காளை மாட்டை கடவுளாக சித்தரித்து அதனை வணங்கச் செய்திருந்தான். இதனைக் கண்டு கோபமுற்ற மூஸா(அலை) அவர்கள் ஹாறூன் நபியின் தாடியைப்பிடித்த போது ‘என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்!’ (அல்குர்ஆன் 20:94) என ஹாறூன்(அலை) சொன்னார்கள். இதன்மூலம் தாடி என்பது நபிமார்களின் சுன்னா என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
இச்சுன்னாவை எமது தலைவர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூடுதலாகவே கவனம் செலுத்தி வலியுறுத்தியுள்ளதை அவர்களது பொன்மொழிகளில் தாராளமாக காணலாம். ‘தாடிகளை வளர விட்டும் மீசைகளை கத்தரித்தும் நிராகரிப் பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்.’ புஹாரி(5892)
தாடி என்பது அழ்ழாஹ்வின் தூதரால் கட்டாயமாக வலியுறுத்தப்பட்ட ஒரு நபி வழியாகும். தொழுகை என்பது எவ்வாறு ஒரு முஸ்லிமுக்கு கடமையோ அவ்வாறுதான் தாடி வளர்ப்பதையும் ஒரு கடமையாக இஸ்லாம் கருதுகின்றது. ஏனெனில் தொழுகை விடயத்தில் இறைவன் ‘நிலைநாட்டுங்கள்’ என்ற சொற்பிரயோகத்தை கையாள்கிறான். இச்சொல் அறபுப் பாசையில் ஏவல் வினையாகும்.
இவ்வாறான ஏவல் வினைகள் (மாற்றுகின்ற துணைச் சொற்கள் அல்லாமல்) கட்டாயம் என்பதை வேண்டிநிற்கிறது. இதே போன்ற ஒரு சொற்றொடர்தான் தாடி விடயத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே தாடியை மழிப்பதோ, குறைப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.அதுமட்டுமல்லாமல் யூத நஸாராக்களின் கலாசாரத்தை பின்பற்றுவதாகவும் அமையும். மற்றும் இந் நபிவழியை மீறுவதால் மூன்று பெரும் பாவங்களை செய்யவேண்டி ஏற்படுகின்றது.
1. அழ்ழாஹ்வின் அழகிய படை கோலத்தை மாற்றி அமைத்தல்:
திருமறைக் குர்ஆனில் அழ்ழாஹ்”மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்’ (அல்குர்ஆன் 95:04) எனக்கூறியுள்ளான் எனவே ஆடவர்களுக்கு ‘தாடி வளர்ப்பது என்பது அழ்ழாஹ்வின் இயல்பான படைப்பில் உள்ள அம்சமாகும். மற்றும் இப்லீஸ் அழ்ழாஹ்விடம் ‘அவர்களுக்குக் கட்டளையிடுவேன் அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்’(அல்குர்ஆன் 04:119) என சபதமிட்டு வந்தான். அந்த சாபத்திற்கு அடிபணிந்த பாரிய குற்றம் தாடியை குறைப்பதினால் எமக்கு வந்து விடும்.
2. பெண்களுக்கு ஆண்கள் ஒப்பாதல்:
நபி(ஸல்) அவர்கள் ஆண்கள், பெண்களுக்கும் பெண்கள், ஆண்களுக்கும் ஒப்பாவதை வன்மையாக கண்டித்துள்ள ஆதாரபூர்வமான செய்தி ஹதீஸ் கிரந்தங்களில் நிறைந்து காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆண்கள் தாடியை மழிப்பதினால் பெண்களுக்கு ஒப்பாகியே காணப்படுகின்றனர். நபிகளார் கடுமையாக எச்சரிக்கை செய்த இக்காரியத்தை எமது சமூகத்தில் காணுகின்ற போது அழ்ழாஹ்வின் சாபத்திற்காளானவர்களாக மாறிவிட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது.
3. இணைவைப்பாளர்கள், யூத, நஸாராக்களின் கலாசாரத்தை பின்பற்றுதல்:
இன்று முஸ்லிம் உலகு யூத சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்படுகின்ற அதே நேரம், அதற்கு மாற்றீடாக முஸ்லிகளாகிய நாம் அவர்களின் அனைத்துத் தயாரிப்புகளையும் பகிஸ்கரிப்பு செய்ய வேண்டும் என ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும் சூபித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சில இயக்கச் சகோதரர்கள், தாடிவிடயத்தில் முழுக்க முழுக்க யூதர்களையே பின்பற்றுகின்றனர் என்பதில் ஐயமில்லை.
கேட்டால் சில்லறை எனவும் நவீனங்களுக்குப் பொருந்தாது எனவும் தங்களது வழமையான பல்லவி பதிலை அளிப்பர். ஆனால் இவர்களது பார்வையில் செய்யிதுல் குதூப், ஹசனுல் பன்னா, யூசுப் அல் கர்ழாவி போன்றோரின் நூற்களோ நவீன அறிவுகள் அடங்கிய நூற்களாகும்.
மௌலூது, கத்தம், பாத்திஹா, பாங்கிற்கு முன் ஸலவாத்துக் கூறல், பராஅத்து நோன்பு போன்ற பித்அத்துக்கள் இவர்களின் பார்வையில் சில்லறைகள் கிடையாது. மாறாக நெஞ்சில் தக்பீர் கட்டுதல், விரல் அசைத்தல், சர்வதேசப்பிறை, தாடிவளர்த்தல் போன்ற சுன்னாக்களே சில்லறைகளும், பிற்போக்கு சிந்தனை யுமாகும்.
இவர்கள்தான் டென்மார்க்கிலே நபிகளாருக்கு கேலிச்சித்திரம் வரைவதற்காக எதிர்ப்பு மாநாடுகள் போட்ட நவீன வாதிகளா? நபிகளாரின் அடையாளச்சின்னமான தாடியை குழிதோண்டிப்புதைத்த இவர்களுக்கு எதிராக யார் மாநாடுகள் போடுவது? இவர்களுக்கு நேர்வழிகாட்ட அழ்ழாஹ்வே போதுமானவன்.
இறுதியாக இன்று காஸா மக்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு எதிராக நாம் செய்யும் முதல் மாற்றீடாக தாடி வளர்ப்பதை ஆக்கிக்கொள்வோமாக, (நேர்வழிகாட்ட அழ்ழாஹ் போதுமானவன்)

Comments are closed.