இஜ்மா, கியாஸ் விடயத்தில் தாருல் அதரின் நிலைப்பாடு!!
அபூஅஹ்மத் அல் அதரி
abooahamed@gmail.com
ஐயம்:- உங்களது தாருல் அதரினைப் பற்றி முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கின்ற நீங்கள் கடந்த (30.01.2009) வெள்ளிக்கிழமை இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயல் ஜும்ஆவில் பெயர் மாத்திரம் குறிப்பிடாது, உங்களைப் பற்றி மிகக்கடுமையாக விமர்சித்திருந்தும் நீங்கள் இதுவரை பதிலளிக்காதது ஏன்? நீங்கள் இஜ்மா, கியாஸை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களா? (akmalrj@—.com)
தெளிவு:- மேற்படி கேள்வியை நீங்கள் மின்னஞ்சல் மூலம் கேட்டாலும் உங்களைப் போன்ற பல சகோதரர்கள் பல சந்தர்ப்பங்களில் இக்கேள்வியை கேட்கத் தவறவில்லை.
தாருல் அதரினைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வினைத் தவிர யாருக்கும் அஞ்சாமல் உரிய வேளைகளில் மக்களுக்குத் தேவையான மார்க்க விடயங்களை அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்கின்ற அடிப்படைகளிலிருந்து மாத்திரம் எடுத்துச் சொல்லும் தஃவா அமைப்பாகும்.
கடந்த காலங்களில் ஏனைய தஃவா அமைப்புக்களிலிருந்து பெற்ற பாடங்கள், படிப்பினைகளைக் கருத்திற் கொண்டு தனித்துவமான முறையில், எந்த தனிநபர்களிலோ, நிறுவனங்களிலோ தங்கியிராது சுதந்திரமாகப் பிரச்சாரப் பணி செய்யவே தாருல் அதர் தோற்றுவிக்கப்பட்டது.
மனிதன் என்ற ரீதியில் எம்மில் தவறுகள் காணப்பட்டாலும், அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் என்று வந்துவிட்டால் அடிபணிவதென்பதுவே எமதுஉயிர் மூச்சாகும்.
இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. ‘(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (அல்குர்ஆன் 04:65)
எனவேதான் எமது அமைப்பின் இந்த நான்கு வருட கால தஃவா வரலாற்றில் சமூக, அரசியல் மற்றும் ஏனைய பாவங்களை அந்தந்த காலகட்டங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியே வந்துள்ளோம். அதனாலேதான் நாம் சில மார்க்க விடயங்களை எமது பிரதேசத்திலும், வெளிப்பிரதேசங்களிpலும் எடுத்துச் சொல்கின்ற போது புதியகொள்கையை சொல்வதாக விமர்சிக்கப்படுகின்றோம்.
எம்மைப் பொறுத்த வரையில் தப்லீக் ஜமாஅத்தில் காணப்படும் அறியாமையையும், இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்திடம் காணப்படும் அகீதா ரீதியிலான தவறுகளாக இருந்தாலும் பகிரங்கமாகவே பேசி வருகின்றோம். எம்மை எதிர்க்கின்ற தௌஹீத் சாயம் பூசியவர்களைப் பொறுத்த வரையில் எம்மை ஒழிக்க வேண்டுமென்பதற்காக ஏனைய அமைப்புக்களையும் சேர்த்துக் கொண்டு கைகோர்த்து வந்த சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.
மேற்படி சகோதரர் அவர்கள் கேட்ட எம்மை விமர்சித்தல் என்கின்ற விடயத்தைப் பொறுத்த வரையில் நாம் நீண்ட நேரம் ஆலோசனை செய்தோம். சில வாக்குறுதிகளுக்கு அமைவாகவே நாம் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை.
அதாவது எமதூரின் சில தலைவர்களின் தன்னலமற்ற நல்ல முயற்சியின் காரணமாக தாருல் அதர் உலமாக்களும், ஏனைய ஜம்இய்யத்துல் உலமா உள்ளடங்களாக அனைத்து தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சர்ச்சைக்குரியவைகளாகக் கருதப்படுகின்ற விடயங்களை ஒரேசபையில் உட்கார்ந்து புரிந்துணர்வோடும், சிநேகபூர்வமாகவும் பரந்தளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நல்ல நோக்கோடு ஒருசபை அமைக்கப்பட்டு இரு அமர்வுகள் நடந்தேறியுள்ளன.
இவ்ஆய்வு சபை தொடர்பான எவ்விதமான கருத்து வெளியிடுவதோ, விமர்சனம் செய்வதோ மேற்படி குறித்த கண்காணிப்பாளர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதால்தான் எம்மைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தும் கூட நாம் வாக்குறுதிகளையும் ஒப்பந்தங்களையும் மதிக்க வேண்டுமென்பதற்காகவே இதுவரையும் உத்தியோகப்பூர்வமாக எக்கருத்தையும் வெளியிடவில்லை.
நாம் இஜ்மா, கியாஸை எல்லாம் ஏற்றுக் கொண்டதாகவும் மத்ஹபுகள் சாராத அமைப்பென்பதெல்லாம் இப்போது கிடையாது என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்தபோதும் இன்ஷா அல்லாஹ் இது தொடர்பாக அடுத்த அமர்வின் போது சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறிய பின்பே கருத்துக்களை வெளியிடவுள்ளோம்.
எனவே, ஒரு போதும் தாருல் அதர் தனது அடிப்படைக் கொள்கை யில் இருந்து திசைமாறவில்லை என்பதை உறுதியோடு மீளவும் கூறிக்கொள்கின்றோம்.

Comments are closed.