மையவாடிகளில் பாதணி அணியலாமா?
‘நபியே! அழ்ழாஹ் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அழ்ழாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அழ்ழாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.’ (அல்குர்ஆன் 5:49)
இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்பட்ட சட்டங்கள் அனைத்தும் நேர்த்தியானதும் மனித குலத்திற்குப் பொருத்தமானதும் என்பதை நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம். ஒரு மனிதன் அதிகாலை விழித் தெழும்பியது முதல் அவன் இரவு தூக்கத்திற்குச் செல்லும் வரை உண்டான அனைத்து ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுக்கும் தனித்துவமான ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இம்மார்க்கத்தில் சொல்லப்பட்ட எத்தனையோ அழகான சட்டங்களை இன்று முஸ்லிம்கள் கூட கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் மனவேதனைக்குரிய விடயமாகும்.
இம்மார்க்கத்தில் தெட்டத் தெளிவான ஆதாரங்களால் நிறுவப்பட்டிருக்கும் சட்டங்களில் ஒன்று தான் மையவாடிகளில் பாதணி அணிவது தொடர்பான சட்டமாகும். பஸீர் பின் அல்ஹஸாஸீஹ் எனும் நபித்தோழர் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
‘நான் நபி(ஸல்) அவர்களுடன் முஸ்லீம்களின் மைய வாடியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதர் செருப்பணிந்து செல்வதைப்பார்த்து உரோமம் நீக்கப்பட்ட (ஒருவகையான செருப்பான) ‘சிப்திய்யா’ என அழைக்கப்படும் செருப்பணிந்து செல்பவரே உனது செருப்பை கழற்றி வீசும் என்று கட்டளையிட்டார்கள். அம்மனிதர் நபி(ஸல்) அவர்களை அறிந்து கொண்டபோது தனது செருப்பை கழற்றி வீசிவிட்டார்.’ அறிவிப்பவர் பஸீர்(ரழி) ஆதாரம்: அபூதாவூத்-3ஃ3230 நஸாயி-4ஃ96 இப்னு மாஜா-11568இ அஹ்மத்-583,84 மற்றும் பல நூற்கள்.
மேற்படி ஹதீஸ் ‘மையவாடியில் பாதணி அணியக்கூடாது’ என்பதற்கு மிகத் தெளிவானதும் பலமானதுமான ஆதாரமாகும். இதுவே இமாம்களான அஹ்மத், மாலிக் ஆகியோரின் அபிப்பிராயமாகும். மேலும், இமாம் ‘ஷாபிஈ(றஹ்) அவர்களின் அபிப்பிராயமும் இதுவேயாகும். (மத்ஹபுகளை ஆதாரமாகக் கொள்வோர் மேற்குறித்த இமாம்களின் கருத்துக்களை கவனத்திற்கொள்ள வேண்டும்)
எனினும் ‘மையவாடியில் பாதணி அணியக் கூடாது’ என்பதை வலியுறுத்தும் மேற்படி ஹதீஸிற்கு மாற்றமாக ‘மையவாடியில் பாதணி அணியலாம்! எனக்கூறுவோர் சில தவறான ஹதீஸ்களையும் பிழையான எடுகோள்களையும் முன்வைக்கின்றனர். அவைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.
1. ‘ஒரு அடியான் கப்ரிலே அடக்கம் செய்யப்பட்டால் (அவனை அடக்கம் செய்த மனிதர்கள்) திரும்பிச் செல்லும் போது அவர்களின் செருப்போசையை செவிமடுக்கின்றான்’என்று அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் புஹாரி, முஸ்லீம் போன்ற கிரந்தங்களில் இடம்பெறும் ஹதீஸை அடிப்படை யாகக் கொண்டு மையவாடிகளில் செருப்பணியலாம் என்று கூறுகின்றனர்.
