Skip to content

ஸுன்னா ஓர் அறிமுகம் (2)

January 19, 2009

அபூ அஹ்மத் அல் அதரி
abooahamed@gmail.com

சென்ற இதழின் தொடர்ச்சி…

‘அல்லாஹ்வையும்,  இறுதி  நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம்  நினைக்கும்  உங்களுக்கு
அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

தொடர் கட்டுரைகளின் மூலம் சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் பகுதி, பகுதியாக முன்வைக் கலாம் என்ற நோக்கில் நமது முதலாவது இதழில் ‘ஸுன்னா ஓர் அறிமுகம்’ என்ற தொடரினை ஆரம்பித்து இஸ்லாத்தில் ஸுன்னாவின் முக்கியத்துவத்தினை அருள்மறை வசனங்களினை மேற்கோள்காட்டி விளக்கியிருந்தோம்.

அதன் தொடரில் இவ்விதழில் ‘ஸுன்னா’  பற்றிய சொல் விளக்கத்தினையும் வித்தியாசமான கோணங்களில் அதன் வரைவிலக்கணங்களையும் நோக்குவோம்.

‘ஸுன்னா’ பற்றிய முக்கியத்துவம், இஸ்லாமிய சட்டவாக்கத்தில் அது கொண்டுள்ள அளப்பரிய பங்;கு போன்றவற்றை சமுதாயம் சரிவரப் புரிந்து கொள்ளாததன் காரணத்தினால்தான் மக்களிடம் பித்அத்கள் செய்யாதீர்கள் எனக் கூறும்போது சமுதாய மக்கள் சில நேரங்களில் அது பற்றி கரிசனை கொள்வதில்லை. பித்அத்தின் பாரதூரம் புரியாததால் ‘ஸுன்னா’ வினை நமது சமுதாயம் அலட்சியம் செய்கின்றது. எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்த முன்பு ‘ஸுன்னா’ என்றால் என்ன? அதன் வகையீடுகள் யாவை? என்பன குறித்து நோக்குவோம்.

பொதுவாக மொழி வழக்கில் ‘ஸுன்னா’  என்பது ஏதாவது ஒரு வழிமுறை அல்லது நடைமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் நபிமொழியின் மூலம் ‘ஸுன்னா’ என்கின்ற பதத்தின் பொருளினை அறிந்து கொள்ளலாம்.

‘நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய வழிமுறையை செய்கிறாரோ அவருக்குப் பின் அவ்வாறு செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடைகின்றது.  இவர்களது கூலிகளில் இருந்து எதுவும் குறைக்கப்படாது. யார் இஸ்லாத்தில் ஓர் தீய நடைமுறையைச் செய்கிறாரோ பின்னர் அதுபோல் செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடை கின்றது. இவர்களது பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.’ (இப்னுமாஜா)

இஸ்லாமிய ஷ‌ரீஆவில் ‘ஸுன்னா’வானது நபிகளார்(ஸல்) அவர்கள் ஏவிய, தடுத்த செயற்பாடுகள், அவர்களது வார்த்தைகள், அனுமதித்த விடயங்கள், நபியவர்கள் பற்றிய விபரங்கள் என்கின்ற பரந்த கருத்தில் அமைந்துள்ளது. இதனையே அண்ணலார் (ஸல்) அவர்கள்  எனது ஸுன்னாவைப் பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.’ (அஹ்மத்)

இங்கு ஸுன்னாவை புரிய முற்படும்போது நபிகளார்(ஸல்) அவர்கள் காட்டித்தராத  அல்லது அவர்களது வழிமுறைக்கு எதிரான ‘பித்அத்’ எனும் நூதன அனுஷ்டானங்களுக்கு புறம்பானது என்றும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது குறித்த ஒரு மார்க்க விவகாரம் நபிகளார்(ஸல்) அவர்களின் முன்மாதிரி யுடன் நடைபெறும்போது ‘ஸுன்னா’ என்றும், நபிகளார்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணாகககாணப்படும் போது ‘பித்ஆ’ என்றும் அழைக்கப்படும். மேலும், கட்டாயம் செய்ய வேண்டியவிடயங்கள் தவிர, செய்தால் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்ற ‘நப்ல்’ என்றழைக்கப்படும் குறுகிய கருத்திலும் ‘ஸுன்னா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.

கண்ணியமிகு அறிஞர்கள் அந்தந்த வட்டத்தில் ‘ஸுன்னா’  எனும் பதத்தை தத்தமது துறைகளை அடிப் படையாகக் கொண்டு விளக்கிச் சென்றனர். அந்த வகையில் ஹதீஸ்கலை அறிஞர்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு, பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், செய்திகள், வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் போன்ற அனைத்து துறைகளையும் கவனத்திற் கொண்டு முன்மாதிரி என்ற வகையிலும் கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ற வகையிலும் அறிமுகம் செய்தனர். ‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

ஸுன்னா ஒரு சட்டமூலாதாரம் என்ற வகையில் முஜ்தஹிதுகள் ‘ஷரீஆ சட்டங்களை தொகுப்பதற்காகவும், மஸாயில்களை ஆய்வு செய்யும் நோக்கத்தோடும் விதிகளை வகுத்த அறிஞர்கள் சட்டவாக்கம் செய்ய ஏதுவாக காணப்பட்ட நபிகளார்(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றை ஸுன்னா என வரைவிலக் கணம் செய்தனர். சட்டக்கலை அறிஞர்கள் மாத்திரம் மக்களின் செயற்பாடுகளில் அல்லது வணக்க வழிபாடு களில் கட்டாயமானதா? இயலுமானதா? அல்லது தடை செய்யப்பட்டதா? என்ற அம்சங்களை கூற வரும்போது ‘வாஜிப்’ அல்லது ‘பர்ழ்’  போன்ற பதங்களுக்கு எதிர்ப் பதமாக ஸுன்னாவை அறிமுகம் செய்தனர்.

எது எவ்வாறாயினும் ஏனைய இரு சாராருடைய பார்வையினை விட ஹதீஸ் கலை அறிஞர்களது அவதானமும், நோக்கிய விதமும் பரந்துபட்டது.

>>ஸுன்னா ஓர் அறிமுகம் (1)

<<INDEX AL ATHAR MEGAZINE JANUARY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers