அகீதாவை மட்டுமல்லாது சமூகக் கொடுமைகளையும் உறுதியோடு எதிர்த்த நபி
அபூஅஹ்மத் அல் அதரி
இன்று ஏகத்துவக் கொள்கையென்று வந்து, அகீதா மட்டுமே பேச வேணடும், ஏனைய பாவங்களை ஒவ்வொன்றாக கட்டம் கட்டமாகவும், கருத்து வேறுபாடுகளை அறவே பேசவும் கூடாது என்றெல்லாம் புதிய கொள்கையைக் கண்டு பிடித்து தஃவாவே செய்யாது, சுன்னாக்களையும் அலட்சியமாகக் கருதுகின்ற தௌஹீத் வாதிகள் ஏராளம், ஏராளம். இதனால் பல அமல்களையும், நன்மைகளையும் இழந்து தானும், தான் சார்ந்திருக்கும் பலரை கொள்கைப் பற்றற்றவர்களாக மாற்றிய பெருமை இவர்களையே சாரும்.
பித்அத்துகளை படிப்படியாகக் கண்டிக்க வேண்டுமென்பதற்காக, கூட்டு துஆ ஓதிக்கொண்டு குத்பாக்கள் செய்கிற அவல நிலைதான் இன்று தௌஹீதுக்கு ஏற்பட்டுள்ளது.
களமும்,வளமும் வேண்டுமென்பதற்காக, பல ஸுன்னாக்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டுமென்று கதை சொல்பவர்களாகத்தான் இன்றைய தாஇகள் உள்ளனர். எந்தவொரு சட்டத்தைக் கேட்டாலும் அதில் கருத்து வேறுபாடு உள்ளது, அந்த ஹதீஸை பலர் பலயீனமாக்குகின்றனர், ஷாபிஈ இமாம் அப்படிச் சொல்கிறார், மாலிக் இமாம் இப்படிச் சொல்கிறார், நவீன சவூதி அறிஞர்கள் இவற்றையெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறி, கேள்வி கேட்டவரின் மார்க்கத்தை அசலாகப் பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வத்தை அப்படியே மழுங்கடிக்க வைக்கின்றனர்.
அல்குர்ஆனைப் படிக்கின்ற போது 7:85 ல் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
‘மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ‘என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது’ என்று அவர் கூறினார்.
மேலும்,07:86ல் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
”ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது’ என்பதைக் கவனியுங்கள்!(அல்குர்ஆன்)
மேற்படி இரு வசனங்களையும் அவதானிக்கும் போது, ஷுஐப் நபி அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்ற கொள்கையோடு, சமூகக் கொடுமைகளையும் தயவு தாட்சண்யமின்றி தெளிவாக எடுத்துச் சொல்வதைக் காணலாம். அளவை நிறுவையில் மோசடி செய்வது, பூமியில் குழப்பம் செய்வது, மற்றும் மக்களை அச்சுறுத்துவது போன்ற அநியாயங்களை எடுத்துக் கூறியதால் தான், ஊர்ப் பெரியவர்களால் ஊர்விலக்கல் செய்யப்படுவதாக எச்சரிக்கப்படுகிறார்கள்.
சமுதாயத்தில் இருக்கின்ற தலைவர்கள் செய்யும் அதிகாரத்துஷ்பிரயோகங்கள், கலாசார சீரழிவுகளையெல்லாம் கண்டு கொள்ளாது, இசையும், ஆடல் பாடலும் உயர்ந்தோங்க, கலை என்ற பெயரில் ஆண் பெண் கலப்புகள் எல்லாம் இடம்பெறும் போது இதையெல்லாம் கண்டிக்காத ஒரு தஃவா, தஃவாவே இல்லை.

Comments are closed.