நான்கு இமாம்கள் சொன்னதென்ன?
‘விமர்சனம்: இஸ்லாத்திற்காக சேவை செய்த இமாம்களை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? குறிப்பாக முஸ்லிம்கள் பின்பற்றும் நான்கு இமாம்களின் கூற்றுக்களை நீங்கள் நிராகரிப்பது எவ்வகையில் நியாயமாகும்?
விளக்கம்: நம்மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ‘இமாம்களை இவர்கள் நிராகரிக்கின்றனர்’ எனும் விமர்சனமும் ஒன்றாகும். இவ்விமர்சனத்தைப் பொருத்த வரையில் நமது பிரச்சாரத்தை சரிவரப் புரிந்துகொள்ளாத சில சகோதரர்களால் பரப்பிவிடப்படும் அபத்தமாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.
நம்மைப் பொருத்தவரையில் இமாம்களை நாம் அவமதிக்கவில்லை. தரம் தாழ்ந்து அவர்கள் விடயத்தில் பேசியதுமில்லை. நாம் நமது உரைகளில் சுட்டிக்காட்டும் அத்தனை ஸஹீஹான ஹதீஸ்களும் கண்ணியமிக்க இமாம்கள் தொகுத்த வைகளே! நாம் இமாம்களை நிராகரித்தால் எப்படி அவர்கள் தொகுத்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பிரச்சாரம் செய்ய முடியும்? இதனை அவ்விமர்சகர்கள் சிந்தித்தாலே நம்மீது இவ்வினாவை எழுப்பமாட்டார்கள்.
‘இமாம்களை மதிக்கின்றோம்’ எனும் பெயரில் ஒரு கூட்டம் இமாம்களை அவமதித்து வரும் கலாச்சாரத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இமாம்களின் பெயரால் சிலர்கள் நடாத்தும் வியாபாரத்தைக் கண்டிப் பதாலும் அவற்றைக் கைவிடுமாறு தொடர் பிரச்சாரம் செய்வதாலும் நாம் இமாம்களை நிராகரித்ததாக அமையுமா? இமாம்கள் விடயத்தில் நாம் ஓர் அடிப்படையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றோம்.
அதாவது இஸ்லாத்தின் சட்டமூலாதாரங்கள் இரண்டு மாத்திரமே. அவை அல்குர் ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும். இவற்றைத் தாண்டி மூன்றாவது ஒரு சட்ட மூலாதாரம் இல்லை எனும் தெளிவான நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். இதற்குக் காரணம் அழ்ழாஹ் அப்படி இருக்குமாறு அல்குர்ஆனில் கூறுகின்றான். ‘
மக்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்! அதை விடுத்து நீங்கள் நேசிப்பவர்களைப் பின்பற்ற வேண்டாம்!’ (அல்குர்ஆன் 7:3)
இவ்வசனத்தில் அழ்ழாஹ் நமக்கு இடும் ஒரே கட்டளை இறை செய்தியான அல்குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பின்பற்றுங்கள், வேறு எதையும் பின்பற்றாதீர்கள்! என்பதேயாகும்.
மேற்குறித்த இறை கட்டளைக்கு அமை வாகவே நாம் மார்க்க விடயத்தில் மனிதக் கருத்துக்களை அங்கீகரிப்பதுமில்லை, அக்கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணக்கங்களை அனுமதிப்பதுமில்லை. இமாம்கள் இஸ்லாத்திற்காகச் சேவை செய்தார்கள் என்பதை ஒருக்காலும் நாம் மறுத்ததில்லை. மேலும் அவர்களது சேவையை ஆணித்தரமாக உணர்த்தி வருகின்றோம். ஆனால் அவர்கள் சேவை புரிந்ததற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டுமெனும் வாதம் அல்குர்ஆனுக்கு எதிரானது. ஏனெனில், அழ்ழாஹ்வோ தனது செய்திகளை மாத்திரம் பின்பற்றுமாறு நமக்குப் பணிக்க, தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய இமாம்களை நாம் பின்பற்றுவது எவ்வகையில் சகோதரர்களே நியாயமாகும்?
‘மார்க்க விடயத்தில் இறை செய்திகளை மாத்திரம் பின்பற்றுங்கள்! இமாம்களையோ, பெரியார் களையோ, மகான்களையோ பின்பற்ற வேண்டாம்! என நாம் பிரச்சாரம் செய்வது எவ்வகையிலும் அவர்களை அவமதித்ததாக அமையாது. ஏனெனில் இமாம்களில் யாரும் யாரையும் கண்மூடிப் பின்பற்ற அனுமதிக்கவில்லை என்பதை அவர்களது நூல்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
’தக்லீத’ எனும் கண்மூடிப் பின்பற்றலை மத்ஹபுக்குரிய இமாம்கள் எனச் சொல்லப்படும் அறிஞர்கள் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இமாம்களைப் பின்பற்றக் கூடாது என நாம் பிரச்சாரம் செய்தால் இமாம்களை வசைபாடுகின் றோம் எனக் கூக்குரலிடும் மேதைகள் பின்வரும் இமாம் களின் வாசகங்களைக் கவனித்துப் பார்க்கட்டும்!
இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘அல்குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்றுங்கள். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எந்த நபரின் சொல்லும் மார்க்கத்திற்கு ஆதாரம் கிடையாது. யாரையும் கண்மூடிப்பின்பற்றாதீர்கள்.’ (நூல்: ஸலாத்துந்நபி பக்கம் 21)’எனது நூலில் அழ்ழாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான(சட்டத்)தைக் கண்டால் அழ்ழாஹ் வின் தூதழ்(ஸல்) அவர்களின் வழிமுறையையே (மக்க ளிடம்) சொல்லுங்கள். என் சொல்லை விட்டு விடுங்கள்.’ (நூல்: அல்மஜ்முவு (நவவி) பாகம்-01, பக்கம்-63)
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘ஒவ்வொரு புதிய வி’யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும். எங்களை கண்மூடிப்பின்பற் றாதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற் றுங்கள்.’ (நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )
‘அழ்ழாஹ்வுடைய வேதத்திற்கும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)
‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’ (நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)
‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை (நபிமொழி யை)யே பின்பற்றுங்கள்.’ (நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12)
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62)
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள். யார் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்று கின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’ (நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302) ‘என்னையோ, மாலிக், ‘hபிஈ, அவ்ஸாயி, ஸவ்ரி போன்ற இமாம்களையோ பின்பற்றாதீர்கள். அவர்கள் புரிந்து கொண்டதி(அல்குர்ஆன், அல்ஹதீஸ்)லிருந்து நீங்களும் புரிந்துகொள்ளுங்கள்!’(நூல்: ஈகாழுல் ஹிமம் பக்கம் 113)

Comments are closed.