இவ்வாதம் தவறானதாகும். ஏனெனில், இந்த ஹதீஸில் ‘மையவாடிகளில் செருப்பணியுங்கள்’ என்ற கட்டளையோ அல்லது ‘அணியலாம்’ என்ற அனுமதியோ கிடையாது. மாறாக ‘அக்காலத்தில் மையவாடிகளில் செருப்பணியும் வழக்கம் காணப்பட்டது என்பதையே இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது. எனினும் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ‘மையவாடியில் செருப்பணியக்கூடாது’ என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் வழக்கத்தை தடை செய்துவிட்டது என்பதால் ‘மையவாடியில் செருப்பணியக் கூடாது’ என இடம்பெறும் ஹதீஸிற்கும் மக்கள் திரும்பிச் செல்லும் போது மையித் செருப்போசையை கேட்கும்.’ என்ற ஹதீஸிற்கும் இடையில் முரண்பாடு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அனஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸிலிருந்து மையவாடிகளில் செருப்பணியலாம் என்பதே நாம் விளங்கிக் கொள்ளும் சட்டமாகும். நபி(ஸல்) அவர்கள் செருப்பை கழற்றிவீசும்படி கூறிய ஹதீஸில் ‘மையவாடியில் செருப்பணியக்கூடாது’ என்பது வார்த்தைகளால் விளக்கப் பட்ட சட்டமாகும். இவ்வாறு விளக்கமாகப் பெறும் சட்டமும் வார்த்தைகளால் விளக்கப்பட்ட சட்டமும் முரண்படும் போது வாரத்தைகளால் விளக்கப்பட்ட சட்டமான ‘மையவாடியில் பாதணி அணியக்கூடாது’ எனும் சட்டத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அனஸ்(ரழி) அறிவிக்கும் மற்றய ஹதீஸில் ‘(மக்கள்) திரும்பிச் செல்லும் போது’ என்ற வார்த்தை கபுறடியிலிருந்து திரும்பிச் செல்வதையும், மையவாடியி லிருந்து திரும்பிச் செல்வதையும் குறிக்கும் பொதுவான வார்த்தை என்பதாலும் இந்த ஹதீஸ் இரு நிலைகளுக்கும் இடம்பாடானது என்பதாலும் மேற்படி ஹதீஸை மையவாடி யில் செருப்பணிவதற்கு ஆதாரமாக கொள்ள முடியாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
2. மற்றுமொரு சாரார், ‘மையவாடியில் செருப்பணியக் கூடாது’ என்பதை உணர்த்தும் ஹதீஸில் ‘சிப்தியா’ எனும் வர்ணனை இடம்பெற்றுள்ளது. இது சற்று ஆடம்பரமான ஒரு வகைச் செருப்பு, மையவாடியில் ஏற்பட வேண்டிய அச்ச உணர்வுக்கும், மறுமைபற்றிய சிந்தனைக் கும் தடையாக இது அமைவதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அதை தடை செய்தார்கள். ஏனைய சாதாரண செருப்புகளை மையவாடியில் அணிந்து செல்லலாம் என வித்தியாசமானதொரு வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
இதுவும் ஒரு பிழையான வாதமாகும். ஏனெனில் சற்று ஆடம்பரமான செருப்பு என்பதனால்தான் நபியவர்கள் தடைசெய்தார்கள் என்பது நபியவர்களின் வார்தையிலோ, ஹதீஸிலோ இடம்பெறவில்லை. ‘கியாஸ்’ எனும் இஸ்லாத்தில் இல்லாத மூலாதாரம் ஒன்றை இவர்கள் ஏற்றுக்கொள்வதன் காரணமாகத்தான் இவர்களால் இறைசட்டங்களுக்கு காரணம் கற்பிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
இவ்வாதத்தை முன்வைப்போர் மக்கள் பயன்படுத் துகின்ற சற்று ஆடம்பரமான செருப்புக்களை மையவாடியில் அனுமதிப்பதும், விலை கூடிய சாரம், சேட், போன்றவை களை மக்கள் மையவாடியில் அணிந்து வருவதை ஆட்சேபிக்காமல் இருப்பதும் இவர்களின் வாதம் எவ்வளவு தவறானது என்பதற்கான ஆதாரங்களாகும். அத்துடன் ஒரு சட்டத்தை சொல்லும் போது நாம் கவனிக்க வேண்டியது, குறித்த வார்த்தையில் உள்ள பொருளையே தவிர அந்தப்பொருள் பெற்று இருக்கும் மேலதிகமான சட்டத்தோடு சம்பந்தப்படாத வர்ணனையை அல்ல என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். உதாரணமாக ‘அதிக முடியுடைய மனிதர்’ என்றுதான் இடம்பெற்றுள்ளது என வாதிடுவது அறிவுடைமையாகாது.
எனவே ‘மையவாடியில் செருப்பணிவது கூடாது’ என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் தெளிவானதும், உறுதியானதுமாகும். எந்தவகையிலும் அதற்கெதிராக வைக்கப்படும் மேற்படி வாதங்கள் அர்த்தமற்றவை என்பதாலும் மையவாடியில் பாதணி அணிவது கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
மேலும் இந்த இடத்தில் வாசகர்களுக்கு இரு விடயங்களை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும் என நினைக்கின்றேன். முதலாவது, நகரமயமாகிவிட்ட எமது வாழ்க்கையில் மையவாடிகள் குப்பைக்கிடங்காகவும் கற்கள், முட்கள் போன்ற தீங்கு நிறைந்த பொருட்களை வீசும் இடமாகவும் இல்லாமல் சுத்தமானதாகவும், சுகாதாரம் பேனப்படும் இடமாகவும் அமைந்திருத்தல் வேண்டும். இது பள்ளிவாயல் நிருவாகிகளின் அல்லது நகர சபையின் பொருப்போ மாத்திரமன்றி ஒவ்வொரு தனிமனிதனுடைய பொறுப்பாகும் என்பதை முஸ்லீம்கள் யாவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இரண்டாவது, முட்களையும் வெயிலையும் காரணங்காட்டி இஸ்லாத்தின் சட்டம் தெரிந்ததன் பின்பும் நபி(ஸல்) அவர்களின் தடையை மீறுபவர்கள் நாளை நரக நெருப்பின் சூட்டையும், அங்குள்ள வேதனையையும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
எனவே எல்லாம் வல்ல அழ்ழாஹ் நம் அனை வரையும் அவனது இஸ்லாத்தை அதன் தூயவடிவில் பின்பற்றி சுவனம் செல்லும் கூட்டத்தில் ஆக்குவானாக.
<<INDEX AL ATHAR MEGAZINE JANUARY 2009

Comments are closed.