ஐவேளைத் தொழுகைகளில் ‘துயர்கால குனூத்’ ஓதலாமா?
அல் அதர் மாத இதழ் >சட்டங்கள்
மௌலவி ஆதுஆ நௌபர் (காஷிபி)
noufer78@hotmail.com
‘அழ்ழாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)
எமது சமூகத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளின்போது பள்ளிவாயல்களில் பரவலாக ஓதப்பட்டுவரும் ‘துயர்கால குனூத்’ பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை இக் கட்டுரை ஆராய்கின்றது.
நபி(ஸல்) அவர்களுக்கு இறை செய்தியான வஹி வர ஆரம்பித்து அதை அவர்கள் பகிரங்கமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தவுடன் மக்கத்துக் காபிர்களால் சொல் லொனா சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டன. இந்நிலையிலேயே மக்கா வாழ்வின் இறுதிப் பகுதியில் மிஃறாஜ் நிகழ்வில் தொழுகை கடமையாக்கப்பட்டது. இவ்வாறு தொழுகை கடமையாக்கப்பட்டதன் பின்பு அன்றிருந்த முஸ்லிம் சமூகமான நபி(ஸல்) அவர்களுக்கும், அன்னாரது தோழர்களுக்கும் மக்கத்துக் காபிர்களால் பல சோதனைகள் ஏற்பட்டபோதிலும் நபி(ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைகளில் காபிர்களுக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு உதவி வேண்டியோ பிரார்த்தித்து ‘குனூத்’ ஓதவில்லை. அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்றத் சென்றதன் பின்பும் காபிர்களால் குறிப்பாக யூதர்களால் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல நெருக்கடிகளும் படையெடுப்பு களும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நெருக்கடியான, இறுக்கமான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைகளில் காபிர்களுக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கு உதவி வேண்டியோ பிரார்த்தித்து ‘குனூத்’ ஓதவில்லை.
எனவே, அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள், சோதனைகள் நேரிடும் போது எதிரிகளுக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம்களுக்காக உதவி வேண்டியோ பிரார்த்தித்து தொழுகையில் ‘குனூத்’ ஓதுவது நபி வழி அல்ல என்பதுடன் இதுவே இஸ்லாத்தின் அடிப்படை விதி என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
எனினும் மேற்படி அடிப்படை விதிக்கு மாற்றமாக நபிகளார் வாழ்வில் ஒருமுறை பின்வரும் சம்பவம் இடம் பெற்றது. ‘நான் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்(என்னும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே நான் ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ருகூவிற்கு முன்பு தான் என்று பதிலளித்தார்கள். உடனே நான், தாங்கள் ருகூவிற்குப் பின்னால் தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே என்று கேட்டேன்.
அதற்கு அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம் கூட) ஒரு மாத காலம் தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்த தென்றால்) நபி (ஸல்) அவர்கள் குர்ரா – திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள் என்று கூறப்பட்டு வந்த சிலரை – அவர்கள் எழுபது பேர் ஆவர் -இணை வைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே(பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அழ்ழாஹ்வின் தூதருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டிருந்த இவர்களது கையோங்கி(அந்த 70 பேர்களையும் கொன்று)விட்டனர். எனவே தான், அவர்களுக் கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்), நூல்: புஹாரி-4096)
மேற்படி ஹதீஸ் காலமெல்லாம் அன்னியர்களின் சோதனைகளையும் தாக்குதல்களையும் சந்தித்து வந்த நபி(ஸல்) அவர்கள் வழமையாக ‘குனூத்’ ஓதுவதில்லை என்பதற்கும் குறித்த ஒரு மாதம் மாத்திரம் ஓதிவிட்டு பின்பு அதை கைவிட்டு விட்டார்கள் என்பதற்கும் ஆதாரமாகும். இவ்வுண்மையை கீழ்வரும் ஹதீஸ் இன்னும் உறுதிசெய்கிறது.
‘நபி(ஸல்) அவர்கள் அறபுக் கோத்திரங்கள் சிலவற்றுக்கு எதிராக பிரார்த்தித்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பின்பு அதை கைவிட்டு விட்டார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி), ஆதாரம்: முஸ்லிம்-1206)
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதகாலம் ஓதிய குனூத்தை ஏன் கைவிட்டார்கள் என்ற காரணமும் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
‘நபி(ஸல்) அவர்கள் யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரார்த்திக்க நாடினால், ‘ (முஹம்மதே!) அழ்ழாஹ்வின் அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக் கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.’ எனும்(3:128) வசனத்தை இறக்கும் வரை ருகூஉவிற்குப் பின் குனூத் ஓதினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புஹாரி-4560)
எனவே, மேற்படி ஹதீஸில் உள்ள இறைவசனம் ஒரு சமூகத்தை அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதற்காக வேண்டி அவர்களை சபிப்பதற்கோ அல்லது அழித்து விடும் படி பிரார்த்திப்பதற்கோ நபிக்கோ, எமக்கோ அனுமதி இல்லை என்பதையும் அவர்களை தண்டிக்கும் அல்லது மன்னிக்கும் அதிகாரம் அழ்ழாஹ்வுக்கு மாத்திரம்தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகையிலும் ஒரு மாதம் ஓதிய மேற்படி அவசரகால அல்லது சோதனைகள் ஏற்படும் போது ஓதும் குனூத்தை கைவிட்டு விட்டார்கள் என்பதையும் குறித்த சம்பவத்திற்குப்பின் இதைவிடவும் பாரதூரமான அனர்த்தங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டும்; கூட நபி(ஸல்) அவர்கள் குனூத் ஓதவில்லை என்பதையும் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
எனவே மேலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் குனூத் ஓதுவது குறித்த அல்குர்ஆன் வசனத்திற்கும் அதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் குனூத்தை கைவிடுதல் எனும் நபி வழிக்கும் முற்றிலும் மாற்றமானதாகும்.
அத்துடன் நடைமுறை ரீதியாக நோக்கும் போது கூட முழு உலகமும் ஒரு கிராமம் போல் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் தொடரான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இவ்வேளையில் முஸ்லிம்களுக்கு துயரம் ஏற்படும் போதெல்லாம் குனூத் ஓதுவது என்றால் குனூத் என்பது ஐவேளை தொழுகையின் ஒரு அங்கமாகவே ஆகிவிடும் அபாயம் இருக்கிறதல்லவா?
உதாரணமாக, எமது முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமான ஈராக்கை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது தீவிரமாக குனூத் ஓதியவர்கள் இப்போது நிலைமை மேலும் சிக்கலடைந் திருக்கும் நிலையில் ஈராக்கிற்கான குனூத்தைக் கைவிட்டு பிரச்சினையை மறந்து விட்டார்கள் அல்லவா!
இந்த இடத்தில் இரு விடயங்களை சுட்டிக்காட்டுவது பொருத்தம் என கருதுகின்றோம்.
முதலாவதாக, மேற்படி அவசரகால குனூத் ஓதக்கூடாது என நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் கூறுவதன் அர்த்தம் முஸ்லிம் உம்மத்தின் பிரச்சனைகளில் நாம் பிரார்த்தனை ரீதியாக பங்கேற்கக் கூடாது என்பதல்ல. மாறாக குனூத் தவிர்ந்த ஏனைய பிரார்த்தனைகளில் அவசியம் பலஸ்தீன் மற்றும் ஏனைய அல்லலுறும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையிலான எமது பிரச்சாரத்தை நாம் சமூகத்தில் முன்வைக்கும்போது அதனை கருத்து ரீதியாக எதிர்கொள்ள தயங்கும் சில மார்க்க அறிஞர்கள் எமது இஸ்லாமிய அடிப்படையிலான கருத்துகளை திரித்துக் கூறி வருவதனால் இவ்விடயத்தை இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
இரண்டாவதாக, எதிரிகளின் சூழ்ச்சிகளும், தாக்குதல்களும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் மீது அதிகரித்துள்ள இவ்வேளையில் நாம் இஸ்லாத்தை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் அதன் தூய வடிவில் பின்பற்றி அழ்ழாஹ்வின் அருளையும், உதவியையும் பெற்றுக்கொள்ள முனைய வேண்டுமே தவிர அழ்ழாஹ்வின் வழிகாட்டலின் பிரகாரம் நபி(ஸல்) அவர்களால் கைவிடப்பட்ட அவசரகால குனூத் போன்ற பித்அத்களை செய்து அழ்ழாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளாகிவிடக்கூடாது.
இறுதியாக மேற்படி அவசரகால குனூத் என்பது பித்அத் எனும் நூதனமாகும், நூதனம் அனைத்தும் வழிகேடாகும், வழிகேடு அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் எனும் நபிமொழிக்கேற்ப மேற்படி குனூத்தை எமது தொழுகைகளில் நாம் ஓதாமல் தவிர்ந்தும், கையேந்தி ஒரு பித்அத்தை அரங்கேற்ற நாமும் துணை போகாது தவிர்ந்து கொள்வோமாக. எல்லாம் வல்ல அழ்ழாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
<< INDEX AL ATHAR MEGAZINE FEBRUARY 2009

Comments are closed.